முகங்கள்: மாற்றத்துக்கு வித்திட்ட கமலா பாசின்

By எஸ்.ரேணுகாதேவி

கல்வி அறிவும் சமூகம் குறித்துப் போதிய விழிப்புணர்வும் இல்லாத காரணத்தால்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன என்ற வாதத்தை மறுக்கிறார் சமூகச் செயல்பாட்டாளர் கமலா பாசின். படித்த மற்றும் அலுவலகத்தில் உயர் பதவியில் இருக்கும் பெண்களுக்கு எதிராகவும் வன்முறைகள் நடைபெற்று வருவதை எவ்வாறு புரிந்துகொள்வது என்கிற ஆழமான கேள்வியை அவர் எழுப்புகிறார்.

சேவையே சிறந்தது

ராஜஸ்தான் மாநிலத்தில் 1946-ம் ஆண்டு பிறந்தவர் கமலா பாசின். அந்த மாநிலப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொருளாதாரம் படித்த இவர், பின்னர் ஜெர்மனியில் உள்ள மியூன்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படித்துள்ளார். ஒரு நாட்டின் சமூக அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என அங்குதான் கற்றுக்கொண்டதைத் தன் நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்த முடிவுசெய்தார். அதைத் தொடர்ந்து 1972-ம் ஆண்டு முதல் 1975-ம் ஆண்டுவரை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சேவா மந்திர் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் இணைந்தார். ஏழை மக்களுக்குச் சேவை செய்வதையே தன் வேலையாகக் கொண்டார். தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தாலும் கமலா பாசினின் மனம் இந்தச் சமுதாயத்தில் நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகள் குறித்துச் சிந்தித்துக்கொண்டிருந்தது.

‘சங்கத்’ தொடக்கம்

பின்னர், ஐ.நா. சபையில் உணவு மற்றும் விவசாய அமைப்பில் பாலினச் சமத்துவம் குறித்த பயிற்சிப் பட்டறைக்காக தாய்லாந்து சென்றார். 4 ஆண்டுகள் கழித்து ஐ.நா. அமைப்பு அவரை புதுடெல்லியில் பணி அமர்த்தியது. அங்கு அவர் பாலினப் பாகு பாடு குறித்து சிறப்புக் கவனம் செலுத்தத் தொடங்கினார். அப்போது மற்ற நாடுகளைவிட இந்தியாவில் சாதிய அமைப்பும் ஆணாதிக்கச் சிந்தனையும் பெண்களை மிகவும் மோசமாக நடத்திவருவதை அறிந்துகொண்டார். அதன் விளைவாக கமலா பாசின், ‘சங்கத்’ என்ற தெற்காசிய பெண்ணிய நெட்வொர்க் அமைப்பை நிறுவினார்.

இந்த அமைப்பின் மூலம் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை எதிர்த்துப் போராடுவது, குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்கு உதவுவது ஆகிய பணிகளை மேற்கொண்டார். பெண்களை ஊக்குவிக்கும் பாடல்கள், கவிதைகள், ஆணாதிக்கம், பெண்ணியம், ஊடகம், தொடர்பியல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இந்தி, ஆங்கில நாளிதழ்களில் ஏராளமான கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். மேடை நாடகங்கள் இயற்றுவது போன்ற கலை சார்ந்த பணிகளையும் இவர் மேற்கொண்டுள்ளார்.

தன் போராட்டத்தை எழுத்தோடும் நாடகங்களோடும் மட்டும் நிறுத்திவிடாமல் களத்தில் இறங்கிப் போராடவும் தயங்காதவர் கமலா பாசின். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக அவலங்கள் குறித்தும் பெண்களுக்காகவும் எண்ணற்ற புத்தகங்கள், கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். அவரது பல புத்தகங்கள் தற்போது தன்னார்வத் துறையில் பணியாற்றும் பலருக்கு வழிகாட்டியாக உள்ளன.

இவரின் ‘சங்கத்’ அமைப்பின் சார்பில் பாலினச் சமத்துவம் குறித்து 500-க்கும் மேற்பட்ட தெற்காசியப் பெண்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. “பல்வேறு தளங்களில் நிலவும் ஆணாதிக்கம் குறித்து இந்தப் பயிற்சியில் விவாதிக்கப்படுகிறது. ஆணாதிக்கம் என்பது ஆண்களிடம் மட்டும் இருப்ப தில்லை. பெண்களுக்குள்ளும் ஆணாதிக்கச் சிந்தனை புகுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மனத்தில் போதிக்கப்பட்டுள்ள ஆணாதிக்கச் சிந்தனை என்ன என்பதை சுயமாக அறிந்துகொள்ள நாங்கள் பயிற்சி அளிக்கிறோம். இதற்காகப் பல்வேறு தளங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பெண்ணியவாதிகளை அழைத்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்” என்கிறார்.

வாழ்க்கையை வாழாமல் இருக்க முடியுமா?

தற்போது அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் போராடிவரும் கமலா பாசின், தன் வாழ்க்கைக்காகவும் போராடிய நாட்கள் உண்டு. “என் கணவரைப் போல பெண்ணியத்தைப் போற்றிய ஒரு நபரை நான் அதற்கு முன்புவரை பார்த்ததில்லை. அவர்தான் எங்கள் பிள்ளைகளின் பெயருக்குப் பின்னால் பெற்றோர் இருவர் பெயரின் முதலெழுத்தையும் சேர்த்தவர். கணவனை இழந்து 70 வயதில் இருந்த என் அம்மா ஏன் என்னுடன் வசிக்கிறார் என ஒருநாளும் கேள்வி எழுப்பாதவர். சில நேரம் நான் இருசக்கர வாகனத்தை ஓட்டினால் அவர் சில நேரம் ஓட்டுவார். இப்படியிருந்த அதே மனிதர்தான் ஒருநாள் என்னை அடிக்கத் தொடங்கினார். அதோடு நிறுத்தவில்லை, வேறு ஒரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வரவும் தொடங்கினார். அவரின் இந்தத் திடீர் மாற்றங்களைவிட என்னை மிகவும் துன்பத்துக்குள்ளாக்கியது என் அன்பான மகளை இழந்ததுதான். ஆனால், அதற்காக நான் என் வாழ்க்கையை வாழாமல் இருக்க முடியுமா? மாற்றுத்திறனாளியான என் மகனைக் கவனித்துக்கொள்ளும் பெரும் பொறுப்பு என்னுடையது அல்லவா?” என்று தான் கடந்து வந்த துயரமான நாட்களை விவரிக்கிறார் கமலா பாசின்.

“எங்கு வாதத்தின் மூலமாக வெற்றிபெற முடியுமோ அங்கு வாதம் செய்ய வேண்டும். எந்த இடத்தில் அமைதி காக்க வேண்டுமோ அங்கு அமைதியாக இருந்துவிட வேண்டும். எங்கு நீதிமன்றங்களின் உதவி தேவைப்படுகிறதோ அங்கு வாதிட்டு, விடுபட முடியாத உறவில் இருந்து வெளிவர வேண்டும்” என்பதுதான் கமலா பாசினின் வாதம்.

பெண்களின் மேம்பாட்டுக்காகப் போராடிவரும் நீங்கள் சாதித்தது என்ன என்ற கேள்விக்கு பாசின் இவ்வாறு சொல்கிறார்: “பல விஷயங்களைச் சாதித்திருக்கிறோம். அரசாங்கம் புதிய திட்டம் ஒன்றைக் கொண்டுவரத் திட்டமிட்டால், அதில் குறைந்தபட்சம் பாலினச் சமத்துவம் குறித்து 10 இடங்களிலாவது குறிப்பிடப்பட்டிருக்கும். அதேபோல் பெண்களின் பாதுகாப்புக்காகவும் புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இப்போது எல்லாத் துறைகளிலும் தங்களால் சாதிக்க முடியும் என்பதைப் பெண்கள் ஒவ்வொரு நாளும் நிரூபித்துவந்தாலும், சில துறைகள் பெண்கள் நுழைய முடியாத அளவுக்கு உள்ளன. இதற்குக் காரணம், பெண்கள் முன்னேற்றத்துக்காக ஒரு பிரிவினர்தான் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திவருகிறார்கள். பெண்கள் நலனுக்காக ஒட்டுமொத்த சமூகமும் குரல் கொடுத்தால்தான் அனைத்துத் துறைகளிலும் பெண்களால் சாதிக்க முடியும்”.

மாற்றம் ஆண்களுக்கானது

பொதுவாக, ஆண்கள் பெண்களுக்காகத் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் எனப் பலர் சொல்வார்கள். ஆனால், “பெண்களின் நலனுக்காக ஆண்கள் மாறுவதைவிட, ஆண்கள் தங்கள் சிந்தனையில் வேரூன்றியிருக்கும் ஆணாதிக்கச் சிந்தனையிலிருந்து விடுபட வேண்டும். உதாரணமாக, பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஆண்களுக்கு, இந்தக் குற்றத்தைச் செய்தால் சிறைக்குச் செல்ல நேரிடும் என்று நிச்சயமாகத் தெரியும். ஆனால், யார் இந்தச் சட்ட அமைப்புகளை நினைத்துப் பயப்படுகிறார்கள்? அவர்கள் இந்தக் குற்றத்தைத் தெரிந்தே செய்வதற்கான காரணம், ஆண்களிடம் இருக்கிற ஆணாதிக்கச் சிந்தனைதான். மிகவும் மோசமான ஆணாதிக்கச் சிந்தனையிலிருந்து வெளிவர ஆண்கள் முதலில் முயல வேண்டும். பொதுவாக, இந்தச் சமூகம் பெண்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது எனக் கற்பிக்கிறது. ஆனால், அதே சமுதாயம் ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதில்லை. ஆண்கள் மனத்தில் மாற்றம் வரவில்லை என்றால், ஆரோக்கியமான சமுதாயம் உருவாக முடியாமல் மொத்த மனித இனமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது” எனத் தீர்க்கமாகச் சொல்கிறார் கமலா பாசின்.

நம் நாட்டுக்குத் தேவை கலாச்சாரப் புரட்சியே என வலியுறுத்தும் கமலா பாசின், அப்போதுதான் ஆண், பெண் என்ற பேதங்கள் கடந்து அனைவரும் மனிதர்கள் என்ற அடையாளத்துடன் அனைத்துத் துறைகளிலும் ஒன்றாக இணைந்து பணியாற்ற முடியும் என்கிறார். அதேபோல் ஆணாதிக்கத்தை நியாயப்படுத்தும் மதங்கள் மத்தியிலும் பணியாற்ற வேண்டிய தேவை முன்பைவிடத் தற்போது அதிகரித்துள்ளது எனவும் அவர் வலியுறுத்துகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்