வானவில் பெண்கள் - மெட்ரோ ரயில்: மாற்றத்தின் அடையாளம்

By பிருந்தா சீனிவாசன்

வேலை என்பது அனைவருக்கும் பொது. ஆனால் ஆணாதிக்கம் தலைதூக்கும் சமூகத்தில் பணிக் களத்திலும் ஆண், பெண் சமத்துவத்துக்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாகத் துறைகள் பிரிக்கப்பட்டுவிடுகின்றன.

இதன் விளைவாக, சமையலறை என்பது பெண்களின் பிரத்யேகப் பெருமையாகவும் உத்தியோகம் புருஷ லட்சணமாகவும் வலியுறுத்தப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான் கல்வி என்னும் மந்திரச்சாவி பெண்களின் கைகளுக்கு எட்டியது. கல்வி கொடுத்த தெளிவிலும் தன்னம்பிக்கையிலும் பெண்கள் வீட்டைத் தாண்டி அலுவலக வேலைக்கும் சென்றனர். ஆனால் பணியிலும் பாகுபாடு இருக்கவே செய்தது. காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணிவரை நடைபெறுகிற அலுவலக, பள்ளி வேலைகள் மட்டுமே பெண்களுக்கு உகந்தவையாகப் பரிந்துரைக்கப்பட்டன.

ஆனால், நவீனப் பெண்கள் இதுபோன்ற கற்பிதங்களையும் கட்டுகளையும் உடைத்து, அறிவாலும் திறமையாலும் ஆணுக்கு நிகராகப் பணியாற்றுகின்றனர். சமூகத்தின் பார்வையிலும் மாற்றம் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் ஆண்கள் கரைகண்ட துறைகளில் போனால் போகிறது என்று பெண்களுக்கு இடம் கொடுத்தார்கள். இப்போது அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கும் இடம் தரத் தொடங்கியிருப்பது வரவேற்கத் தக்கது. சென்னை மெட்ரோ ரயிலில் ஐந்து பெண் ஆபரேட்டர்களின் நியமனம் பெண்களுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரத்தைப் பறைசாற்றுகிறது.

பெண்களுக்கு அங்கீகாரம்

சென்னை மெட்ரோ ரயிலின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் ஓட்டத்தைப் பெண் ஓட்டுநர் ஒருவர் தொடங்கிவைத்திருப்பது மாற்றத்துக்கான நம்பிக்கைக் கீற்று. ப்ரீத்தி, ஜெய், அம்சவேணி, நளினி, சுபத்ரா ஆகிய ஐந்து பெண்களில் ப்ரீத்தியும் ஜெய்யும் தற்போது மெட்ரோ ரயில் ஆபரேட்டர்களாகக் களத்தில் இருக்கிறார்கள். இன்னும் சில தினங்களில் மற்ற மூவரும் இவர்களுடன் சேர்ந்துகொள்வார்கள்.

இந்த வெற்றியும் பெருமிதமும் தனக்கு அத்தனை எளிதாகக் கிடைத்துவிடவில்லை என்கிறார் ப்ரீத்தி. சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த இவர், வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர். ப்ரீத்தியின் தந்தை அன்பு, மாட்டுத்தீவனத்தை மொத்தமாக வாங்கி விற்பனை செய்துவருகிறார். அம்மா சாந்தி, இல்லத்தரசி. சென்னை தரமணியில் உள்ள தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முடித்த ப்ரீத்தி, குடும்பத்தின் பொருளாதாரத்துக்குக் கைகொடுக்கத் தனியார் நிறுவனத்தில் திட்ட அதிகாரியாகச் சேர்ந்தார். அங்கே பணியில் இருந்தாலும் ரயில் ஓட்டுநராகப் பணிபுரிய வேண்டும் என்பது ப்ரீத்தியின் கனவாக இருந்தது.

கைகூடிய கனவு

“நான் படிச்ச டிப்ளமோவுக்கும் டிரெய்ன் டிரைவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எலெக்ட்ரிக் டிரெய்ன் பெண் டிரைவர்களைப் பார்த்தபோது எனக்கும் அவங்களைப் போல டிரைவராகணும்னு ஆசை வந்தது. அதுக்கான வாய்ப்புக்காகக் காத்துக்கிட்டு இருந்தேன். அப்போதான் மெட்ரோ ரயில் ஆபரேட்டர் வேலைக்கான தேர்வு அறிவிப்பைப் பார்த்தேன்” என்று சொல்லும் ப்ரீத்தி, அதற்காகத்தான் ஏற்கெனவே செய்துவந்த வேலையைத் துறந்தார். போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தார். முதல் கட்டத் தேர்வு, சைக்கோமெட்ரிக் தேர்வில் வெற்றிபெற்று, ஆபரேட்டர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

“மெட்ரோ ரயில்ல டிரைவர் வேலைக்குப் போகப் போறேன்னு சொன்னதும் அம்மாவுக்குக் கொஞ்சம்கூட விருப்பம் இல்லை. ‘காலையில வேலைக்குப் போய், சாயந்திரம் வீட்டுக்குத் திரும்பற பிரச்சினை இல்லாத வேலைக்குப் போ. அதுதான் நல்லது’ன்னு அம்மா சொன்னாங்க. அவங்கக்கிட்ட எல்லாத்தையும் எடுத்துச் சொல்லிச் சம்மதம் வாங்கினேன்” என்று வெற்றி புன்னகை பூக்கிறார் ப்ரீத்தி.

தன்னம்பிக்கை தந்த உற்சாகம்

டெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு வருடமும் சென்னையில் நான்கரை மாதங்களும் இவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது. மின்சார ரயிலைவிட மெட்ரோ ரயிலின் இயக்கம் நுட்பமானது. பெரும்பாலான விஷயங்கள் தானியங்கி முறையில் அமைக்கப்பட்டிருந்தாலும் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது ஆபரேட்டர்களின் வேலை.

“நான் எத்தனையோ முறை டெஸ்ட் டிரைவ் பண்ணியிருக்கேன். அப்போ எனக்குக் கொஞ்சம்கூடப் பயமே இருந்ததில்லை. ஆனா முதல் முதலா ஆயிரக் கணக்கான மக்களை ஏத்திக்கிட்டு டிரெயின் ஓட்டப் போறோம்னு நினைக்கறப்ப கொஞ்சம் பதற்றமாதான் இருந்துச்சு. ஆனா அந்தப் பதற்றமெல்லாம் ஒரு நொடிதான். உற்சாகத்தோட வந்து குவிந்த மக்களைப் பார்த்தபோது எனக்கும் அந்த உற்சாகம் வந்துடுச்சு. அதுவும் முதல்வர் முன்னிலையில நான் ரயில் ஓட்டப்போறேன்ங்கற நினைப்பு எனக்கு தைரியத்தைக் கொடுத்துச்சு” என்று தன் முதல் நாள் பணி அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் ப்ரீத்தி.

மெட்ரோ ரயிலை இயக்கிய பிறகு மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார் ப்ரீத்தி. பலரும் தன்னை அடையாளம் கண்டுபிடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் பேசுவதாகச் சொல்கிறார்.

“ஆரம்பத்துல நான் மெட்ரோ ரயில்ல வேலைக்குப் போறேன்னுதான் எல்லாருக்கும் தெரியும். முதல் நாள் ரயிலை ஓட்டிய பிறகு நான் இங்கே ஆபரேட்டரா இருக்கறது நிறைய பேருக்குத் தெரிஞ்சுது. ‘நீங்க மெட்ரோ ரயில் டிரைவர்தானே?’ன்னு கேட்டுப் பலரும் விசாரிக்கறப்போ பெருமையாதான் இருக்கு” என்று சொல்லும் ப்ரீத்தி, தன் பணியிடத்தில் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லை என்கிறார்.

“சில வேலைகளை மட்டும்தான் பெண்களால செய்யமுடியும்னு பலர் நினைக்கறாங்க. மெட்ரோ ரயில் திட்டத்தோட முதல் நாளில் நான் ஆபரேட்டராக இருந்தது என்னோட தன்னம்பிக்கையை அதிகமாக்கிடுச்சு. பெண்களால எல்லாத்தையும் சாதிக்கமுடியும்னு நான் நம்பறேன்” என்று பூரிக்கிறார் ப்ரீத்தி. தன் வார்த்தைகளில் இருக்கும் நம்பிக்கையைத் தன்னைச் சுற்றியிருக்கும் பெண்களுக்கும் கடத்துகிறார்.

படங்கள்: எல். சீனிவாசன்

மெட்ரோ ரயிலை இயக்கணுமா?

மெட்ரோ ரயிலின் பெண் ஆபரேட்டர்களைப் பார்த்துப் பலருக்கும் மெட்ரோ ரயிலை இயக்கும் கனவு ஏற்பட்டிருக்கிறது.

“தற்போதைய தேவைக்கான ஆபரேட்டர்களின் தேர்வு முடிந்துவிட்டது. திட்டம் விரிவாக்கப்படும்போது போட்டித் தேர்வு அறிவிக்கப்படும். அது குறித்த விவரங்களுக்குத் தொடர்ந்து மெட்ரோ ரயிலின் இணையதளம் மற்றும் பேஸ்புக் பக்கத்தைப் பின்தொடர வேண்டும்” என்கிறார் சென்னை மெட்ரோ ரயில் மக்கள் தொடர்பு அலுவலர் இளந்திரையன்.

http://chennaimetrorail.gov.in/

https://www.facebook.com/chennaimetrorail/timeline

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்