மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் லெகிங்ஸ் அணியக் கூடாது என்ற ஆடைக் கட்டுப்பாடு சரியா என்று செப்டம்பர் 06-ம் தேதி வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் கேட்டிருந்தோம். பெண்களைத் தொடரும் ஆடைக் கட்டுப்பாடு தேவையில்லாதது என்றும், ஆடைக் கட்டுப்பாடு அவசியமே என்றும் பலர் எழுதியிருந்தார்கள். எந்தவிதமான ஆடை அணிகிறோமோ அதைப் பொறுத்துதான் நம்மை மதிப்பிடுவார்கள் என்றும் சிலர் குறிப்பிட்டிருந்தனர். மேற்கத்திய ஆடைகளைக்கூட கண்ணியமாக அணிந்தால் தவறில்லை என்ற கருத்தையும் பார்க்க முடிந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களில் சில உங்கள் பார்வைக்கு:
அந்தக் காலத்துப் பெண்கள், ரவிக்கைகூட அணியவில்லை. கச்சைதான் கட்டியிருந்தார்கள். அன்று எழாத சர்ச்சை இன்று ஏன் எழுகிறது? காரணம் அன்று வர்த்தக விளம்பரங்கள் இல்லை. எதிலும் பெண்களைப் போகப் பொருளாகவும் கவர்ச்சிப் பொருளாகவும் காட்டவில்லை. ஆனால் இன்று நிலைமை தலைகீழ். முறுக்குக் கம்பி விளம்பரத்துக்கும் நடிகைக்கும் என்ன சம்பந்தம்? ஒட்டுமொத்த சமூகமே பெண்களைக் கவர்ச்சிப் பொருளாகப் பார்ப்பதன் விளைவுதான் இது. ஆடை என்பது அவரவர் விருப்பம்.
- பிரபு மதி, தேனி.
யூனிஃபார்ம் எனப்படும் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டதே மாணவர்களுக்குள் ஏற்றத் தாழ்வு மற்றும் மத உணர்வு இருக்கக் கூடாது என்பதற்காகத்தான். கல்லூரி முடித்த பிறகு அவரவர் விருப்ப ஆடைகளை அணிந்துகொள்ளட்டுமே.
- அ. தட்சிணாமூர்த்தி, மணம்பூண்டி.
எந்த ஆடையாக இருந்தாலும் உடலை இறுக்கி, அவயங்களை வெளிக்காட்டுவது போல் அணிவதைத் தவிர்க்க வேண்டும். மெய்யழகை வெளிச்சம்போட்டுக் காட்டும் ஆடைகள் நம் கலாச்சாரத்துக்கும் கண்ணியத்துக்கும் கேடு விளைவிப்பவை.
- நவீன்குமார், பட்டுக்கோட்டை.
மேற்கத்திய வரவான லெகிங்ஸ் அணிந்தால் உடன் பயிலும் அல்லது பணிபுரியும் ஆண்களுக்கு, ‘கவனச் சிதறல்’ ஏற்பட்டுவிடக் கூடாது என்ற ‘நல்லெண்ணத்தில்’ தடைவிதித்திருப்பார்களோ?
- பா. சுபிசுதா, காவேரிப்பாக்கம்.
எந்தக் காலத்துக்கும் பொருந்தும் நவீன இந்திய ஆடைகளைப் பெண்கள் அணிவதே சிறந்தது. கனியிருப்பக் காய் எதற்கு?
- ஏ. எஸ். காந்தி, திருநெல்வேலி.
மேற்கத்திய ஆடைகள் என்பதற்காக மட்டுமே ஒரு ஆடையைத் தடை செய்வது சரியல்லை. இப்போது பெண்கள் பலரும் ஜீன்ஸ், லெகிங்ஸ் போன்றவற்றைத்தான் அணிகிறார்கள். அதே சமயம் ஒருவர் உடை அணிகிற பாங்கு அடுத்தவரின் இச்சையைத் தூண்டுகிற விதத்தில் இருந்தால் நிச்சயம் அதைத் தவிர்க்க வேண்டும். ஒரு பெண் தன் உடல்வாகுக்கும் செய்கிற பணிக்கும் பொருந்துகிற வகையில் லெகிங்ஸ் இருந்தால் அதை அணிவதில் தவறில்லை.
- எஸ். கிருஷ்ணவேணி பால்ராஜ், சின்ன திருப்பதி.
சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வன்முறைக்கு ஆளாவதைப் பார்க்கும் போது, தவறு அவர்கள் அணிகிற உடையில் இல்லை, பார்க்கிறவர்களின் பார்வையில் உள்ளது என்பதை உணர முடிகிறது. இப்படியொரு கீழான சமூகத்தில் ஆடைக் கட்டுப்பாடு இல்லையென்றால் பெண்களின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்பட்டுவிடும். தவிர இறுக்கமாக உடையணிவது பெண்களின் உடல் நலத்துக்கும் நல்லதல்ல. அதனால் அவரவர்க்குப் பொருத்தமான ஆடைகளை அணிவதே சிறப்பு.
- ஜானகி ரங்கநாதன், சென்னை-4.
அனைவரும் அவரவர் ரசனை, வசதி, விருப்பம் ஆகியவற்றுக்கு ஏற்ப ஆடை அணியலாம். அது அவர்களின் உரிமை. அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. ஆனால் கல்வி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் டிரஸ் கோட் எனப்படும் ஆடைக் கட்டுப்பாடு அவசியமே. இந்த இடங்களில் ஆடையை அலங்காரமாக அணிவது உகந்ததல்ல
- மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை.
உடை அணிபவருக்கு வசதியாகவும் பொருத்தமாகவும் இருக்க வேண்டும் என்பதைவிட பார்ப்பவர் மனதில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். அதற்காகப் புடவைதான் கட்ட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உடல் முழுவதையும் மறைக்கும் சுடிதார் போன்ற ஆடைகளை அணிவது தவறில்லை. உடலை இறுக்கிப் பிடிக்கும் லெகிங்ஸ் போன்ற உடைகள், நம் அங்கத்தை அப்படியே வெளிக்காட்டும். இது நிச்சயம் மற்றவர் மனதைச் சலனப்படவைக்கும். நாமே நம் உடையின் மீது கவனம் செலுத்தி மற்றவர் கண்களை உறுத்தாத உடைகளை அணிவதுதான் நல்லது.
- உஷா முத்துராமன், திருநகர்.
பச்சிளம் குழந்தைகளையே பாலியல் துன்பத்துக்கு ஆளாக்கும் ஆண் வர்க்கத்தைப் பார்க்கும்போது நிச்சயம் ஆடைக் கட்டுப்பாடு அவசியம்தான். சமுதாயம் நம்மை மதிக்க வேண்டும் என்றால் இது போன்ற உடைகளை நிச்சயம் ஒதுக்க வேண்டும்.
- லஷ்மி ஹேமமாலினி, சென்னை.
கண்ணியமாக உடை அணிகிற பெண்கள், ஆண்களின் பார்வையில் எப்போதுமே மரியாதைக்குரியவர்கள் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. ஆனால் நாகரிக மோகத்தால் பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்லும் போது தங்கள் வயதைக் கணக்கில் கொள்ளாமல், தங்களுக்குச் சற்றும் பொருந்தாத, உடலழகை அப்பட்டமாக வெளிக்காண்பிக்கும் வகையில் லெகிங்ஸ் போன்ற உடைதான் விவாதப் பொருளாகிறது.
- பி. நடராஜன், மேட்டூர் அணை.
நாகரிகம், பெண்ணுரிமை என்ற பெயரில் நமக்குப் பொருந்தாத ஆடைகளை அணிவது கேலிக்கூத்தானது மட்டுமின்றி பிறர் கண்களை உறுத்துவதாகவும் அமைந்து விடுகிறது. ஆடை அணிவது தனிமனித சுதந்திரம் என்பது உண்மைதான். ஆனாலும் உண்மையான சுதந்திரம் என்பது அதனை மீறாமல் நடந்து கொள்வதுதான். கண்ணியம் என்பது ஆடையைப் பார்ப்பவர்களுக்கு மட்டுமின்றி அணிபவர்களுக்கும் வேண்டும்.
- தேஜஸ், காளப்பட்டி, கோவை.
கல்லூரிகளுக்கும் பணியிடங்களுக்கும் லெகிங்ஸ் அணிவது பெண்களுக்கு வசதியாக உள்ளது. பிறர் விமர்சிக்காதவாறு நீளமான டாப்ஸ் அணிய வேண்டும்.
- ரேவதி விஸ்வநாதன், சின்னமனூர்.
ஆண் - பெண் ஈர்ப்பு என்பது பள்ளிப் பருவத்தில் ஆரம்பித்து, கல்லூரிப் பருவத்தில் உச்சத்தில் இருக்கும். ஆண் பால் பெண் ஈர்க்கப்படுவதும், பெண் பால் ஆண் ஈர்க்கப்படுவதும் படைப்பின் அவசியம். மானத்தை மறைக்கத்தான் உடை என்பது பழைய வாதமாக இருந்தாலும், அதுதான் உண்மை. அங்கங்களைப் பிரகடனப்படுத்த உடையை உதவியாக்கிக் கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. உடலை முழுவதுமாக மறைத்துக்கொள்ளும்படி ஆண் ஆடை அணிவதும், உடலை வெளிக்காட்டும்படி பெண் உடை அணிவதும் எந்தவிதத்தில் சேர்த்தி? அதுவும் உடல் நிறத்திலேயே லெகிங்ஸ் அணிவது எதற்காக? யாருக்காக இத்தகைய உடைகள்? வசதியாக இருக்கிறது என்பது தாங்களே தயாரித்துக்கொண்ட பதில். மருத்துவக் கல்வி இயக்ககத்தின் தடை சரியே.
- கேசவ் பல்ராம், திருவள்ளூர்.
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அங்கங்களை மறைத்துக் கொள்ளத்தான் ஆடை. ஆண்களைவிட பெண்களின் ஆடை வடிவமைப்பில் சென்ற தலைமுறையை விட இந்த தலைமுறையில் நிறைய மாற்றங்கள் வந்து விட்டன. ஆண்களின் உடையில் பெரிய மாற்றங்கள் எதுவுமில்லை. ஆனால் பெண்களுக்குத்தான் வயது வாரியாக எத்தனையெத்தனை உடைகள்? எந்த ஆடையாக இருந்தாலும் நாகரிக எல்லையைத் தாண்டாமல் இருந்தால் பிரச்சினை இல்லை.
- ஜீவன்.பி.கே, கும்பகோணம்.
வெளிநாட்டவர் அவர்களது நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றபடி உடை அணிகின்றனர். நம் நாட்டுக்கு சுடிதார் போன்ற உடைகளே சிறந்தவை. மேலும் கல்லூரி செல்லும் பெண்கள் ஆடையைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
- ஸ்ருதி ஜெயலஷ்மி. வி, உத்தமபாளையம்.
எந்த உடையும் அணிந்து செல்லலாம் என்றிருக்கும் கல்வி அல்லது தொழில் நிறுவனங்களில் குறிப்பிட்ட ஒரு உடையை அணியக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்படும்போதுதான் பிரச்சினை உருவாகிறது. பள்ளிகளில் சீருடை அணிவதை யாரும் கேள்வி கேட்பதில்லை. அதே போல ராணுவ வீரர்கள், காவல்துறையினர், தீயணைப்புப் படையினர், செவிலியர் ஆகியோர் தங்கள் பணிக்காகக் குறிப்பிட்ட உடை அணிந்துதான் செல்ல வேண்டும். இதனை யாரும் எனக்கு எதற்கு இந்த உடை என்று கேள்வி கேட்பதில்லை. அதைப் போலவே கல்வி நிறுவனங்களுக்கும் சீருடை நிர்ணயிப்பதே இதற்குத் தீர்வாக இருக்கும். இல்லையென்றால் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு உடைக்குத் தடை விதித்தபடியே இருக்கும்.
- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.
தங்களது வயது, உடல் பருமன் ஆகியவற்றை மனதில் கொண்டு ஆடைகளை அணிவதுதான் சிறந்தது. நாம் உடுத்தும் ஆடையின் மூலம் நம் மீது மதிப்பு வரவேண்டுமே தவிர யாரும் முகம் சுளிக்கக் கூடாது.
- பானு பெரியதம்பி, சேலம்.
விளையாட்டுத் திறமையைப் போற்றாமல் குட்டைப் பாவாடையை விமர்சனம் செய்தவர்களுக்குப் பட்டம் வென்று பதிலடி தந்ததோடு நாட்டுக்கும் பெருமை தேடித் தந்தார் சானியா மிர்சா. முக்காடு போட்டு முழு உடலையும் மறைத்துப் பாதுகாத்து போனாலும் ஈவ் டீசிங்கில் கொல்லப்பட்ட சரிகாஷா போன்றோர் எத்தனையோ பேர்? கண்ணியம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் போன்ற வார்த்தை ஜாலங்களைச் சொல்லும் ஆண்கள், பெண்களின் கண்களைப் பார்த்துப் பேசுவதில்லை. கழுத்துக்குக் கீழே பார்க்கும் பார்வைக்குப் பழக்கப்பட்ட ஆண்களின் வக்கிர பார்வைதான் தடைசெய்யப்பட வேண்டுமே அன்றி சமூகம் கவலைப்பட்டுவரும் பெண்களின் ஆடைகள் அல்ல. ஆடைகள் பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு அதிகமாகவே இருப்பதால் ஆடைக் கட்டுப்பாடு அவசியம் இல்லை.
- மலர்மகள், மதுரை.
உடலை இறுக்கும் ஆடைகள் உடல் நலத்துக்கும் கேடு என்பதையும் மறந்துவிடக் கூடாது. பொது வெளியில் நமக்குப் பூரண ஆடை சுதந்திரம் இருந்தாலும் அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆடைக் கட்டுப்பாடு சரியானதே.
- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
லெகிங்ஸ் மட்டுமல்ல எந்த ஆடை அணிந்தாலும் குறை சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள். ஆடைக் கட்டுப்பாடு என்பது பெண்களுக்கு மட்டும்தான் என்கிற பொது விதி நம் சமூகத்தில் நிலவுகிறது. ஆண்கள் தாங்கள் செய்யும் தவறுக்கு சொல்லும் காரணங்கள்தான் ஆடைக் கட்டுப்பாடு. இந்தச் சமூகம் வரையறுத்து வைத்திருக்கும் கண்ணியமான ஆடைகளை அணிகிற பெண்களுக்கு எந்தத் தொந்தரவும் ஏற்படுவதில்லையா? முதலில் காட்சி ஊடங்களில், விளம்பரங்களில் பெண்களை இயல்பாகக் காட்டட்டும். அதன் பிறகு எல்லா மாற்றங்களும் தானாகவே நடக்கும்.
- ராஜபுஷ்பா, கும்பகோணம்.
இந்தியப் பாரம்பரிய ஆடைகளான புடவை, தாவணி போன்றவற்றை அணியும் பெண்களைப் பார்க்கும் ஆண்களின் பார்வையில் வக்கிரம் துளிக்கூட இல்லையென்று சொல்ல முடியுமா? கவர்ச்சி, மயக்கம் எல்லாமே பார்ப்பவரின் பார்வையைப் பொறுத்தது. பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் ஆடைக்குத் தடை விதிப்பது, இளம் மாணவியரின் சுதந்திரமான எண்ணங்களுக்குக் கடிவாளமிடுவது போன்றது.
- சந்திரா மனோகரன், ஈரோடு.
லெகிங்ஸ் என்பது ஒருவகை உள்ளுடை. இதை ‘UNDERPANT’ என்றும் சொல்வார்கள். தொண்ணூறுகளிலும் புதின உடையாக அறிமுகமாகி விரைவில் புறக்கணிக்கப்பட்டது. லெகிங்ஸ் அணிந்து, உயரம் குறைவான சட்டை அணியும் பெண்கள் தாங்கள் காட்சிப்படுகிறோம் என்பதை உணர்வதில்லை. அதிலும் குறிப்பாகத் தோல் நிறத்து உடைகள் இன்னும் மோசம். இப்படிப்பட்ட புதினமான ஆடைகள் பெண்களைக் குறி வைத்தே மிகுதியாக வருவதையும் பெண்கள் உணர வேண்டும். நம் பெண்கள் இதுபோன்ற மாயையிலிருந்து விரைவில் விடுபட வேண்டும்.
- வீர. இராச. வில்லவன்கோதை.
எண்பதுகளில் கல்லூரியில் சுடிதார் போடவும் இதே போன்று தடை விதித்திருக்கலாம். ஆனால் இன்றோ ஐம்பது வயது பெண்களும் சுடிதார் அணிகின்றனர். லெகிங்ஸ் பார்ப்பதற்கு உடலை இறுக்கிப்பிடிப்பது போல தெரிந்தாலும் அதை அணிகிறவர்களுக்குத்தான் அது எத்தனை வசதியாக இருக்கிறது என்பது தெரியும். புடவையில் உடல் பாகங்கள் தெரிவதைப் போல் லெகிங்ஸ்-ல் தெரிவதில்லை. அதற்காக எல்லோரும் புடவையை விட்டுட்டு லெகிங்ஸ் அணியுங்கள் என்று சொல்லவில்லை. அவரவருக்கு எது வசதியோ அதை உடுத்தினாலே நல்லது. ஆண்கள் slim fit, apple cut என்று அணிவது போல லெகிங்ஸ் என்பதும் ஒரு ஆடை வகையே.
- சிவபிரியா.
ஆடைக் கட்டுப்பாடு என்பது ஒரு நிர்வாகமோ ஒரு சமூகமோ ஒரு அரசோ முழுவதுமாக எல்லோருடைய ஒப்புதலோடு கொண்டுவருவது அல்ல. அவரவர் மனநிலை, சூழ்நிலை மற்றும் பக்குவத்தைப் பொருத்தது. ஒரு ஆண் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்த பெண்ணை எந்த விதமான உணர்ச்சியும் இல்லாமல் தன் தாய், தங்கை, தோழி போல பார்க்கலாம். மற்றொருவன் முழுவதும் மூடிய உடையில் உள்ள பெண்ணைத் தவறான எண்ணத்திலும் பார்க்கலாம். எந்தவொரு பொது இடத்திலும் எல்லா விதமான மனநிலை உள்ள கண்களும் இருக்கும்.
- பிரகாஷ் கண்ணன்
பெண்களின் ஆடைக்கும் அவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பள்ளிச் சிறுமிகள்கூட பாலியல் வன்முறைக்கு ஆளாகும் தேசமாக நம் நாடு மாறிவிட்டது. பெண்களை சக உயிராக, தோழியாக, சகோதரியாக பார்க்கும் மனோபாவம் எல்லா ஆண்களுக்கும் வந்துவிட்டால் பெண்கள் மீதான வன்முறைகள் நம் நாட்டில் முற்றிலும் ஒழிந்துவிடும். சீர்திருத்தப்பட வேண்டியது ஆண்களின் மனநிலைதான்.
- சம்பத்குமார்.
பெண்களின் உடை அவர்களின் உரிமை. ஆண்களில் ஒருவனாக நானே கேட்கிறேன் - ஒரு பெண் ஆடையே இல்லாமல் வந்தாலும் அவள் விருப்பம் இல்லாமல் அவளை நெருங்குவதற்கு நீ யார்? ஆண்கள் கண்ணியமாக நடந்து கொண்டால் பெண்களின் ஆடை ஒரு விவாதப் பொருளே அல்ல.
- திருமலைக்குமார்.
பொதுவாக மாணவியரை முன்னிறுத்தியே ஆடைக் கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அது விமர்சனத்திற்கு உட்படுமென்பதால் மாணவர்களையும் அதில் சேர்த்துள்ளனர். மாணவர்களோடு விவாதிக்காமல் கல்வி நிறுவனங்கள் தன்னிச்சையாக முடிவு எடுத்திப்பது ஜனநாயக விரோதம்.
- எஸ்.எஸ்.ஆர்.
இந்த விவாதத்தை ஒரு நாளும் முடிவுக்கு கொண்டு வரமுடியாது. பெண்களின் இந்த வளர்ச்சி வேகத்துக்கு இணையாக சமுதாயத்தின் பார்வை வளரவில்லை. கண்ணியமான உடை ஒரு பெண்ணின் முன்னேற்றத்துக்கு அனைத்து வழிகளிலும் உதவியாகவே இருக்கும். நாட்டில் ஆறாக ஓடுகின்ற மது, காமத்தைத் தூண்டும் வலைதளங்கள் இவற்றுக்கு மத்தியில் பெண்ணின் பாதுகாப்பு கேள்விகுறியாகிறது.
- முத்து
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago