க்ருஷ்ணி
கரோனா என்கிற கண்ணுக்குத் தெரியாத எதிரியை வீழ்த்தும் போரில் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களுமே முதல் வரிசையில் நிற்கிறார்கள். கரோனா தொற்றைத் தடுக்கவோ தொற்று ஏற்பட்டால் அதிலிருந்து மீட்கவோ மருந்துகள் எவையும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காக்கும் அரும்பணியை இவர்கள் செய்துவருகிறார்கள்.
இப்படி யொரு நெருக்கடியான காலத்தில் கரோனா வைச் செயலிழக்கச் செய்வதற்கான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சியாளர்கள், அவற்றைச் செயல்படுத்தத் துணைநிற்கும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆகியோரின் பணியும் மகத்தானது. மக்களைக் காக்கும் மாபெரும் பணியில் திரைக்குப் பின்னால் இயங்கும் கரங்கள் இவர்களுடையவை.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டி ருக்கும் வீராங்கனைகளில் நிவேதிதா குப்தா, பிரியா ஆபிரகாம், பிரீத்தி சுதன், ரேணு ஸ்வரூப் ஆகிய நால்வரும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
பிரியா ஆபிரகாம்,
உலக சாதனை
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த பிரியா ஆபிரகாம் வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., எம்.டி., (மெடிக்கல் மைக்ரோபயாலஜி), பி.எச்டி., முடித்திருக்கிறார். வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையின் வைராலஜி துறைத் தலைவராக இருந்த பிரியா ஆபிரகாம், இரண்டு மாதங்களுக்கு முன்புதான் புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
தனக்குஅளிக்கப் பட்ட பொறுப் புக்குத் தன் கடின உழைப்பால் நியாயம் செய்திருக்கிறார் பிரியா. பாதிக்கப்பட்டவர் களின் ரத்த மாதிரிகளில் இருந்து கரோனா வைரஸைப் பிரித்தெடுத்த ஐந்தாம் நாடு இந்தியா. இந்தப் பெருமைக்குக் காரணம் பிரியா ஆபிரகாம். இவரது தலைமையிலான ஆராய்ச்சியாளர் குழுதான் இதைச் சாதித்தி ருக்கிறது. கரோனா வைரஸைத் தனியாகப் பிரித்த பிறகே அதற்கான பரிசோதனைகள், தடுப்பு மருந்துகள் குறித்த ஆய்வுகள் வேகமெடுத்திருக்கின்றன.
தொடக்கத்தில் தேசிய வைராலஜி நிறுவனத்தில் மட்டுமே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்தியாவின் முதல் மூன்று கரோனா தொற்றுகளை இந்த நிறுவனமே உறுதிசெய்தது. பிறகு, கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் அதற்கான பரிசோதனை மையங்கள் விரிவுபடுத்தப்பட்டன. அவற்றுக்கு பிரியா தலைமையிலான குழுவினரே பரிசோதனை வழிகாட்டிகளாக இருக்கின்றனர். தொற்று எண்ணிக்கை அதிகமானதைத் தொடர்ந்து 12 முதல் 14 மணி நேரத்துக்கு நீடித்த பரிசோதனை யைத் தன் குழுவினரின் துணையுடன் நான்கு மணி நேரமாகக் குறைத்தார். இந்தியாவின் மக்கள் அடர்த்தியும் நோய்த்தொற்று அதிகரிக்கக் காரணம் என்று சொல்லும் பிரியா ஆபிரகாம், ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் ஒன்றிணைந்து இந்தச் சவாலை எதிர்கொள்வோம் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.
நிவேதிதா குப்தா,
பரிசோதனைகளைப் பரவலாக்கியவர்
இந்தியாவின் உயர் ஆராய்ச்சி நிறுவனமான ‘இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக’த்தின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவரான நிவேதிதா குப்தா, தொற்றுநோயியல் துறையில் பணிபுரிகிறார். வைரஸ் நோய்கள், தடுப்பூசி, போலியோ, கடுமையான மூளை அழற்சி போன்றவை குறித்த பணிகளுக்குப் பொறுப்பேற்றுச் செயல்பட்டுவருகிறார்.
டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங்க் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை நிறைவுசெய்த இவர் (1994-99), ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு மருத்துவத் துறையில் ஆய்வுப் பட்டத்தை நிறைவுசெய்தார் (2001-2004). 2005 முதல் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் பணியாற்றிவரும் இவர், 2019-ல் கேரளத்தில் பரவிய நிபா வைரஸ் தொடர்பான ஆய்விலும் முக்கியப் பங்காற்றினார். 2009-ல் இந்தியாவில் இன்ஃபுளூயன்ஸா பரவியபோது ‘வைரஸ் ஆராய்ச்சி - நோய் கண்டறியும் ஆய்வகம்’ அமைக்கப்படக் காரணமாக இருந்தார். தற்போது இந்த அமைப்பின்கீழ் 106 ஆய்வகங்கள் நாடு முழுவதும் செயல்பட்டுவருகின்றன. வைரஸ் தொற்றைக் கண்டறிவதில் இவையே முதுகெலும்பாகச் செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நாள் முதலாக நிவேதிதா துடிப்புடன் செயல்பட்டுவருகிறார். நாடு முழுவதும் கரோனா பரிசோதனைகளையும் சிகிச்சை முறைகளையும் நெறிப்படுத்துவது இவரது முதன்மைப் பணி. கரோனா தொற்றைக் கண்டறியும் பரிசோதனைகளை நாடு முழுவதும் விரிவுபடுத்தியதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. கரோனா தொற்றைக் கண்டறியும் பணியில் 130-க்கும் மேற்பட்ட அரசு ஆய்வகங்களும் 52 தனியார் ஆய்வகங்களும் இவரது தலைமையின்கீழ் செயல்பட்டுவருகின்றன.
பிரீத்தி சுதன்,
இடைவிடாத சீராய்வு
மத்திய சுகாதாரம் - குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளரான பிரீத்தி சுதன், ஆந்திர மாநிலத்தின் 1983 ஐ.ஏ.எஸ். பிரிவைச் சேர்ந்தவர். பொருளாதாரத்தில் எம்.பில். முடித்திருக்கிறார். வாஷிங்டனில் உள்ள உலக வங்கியில் ஆலோசகராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கிய இவர் மாநிலத்திலும் மத்திய ஆட்சிப் பணியிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார். வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் இலவச சிகிச்சை பெறும் வகையில் உருவாக்கப் பட்ட தேசிய காப்பீட்டுத் திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்ட உருவாக்கத்தில் இவரது பங்கு முக்கியமானது.
கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவரும் நெருக்கடி நேரத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனுடன் இணைந்து பொறுப்புடனும் அறிவார்ந்த அணுகுமுறையுடனும் செயல்பட்டுவருகிறார். கரோனா பரவல் குறித்துத் தொடர்ச்சியான சீராய்வுப் பணிகளை மேற்கொண்டுவருகிறார்.
கரோனாவை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சீராகச் செயல்படுத்த ப்படுகின்றனவா என்பதை மாநில அரசுகளிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்கிறார். கரோனா தொடர்பான சந்தேகங்களுக்குத் துறை சார்ந்த விளக்கம் பெற பிரதமர் அலுவலகமும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும் முதலில் அழைக்கும் நபர் பிரீத்தி சுதன்தான். அந்த வகையில் அனைத்துத் தகவல்களையும் விரல்நுனியில் வைத்திருப்பதுடன், கரோனா தடுப்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்தும்வருகிறார்.
ரேணு ஸ்வரூப்,
வேகமெடுக்கும் ஆராய்ச்சி
மத்திய அறிவியல் - தொழில் நுட்பத் துறையின்கீழ் செயல்பட்டுவரும் உயிரித்தொழில்நுட்பத் துறையின் செயலராகப் பணியாற்றிவருகிறார் ரேணு ஸ்வரூப். 2020 ஏப்ரல் மாதத்துடன் அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் கரோனா பேரிடர் நேரத்தில் உயிரித்தொழில்நுட்பத் துறையின் பணிகள் தடைபடாத வகையில் இவரது பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டி ருக்கிறது. இந்தத் துறையில் 30 ஆண்டு முதன்மை ஆராய்ச்சியாளராகச் சிறப்புடன் செயலாற்றியதற்கான அங்கீகாரமாகவும் இந்தப் பணி நீட்டிப்பைக் கருதலாம்.
மரபியலிலும் தாவர இனப்பெருக்கத்திலும் ஆய்வுப் பட்டத்தை நிறைவுசெய்திருக்கும் இவர், அறிவியலில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதில் முதன்மையானவர். பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழு சார்பில் அமைக்கப்பட்ட ‘அறிவியல் பெண்கள்’ அமைப்பின் உறுப்பினராகவும் இவர் இருந்திருக்கிறார்.
உயிரித்தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெறக் காரணமாக இருந்தவர். தற்போது இவர் முன்னால் இருக்கும் பெரிய சவால், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதுதான். கரோனா தொற்றைக் கண்டறியும் கருவிகளையும் வென்டிலேட்டர்களையும் குறைந்த செலவில் உற்பத்திசெய்கிற நிறுவனங்களைச் சீராய்வுசெய்யும் பணியையும் ரேணு செய்துவருகிறார்.
எளிதில் தூக்கிச் செல்லும் வகையிலான இன்குபேட்டர்களைத் தயாரிப்பது, ரத்த மாதிரிகளில் இருந்து கரோனா வைரஸைப் பிரித்தெடுத்து அதன் மரபணுவை வரிசைப்படுத்துவது போன்றவை குறித்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறு இந்திய ஐ.ஐ.டி.களுடன் தொடர்பில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இவரது துறை அறிவுறுத்தியிருக் கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago