சானியா என்றால் மகத்துவம், தலைசிறந்த, ஒளிவீசுகிற என்று பொருள். பெயருக்கேற்ற மாதிரி மகத்தான வீராங்கனையாகத் திகழ்கிறார் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா.
சமீபத்தில் நடந்த விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் வெற்றி கண்டதன் மூலம் இந்திய டென்னிஸ் வரலாற்றிலும் உலக அரங்கிலும் தனி அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார். இரட்டையர் பிரிவில் உச்சம் தொட்டிருக்கும் சானியா, இரட்டையர் தரவரிசையில் தற்போது உலகின் முதல் நிலை வீராங்கனையாகக் திகழ்கிறார்.
ஹைதராபாதைச் சேர்ந்த சானியா மிர்சா, ஆறு வயதிலேயே தந்தையின் பயிற்சியால் பட்டைதீட்டப்பட்டார். இன்று டென்னிஸ் உலகையே திரும்பிப்பார்க்க வைக்கும் வைரமாக ஜொலிக்கிறார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் கலப்பு இரட்டையர், மகளிர் இரட்டையர் ஆகியவற்றில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றிருக்கும் சானியா, மகளிர் ஒற்றையர் பிரிவில் நான்கு டபிள்யூ.டி.ஏ. பட்டங்களையும், மகளிர் இரட்டையர் பிரிவில் 27 டபிள்யூ.டி.ஏ. பட்டங்களையும் வென்று சாதித்திருக்கிறார்.
2003-ல் தொழில்முறை வீராங்கனையாக உருவெடுத்தது முதல் 2013-ம் ஆண்டுவரை ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவுகளில் ஆடிவந்தார். தொடர் காயம் காரணமாக 2013-ம் ஆண்டோடு ஒற்றையர் பிரிவில் விளையாடுவதை நிறுத்திக் கொண்டார். அதுவரையிலும் ஒற்றையர் தரவரிசையில் முன்னிலையிலேயே இருந்தார். அதிகபட்சமாக தரவரிசையில் 27-வது இடம் வரை முன்னேறினார்.
இந்திய டென்னிஸ் வரலாற்றின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனையான சானியா, இந்த உயரத்தை எட்டுவதற்காகச் சந்தித்த பிரச்சினைகளும், எதிர்கொண்ட சர்ச்சைகளும் ஏராளம். பெண் என்பதாலேயே அவருக்கு எதிராக ஏராளமான பிரச்சினைகளும் சர்ச்சைகளும் கிளப்பிவிடப்பட்டன.
சானியா குட்டைப் பாவாடை அணிந்து விளையாடுவதாகக்கூறி கடும் எதிர்ப்புகள் எழுந்தபோது பெரும் சர்ச்சைக்குள்ளானார். அதன் பிறகு பாதுகாப்பான உறவு குறித்த மாநாட்டில் பேசியதற்கு சானியாவைக் கண்டித்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இளைஞர்களை தவறாக வழிநடத்துவதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதற்கெல்லாம் அசராமல் திருமணத்துக்கு முந்தைய உறவை தான் எதிர்ப்பதாக விளக்கமளித்தார்.
2006-ல் இஸ்ரேலின் ஷாஹர் பியருடன் இணைந்து விளையாட மறுத்தபோது மதரீதியான பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடலாம் என்ற பயத்தாலேயே சானியா விளையாட மறுத்தார் என அவதூறு பரப்பப்பட்டது. ஆனால் 2007-ல் ஷாஹர் பியருடன் இணைந்து விளையாடியதன் மூலம் அவதூறு பரப்பியவர்களின் வாயை அடைத்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கை மணந்தபோதும் சானியா மீது விமர்சனங்கள் எழுந்தன.
இந்தியாவின் மகள்
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய சானியா, 2012-ல் சக டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸின் செயலால் மிகுந்த வேதனையடைந்தார். லண்டன் ஒலிம்பிக்கில் மகேஷ் பூபதியுடன் இணைந்து விளையாடவே சானியா விரும்பினார். ஆனால் பயஸோ தன்னுடன் இணைந்து விளையாட மறுத்த பூபதி, போபண்ணா ஆகியோருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சானியா தன்னுடன் விளையாட வேண்டுமென வலியுறுத்தினார். பயஸுக்குத் தலை வணங்கிய அகில இந்திய டென்னிஸ் சங்கம், லண்டன் ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸும் சானியாவும் இணைந்து விளையாடுவார்கள் என அறிவித்தது.
இதனால் வேதனையடைந்த சானியா மிர்சா, தான் இழிவுபடுத்தப்பட்டிருப்பதாகக் கூறி கோபத்தை வெளிப்படுத்தினார். அந்த ஒலிம்பிக்கில் சானியா-பூபதி ஜோடி, பதக்கம் வெல்ல வாய்ப்பிருந்தது. ஆனால் கட்டாயத்தின்பேரில் பயஸுடன் இணைந்து விளையாடிய சானியா ஆரம்ப கட்டத்திலேயே வெளியேறி, பதக்க வாய்ப்பை இழந்தார். தெலங்கானா தனி மாநிலம் உருவானபோது அதன் தூதராக சானியா நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் மருமகளான சானியாவை இந்திய மாநிலம் ஒன்றின் பிரதிநிதியாக நியமிப்பது பொருத்தமற்றது என எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. அப்போது மிகுந்த வேதனையடைந்த சானியா, ‘நான் இந்தியாவின் மகள்’ என கண்கலங்கியபடியே கூறினார்.
சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் விடாமல் துரத்தியபோதும், சானியாவோ அவற்றையெல்லாம் தாண்டி தனது டென்னிஸ் இலக்கை துரத்தி, இன்று சாதித்திருக்கிறார். விமர்சகர்களுக்கு தனது டென்னிஸ் ராக்கெட்டால் பதிலடி கொடுத்திருக்கும் சானியா, இந்திய இளம் பெண்களின் இன்ஸ்பிரேஷனாகத் திகழ்கிறார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago