முன் எப்போதையும்விட இணையத்தின் பயன்பாடு இப்போது அதிகரித்துவருகிறது. பள்ளிப் பருவத்திலேயே பலரும் ஸ்மார்ட் போன்களுக்கும் சமூக வலைதளங்களுக்கும் அடிமையாகியிருப்பதையும் காண முடிகிறது. கட்டுப்பாடும் கண்காணிப்பும் இல்லாத இணையப் பயன்பாடு ஒரு சிறுமியை எப்படியெல்லாம் சீரழித்துவிடக்கூடும் என்பதை உணர்த்துகிறது ‘Online Predators' என்ற விழிப்புணர்வு குறும்படம். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராகச் செயல்படும் போதினி அமைப்பு இந்தக் குறும்படத்தை வெளியிட்டிருக்கிறது.
பதின்பருவத்தினர் மீது நிகழ்த்தப்படும் இணைய அத்துமீறல்கள் குறித்து நடிகை பார்வதி தருகிற புள்ளிவிவரங்களோடு தொடங்குகிறது குறும்படம். ‘தினமும் சராசரியாக ஏழு குழந்தைகளில் ஒருவர் இணையம் மூலமாகப் பாலியல் நோக்கமுள்ள தகவல்களைக் கிடைக்கப் பெறுகிறார்கள். 2013-ம் ஆண்டு 13 முதல் 17 வயதுவரையுள்ள ஏழாயிரம் பேர் சைபர் கிரைம் எனப்படும் இணையக் குற்றங்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதில் பெரும்பாலானவை பாலியல்ரீதியிலான குற்றங்கள். மொபைல் போன்கள் மூலமே பெரும்பாலான குற்றங்கள் நடந்திருக்கின்றன’ என்று பார்வதி சொல்கிற ஒவ்வொரு தரவும் அதிர்ச்சியை அதிகப்படுத்துகிறது.
அதேசமயம், பதின்பருவச் சிறாரின் பெற்றோர் எவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதைப் பொட்டில் அறைவது போல சொல்கிறது ஷிகா என்ற பள்ளி மாணவியின் கதை.
பதினோரு வயதிலேயே ஷிகாவுக்கு ஃபேஸ்புக் அறிமுகம். பெரிய பதவியில் இருக்கும் அவளுடைய பெற்றோருக்கு ஷிகாவின் நடவடிக்கைகளைக் கவனிக்க நேரமே இல்லை. அதனால் இரவு பகல் பாராமல் ஆன் லைனில் நண்பர்களுடன் சாட் செய்தபடி இருப்பாள். அப்படியொரு சாட் வழியாக அவன் அறிமுகமானான். தொடர்ந்து ஷிகாவுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பத் தொடங்கினான். ஆரம்பத்தில் தயங்கினாலும் அவனுடன் சாட் செய்வது ஷிகாவுக்குப் பிடித்துப்போனது. எப்போதும் மொபைல் போனிலேயே மூழ்கிக் கிடந்தாள். படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வம் குறைந்து, அவனது குறுஞ்செய்திகளுக்காகக் காத்திருந்தாள்.
ஷிகா போன்ற மாணவிகள்தான் ஆன்லைனில் வலைவிரிக்கும் வக்கிரபுத்தி கொண்டவர்களின் இலக்கு. அப்படியொரு கயவனிடம்தான் ஷிகாவும் சாட் செய்தாள், அவனது சுயரூபம் தெரியாமலேயே. ஒரு நாள் அவனிடமிருந்து, ‘நான் உன்னைப் பார்க்க வேண்டும்’ என்று குறுஞ்செய்தி வந்தது. மறுத்த அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஷிகாவின் படங்களை மார்ஃப் செய்து, தன்னுடன் அந்தரங்கமாக இருப்பது போன்ற படங்களை அனுப்பினான். ஷிகா உறைந்துபோனாள். இதைத் தன் தோழிகளிடமும் பெற்றோரிடமும் பகிர்ந்துகொள்ளத் தோன்றாமல், அவன் சொன்ன இடத்துக்குப் பயணமாகிறாள். போகிற வழியில் ஷிகாவை, அவளது பள்ளி ஆசிரியைப் பார்த்துவிடுகிறார். சந்தேகமடையும் அவர், ஷிகாவிடம் விசாரிப்பதால் ஷிகா, அந்தக் கயவனிடம் இருந்து தப்பித்துவிடுகிறாள்.
இது ஷிகாவின் கதை மட்டுமல்ல. அவளைப் போன்ற பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் சமூக வலைதளங்களால் புதைகுழிக்குள் சிக்குண்டு கிடக்கின்றனர்.
“டீன் ஏஜ் குழந்தைகளை எப்படித் தங்கள் வலையில் வீழ்த்துவது என்று ஆன் லைன் கழுகுகளுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் தங்கள் பிள்ளைகள் ஆன்லைனில் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று பெற்றோருக்குத் தெரியுமா?” என்ற நடிகை பார்வதியின் கேள்வி, நம் ஒவ்வொருவருக்குமானது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago