முகங்கள்: வென்றார் மகாலட்சுமி

By எல்.ரேணுகா தேவி

பெண்ணுக்குச் சமூக விடுதலையையும் பொருளாதாரச் சுதந்திரத்தையும் தரும் ஆக்கபூர்வமான கருவிகளில் கல்வியும் ஒன்று. கல்விதான் தன்னுடைய விடுதலையின் திறவுகோல் என்றுணர்ந்த, பட்டாசுத் தொழிலாளியின் மகளான மகாலட்சுமி, துணை ஆட்சியராகத் தேர்வாகியுள்ளார்.

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலைச் சேர்ந்த பட்டாசுத் தொழிலாளிகளான கருப்பசாமி, ராஜேஸ்வரி ஆகியோரின் மகள் மகாலட்சுமி. இவர் குரூப் 1 தேர்வில் மாநிலத்தில் நான்காம் இடத்தைப் பிடித்திருக்கிறார்.
படி என்று சொன்னதில்லை

மகள் என்றாவது ஒருநாள் வெல்வாள் எனப் பல சோதனைகளையும் கஷ்டங்களையும் பொறுத்துக்கொண்ட பெற்றோருக்குத் தங்கள் மகள் துணை ஆட்சியராகப் பதவியேற்பது நெஞ்சில் மகிழ்ச்சியைப் பொங்கச் செய்துள்ளது. தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலைபார்த்த மகாலட்சுமியின் பெற்றோர் தற்போது வீட்டிலேயே பூ மத்தாப்புக் குமிழ்களைக் குடிசைத் தொழிலாகச் செய்துவருகிறார்கள். ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட மத்தாப்புக் குமிழ்களைச் செய்தால்தான் ரூ.100 தினக்கூலியாகக் கிடைக்குமாம். “நாங்கதான் படிக்கல. எங்க பொண்ணாவது படிக்க வேண்டும்னு நினைத்தோம். அதுக்கேற்ற மாதிரி எங்க பொண்ணும் குடும்ப நிலைமையைப் புரிஞ்சி படித்தாள். அதுக்காக நாங்க ஒரு நாள்கூட அவளைப் படி படின்னு சொன்னது கிடையாது. என் பெண்ணுமேல புகார்னு ஒருநாள்கூடப் பள்ளிக்கூடத்துல போயி நாங்க நின்னது கிடையாது. அவ நல்லா படிச்சு ஒரு வேலைக்குப் போக வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசையாக இருந்தது. இப்போ அவ துணை ஆட்சியராக ஆகியிருப்பது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார் மகாலட்சுமியின் தாயார் ராஜேஸ்வரி. குடும்பப் பொருளாதாரம் நலிவுற்ற நிலையை மகளின் கல்வியால் நிமிர்த்திவிடலாம் என்ற நம்பிக்கை ராஜேஸ்வரியின் பேச்சில் வெளிப்படுகிறது.

முதல் பெண்

குடும்பத்தின் முதல் பட்டதாரியான மகாலட்சுமி, அரசுப் பணிக்குத் தன்னுடைய குடும்பத்திலிருந்து செல்லும் முதல் நபர். அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் படித்த அவர், கல்வியால்தான் குடும்பத்தின் நிலையை மாற்ற முடியும் என்பதை உறுதியாக நம்பியவர். “ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது நல்ல மதிப்பெண் எடுத்ததால் ஆசிரியர்களின் பாராட்டு கிடைத்தது. இதுபோன்ற சிறு பாராட்டுக்கள்தாம் நான் நன்றாகப் படிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தந்தன. தொடர்ந்து வகுப்பில் முதல் மாணவியாக வந்தேன். பத்து, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் பள்ளியில் முதல் மாணவியாகத் தேர்ச்சிபெற்றேன்” என்கிறார் மகாலட்சுமி. மருத்துவம் படிக்க வேண்டும் என்பதுதான் மகாலட்சுமியின் ஆசை. ஆனால், இரண்டாம் கவுன்சலிங்கில் இடம் கிடைத்ததால் லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இதனால், மருத்துவத்திலிருந்து பொறியியல் படிப்புக்கு மாறியுள்ளார் அவர்.

ஆசிரியரின் உதவி

கல்விக் கடன் பெற்றுத் தனியார் கல்லூரியில் பி.டெக். படிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார் மகாலட்சுமி. படிப்பை முடித்த கையோடு அரசுப் பணியில் சேர்வதற்காகப் போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கான பயிற்சியைத் தொடங்கியுள்ளார். இதற்காக வீட்டுக்கு அருகிலிருந்த தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். “பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் போதுதான் என்னுடைய பள்ளி ஆசிரியர்கள் போட்டித் தேர்வு குறித்து எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். அவர்கள் தந்த ஊக்கம்தான் போட்டித் தேர்வை எதிர்கொள்வதற்கான நம்பிக்கையை அளித்தது. அப்போதுதான் அரசுத் துறையில் பணியாற்ற வேண்டும் என்பதை என்னுடைய லட்சியமாக வைத்துக் கொண்டேன். கல்லூரிப் படிப்பை முடித்தபிறகு பயிற்சி மையத்திலிருந்த ஆசிரியை பொன்வள்ளி எனக்குப் போட்டித் தேர்வுப் பயிற்சிக்குத் துணையாக இருந்தார். என் குடும்ப நிலையைப் புரிந்துகொண்ட அவர் விலை அதிகமாக உள்ள புத்தகங்களைப் புதிதாக வாங்குவதற்குப் பதில், அதே புத்தகத்தைக் குறைந்த விலையில் வாங்கிக்கொடுப்பார். ஆங்கில மாத இதழ்கள், வார இதழ்களை வாங்கிப் படிப்பதற்குப் பதில் நூலகத்துக்குச் சென்று படிக்க அறிவுறுத்துவார். தமிழ்வழியில் படித்த காரணத்தால் போட்டித் தேர்வை எதிர்கொள்வதற்காகத் தினமும் ஆங்கில நாளிதழ்களைப் படித்து அதிலிருக்கும் வார்த்தைகளைக் குறிப்பெடுத்துப் புரிந்துகொள்வேன். ஒவ்வொரு நாளும் பத்துப் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஆங்கிலம், தமிழ் நாளிதழ்களின் தலையங்கத்தை வாசிப்பது, அன்றாட நிகழ்வுகள், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிட்ட பள்ளிப் பாடப்புத்தகங்களைப் படிப்பது, பழைய போட்டித் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் எழுதிப் பழகுவது போன்ற அடிப்படை விஷயங்களை நான்கு ஆண்டுகளாகச் செய்துவந்தேன்” என்கிறார் மகாலட்சுமி. போட்டித் தேர்வுக்கான பாடத்தைக் கவனிப்பது மட்டுமல்லாமல் தனக்குப் புரிந்ததை மற்ற மாணவர்களுக்கும் அவர் கற்றுக்கொடுத்துள்ளார்.

தளராத தன்னம்பிக்கை

வாரத்தில் ஐந்து நாட்கள் பயிற்சி வகுப்புக்குச் சென்றாலும் வீட்டுக்கு வந்தபிறகு வீட்டு வேலைகளில் பங்கெடுத்துக்கொள்வது, பெற்றோருக்குத் துணையாக மத்தாப்புகளை ஒட்டுவது போன்ற பணிகளிலும் ஈடுபட்டுள்ளார் அவர். “அம்மா, அப்பா மத்தாப்பு ஒட்டினால் ஒரு நாளைக்கு ரூ.100 தான் கூலியாகக் கிடைக்கும். ஆனால், நான் சீக்கிரமாக ஆயிரக்கணக்கில் பூ மத்தாப்புப் பெட்டிகளைச் செய்வேன். இதனால் ஒரு நாளைக்கு ரூ.150, முதல் ரூ.200 வரை சம்பாதித்துக்கொடுப்பேன்” என்கிறார் மகாலட்சுமி. பொதுவாகக் கல்லூரி முடித்து இரண்டு, மூன்று வருடங்களிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்துகொடுத்துவிடுவது கிராமங்களில் சகஜம். ஆனால், நன்றாகப் படித்து அரசு வேலையில் அமர வேண்டும் என்ற தங்கள் மகளின் லட்சியத்துக்குத் துணையாக இருந்துள்ளனர் மகாலட்சுமியின் பெற்றோர். “எங்க பொண்ணு போட்டித் தேர்வுக்குப் படிக்கும் காலத்திலேயே சொந்தக்காரர்கள் எப்ப பொண்ணுக்குக் கல்யாணம் செய்யப் போறீங்க எனக் கேட்பார்கள். வீட்டில் பெண் இருக்கு எனத் தெரிந்து சிலர் பெண் பார்க்கவும் வந்தாங்க. ஆனால், நாங்க எங்க பொண்ணு படிச்சு பெரிய ஆபீஸராக வர வேண்டும் என உறுதியாக இருந்துவிட்டோம்.

அதனாலேயே பெண் கேட்டு வந்த விஷயத்தையெல்லாம் அவள் காதுக்குப் போகாம பார்த்துக்கொண்டோம்” என்கிறார் மகாலட்சுமியின் தந்தை கருப்பசாமி. இதனால், நம்பிக்கையுடன் போட்டித் தேர்வுகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார் மகாலட்சுமி. 2016-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-1 தேர்வில் 103-ம் இடத்தைப் பிடித்துள்ளார். ஆனால், அப்போது 85 அரசுப் பணிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால் மகாலட்சுமிக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனால், முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்பதை மனத்தில் கொண்டு கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் - 1 தேர்வு எழுதி தற்போது மாநிலத்திலேயே நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார் அவர். “என்னுடைய இந்த நான்கு ஆண்டு உழைப்புக்கு உறுதுணையாக இருந்தவர்கள் எங்க அம்மா, அப்பா, அண்ணன், ஆசிரியர்கள்தாம். பல கஷ்டங்கள் இருந்தாலும் எனக்குத் தேவைப்படும் புத்தகங்களையும், செல்போனில் இணைய வசதியையும் செய்துகொடுத்தார் அப்பா. நான் ஒருத்தி வெற்றிபெற்றால் என்னைப் பார்த்து எங்கள் ஊரைச் சேர்ந்த பலர் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்கிறார் மகாலட்சுமி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்