கரோனாவை வெல்வோம்: நலமுடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறேன்

By செய்திப்பிரிவு

எனக்கு சென்னையை 30 வருடங்களாகத்தான் தெரியும். நெடுங்கல் என்ற சின்ன கிராமத்தில்தான் பிறந்து வளர்ந்திருந்தேன். காடு மேடென்று அலைந்து திரிந்த எனக்கு அவ்வளவு சீக்கிரத்தில் எந்த நோயும் தாக்காது என்கிற நினைப்பு எப்போதும் மனசுல இருக்கும். ‘பூச்சி பூச்சின்னு பார்க்காம ஆச்சா போச்சா’ன்னு வளர்ந்து பழக்கப்பட்ட மனம் அப்படித்தானே நினைக்கும். கரோனாவுக்காக ஊரே பதறிக்கொண்டு இருந்தபோது என்னையெல்லாம் அது நெருங்காது என்ற தைரியத்தில் இருந்தேன். ஆனால், அது என்னைக் கொஞ்சம் அசைத்துத்தான் பார்த்தது.

காய்ச்சல், இருமல், சளி எல்லாம் வந்தால்தான் கரோனா வந்துவிட்டதாக அர்த்தம் என்று டி.வி.யிலும் தெரிந்தவர்கள் சொல்லியும் கேள்விப்பட்டிருந்தேன். எனக்கு அந்த மாதிரி எந்த அறிகுறியுமே இல்லை. ஆனால், திடீர்னு ஒருநாள் வாசனையும் ருசியும் எனக்குத் தெரியாமப் போச்சு. மூக்கடைப்பு இல்லை, வாய்க்கசப்பா இருக்கும்னு சொல்றதுக்குக் காய்ச்சலும்கூட இல்லை. அப்புறம் எப்படி வாசனையும் ருசியும் தெரியாமப் போகும்னு குழப்பமா இருந்தது.

கற்பூரவல்லி, புதினா, எலுமிச்சைனு எல்லாத்தையும் முகர்ந்து பார்த்தேன். எந்த வாசனையையுமே உணர முடியலை. சரி, கொஞ்சம் புளிப்பா எலுமிச்சை ஜூஸ் குடிப்போம்னு பார்த்தா, அந்த ருசிகூடத் தெரியலை. சாப்பாடு சாப்பிட்டால் மண்ணை அள்ளி வாயில் வைத்ததுபோல் இருந்தது. கரோனா வைரஸ் தாக்கினால் வாசனையும் ருசியும்கூடத் தெரியாதுன்னு, என் பொண்ணு அப்போ சொன்னா.

சட்டென்று வந்துவிட்ட கரோனா

உடனே வீட்டுப் பக்கத்தில் இருந்த மருத்துவ முகாமுக்குப் போனேன். அவங்க எனக்கு கரோனா பரிசோதனை செய்தார்கள். கரோனா தொற்று இருந்தா பரிசோதனை முடிந்த இரண்டாம் நாள் போன் மூலமா தகவல் சொல்வோம்னு சொல்லி அனுப்பினாங்க. கொஞ்சம் பயத்தோடதான் இருந்தேன்.

நாங்க கூட்டுக் குடும்பமா இருக்கறதால வீட்டில் மாமனார், மாமியார் சின்ன குழந்தைகள்னு 15 பேர் இருக்கோம். கரோனா பரவாம இருக்கறதுக்கு தனிமனித இடைவெளி எல்லாம், எங்க வீட்ல எப்படிக் கடைப்பிடிக்க முடியும்? எனக்குத் தொற்று இருந்தா, அதன் மூலமா குழந்தைகளுக்கும் பெரியவங்களுக்கும் வந்துட்டா என்ன பண்றதுன்னு ரொம்பப் பயமா இருந்தது.

அவங்க சொன்ன மாதிரியே இரண்டாம் நாள் மாநகராட்சியி லிருந்து போன் வந்தது, எனக்கு கரோனா தொற்று இருக்கறதா சொன்னாங்க. அதைக் கேள்விப்பட்டதுமே உடம்பு நடுங்கிடுச்சு. ஆனால், பயந்து உட்கார்ந்துட்டா, கரோனா சரியாகிடாதே. எதுவானாலும் போராடிப் பார்த்துடுவோம்னு தைரியமா இருந்தேன். அஞ்சு நாளுக்குத் தேவையான துணியை எடுத்துவெச்சுக்கச் சொல்லி யிருந்தாங்க. என்னைக் கூட்டிட்டுப் போறதுக்காக வீட்டுக்கே வேன் வந்தது. அதுல ஏற்கெனவே நாலு பேர் இருந்தாங்க. என்னதான் தைரியமா இருந்தாலும் வேன்ல ஏறும்போது அழுகையும் பயமுமா இருந்தது.

அண்ணாநகர்ல இருக்கற ஒரு காலேஜுக்கு கூட்டிட்டுப் போனாங்க. அங்கே என்னை மாதிரியே நூறு பேருக்கு மேல இருந்தாங்க. அங்கேயும் ரெண்டாம் முறையா கரோனா டெஸ்ட் எடுத்தாங்க. ஈ.சி.ஜி., எக்ஸ்ரேன்னு நிறைய பரிசோதனை பண்ணாங்க. அதெல்லாம் முடியவே சாயந்திரம் ஆகிடுச்சு. அங்க சாப்பாடு தருவாங்களா, இல்லையான்னே தெரியலை. மத்தியானம் எதுவுமே சாப்பிடலை. சாயந்திரம் டீயும் பிஸ்கட்டும் கொடுத்தாங்க. அப்புறம் இன்னொரு வேன்ல பள்ளிக் கரணையில் இருக்கற தனியார் காலேஜுக்குக் கூட்டிட்டுப் போனாங்க.

உணவும் ஓய்வுமே மருந்து

பெண்களை எல்லாம் மாடியில் பெரிய ஹாலில் தங்கவெச்சாங்க. நிறையக் குழந்தைகளும் இருந்தாங்க. டாக்டர்களும் நர்ஸ் களும் கீழே இருந்தாங்க. காய்ச்சல், தலைவலி இருந்தா மட்டும் மாத்திரை வாங்கிக்கச் சொன்னாங்க. முதல் நாள் இரவு கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது. முகக்கவசத்தைப் போட்டுக்கிட்டே தூங்குறது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இரண்டாம் நாள் கடுமையான தலைவலியும் உடல்வலியும் இருந்துச்சு. மாத்திரை தந்தாங்க. மூன்றாம் நாள்தான் டாக்டர் வந்து டெஸ்ட் பண்ணார். மற்றபடி சாப்பாடும் ஓய்வும்தான் நோய்க்கான மருந்துன்னு சொன்னாங்க.

நான் தங்கியிருந்த முகாமில் நல்ல தரமான உணவைத் தந்தாங்க. காலைல டிபனோட தினமும் ஒரு முட்டை தந்தாங்க. அப்புறம் எலுமிச்சை, இஞ்சி போட்டுக் கொதிக்கவச்ச தண்ணீர், மதியத்துக்குக் காய்கறி, கூட்டுடன் சைவ உணவு, மாலை சுண்டல், டீ, இரவு சப்பாத்தியும் இடியாப்பமும் கொடுத்தாங்க. அங்கிருந்தவங்க எல்லாருக்கும் பிளாஸ்டிக் பக்கெட், சோப்பு, பிரஷ், பேஸ்ட் எல்லாம் தந்தாங்க. வீட்டைவிட்டு இப்படித் தனியா இருக்கோமேங்கிற நினைப்பைத் தவிர, பெருசா எந்தப் பிரச்சினையும் இல்லை. வீட்டாளுங்களைப் பார்க்க முடி யாட்டாலும், போன்ல பேச முடிஞ்சது.

முடிவுக்கு வந்த முகாம்வாசம்

கரோனா நோய்த் தடுப்பு முகாம்ல ஆறு நாள் இருந்த பிறகு, வீட்டுக்குப் போகலாம்னு சொன்னாங்க. நாலு நாளுக்குத் தேவையான சத்து மாத்திரையைக் கொடுத்து அனுப்பினாங்க. அஞ்சு நாளுக்கு வீட்டைவிட்டு வெளியே போகக் கூடாது, வீட்ல இருக்கும்போதும் முகக்கவசம் போட்டிருக்கணும்னு டாக்டர்கள் அறிவுறுத்தினாங்க.

வீட்டுக்குப் போகச் சொன்னதும் எனக்கு உற்சாகமாகிடுச்சு. டாக்டர்கள் சொன்னதை வீட்டுக்கு வந்த பிறகும் கடைப்பிடிச்சேன். இப்போ நல்லா இருக்கேன், முன்பைவிட நம்பிக்கையோட இருக்கேன். அப்பப்போ சூப், கஷாயம்னு குடிச்சிட்டுத்தான் இருக்கேன். கரோனா வந்துட்டா தனிமைப்படுத்திடுவாங்கன்னு நினைச்சு, சாதாரண காய்ச்சல் வந்தாகூட நிறையப் பேரு வெளியே சொல்றதில்லையாம். அப்படி இருக்கறது ரொம்பத் தப்பு. நம்மளால வீட்ல இருக்கற மத்தவங்களுக்கும் கரோனா வந்துடும்தானே. தனிமைப்படுத்திக்கறது நம்மளோட சேர்த்து நம்மளைச் சேர்ந்தவங்களையும் காப்பாத்தும். அதுக்கு நானே நல்ல உதாரணம்.

இப்படித்தான் வென்றோம்

வாசகிகளே, உங்களுக்கோ உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ கரோனாவைக் கடந்துவந்த அனுபவம் இருக்கிறதா? அப்படியெனில் அதிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டதை எங்களுக்கு எழுதியனுப்புங்கள். அது மற்றவர்களுக்குத் தன்னம்பிக்கையையும் நோயை எதிர்கொள்ளும் துணிவையும் தரும்.

மின்னஞ்சல்: penindru@hindutamil.co.in

- தமிழ்ச்செல்வி வேணுகோபால், சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்