அன்றொரு நாள் இதே நிலவில் 35: பானைக்குள் பதுக்கிவைத்த நெல்லரிசி

By பாரததேவி

டிக்கெட் கேட்டதற்கு செல்லாயியைத் தெரியாதா என்று கரிச்சா கேட்கவும் டிக்கெட் பரிசோதகருக்குக் கோபம் உச்சி மண்டைக்கு ஏறியது. வழியில் ஏதோ ஒரு ஸ்டேஷனில் வண்டி நிற்க, அனைவரையும் கீழே இறக்கிவிட்டார். ஊருக்குள் கெட்டிக்காரியென்று பெயர் வாங்கியிருந்த செல்லாயி, “அய்யா அம்புட்டு பேரு டிக்கெட்டும் என் சுருக்குப் பைக்குள்ள பத்தரமா இருக்கு.

வேணும்னா எடுத்துத் தாரேன்” என்று சொல்ல இவருக்கோ இன்னும் கோபம் அதிகமானது. “இப்ப நீங்களா எறங்கிட்டா மரியாத, இல்லாட்டி கழுத்தப் பிடிச்சி வெளியே தள்ளிருவேன்” என்றதும் எல்லோரும் பயத்தோடு ரயிலிலிருந்து மடமடவென கீழே இறங்கிவிட்டார்கள்.

நெஞ்சில் பயமும் கண்ணில் ஈரமும்

அவர்கள் ஆசை ஆசையாய்க் கொண்டுபோன சேலைப் பொட்டணங்களும் சோத்துப் பொட்டணங்களும் பிளாட்பாரத்தில் கிடந்தன. எல்லாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. பொழுது உச்சிக்கு நகர்ந்துகொண்டிருந்தது. சங்கு தாத்தா, “நானு பேசாம கவுறு திரிச்சிக்கிட்டு இருந்தாலும் இருந்திருப்பேன்.

என்னக் கூட்டியாந்து இப்படி அலைக்களிச்சீட்டீகளே” என்றார் கோபத்தோடு. உடனே எல்லோருக்கும் வவுத்தெரிச்சல் தாங்க முடியவில்லை. “ஆமா சீயான் உமக்குப் புத்தி இருந்தா இப்படிச் சொல்லுவீரா? நாங்களுந்தேன் அவுக அவுக பாட்டுக்குப் பிஞ்சயில இருக்க வேலய செஞ்சிக்கிட்டு இருப்போம்.

இப்படி ராமேசுவரம் போறேன்னு முன்ன பின்ன தெரியாத ஊருல வந்து உக்காந்திருக்கமே. இந்த ஊரு எந்த தேசமின்னு தெரியலயே” என்று புலம்பிக்கொண்டிருந்தார்கள். நெஞ்சில் பயம் குடியேற கண்ணில் ஈரம் பளபளத்தது. இந்த நேரத்தில் கரிச்சா, “எக்கா நானு கத்திரிக்கா வெஞ்ஞனத்துக்குப் புளி ஊத்தாம அவிச்சி கொண்டாந்துட்டேன். இம்புட்டு சோத்த வச்சி அந்த வெஞ்ஞனத்தோட சாப்பிட்டுரட்டுமாக்கா” என்றாள்.

ஏற்கெனவே அவமானத்திலும் கோபத்திலும் செல்லாயி கொதித்துப் போயிருந்தாள். ஊருக்குள் சமத்தாளி, கெட்டிக்காரி ‘வெட்டிட்டு வரச்சொன்னா கட்டிட்டு வந்துருவாளே’ என்று பெயர் வாங்கிய பவுசோடு பொங்கிப் போயிருந்த என்னை வெள்ளச்சட்டயும் குழாயும் போட்டவன் இப்படி நடுவழில ஏறக்கி விட்டுட்டானே... அவன் மீதிருக்கும் கோவத்தயெல்லாம் வச்சி இவள நாலு அறை அறையலாமா என்று நினைத்தாள்.

நிராசையான கனவு

இப்படி இவர்கள் பொழுது மேற்கு திக்கம் போகும் வரையிலும் தவியாய்த் தவித்துப் பரிதவித்துக்கொண்டிருக்கையில் செல்வராசு அங்கே வந்து சேர்ந்தார். உடனே, “எய்யா ராசா. நீருதேன் எங்க குலதெய்வம். எங்களைக் காப்பாத்துய்யா” என்று அவர் காலில் விழப்போக அவர் சட்டென விலகிக்கொண்டார். “என்னம்மா நீங்க இப்படி என் கால்ல விழப்போறீங்க. நீங்கல்லாம் விவசாயிங்க.

ஒரு கோடி மக்களோட பசியப் போக்குறவங்க. உங்க கால்லதான் நாங்க விழுவணும்” என்றவர், “சரி நீங்க கொண்டாந்த சோத்து மூட்டயவெல்லாம் திருப்பி ஊருக்குக் கொண்டுபோக வேண்டாம். அந்தா இருக்க மரத்து நினல்ல போயி வயிறு நிறையச் சாப்பிடுங்க. நானு போயி நாலு மாட்டு வண்டியப் பத்திட்டு வரச் சொல்லுதேன். நம்ம ஊருக்குக் கிளம்புவோம்” என்று சொல்லவும் எல்லோரும் துடித்துப்போனார்கள்.

“அய்யய்யோ கொடுமையே. அப்ப ராமேசுவரத்துக்குப் போவ வேண்டாமா?” என்று பொன்னழகி கேட்டாள். அவளுக்கு மட்டுமல்ல; அங்கிருக்கும் எல்லோருக்குமே ராமேசுவரத்தைப் பார்க்க முடியாத ஏக்கத்தில் கண்ணீர் திரையிட்டு அங்கிருக்கும் பிளாட்பாரத்தையே மறைத்தது. சிலருக்குத் தொண்டைக்குழியில் விம்மல் தெறித்தது. ஆக, ராமேசுவரம் போக முடியாமல் போனதைவிட ஆறாறு ரூபாய் நட்டமாகிப் போனதில்தான் எல்லோருக்கும் ரொம்ப வருத்தம்.

கணக்கில் கெட்டிக்காரர்கள்

அந்தக் காலத்தில் யாரும் படிக்கா விட்டால்கூட வியாபாரம் செய்வதில், செய்த வியாபாரத்தில் கணக்குப் பார்ப்பதில் ரொம்பவும் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள். அப்போது முக்காத்துட்டு, ஒன்றரைத்துட்டு, ஓரணா, இரண்டனா என்று கணக்கு இருந்தது. இந்தக் கிராமத்துக்காரர்கள் காய், கனி என்று அக்கம் பக்கத்து ஊர்களில் விற்கப் போவார்கள். தங்களின் ஒரு முக்காத் துட்டைக்கூட அவர்களிடம் விட மாட்டார்கள். அவர்களின் துட்டையும் எடுக்க மாட்டார்கள். அவ்வளவு நேர்மையாக இருந்தார்கள். பசி என்று வந்தவர்களுக்குச் சாப்பாடு போடாமல் அனுப்பவே மாட்டார்கள்.

அப்போதெல்லாம் எப்போதும் பானைக்குள் கஞ்சி இருந்து கொண்டுதான் இருக்கும். இரண்டு படி சோளமோ கம்போ இடித்துக் காய்ச்சி, பானை நிறைய கஞ்சி இருக் கையிலேயே இன்னும் இரண்டு படி இடித்துப் புளிப்பதற்காகக் கரைத்து வைத்திருப்பார்கள். அதோடு வராஞ்சோறு, சாமைச்சோறு என்று உருண்டை உருண்டையாய்ப் புளிச்ச தண்ணிப் பானைக்குள் கிடக்கும்.

விருந்துக்குக் கோழி

முக்கியமான விருந்தாளிகள் வந்துவிட்டால் அன்றைக்கான பிஞ்சை வேலையெல்லாம் போயே போய்விட்டது என்று நினைத்துக் கொள்ளலாம். உடனே, பரம ரகசியமாய்ப் புள்ளை, குட்டிகளுக்குத் தெரியாமல் அடுக்குப் பானைக்குள் பதுக்கி வைத்திருக்கும் நெல்லரிசியை எடுத்துச் சோறாக்கி ஒரு கோழியைப் பிடித்து அடிப்பார்கள். அதிலும் கோழியை அடிக்க வேண்டுமென்றால் விடியற்கால கருக்கிருட்டுலேயே மெல்ல சத்தமில்லாமல் கூரையில் ஏறி பொத்தினாற் போல் கழுத்துக்கு நேராக பிடித்தால்தான் உண்டு.

இல்லாவிட்டால் அந்தக் கோழிகள் தெருவில் மேய்ந்து கொண்டிருந்தால்கூடப் பிடிக்க முடியாது. ஏனென்றால், அவை படப்புகளிலும் மரங்களிலும் ஏறி நம்மோடு கண்ணாமூச்சி விளையாடும். அதனால், பிள்ளைகளை ஏவிவிட்டுப் பிடித்தால்தான் கோழிக்கறி உண்டு. இல்லாவிட்டால் கும்பா நிறையச் சோறு வைத்து, கருப்பட்டியைத் தட்டிப்போட்டு எள்ளின் வாசனையோடு இருக்கும் நல்லெண்ணெய்யை ஊற்றி ஒரு சிறு குச்சியைக் கொடுத்துவிடுவார்கள். குச்சி எதுக்கென்றால் சுடு சோற்றைக் கிளறி ஆறவைத்துச் சாப்பிடுவதற்காகத்தான்.

கூட்டாஞ்சோறு சந்தோஷம்

அந்தக் காலத்தில் காத்தாடி கிடையாது. அதைப் பற்றி யாருக்கும் தெரியவும் செய்யாது. வசதி உள்ளவர்கள் துவரம் பருப்பு கடைந்து, கத்தரிக்காய் அவித்து வைப்பார்கள். இல்லாவிட்டால் காணப்பருப்பு, தட்டான் பயறுதான். அப்போதெல்லாம் பசிக்காகத்தான் சாப்பிட்டார்களே தவிர யாரும் ருசிக்காகச் சாப்பிடவில்லை. சில நேரம் வெஞ்ஞனத்துக்கு வழியில்லாமல் பிஞ்சு புளியங்காய்களைப் பிடுங்கி வந்து பச்சை மிளகாயையும் வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கிக் குழம்பாக வைத்துச் சாப்பிட்டிருக்கிறார்கள்.

புளியங்கா, புளியம்பூவையும் மிளகாய், பூண்டு வைத்துத் துவையலாக அரைப்பார்கள். களி கிண்டி வெறும் வெந்நீரில் உப்போடு ஒரு பச்சை மிளகாயைப் போட்டுப் பிசைந்து சாப்பிடுவார்கள். இப்போது இந்த மாதிரி சாப்பாட்டை நினைத்தால் நமக்கு ஆச்சரியமாகவும் அவர்கள் மீது இரக்கமாகவும்கூட இருக்கும். ஆனால், அப்போது அந்தக் குழம்புகளை ருசித்து ருசித்துப் பேசிக்கொண்டு காட்டில் இருக்கும் மரநிழலில் மத்தியானக் கஞ்சிக்காக வட்டமாக உட்கார்ந்து கூட்டாஞ்சோறாகச் சாப்பிடுவதே ஒரு சந்தோசம்.

ஊருக்குள் ஒருவருக்குக் காய்ச்சல், தலைவலி, கீழே விழுந்து காயம் பட்டுவிட்டது என்றால் தங்களின் அவசரமான வேலையைக்கூடப் போட்டுவிட்டுக் கையில் ஆளுக்கொரு வைத்தியத்தோடும் சோற்று உருண்டையோடும் வந்துவிடுவார்கள். தலைவலிக்கு ‘அத்தக் கூழை’க் காய்ச்சி (அப்போதே சிறிது கேப்பை மாவைப் போட்டுக் கூழாக்குவது) பொறுக்கும் சூடாக நெற்றி நிறைய போட்டுவிடுவார்கள்.

இடுப்பில் பிடித்துக்கொண்டு நிமிரவிடாமல் செய்தால் நீளமான இரு சோளத்தட்டைகளை இடுப்புப் பிடித்தவரும் இன்னொருவருமாக அந்தத் தட்டையைத் தங்கள் இடுப்பில் பிடித்துக்கொண்டு நிற்பார்கள். தட்டைக்கு வெளியே ஒருவர் ஏதோ மந்திரத்தை முணுமுணுத்துக்கொண்டே திருநீறை அந்தத் தட்டைகள் மீது போடுவார். இரண்டு பேர் இடுப்பிலும் அகன்று இருக்கும் தட்டை மெல்ல மெல்ல வந்து ஒன்று சேர்ந்துவிடும் இடுப்பு பிடித்தவருக்கு வலியும்
போய்விடும்.

(நிலா உதிக்கும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்