அருள் மலர் இல்லம் - வீட்டுக்குப் பாரம் என்று உறவுகளால் உதறித்தள்ளப்பட்ட ஜீவன்கள் கூட்டுக் குடும்பமாய் வசிக்கும் கூடு. இவர்களுக்கு இந்தக் கூட்டைக் கட்டிக்கொடுத்தவர் விண்ணரசி மல்லிகா.
ஒரு மோசமான சமூக அவலத்தின் தாக்கம்தான் காரைக்குடி ரயில் நிலையம் அருகிலுள்ள அருள்மலர் இல்லம் உதயமாகக் காரணம். “2002-ல், கிராமப்புறப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லவும் அவர்களைக் குழுக்களாக ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் எங்களது ‘டிராப்ஸ்’ (Development For Rural Oppressed People Service Society - DROPSS) அமைப்பு காரைக்குடியைச் சுற்றியுள்ள
கிராமங்களில் வேலை செய்தது. அந்த நேரத்தில்தான், நிறைய இடங்களில் முதியோர்கள் சாலை ஓரங்களிலும் கோயில் வாசல்களிலும் புறந்தள்ளிக் கிடப்பதைப் பார்த்தோம். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் ஒதுக்கப்பட்டுக் கிடந்தார்கள். எங்களது பணிகளுக்கு ஊடாக அந்த ஜீவன்களுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்தோம். அந்த சிந்தனைதான் அருள் மலர் இல்லமானது” என்கிறார் இல்லத்தின் நிர்வாகி விண்ணரசி மல்லிகா.
தொடக்கத்தில், ஐந்து பேருக்கு நிழல் கொடுத்த அருள் மலர் இல்லத்தில் இப்போது 27 பேர் இளைப்பாறுகிறார்கள். இவர்கள் அத்தனை பேருமே எழுபது வயதைக் கடந்த பெண்கள். இடைப்பட்ட இந்த 13 வருடத்தில் சுமார் 250 பேருக்கு அடைக்கலம் தந்திருக்கிறது இந்த இல்லம். அதில் பலர் மீண்டும் உறவுகளோடு சேர்ந்திருக்கிறார்கள். சிலர் இங்கேயே தங்கள் இறுதிக் காலத்தைக் கழித்திருக்கிறார்கள். உறவுகளால் ஒதுக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், தற்கொலையின் விளிம்பை எட்டிப் பார்த்தவர்கள் என பலரும் அருள்மலர் இல்லத்தில் அடைக்கலமாகியிருக்கிறார்கள்.
“இந்த இல்லத்தை நடத்துவதற்கு நாங்கள் எந்த அரசு உதவியையும் இதுவரை பெறவில்லை. இங்குள்ள அம்மாக்களின் நிலைமையைப் பார்த்துவிட்டு தொண்டு அமைப்புகளும் கருணை உள்ளம் கொண்டவர்களும் தாங்களாகவே உதவி செய்கிறார்கள். அடுத்த வேளை உணவுக்கு அரிசி இல்லையே என்று நினைத்துக் கொண்டிருப்போம். சற்று நேரத்தில் யாராவது ஒருவர் ‘எங்கள் வீட்டு விசேஷத்தில் மீந்துவிட்டது’என்று சொல்லி அத்தனை பேருக்குமான சாப்பாட்டையே கொண்டு வந்து கொடுப்பார்கள். நான் கடவுளை நம்புகிறேன். அவர்தான் இந்த இல்லத்தை வழி நடத்துகிறார்” என்று சொல்லும் விண்ணரசி, இங்கு வரும் முதியவர்கள் பலரும் ஆரம்பத்தில் தங்களைப் பற்றிய விவரங்களைச் சொல்வதில்லை என்கிறார்.
“தங்களைப் பற்றிச் சொன்னால் தங்கள் பிள்ளைகளுக்கு அவமானமாகிப் போய்விடும் என்பது சிலரது நினைப்பு. ஒரு சிலருக்கு, மீண்டும் நம்மை உறவுகளோடு சேர்த்து வைத்துவிடுவார்களோ என்கிற அச்சம். அதனால், உண்மை விவரங்களைச் சொல்வதில்லை. ஒருவாரம் கழித்த பிறகுதான் மெதுவாகப் பேசத் தொடங்குவார்கள். தற்கொலை முடிவுக்குப் போன பலரை ஆட்டோக்காரர்கள் எங்கள் இல்லத்தின் வாசலில் இறக்கிவிட்டுப் போயிருக்கிறார்கள். அப்படி வருகிறவர்களுக்கு ஆறுதல் சொல்லி தேற்றி உறவுகளுக்குத் தகவல் கொடுப்போம். சிலர் வந்து அழைத்துச் செல்வார்கள். சிலர், ‘நீங்களே வைச்சுப் பாருங்க. மாசா மாசம் ஏதாச்சும் பணம் அனுப்புறோம்’னு சொல்லுவாங்க. அந்தப் பணமும் கொஞ்ச நாள்தான் வரும். ‘நான் செத்துப் போனாக்கூட பொணத்தை வீட்டுக்கு தூக்கி விட்டுறதாம்மா. நீயே எல்லா காரியத்தையும் பண்ணிரு’ன்னு இவங்க சொல்லுவாங்க” என்கிறார் விண்ணரசி.
முதியவர்களில் யாராவது இறந்துவிட்டால் மற்ற முதியவர்களுக்கு அந்தத் தகவல் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
“ ‘அவங்களுக்கு உடம்புக்கு சுகமில்லை, ஆஸ்பத்திரியில சேர்த்துருக்கோம்’னு சொல்லிருவோம். நாங்க என்னதான் அக்கறையா பாத்துக்கிட்டாலும், ‘நம்ம புள்ளைங்க இப்படி நம்மளைத் தவிக்க விட்டுடுச்சே’னு அவங்க கண்கள்ல தெரியற ஏக்கத்தை மட்டும் போக்கவே முடியாது’’ என்கிறார் விண்ணரசி மல்லிகா.
உறவுகளால் தொலைக்கப்பட்ட இந்தப் பெண்கள் 48 வயதான விண்ணரசி மல்லிகாவைத் தங்களின் மகள் என்கிறார்கள். ஆனால், அவரோ அவர்களுக்குத் தாயாக இருக்கிறார்.
படங்கள்: அனுசுயா வெங்கடேசன்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago