முகம் நூறு: ‘நாங்கள் மூன்றாம் பாலினமா?’

By பிருந்தா சீனிவாசன்

ஜெகதீஸ், தன்னைப் பெண்ணாக உணர ஆரம்பித்தபோது அவனுக்கு ஆறு வயது. பெண் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவது, அம்மாவுடன் சேர்ந்து கோலம் போடுவது, நடனமாடுவது போன்ற ஜெகதீஸின் செயல்பாடுகளை அதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஏழு வயதானதும் தன் அக்காவின் ஹைஹீல்ஸ் செருப்பை அணிந்து அழகுபார்த்தபோது மொத்த வீடும் விழித்துக்கொண்டது. ‘இவையெல்லாம் பெண் குழந்தைகளின் அடையாளம். நீ ஓர் ஆண். இப்படிச் செய்யக் கூடாது’ என்று அவனது செயல்களுக்குத் தடைவிதித்தது. ஆனால் ஜெகதீஸால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் வீட்டில் யாரும் இல்லாதபோது அவற்றைச் செய்தான். ஒரு கட்டத்தில் அதுவும் அம்பலமாகிவிட, மருத்துவரிடமும் மந்திரவாதியிடமும் அழைத்துச் சென்றனர். ‘நல்லா அடி கொடுத்தா சரியாகிடும்’ என்று மருத்துவர் அறிவுரை சொல்ல, வேப்பிலையால் மந்திரித்து அனுப்பினார் மந்திரவாதி. அதற்குப் பிறகு ஜெகதீஸ் தன் வீட்டில் எதிர்கொண்டவை எல்லாம் தொடர்ச்சியான அடியும் உதையும்தான். நடனமாடக் கூடாது என்பதற்காக ஜெகதீஸின் கால்களில் வெந்நீர் ஊற்றப்பட்டது. பெண்ணாக மாறத் துடிக்கும் ஜெகதீஸின் ஆழ்மனத் தவிப்பை யாரும் புரிந்துகொள்ளவில்லை. பதினோரு வயதில் தற்கொலைக்கு முயன்றான். அது தோல்வியில் முடிந்தது. அதற்குப் பிறகான நாட்களில் மரண வேதனையை அனுபவித்தான்.

நிராகரிப்பின் வேதனை

ஒரு கட்டத்துக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல் பதினாறு வயதில் தன் தம்பியிடம், ‘நான் ஆண் அல்ல, நான் ஒரு பெண்’ என்று திடமாகச் சொன்னான். அண்ணனாகப் பிறந்தவன், அக்காவாக மாறிய பாலின மாற்றத்தைத் தம்பியால் புரிந்துகொள்ள முடிந்தது. அதற்காகவே அந்த வீட்டில் தம்பிக்கும் அடி கிடைத்தது. உறவினர்களும், சுற்றியிருக்கிறவர்களும் கேலி செய்ய, பள்ளியில் நடந்ததோ பாலியல் சீண்டல். வீடு, பள்ளி, சமூகம், பொது இடம் என்று திரும்பிய திசையெங்கும் கதவடைப்பு. அதற்குப் பிறகு ஜெகதீஸ் என்ன ஆனான்?

மாற்றத்தின் புதிய முகம்

தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பாலியல் சிறுபான்மையினர் ஆகியோரின் சமூக அங்கீகாரத்துக்கும் சட்ட உரிமைகளுக்கும் குரல்கொடுக்கிறது ‘Ondede’ (கன்னடத்தில் ‘ஒந்ததே’ என்றால் ‘எல்லாரும் ஒன்றுதான்’ என்று அர்த்தம்) என்ற அமைப்பு. பெங்களூரில் இயங்குகிற அந்த அமைப்பின் நிறுவன தலைவர் அக்கய் பத்மாஷலிதான் அன்றைய ஜெகதீஸ்! இடைப்பட்ட காலத்தில் அவர் சந்தித்த துயரங்களும் வேதனைகளுமே அவரை ஒரு செயல்பாட்டாளராகப் பரிணமிக்கச் செய்திருக்கின்றன.

“பெங்களூர் பார்க் பக்கத்துல நிறைய பாலின சிறுபான்மையினர் இருப்பாங்க. ஒரு நாள் ஸ்கூல் விட்டு வரும்போது தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு அவங்ககிட்டே பேசினேன். என்னையும் அவங்களோட சேர்த்துக்கச் சொன்னேன். ‘நீயும் எங்களை மாதிரி ஆக வேணாம். ஒழுங்கா படிக்கற வேலையைப் பாரு’ன்னு அவங்க சொன்னாங்க. ஆனா என்னோட உணர்வுகளைப் புரிஞ்சுக்காத வீடு எனக்கு நரகமா இருந்துச்சு. அதனால நான் ஸ்கூல் போறதை விட்டுட்டு இவங்களோட சேர்ந்து கிட்டேன்” என்று சொல்லும் பத்மாஷலி, அதற்குப் பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் பாலியல் தொழிலாளியாக இருந்திருக்கிறார்.

இது வேறு உலகம்

“நான் ஆரம்பத்துல ஒரு கடையிலதான் வேலைக்குப் போனேன். அங்கே பல விதமான பாலியல் சீண்டலை எதிர்கொண்டேன். மூணு மாசத்துக்கு மேல என்னால பொறுத்துக்கவே முடியலை. இவ்ளோ கஷ்டப்படுறதுக்கு நாமளே ஏன் அந்தத் தொழிலைச் செய்யக் கூடாதுன்னு தோணுச்சு. டாக்டர், போலீஸ், கூலித் தொழிலாளி இப்படிப் பல தரப்பு ஆண்களும் என்னைத் தேடி வருவாங்க. இங்கேயும் வன்முறை நடந்தது. ஆனா காசு கிடைக்குதேன்னு நான் தாங்கிக்கிட்டேன். என் வீட்ல நான் ஏதோ ஒரு இடத்துல வேலைக்குப் போறேன்னு நம்பினாங்க” - சமூக புறக்கணிப்பும் பொறுப்பின்மையும் மாற்றுப் பாலினத்தவரை எந்த நிலைக்குக் கீழிறங்கச் செய்யும் என்பதற்கு பத்மாஷலியின் வார்த்தைகளே சாட்சி.

பாதை காட்டிய தோழி

நான்கு ஆண்டு பாலியல் தொழில், பத்மாஷலியை வதைத்துவிட்டது. வன்முறையும் அத்துமீறலும் அதிகரிக்க, உடைந்துபோனார்.

“எத்தனை முகங்கள், எத்தனை அவமானங்கள், எவ்வளவு வலி! ஒரு கட்டத்துக்கு மேல இதைப் பண்ணணுமான்னு தோணுச்சு. என் தோழி சுமாவோட அறிமுகம் எனக்கு நம்பிக்கை கொடுத்துச்சு” என்று சொல்லும் பத்மாஷலி, அதற்குப் பிறகு மாற்றுப் பாலினத்தவருக்காகச் செயல்பட்டுவரும் ‘சங்கமா’ அமைப்பில் பகுதிநேரப் பணியாளராகச் சேர்ந்தார். அங்கே பத்து ஆண்டுகள் பணியாற்றினார். அந்த பத்து ஆண்டுகளும் பத்மாஷலியின் வாழ்வில் முக்கியமானவை. மாற்றுப் பாலினத்தவர்கள் குறித்தும், அவர்களுக்கான சமூக அங்கீகாரம் குறித்தும் இவருக்குள் ஆழமான புரிதல் ஏற்பட்டது. பிறகு அந்த அமைப்பிலிருந்து விலகி, ‘Ondede' அமைப்பைத் தொடங்கினார். இதில் இவருடன் கல்லூரிப் பேராசிரியர்களும் பெண்ணியவாதிகளும் அடிப்படை உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

“எந்தவொரு சமூகத்தில் சிறுபான்மையினருக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கிறதோ அதுதான் ஆரோக்கியமான சமூகமாக இருக்க முடியும். அதனால்தான் நாங்கள் எங்களுடன் தலித்துகள், முஸ்லிம்கள் போன்றோரின் உரிமைக்காகவும் போராடிவருகிறோம். இவர்களுக்கு முதலில் சட்டரீதியான விழிப்புணர்வு தேவை. சட்டத்தை உருவாக்கும் இடத்திலும் அதைச் செயல்படுத்தக்கூடிய இடத்திலும் இருக்கிறவர்களிடம் தொடர்ந்து பேசிவருகிறோம்” என்கிறர் பத்மாஷலி.

உலகம் முழுக்க அவமானம்தானா?

இவர்களின் அமைப்பு சார்பில் கர்நாடக மாநிலத்தில் மாற்றுப் பாலினத்தவர்களின் பெற்றோர்களைச் சந்தித்து, அவர்களின் மனமாற்றத்துக்கு உதவுகிறார்கள். 2014-ம் ஆண்டு டோக்கியோவில் ‘சர்வதேச பார் கவுன்சில்’ சார்பில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்டார்.

“அங்கே 36 நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தேன். இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுக்கவே மாற்றுப் பாலினத்தவர்கள் மிகவும் கீழ்த்தரமாகத்தான் நடத்தப்படுகிறார்கள் என்பதை அவர்கள் மூலம் தெரிந்துகொண்டேன். ஒரு மனித உயிரை இதைவிட இழிவுபடுத்த முடியாது” என்கிறார் பத்மாஷலி.

“திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அறிவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சி. நாங்கள் மூன்றாம் பாலினம் என்றால் முதல் பாலினம் யார்? எந்த வகையில் ஆண்கள் முதல் பாலினமாக அறியப்படுகிறார்கள். அதற்கான தகுதி என்ன?” என்று கேள்விகளை அடுக்குகிற பத்மாஷலி, இந்தியாவில் பெண் என்ற அடையாளத்துடன் கார் ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் திருநங்கை.

கேள்விக்கென்ன பதில்?

“தான் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ அறியப்பட வேண்டும் என்று நினைப்பது பாலியல் சிறுபான்மையினரின் உரிமை. அதில் எப்படி அடுத்தவர் தலையிட முடியும்? பாலியல் சிறுபான்மையினருக்கு இங்கே குறைந்தபட்ச அங்கீகாரம்கூட இல்லை. நம் சமூகத்தில் அவர்கள் பிச்சையெடுக்க வேண்டும். இல்லையென்றால் பாலியல் தொழிலாளியாக இருக்க வேண்டும். இவை இரண்டும் தவிர்த்து வேறு வாய்ப்புகளையும் வழிவகைகளையும் நாம் அவர்களுக்கு உருவாக்கித் தந்திருக்கிறோமா? வீட்டின் புறக்கணிப்பால் வீதிக்கு வருகிற அவர்களுக்கு போக்கிடம் எது? சரியான வழிகாட்டுதல் இல்லாமல் மோசமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துத் தங்கள் வாழ்வையே இழந்துவிடுகிற பாலியல் சிறுபான்மையினருக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?” என்ற அக்கய் பத்மாஷலியின் கேள்வி, பலரது மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நமக்கு எதிர்ப்படுகிற, நம்மைக் கடந்து செல்கிற மாற்றுப் பாலினத்தவரை சமமான மனிதர்களாக மதிப்பதொன்றே அந்த மாற்றத்தில் நாமும் பங்கெடுப்பதற்கான ஆரம்பப் புள்ளியாக இருக்க முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்