1990-ல் 943, 2007-ல் 1,199, 2011-ல் 3,493… இவை இந்தியாவில் வெளிவந்த திரைப்படங்களின் எண்ணிக்கையோ புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையோ அல்ல . இந்த எண்கள் வெறும் எண்கள் அல்ல, கடத்தப்படும் பெண்கள். ஹ்யூமன் டிராஃபிக்கிங் என்பது ஆள்கடத்தல் சார்ந்த ஒரு குற்றச் செயல். அதாவது, மனிதனை வர்த்தகப் பண்டமாக்கி விற்பதே இதன் அடிப்படை. இப்படிக் கடத்தப்பட்டு விற்கப்படுவது பல காரணங்களுக்காக நடக்கிறது. பாலியல் சுரண்டல், கொத்தடிமை, பணம் என்று அவை நீளும்.
மனிதர்களைக் கடத்துதல் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும் பெரும்பாலும் பெண்களே கடத்தப்படுகிறார்கள். கடத்தப்படுபவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். தமிழ்நாட்டில் மட்டும் இப்படிக் கடத்தப்படும் பெண்களில் 53.22% பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று காவல்துறை புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. பாலியல் தொழிலில் இவர்கள் பலவந்தமாக ஈடுபடுத்தப்படுகிறார்கள். மசாஜ் நிலையங்களிலும் இவர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.
அமைப்பு ரீதியான குற்றம்
டிராஃபிக்கிங், அமைப்பு ரீதியான குற்றங்களின் பட்டியலில் முதலாவதாக வருகிறது. கடத்தப்படுவது யாருக்காக, எப்படி, யார் மூலம், இதில் யாரெல்லாம் பணம் பார்க்கிறார்கள், இதற்கு உதவுபவர்கள் யார் என்பதெல்லாம் பெரும் மர்மமாக இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத இந்த வலைப்பின்னல் உலக அளவில் பரவியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பண்டமாகும் பெண்கள்
அக்காவிடம் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த ராகினிக்கு (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சென்னையில் ஒரு அழகு நிலையம் தொடங்க வேண்டும் என்று ஆசை. ஆனால் காசில்லாமல், போக்கிடமறியாமல் தடுமாறுகிறாள். அடையாளமறியாத ஒருவர் அவளுக்குத் தோள்கொடுக்கிறார்.
பிறகு என்ன நடந்தது?
“நான் அக்கா வீட்லருந்து வந்தனா.. வந்தனா.. அங்க நின்னனா.. கொலுச அடமானம் வைக்க நினச்சனா.. நினச்சனா.. நினச்சேன்...” விட்டத்தைப் பார்த்துக் கதறி அழுகிறாள். இரண்டு வருடத்திற்குப் பிறகும் அவள் நினைவில் இருப்பது இது மட்டுமே. அவள் எப்போது இயல்பு நிலைக்குத் திரும்புவாள் என எந்த மருத்துவராலும் ஊகிக்க முடியவில்லை.
ஓய்வுபெற்ற டி.ஜி.பி திலகவதியிடம் இது குறித்துப் பேசியபோது அவர் இந்தக் கடத்தல் பற்றிப் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். பெண்ணைக் கடத்திச் செல்பவர்கள் ஒரு இருட்டறையினுள் 10-15 நாட்கள் அடைத்துவைத்து அவளை அடித்துக் காயப்படுத்துகிறார்கள். கடுமையாகத் தாக்கப்பட்டு, பலவீனமாகி, தன்னம்பிக்கை இழந்த பின், கட்டாயப்படுத்தி போதைப்பொருளை உடலினுள் செலுத்துகிறார்கள். அதன் பிறகு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள். தப்பிக்க வழி இல்லாமல் மாட்டிக்கொண்ட அந்தப் பெண்ணை விற்றுவிடுகிறார்கள்.
வன்முறை, போதைப்பொருள் ஆகியவற்றின் மூலம் ஒரு பெண்ணை முற்றிலுமாக வசப்படுத்திக்கொண்ட பிறகு ‘புது ஆள் வந்துருக்கு’ என்ற தகவல் தரகர்களிடையே பரிமாறிக்கொள்ளப்படுகிறது. இங்கிருந்து பல நகரங்களுக்கும், நாடுகளுக்கும் இவ்வாறான பெண்கள் பரிமாற்றம் நடக்கிறது. மீண்டும் துன்புறுத்தல், போதைப்பொருள், பாலியல் வன்புணர்வு என்று அதே கட்டங்களைக் கடந்து உடலில் உணர்ச்சியற்று, பெரும்பாலான பெண்கள் கோமா நிலைக்கும் செல்கின்றனர்.
ஒருவேளை அவர்கள் மீட்கப்பட்டாலும் இயல்பு நிலைக்குத் திரும்புவார்களா என்பது கேள்விக்குறியே என்றும் திலகவதி கூறுகிறார்.
உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில், தமிழகத்தில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில், தற்போது இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதை வைத்து கடத்தல் குறைந்திருப்பதாகச் சொல்லிவிட முடியாது. “பல சம்பவங்கள் வெளிவராததற்குக் காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய கசப்பான உண்மை” என்கிறார் திலகவதி.
ஏமாற்றப்படும் ஏழைப்பெண்கள்
கடத்தப்படும் பெரும்பான்மையான பெண்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களே. தங்கள் மகள் கௌரவமான இடத்தில் வேலை செய்யப் போகிறாள் என்று எண்ணி போக்குவரத்துச் செலவுக்குக் கடன் வாங்கி புரோக்கர்களிடம் கொடுத்தனுப்பி ஏமாறுகின்றனர், அப்பெண்களின் பெற்றோர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.
கடத்தப்படுவதன் காரணமும் விதமும் எப்படி இருந்தாலும், ஒரு பெண், தனிமைப்படுத்தப்பட்ட பிறகு தனக்கும் தன் உடலுக்கும் என்னென்ன ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்பதை உணராத அறியாமையும், அசட்டுத்தன்மையும்தான் கடத்தல் அதிக அளவில் நடக்கக் காரணம். உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள விழிப்புணர்வுக் காணொளி ஒன்றில் இதுபோன்ற அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
கடத்தப்பட்ட பெண்கள் காப்பாற்றப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டாலும், குறைந்தது 3 மாத காலம் வரை மனநல ஆலோசகரின் உதவி கட்டாயம் தேவை என்கிறார் டாக்டர் மனோரமா. “ஒருமுறை பாதுகாப்பின்மையை உணர்ந்துவிட்ட அந்தப் பெண்ணுக்கு, அதிலிருந்து மீண்டு வர நீண்ட காலம் தேவைப்படும். கடத்தப்பட்டதை நினைவுபடுத்தும் ஒரு வார்த்தை, ஏதேனும் ஒரு அடையாளம்கூட மீண்டும் பாதுகாப்பின்மையை உணரவைக்கும்” என்கிறார்
அவர். காப்பாற்றப்பட்டவர்களுக்கு அன்பும் அரவணைப்பும் அவசியம் தேவை. இதை அப்பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். “பாதிக்கப்பட்டவர்களையே குற்றம்சுமத்தும் போக்கு நம் சமூகத்தில் நிலவுகிறது. அது மாற வேண்டும்” என்று திலகவதியும் வலியுறுத்துகிறார்.
தொண்டு நிறுவனங்கள்
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இவ்விஷயத்தில் பெரும் பங்காற்ற முடியும் என்று பலர் கருத்துத் தெரிவிக்கிறார்கள். கிராமங்களில் இது பற்றிய முறையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். எப்படியெல்லாம் ஆபத்து வரக்கூடும் என்பது உணர்த்தப்பட வேண்டும் என்று கூறும் சமுக ஆர்வலர் அர்பிதா ஜெயராம், அதிகமான மாணவ/மாணவிகள் இந்தப் பணியில் ஈடுபட முன்வர வேண்டும் என்றும் கூறுகிறார்.
கடத்தப்பட்டு மீட்கப்படும் பெண்களில் 8 முதல் 18 வயதுவரை உள்ள பெண்கள் அரசு நடத்தும் குழந்தை நலக் காப்பகத்தில் தங்கவைக்கப்படுகிறார்கள். ஆனால் அந்த மையங்கள் நடத்தப்படும் நிலை மெச்சிக்கொள்ளும் விதத்தில் இல்லை என்பதே யதார்த்தம். குழந்தைகள் நலக் காப்பகத்தில் உள்ள குழந்தைகளின் உடல்நலமும் மனநிலையும் மிகவும் மோசமாக உள்ளது என்று தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த ஒரு சமூக சேவகர் தெரிவிக்கிறார். “அங்கே தங்கும் பெண்களுக்கு, மிக அத்தியாவசியமான தேவைகள்கூடக் கிடைப்பதில்லை. வருடந்தோறும் இது போன்ற காப்பகங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை அரசால் ஒதுக்கப்படுகிறது, ஆனால், அதில் ஒரு சிறு தொகைகூட அவர்களை வந்தடைவதில்லை என்பதுதான் கொடுமை” என்கிறார் அவர்.
அவசர போலீஸுக்கு 100, ஆம்புலன்ஸ் சேவைக்கு 108 என்பதுபோல கடத்தல் விஷயத்திலும் ஒரு அவசர உதவி எண் இருந்தால் தவறுகள் நடப்பதைத் தடுக்க உதவிகரமாய் இருக்கும் என்றும் தன்னார்வ அமைப்பினர் கோரிக்கை விடுக்கிறார்கள்.
சமூக அவலங்களை ஒரே நாளில் களைந்துவிட முடியாது. இப்படிப்பட்ட ஆள்கடத்தல் வியாபாரம் நடப்பதற்கு, சமூக ஏற்றத்தாழ்வு, வறுமை எனப் பல காரணங்கள் உள்ளன. சர்வதேச அளவிலும் இந்தக் கடத்தல் வியாபாரம் பெரிய அச்சுறுத்தலாகவே இருந்துவருகிறது. இதை இன்னும் நம் அரசு கவலைக்குரிய பிரச்சினையாக எடுத்துக்கொண்டு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோள்.
ராகினியைப் போன்ற பெண்களின் கண்களுக்கு நாளையென்பதாவது பிரகாசமாய் இருக்குமா?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago