எல்.ரேணுகாதேவி
கரோனா நோய்த் தொற்று இன்றைக்கு யாருக்கு, எப்படி, எப்போது வரும் என்பதைக் கணிக்க முடியாத அச்சமிகு சூழ்நிலையில் இருக்கிறோம். இந்தச் சூழலில் கரோனாவிலிருந்து காக்கும் கரங்களாக இருப்ப வர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள்தாம். ஆனால், அந்தக் காக்கும் கரங்களையே கரோனாவால் இழந்துவரும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
கோவிட்-19 பாதிப்பு ஐம்பதாயிரத்தைக் கடந்து இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. உலக அளவில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகமுள்ள முக்கிய நகரங்களில் சென்னையும் இடம்பிடித்துள்ளது. இப்படிப்பட்ட ஆபத்தான காலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுடன் மருத்துவர்களும் செவிலியர்களும் நேரடித் தொடர்பில் உள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க ‘பிபிஇ கிட்’ எனப்படும் மூன்றடுக்குப் பாதுகாப்பு உடை அணிந்து மருத்துவத் துறையினர் பணியாற்றிவருகிறார்கள். ஆனால், இதையெல்லாம் தாண்டியும் மருத்துவத் துறையில் உள்ளவர்களுக்கே நோய்த்தொற்று ஏற்பட்டு, உயிர்ப்பலி ஏற்படுகிறது. சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையின் தலைவர் உட்பட 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
என்ன நடக்கிறது மருத்துவமனைகளில்?
சென்னையில் கரோனா வைரஸ் தொற்று அதிகமாகப் பரவுவதற்குக் காரணமாக இருந்த ராயபுரம், கோயம்பேடு ஆகிய பகுதிகளுக்கு அடுத்தபடியாகத் தற்போது ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையும் கரோனா பரவல் அதிகரிக்கக் காரணமான ‘நோய் மைய’மாக மாறியுள்ளது. சில நாட்களுக்கு முன் சென்னை மருத்துவக் கல்லூரி விடுதியைச் சேர்ந்த முதுகலை மருத்துவ மாணவர்கள் 70 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த நிகழ்வு மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரிடம் பேசியபோது தெரியவந்த தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
பாதுகாப்பு உடை பாதுகாப்பாக உள்ளதா?
காற்றுப் புகாத பாதுகாப்பு உடையை ஆறு மணி நேரத்துக்கும் மேல் ஒருவர் அணிந்துகொண்டிருப்பது கடினம். ஆனால், அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையால் மருத்துவப் பணியாளர்கள் பன்னிரண்டு மணிநேரம்கூட, இந்த உடையை அணிய வேண்டிய சூழல் உள்ளது. இதனால், தோல் பிரச்சினைகள், மூச்சடைப்பு போன்ற இன்னல்களை மருத்துவப் பணியாளர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் தமிழக மருத்துவர்கள் பயன்படுத்தும் 'பி.பி.இ. கிட்' தரமற்றதாக உள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இது குறித்துப் பேசிய மகப்பேறு மருத்துவர் ஒருவர் “கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் நான் பிரசவம் பார்த்துள்ளேன். பிரசவ வலியால் துடிக்கும் அவர்கள் முகக்கவசம் அணிவது இயலாத காரியம். அவர்களிடமிருந்து வெளியேறும் நீர்த்துளிகள், ரத்தப்போக்கு எங்களைப் பாதிக்கக் கூடாது என்பதற்காகத்தான் பாதுகாப்பு உடையை அணிந்திருக்கிறோம். ஆனால், எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உடையும் முகக்கவசமும் தரமற்றவை. N95 முகக்கவசங்களுக்குப் பதில், இரண்டாம் தர K95 என்ற முகக்கவசமே வழங்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன் பிரசவ வலியால் துடித்த பெண் ஒருவர், என்னைப் பிடித்து இழுத்ததில் நான் அணிந்திருந்து பாதுகாப்பு உடை கிழிந்தேவிட்டது. அந்த அளவுக்குத் தரமற்ற உடையை அணிந்துகொண்டுதான் வேலை பார்த்து வருகிறோம். கோவிட்-19 நோயாளிகளுடன் நேரடித் தொடர்பில் உள்ள எங்களைப் போன்ற மருத்துவர்களின் பாதுகாப்பு, இந்த அளவுக்கு இருந்தால் நாங்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க முடியுமா?
சீனாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உடைகள் உட்புறம் மிருதுவாகவும் வெளியே நீர்புகாத வகையிலும் தரத்துடன் இருந்தன. கேரள மருத்துவர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு உடைகளும் தரமானவையே. ஆனால், தமிழ கத்தில் வழங்கப்படும் பாதுகாப்பு உடைகள் பிளாஸ்டிக் தாளில் செய்யப்பட்டது போல் உள்ளன. இது போன்ற தரமற்ற பாதுகாப்பு உடை எந்தப் பாதுகாப்பையும் எங்களுக்கு வழங்குவதில்லை” என்கிறார்.
பரிசோதனையை உறுதிப்படுத்த வேண்டும்
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதுகலை மருத்துவ மாணவர் ஒருவர், “கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் நேரடித் தொடர்பில் இருப்பவர்கள் முதுகலைப் பயிற்சி மருத்துவர்கள்தாம். இதனால்தான் நாங்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளோம். ஒரே இடத்தில் இவ்வளவு பேர் பாதிக்கப்பட்டால், அரசு என்ன செய்திருக்க வேண்டும்? உடனடியாக விடுதியை மூடி சீல் வைத்திருக்க வேண்டும். ஆனால், தற்போதுவரை விடுதி செயல்பட்டுவருகிறது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கூடும் அபாயம் இருக்கிறது” என்கிறார்.
மற்றொரு முதுகலை மருத்துவ மாணவரோ, “எங்களுக்குப் பரிசோதனை செய்தபோது ஒரே நாளில் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. ஆனால், அதற்கு அடுத்த நாள் இதர மருத்துவ மாணவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் வெறும் மூவருக்கு மட்டுமே தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்தப் பரிசோதனை முடிவு மருத்துவம் படித்த எங்களுக்கே சந்தேகத்தை எழுப்புகிறது. கடந்த ஐந்து மாதங்களாக கரோனா பிரிவில் பணியாற்றிய பலருக்கு இரு முறை மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் பல முதுகலை மருத்துவ மாணவர்கள், தங்களுக்கு கரோனா நோய்த்தொற்று உள்ளதா, இல்லையா என்ற அச்சத்துடனேயே பணியாற்றிவருகிறார்கள்” என்கிறார்.
பயத்துடன் பணியாற்றுகிறோம்
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு மருத்துவ மனைகளில் இதர நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வரும் நோயாளிகள் பலருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள மருத்துவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு உடை வழங்கப்படுவதில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். “அவசர சிகிச்சைப் பிரிவுக்குத் தினமும் நான்கு பாதுகாப்பு உடைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. அதேபோல் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க எந்த முன்அனுபவமும் இல்லாத பயிற்சி மருத்துவர்கள் அனுப்பப்படுகிறார்கள். இதனால், பல இளம் பயிற்சி மருத்துவர்கள் கரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர்” என்கிறார்கள் மருத்துவர்கள்.
குறைக்கப்பட்ட நாட்கள்
கரோனா பிரிவில் பணியாற்றுபவர்கள் 14 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வது அவசியம். ஆனால், தற்போது மூன்று, ஐந்து, ஏழு நாட்களாக இந்த இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. “ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஒரு வாரம் கரோனா பிரிவில் பணிபுரிந்தவர்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டோம். ஆனால், தற்போது மூன்று நாட்கள் மட்டுமே சுயதனிமைக்கான விடுப்பு அளிக்கப்படுகிறது. கரோனா வைரஸ் நம் உடலில் இருக்கிறதா என்பது ஐந்தாம் நாளில் இருந்து பதினான்காம் நாளுக்குள் எப்போது வேண்டுமானாலும் தெரியவரும்.
தற்போது கரோனா பிரிவுப் பணி முடிந்து செல்லும்போது பரிசோதித்து அனுப்புகிறார்கள். இதனால், எங்களுக்கு கரோனா பாதிப்பு இருந்தாலும் பரிசோதனையில் தெரிய வாய்ப்பில்லை. அதேபோல் செவிலியர்கள் தங்கியுள்ள தேனாம்பேட்டை விடுதி மிகவும் மோசமாக உள்ளது. ஒருவருக்கான அறையில் இருவர் தங்கிக்கொள்கிறோம். கரோனா பிரிவில் பணிபுரிந்த செவிலியரிடமிருந்து மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது” என்கிறார் செவிலியர் ஒருவர்.
சமீபத்தில் கரோனாவால் இறந்தவரின் சடலம் நோயாளியின் அருகில் இருப்பதுபோன்ற படம் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டது. உண்மையில் மருத்துவமனையில் இதுபோல் நடக்கிறதா எனக் கேட்டபோது, உண்மைதான் என்கிறார் செவிலியர் ஒருவர். “தொடர்ந்து நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் மருத்துவப் பணியாளர்கள் இடைவெளியின்றிச் சுழன்றுகொண்டிருக்கிறோம். இதனால், கரோனாவால் இறந்தவரின் சடலம் மூன்று மணி நேரம்வரை வார்டில் இருப்பதற்குச் சாத்தியம் உண்டு. இதற்கு முக்கியக் காரணம் ஊழியர்களின் பற்றாக்குறையே. இந்தக் காட்சி எங்களுக்குப் பழகிவிட்டது. ஆனால், மற்ற நோயாளிகள் அச்சத்தில் உறைந்துவிடுவார்கள்” என்கிறார் அவர்.
கட்டுரையாளர், தொடர்புக்கு: renugadevi.l@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago