பெண் எனும் பகடைக்காய் - பெண் கல்வி: இரு வேறு அச்சுறுத்தல்கள்

By பா.ஜீவசுந்தரி

சென்ற வார மதுரைப் பயணத்தில் 12 வயது சிறுமி ஒருத்தியைச் சந்தித்தேன். துறுதுறுப்பாக அலைபாயும் கண்கள், யாரைப் பார்த்தாலும் லேசாக உதடு பிரித்துச் சிரிக்கும் அழகு, நிறம் மங்கி, சற்றே வெளுத்துப் போன மிலிட்டரி பச்சை நிற பாவாடையும், வெள்ளையில் காலர் வைத்த சட்டையுமாக பள்ளிச் சீருடை. மடக்கிக் கட்டிய இரட்டைப் பின்னல். பெயர் கேட்டதும் பளிச்சென்று ‘ராணி’ என்று சொன்னாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மதுரை அருகிலுள்ள ஒரு கிராமத்தின் அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறாள். நல்ல சூட்டிகை. மற்ற மாணவிகள் அனைவருக்கும் தலைமைப் பொறுப்பேற்று அவர்களை வழிநடத்தும் ஆற்றல் பெற்றவள். ஆனால், வறுமையின் பிடியில் சிக்கி மீள முடியாமல் இருக்கும் குடும்பச் சூழல்.

தாயும் மகளும் மட்டும் தங்கியுள்ளனர். தாயார் அதிகாலையிலே எழுந்து வாழைத்தோப்புக்கு மண் அணைப்பதற்கான கூலி வேலைக்குச் சென்றுவிட்டால், சோறு வடித்துக் குழம்பு வைக்கும் பொறுப்பு இந்தச் சின்னஞ்சிறு பெண்ணுக்கே. அதையும் அவள் முனைப்போடு செய்துவிட்டுத்தான் பள்ளிக்குக் கிளம்புகிறாள். பள்ளியில் கிடைக்கும் சத்துணவு மதியத்துக்கு. இவள் சமூகப் பின்னணி பற்றி விசாரித்து அறிந்துகொண்டபோது மனசுக்குள் எழுந்த வலி கொஞ்சம் நஞ்சமல்ல.

இவர்கள் ஊர் ஊராக நாடோடிகளாகச் சென்று ஆட்டுக்கிடை போடும் கீதாரிகள். வீடு, வாசல், நகை நட்டு என்று எந்தச் சொத்துக்களும் இல்லாதவர்கள். தட்டுமுட்டுச் சாமான்களும் கொஞ்சம் செம்மறியாடுகளும் மட்டுமே இவர்களின் சொத்து. பனையோலைகளால் வேயப்பட்ட பெரிய அளவிலான பரிசல் வடிவப் படப்பு இவர்களின் குடியிருப்பு.

பகல் பொழுதுகளில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, நீளமான தொரட்டுக் கம்பு போல ஒரு மூங்கில் கழியைக் கையில் வைத்திருப்பார்கள். பகலில் ஆடுகளை விரட்ட அது பயன்பட்டாலும், இரவு நேரங்களில் அதுவே அவர்களின் பாதுகாப்பு ஆயுதம். ஆடுகளைத் திருட வரும் நாய், நரி போன்ற விலங்குகளானாலும் களவாணிப் பயல்களானாலும் அந்தக் கம்பின் வீச்சுக்குத் தப்ப முடியாது. அறுவடை முடிந்த வயல்களில் அல்லது தோப்பு துரவுகளில் தங்கள் ஆடுகளைக் ‘கிடை மடக்கு’வார்கள். இரவுப் பொழுதுகளில் செம்மறியாட்டுக் கூட்டம் கழிக்கும் சிறுநீர் மற்றும் ஆட்டாம் புழுக்கைகள் அந்த நிலத்தின் அடுத்த போக விளைச்சலுக்கான அதியற்புத இயற்கை உரம். அத்துடன் ஆடுகளின் உபரியான உரோமங்களையும் கத்தரித்துப் போடுவதன் மூலம் அதையும் நிலத்துக்கே உரமாக்குவார்கள். அதனாலேயே நிலத்துக்குச் சொந்தக்காரர்கள் இந்தக் கீதாரிகளுக்குக் கிடை போட இடம் கொடுப்பார்கள். பரஸ்பரம் இருவருக்கும் பலன் கிடைக்கும். ஆடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒவ்வோர் இரவுக்கும் இவ்வளவு ரூபாய் எனத் தொகை நிர்ணயித்துக்கொள்வார்கள். கிடை போட்டிருக்கும் இடத்திலேயே அடுப்பு மூட்டிக் கஞ்சி காய்ச்சிக்கொள்ளுவார்கள். இரவுக்குக் காய்ச்சிய கஞ்சியே அடுத்த நாளின் காலை, மதியம் என இரண்டு வேளை ஆகாரம்.

கிராமங்களின் வீடுகள் எண்ணிக்கையைப் பொறுத்து அந்த ஊரில் தங்கும் நாட்களைக் கீதாரிகள் தீர்மானிப்பார்கள். அடுத்தடுத்த வயல்களில் மற்ற விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்றுக் கிடை மடக்குவார்கள். ஒவ்வோர் ஆண்டும் இப்படி அதே ஊர்களுக்குச் செல்வதால் அனைவரையும் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். அந்த ஊரின் தேவை தீர்ந்தால், அங்கிருந்து அடுத்த ஊருக்குத் தங்கள் சொத்தான ஆடுகளுடன் பயணமாவார்கள். இதுதான் அவர்களின் வாழ்க்கை முறை.

இப்படி நாடோடிகளாக ஊர் ஊராகச் சுற்றுபவர்களின் பிள்ளைகள் எப்படிப் படிக்க முடியும்? ஆண் பிள்ளைகள் என்றால் அவர்களும் தொரட்டுக் கம்பைக் கையிலெடுத்துக்கொண்டு ஆடோட்டிப் பிழைக்க வந்து விடுவார்கள். ஆனால் பெண் பிள்ளைகளின் கதி?

இப்போது மீண்டும் ராணி பிரச்சினைக்கு வருவோம். இந்தச் சிறுமி ராணியின் தந்தை கிடை மடக்கப்போன இடத்தில் வேறொரு பெண்ணைச் சேர்த்துக்கொண்டு, மனைவி, மக்களை ‘அம்போ’வென நடுத்தெருவில் விட்டுவிட்டுப் போயே போய் விட்டார். ராணியின் அண்ணன் கிடை மடக்கும் தொழிலைக் கைக்கொண்டு கீதாரியாக ஆடுகளுடன் ஊர் ஊராக அலைந்துகொண்டிருக்கிறான். சொந்தமாக ஆடுகள் இல்லாததால், மற்றவர்களுடன் சேர்ந்து பிழைக்கிறான்.

தாயும் மகளுமாக பனையோலைப் படப்பினையே குடியிருப்பாக்கிக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். உடைமைகள் என்று சொல்லிக்கொள்ள ஒன்றிரண்டு சமையல் பாத்திரங்கள் தவிர வேறொன்றுமில்லை. இரவு நேரங்களில் அந்தப் படப்புக்குள் படுத்து அந்தத் தாய் நிம்மதியாகத் தூங்கிவிட முடியுமா? பாம்பு, தேள் என விஷ ஜந்துக்கள் ஒரு பக்கம் ஊர்ந்து வந்து அச்சுறுத்தினாலும், அல்லது மனித ஜந்துக்களே படையெடுத்தாலும் கேட்பாரற்ற நிலை. பருவமடையும் வயதிலிருக்கும் மகளை எப்படி அந்தத் தாய் பாதுகாப்பார்? இந்த நிலையிலும் அவர்கள் தங்கள் சுயமரியாதையை இழக்கத் தயாராக இல்லை. எவர் உதவியையும் ஏற்க மறுத்து சொந்தக் காலில் நிற்கவே விரும்புகிறார்கள்.

இந்தச் சூழல்கள் எதுவும் அந்தக் குழந்தையின் படிப்பை பாதிக்கவில்லை என்பது மிகப் பெரிய ஆச்சரியம். ஆனால், இப்போது அந்தத் தாய், தன் மகன் கிடை மடக்கும் ஊரை நோக்கிப் பயணிக்கும் மனநிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார்.

ராணி இனி என்ன ஆவாள்? அவள் பெரிதும் நேசிக்கும் படிப்பு என்னாகும்? இந்த ராணியைப் போல எத்தனை பெண் குழந்தைகள் தங்கள் கல்வியையும் எதிர்காலத்தையும் பணயம் வைக்கப் போகிறார்கள்?

பெண் கல்வி என்பது இன்னமும் எவ்வளவு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான கிராமப்புறங்களில் பள்ளிகளில் கழிப்பறை கிடையாது. தப்பித் தவறி இருந்து விட்டாலும் தண்ணீர் கிடையாது. மாதவிடாய் நாட்களில் அந்தச் சிறுமிகள் படும் துன்பங்களும் வேதனைகளும் சொல்லத் தரமற்றவை. அதனாலேயே பெண் குழந்தைகள் தங்கள் கல்வியைத் தொலைத்து இடைநிற்றல் அதிகமாகிறது. 9-ம் வகுப்புடன் தங்கள் படிப்பை ஏறக் கட்டும் பெண்குழந்தைகள் சதவீதம் மிக அதிகம். ஒன்று பாதுகாப்புக் காரணங்களுக்காக, மற்றது குடும்பச் சூழ்நிலைகளுக்காக. காரணம் எதுவாக இருந்தாலும் பலிகடா என்னவோ பெண்தான்.

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்