கரோனா ஊரடங்குக் காலத்தில் மக்கள் பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கு ஆளானாலும், குடும்ப உறுப்பினர்களால் ஏற்படும் மன நெருக்கடி தீவிரமானது. தனிக் குடும்பமோ கூட்டுக் குடும்பமோ உறுப்பினர்கள் அனைவரும் விழித்திருக்கும் வேளையில் சந்தித்துக்கொள்ளும் அல்லது உரையாடும் தருணமும் நேரமும் முன்பு குறைவு. தற்போது கரோனா ஊரடங்கால் அனைவரும் ஒரே குடையின்கீழ் நாள் முழுவதும் இருப்பதால் ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் பேசியாக வேண்டிய கட்டாயம்.
பிறர் பேசுவதைக் கேட்டாக வேண்டிய நிர்பந்தம். இப்படியான சூழலில் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான உறவைப் பராமரிப்பது என்பது பஞ்சுக்குள் நெருப்பை வைத்துப் பாதுகாப்பதைப் போன்றது. பக்குவப்பட்ட, விட்டுக்கொடுத்துப் போகும் ஈர இதயங்களால் மட்டுமே தீப்பற்றுவதைத் தவிர்க்க முடிகிறது. பிஞ்சு மனங்கள் கருகிப் போகின்றன. அண்மையில் நான் கேள்விப்பட்ட சில சம்பவங்களை வைத்துத்தான் இதைச் சொல்கிறேன்.
என் தோழியின் அக்காவுடைய மகள் சில வாரங்களுக்கு முன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாள். அவளுக்குப் பதிமூன்று வயது. வீட்டுக்கு வீடு நடந்தேறுகிற அம்மா - மகள் பிணக்குதான் குடும்பத்தையே உலுக்கிய, அந்தத் துயரத்துக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. மகள் எப்போதும் செல்போனும் கையுமாக இருப்பதை அம்மா கண்டிக்க, மனமுடைந்த மகள் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறாள்.
பதின்பருவக் குழந்தைகளைக் கையாளுவதில் பெரும்பாலான பெற்றோருக்கு இருக்கும் மெத்தன மும், இதற்கொரு காரணமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றியது. பெரும்பாலான பெற்றோர் குழந்தை வளர்ப்பு என்பதை ஒருவழிப் பாதை என்றே புரிந்துவைத்திருக்கிறார்கள். நாம் சொல்வதை மறுவார்த்தை பேசாமல் பிள்ளைகள், அப்படியே கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நம் குடும்பங்களில் பிள்ளைகளிடம் மனம்விட்டுப் பேசும் பெற்றோர் மிகக் குறைவு என்பதை, அதே தோழியின் வீட்டில் நிகழ்ந்த மற்றொரு விபரீதம் உணர்த்தியது.
அக்காள் மகள் இறந்த சில வாரங்களில் அவளுடைய நாத்தனாருடைய மகள் தன்னை மாய்த்துக்கொண்டிருக்கிறாள். கல்லூரிப் படிப்பை நிறைவு செய்திருந்த அந்தப் பெண், ஐந்து ஆண்டுகளாக ஒருவரைக் காதலித்து வந்திருக் கிறாள். இதற்கு இரு வீட்டாரும் சம்மதிக்க, சில மாதங்களில் திருமணம் நடைபெறவிருந்தது. இப்படியொரு சூழலில் வயிற்றுவலி என்று அவள் தற்கொலை செய்துகொண்டாளாம்.
அப்பா இல்லாத நிலையில் அம்மா, தம்பி, பாட்டி மூவருடன் வாழ்ந்துவந்த அந்தப் பெண்ணுக்கு உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கா வயிற்று வலி வந்திருக்கும்? அம்மாவிடம் மனம்விட்டுப் பேச முடியாத குறையையா, அந்த இளம்பெண் அனுபவித்திருப்பாள்? எது நடந்தாலும் குடும்பம் நமக்குத் துணை நிற்கும், நம் தவறைச் சரிசெய்ய உதவும் என்ற நம்பிக்கையை ஏன் நம் பிள்ளைகளிடம் நாம் ஏற்படுத்துவதில்லை?
நான் கேள்விப்பட்டவரையில் அந்த வீட்டின் அச்சாணியே அந்தப் பெண்தான். அம்மா வேலைக் குச் சென்றுவிட, வீட்டு வேலை அனைத்தையும் அந்தப் பெண் பம்பரமாகச் செய்துமுடிப்பாளாம். பொறுப்புணர்ந்து நடந்துகொள்வாளாம். அப்படியிருக்க அந்தப் பெண்ணை மரணத்தை நோக்கி நகர்த்தியது வயிற்றுவலிதானா என்கிற கேள்விக்கான விடையையும், அந்தப் பெண் தன்னுடனேயே எடுத்துச் சென்றுவிட்டாள்.
மாமியார் - மருமகள் பிணக்குகள் இயல்பாகிவிட்ட நம் குடும்பங்களில், நூறு நாட்களைக் கடந்து தொடர்கிற ஊரடங்கால் அம்மா - மகள் சண்டையை அதிகம் பார்க்கமுடிகிறது. எங்கள் பக்கத்து வீட்டுப் பெண் வேலைக்குச் செல்கிறவர். ஊரடங்கால் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதால், அவருக்கும் அவருடைய அம்மாவுக்கும் ஒரு நாளில் குறைந்தது மூன்று முறையாவது சண்டை வந்துவிடுகிறது. சில நேரம் அது எல்லை கடந்தும் விடுகிறது. அதேபோல், ஊரடங்கு முடிந்ததும் பலர் குடும்ப நீதிமன்றங்களை நாடுவார்கள் என்று வலம்வருகிற மீம்களில் உண்மை இல்லாமல் இல்லை.
சிக்கல்களை எதிர்கொள்வதைவிட, அதிலிருந்து நாம் தப்பித்து ஓடிக்கொண்டிருக்கிறோமோ என்ற உணர்வையே வீட்டுக்கு வீடு அதிகரித்துவரும் இப்படியான நிகழ்வுகளும் கசப்பான அனுபவங் களும் சுட்டிக்காட்டுகின்றன. நம்முடன் இருப்பவர்களைப் புரிந்துகொள்ளாமல் வேலை, பள்ளி என்று காரணம்காட்டி இவ்வளவு நாள் தள்ளிப்போட்டி ருந்தோம். இப்போது வேறுவழியில்லாமல் உரையாட நேரும்போது ஒருவரையொருவர் தாக்கிக்கொள்கிறோம். பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதைவிட அதைச் சரியான முறையில் எதிர்கொள்வதே சிறந்தது என்பதை, இந்த ஊரடங்கு நேரத்திலும் நாம் உணராவிட்டால் குடும்பச் சிக்கல்களுக்கு முடிவில்லை.
நீங்களும் சொல்லுங்களேன்...
தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம்வரை எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். நம் அனுபவம் அடுத்தவருக்குப் பாடமாக அமையலாம். குழம்பியிருக்கும் மனதுக்குத் தெளிவைத் தரலாம். தயங்காமல் எழுதுங்கள்.
- பூரணி, சென்னை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago