80 நாட்களில் உலகப் பயணம் (Around the world in 80 days) என்ற சாகச நாவலை பிரெஞ்சு எழுத்தாளர் ஜூல்ஸ் வெர்ன் 1873-ல் வெளியிட்டார். அந்த நாவலின் நாயகன் பிலியாஸ் ஃபோக் போல் தானும் நிஜத்தில் செய்து பார்த்துவிட முடிவெடுத்தார் 25 வயதேயான நெல்லி ப்ளை. விமானப் போக்குவரத்து இல்லாத அந்தக் காலத்தில் ஒரு பெண்ணுக்கு இந்தப் பயணம் எப்படி இருந்தது?
உலகின் முதல் புலனாய்வுப் பத்திரி கையாளர் என்ற சிறப்பைப் பெற்றிருந்த நெல்லி ப்ளைக்கு ஏதாவது புதிதாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. 1888-ல் தான் பணியாற்றிய ‘நியூயார்க் வேர்ல்ட்’ பத்திரிகையில், 80 நாட்களுக்குள் உலகத்தைச் சுற்றி வந்து, அந்த அனுபவத்தை எழுதுகிறேன் என்று கேட்டார். அவர் பெண் என்பதாலும் ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர் என்பதாலும் பெண்களால் குறைவான பொருட்களுடன் பயணிக்க இயலாது என்பதாலும் நெல்லி ப்ளையின் கோரிக்கையை நிராகரித்தார் அதன் ஆசிரியர்.
பெண்ணாலும் முடியும்
1889-ல் பத்திரிகையின் விற்பனையைக் கருத்தில்கொண்டு, உலகப் பயணம் மேற்கொள்ளும் திட்டத்தைக் கையிலெடுத்தது ‘நியூயார்க் வேர்ல்ட்’. அப்போதும் ஒரு பெண்ணை அனுப்புவதில் பலருக்கும் விருப்பம் இல்லை. “ஆணால் முடியும் என்றால் நிச்சயம் பெண்ணாலும் முடியும். வேறு பத்திரிகையிலிருந்து ஒரு ஆணை அனுப்புங்கள். நான் அவரைவிட ஒருநாள் முன்பாக வந்து காட்டுகிறேன்” என்று சவால்விட்டார் நெல்லி. இறுதியில் அந்த வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
மிகச் சிறிய பை ஒன்றில் ஃப்ளாஸ்க், ஒரு கோப்பை, தலையில் கட்டும் துணி, உள்ளாடைகள், சில கைக்குட்டைகள், ஒரு ஜோடி செருப்பு, ஊசி, நூல், பேனா, நோட்டு போன்றவற்றை மட்டுமே வைக்க முடிந்தது. உடைகளுக்கு இடமில்லை. பயணத்துக்கேற்ப பிரத்யேக உடையையும் கோட்டையும் தைத்துக்கொண்டார். பாதுகாப்புக்குத் துப்பாக்கி வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. “நான் உலகத்தை நேசிக்கிறேன்; உலகம் என்னை நேசிக்கும். அதனால், துப்பாக்கி வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்.
1889 நவம்பர் 24 அன்று அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உலகப் பயணம் ஆரம்பித்தது. மக்கள் ஆரவாரத்துடன் வழியனுப்பி வைத்தனர். நாயகன் பிலியாஸ் ஃபோக் பயணம் செய்த வழித்தடத்தையும் அவர் பயன்படுத்திய வாகனங்களையும் மட்டுமே பயன்படுத்தாமல், 75 நாட்களில் பயணத்தை முடிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.
முதல் முறை கப்பலில் செல்வதால் நெல்லிக்குக் குமட்டலும் வாந்தியும் அதிகமாக இருந்தது.
வேறுவழியின்றித் தன்னுடைய கேபினில் படுத்துத் தூங்கிவிட்டார். 22 மணி நேரத்துக்குப் பிறகு சக பயணிகள், கப்பல் கேப்டனிடம் விஷயத்தைச் சொன்னார்கள். இவ்வளவு நேரமாக வெளியில் வரவில்லையென்றால், அவர் இறந்திருக்கலாம் என்ற பயத்தில் கதவைத் தட்டினார் கேப்டன். இந்த நெடிய துயில் அவருக்கு நன்மையைச் செய்திருந்தது. மீதிப் பயணம் முழுக்க ஆரோக்கியமாக இருந்தார் நெல்லி.
உற்சாகம் தந்த வாழ்த்து
கப்பல் லண்டன் வந்தபோது அவருக்கு ஓர் இக்கட்டான சூழல் உருவானது. இந்தப் பயணத்துக்குக் காரணமான எழுத்தாளர் ஜூல்ஸ் வெர்ன், பிரான்ஸில் சந்திக்கும்படி அழைப்பு விடுத்திருந்தார். லண்டனில் தங்காமல் சென்றால்தான் அவரைச் சந்திக்க முடியும் என்பதால், இரண்டு இரவுகள் தூக்கத்தைத் தொலைத்து, பிரான்ஸுக்குச் சென்றார். அங்கே ஜூல்ஸ் வெர்னும் அவருடைய மனைவியும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் நெல்லியை வரவேற்றனர்.
“உலகப் பயணத்துக்கான தொலைவைக் கற்பனையில் எழுதிவிடவில்லை. தூரத்தையும் நேரத்தையும் கணித்து, சரிபார்த்து எழுதினேன். என் நாயகனைவிட நீங்கள் ஒரு நாள் முன்னதாக இந்தப் பயணத்தை முடித்தால், உங்களை இருகரம் நீட்டி வரவேற்கக் காத்திருப்பேன்” என்று வாழ்த்தி அனுப்பினார் அந்த மாபெரும் எழுத்தாளர்.
கப்பல், ரயில், கார் போன்று பல்வேறு வாகனங்களில் பயணத்தை மேற்கொண்டார் நெல்லி. ‘காஸ்மோபோலிடன்’ பத்திரிகை எலிசபெத் பிஸ்லாண்ட் என்ற பெண் எழுத்தாளரை, நெல்லிக்குப் போட்டியாக எதிர்த் திசையில் உலகத்தைச் சுற்றிவர அனுப்பியிருந்தது.
இந்த விஷயம் நெல்லிக்குத் தெரியாது. ஹாங்காங்கில் அவர் இறங்கியபோது, “நீங்கள்தான் நெல்லி ப்ளையா? உலகத்தைச் சுற்றி வரக் கிளம்பியவரா?” என்று ஒருவர் கேட்டார். “ஆம்” என்றார் நெல்லி. “நீங்கள் போட்டியில் மிகவும் பின்தங்கிவிட்டீர்கள். உங்களது போட்டியாளர் மூன்று நாட்களுக்கு முன்பே இங்கு வந்து, கிளம்பிவிட்டார்” என்றார் அவர்.
“நான் போட்டிக்காக வரவில்லை. யாருடனும் போட்டியில் இல்லை. எனக்குப் போட்டியாக இன்னொருவரை அனுப்பி வைத்திருந்தால், எனக்குப் பிரச்சினை இல்லை. நான் 75 நாட்களில் நிச்சயம் பயணத்தை முடித்துவிடுவேன். ஏற்கெனவே 60 நாட்களைக் கடந்துவிட்டேன்” என்று நம்பிக்கையோடு சொன்னார் நெல்லி.
நாயகனை முந்திய நெல்லி
தனியாகப் பயணிப்பதால் காதலில் விழுந்துவிட்டார், யாரோ ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார், ஒரு பணக்காரருடன் வேறு நாட்டுக்குச் சென்றுவிட்டார் என்றெல்லாம் வதந்திகள் அமெரிக்காவில் பரப்பப்பட்டன. நெல்லி தன் பயணத்தில் மிகவும் கவனமாக இருந்தார்.
அனைத்து விஷயங்களையும் குறிப்பெடுத்துக்கொண்டார். ஆங்காங்கே தனது அனுபவங்களை எழுதி, பத்திரிகைக்கு அனுப்பிவைத்தார். ஒவ்வொரு தகவலும் பொதுமக்களின் எதிர்பார்ப்பைக் கூட்டும் விதத்தில் செய்தியாக வெளியிடப்பட்டது. மக்கள் நெல்லி வரும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர்.
நெல்லி தன் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்காவில் கால்பதித்தார். மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். கன்சாஸ் மேயர், சிகாகோ பிரஸ் கிளப் உட்படப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 1890 ஜனவரி 25 அன்று இறங்கிய நெல்லி, 72 நாட்கள், 6 மணி நேரத்தில் உலகத்தை வெற்றிகரமாகச் சுற்றிவந்திருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. ஜூல்ஸ் வெர்ன் நாயகனைவிட எட்டு நாட்கள் முன்னதாக உலகத்தைச் சுற்றிவந்துவிட்டார் நெல்லி! மகிழ்ச்சியில் தொப்பியைக் கழற்றி மக்களை நோக்கி வீசினார்.
“72 நாட்களில் உலகைச் சுற்றி வந்ததற்கான மகிழ்ச்சி அல்ல இது. மீண்டும் வீட்டுக்குச் செல்லப் போகிறேன் என்ற மகிழ்ச்சி” என்றார் நெல்லி. நான்கு நாட்களுக்குப் பிறகு உலகப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வந்து சேர்ந்தார் எலிசபெத் பிஸ்லாண்ட்.
ஆனால், முதலில் ஒருவர் செய்யும் சாதனையைத்தான் உலகம் கொண்டாடுகிறது. அதற்குப் பிறகு பல்வேறு நபர்கள் இன்னும் குறைவான நாட்களில் உலகப் பயணங்களை மேற்கொண்டார்கள். ஒரு நாவலை நிஜமாக்க நினைத்து, அதை வெற்றிகரமாகச் செய்துகாட்டிய முதல் நபரும் முதல் பெண்ணுமான நெல்லி ப்ளை, சாதனையாளராக வரலாற்றில் என்றுமே இருந்துகொண்டிருப்பார். இது அவரது பயணத்தின் 130-வது ஆண்டு.
சகலகலாவல்லி
எலிசபெத் கோச்சரன் என்ற இயற்பெயர் கொண்ட நெல்லி, 19 வயதிலேயே வித்தியாசமான பத்திரிகையாளராகத் திகழ்ந்தார்.
பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகள், விவாகரத்து சட்டத்தில் மாற்றம் போன்றவற்றை எழுதினார். மனநலக் காப்பகத்தில் 10 நாட்கள் தங்கி, புலனாய்வு செய்து அவர் எழுதிய கட்டுரை, ‘உலகின் முதல் புலனாய்வுப் பத்திரிகையாளர்’ என்ற பெயரைப் பெற்றுத்தந்தது.
‘72 நாட்களில் உலகப் பயணம்’ என்ற தனது புத்தகத்தால் பெரும் புகழ்பெற்றார். திருமணத்துக்குப் பிறகு வெற்றிகரமான தொழிலதிபராக விளங்கினார். அப்போது பால் கேன், பால் பீப்பாய்களின் வடிவமைப்பை மாற்றியமைத்து, அந்தக் கண்டுபிடிப்புக்கான காப்புரிமையும் பெற்றார்.
முதல் உலகப் போர் நடைபெற்றபோது செர்பியாவுக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையிலுள்ள போர்ப் பகுதிக்குச் சென்று எழுதிய முதல் பெண்ணும் முதல் வெளிநாட்டவரும் இவரே. 1913-ம் ஆண்டு வாக்குரிமை கேட்டு பெண்கள் நடத்திய போராட்டம் குறித்து இவர் எழுதிய கட்டுரை, அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago