நான்கு பெண்கள் ஒரே இடத்தில் இருந்தால் அங்கே பிரச்சினைகளுக்குப் பஞ்சமிருக்காது என்ற பிற்போக்கு சிந்தனையை உடைத்தெறிந்திருக்கிறார்கள் ஓசூர் ஏ.எஸ்.டி.சி ஹட்கோ பகுதியைச் சேர்ந்த பெண்கள். மகளிர் தெரு என்று பெயர் சூட்டும் அளவுக்கு ஒரு தெரு முழுக்கப் பெண்களால் நடத்தப்படும் கடைகள் நிறைந்திருக்கின்றன. இருபது ஆண்டுகளுக்கு மேலாகக் கடை வைத்திருப்பவர்களுக்கு மத்தியில் சபரிலெட்சுமி, ஜூனியர். மகனின் கல்லூரி படிப்புக்காக ஓசூரில் குடியேறியவருக்கு, குழந்தைகள் வெளியே கிளம்பியதும் வீட்டில் தனியாக உட்கார்ந்துகொண்டிருக்க விருப்பமில்லை. பக்கத்தில் பள்ளிகள் இருப்பதால் ஸ்டேஷனரி கடை திறக்கலாம் என்று நினைத்தார். ஆனால் கடைத்தெருவில் தனியாகக் கடை வைத்துச் சமாளிக்க முடியுமா என்ற அவரது தயக்கத்தைப் போக்கினார்கள் தெரு முழுக்கக் கடை வைத்திருக்கும் பெண்கள்.
“என் கணவர் வட இந்தியாவுல வேலை பார்க்கிறார். நாமும் ஏதாவது வேலை செஞ்சா வீட்டோட பொருளாதாரத் தேவைக்கு உதவியா இருக்குமேன்னு நினைச்சேன். ஸ்டேஷனரி கடை வைக்கலாம்னு முடிவு பண்ணி, கடைத் தெருவைப் பார்த்தப்போதான் தெரு முழுக்கப் பெண்கள் நடத்துற கடைகளா இருக்கறது எனக்குத் தெரிஞ்சது. அந்தத் தைரியத்துல நானும் கடை வைத்தேன். காலையில ஏழு மணிக்குக் கடையைத் திறந்துடுவேன். ஒன்பது மணிவரைக்கும் ஸ்கூல் குழந்தைகளோட கூட்டம் இருக்கும். அதுக்கு அப்புறம் டைப் ரைட்டிங் ஜாப் வொர்க் பண்ணுவேன்” என்கிறார் சபரிலெட்சுமி.
ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் அன்றுதான் குழந்தைகளின் வரவு அதிகமாக இருக்கும். அதனால் தன் கடைக்குச் செவ்வாய்க்கிழமையை விடுமுறை தினமாக அறிவித்துவிட்டார் சபரிலெட்சுமி.
நிற்காமல் ஓடும் வண்டி
அதே தெருவில் அரிசி மாவு அரைத்துத் தரும் கடை நடத்துகிறார் ஞானசௌந்தரி. காலை முதல் இரவுவரை நிற்க நேரமில்லாமல் வேலை செய்கிறார்.
“என் வீட்டுக்காரர் கம்பெனி வேலைக்குப் போறாரு. பிரசவத் தேதிக்கு ரொம்ப முன்னாடியே என் மகன் பொறந்துட்டான். அவனைத் தனியா விட்டுட்டு வெளியே எங்கேயும் போக முடியாது. அதனால கடை ஏதாவது போட்டா வீட்டையும் கடையையும் சேர்த்துக் கவனிச்சுக்கலாம்னு ஏழு வருஷத்துக்கு முன்னாடி இதை ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல சாயந்திரம் மட்டும் இட்லி மாவு அரைச்சு தருவேன். கொஞ்ச நாள்ல கோதுமை, மிளகாய், தனியா எல்லாம் அரைக்க மிஷின் போட்டேன். எனக்கு மாவரைச்சு பழக்கமில்லை. கொஞ்சம் கொஞ்சமா நானே கத்துக்கிட்டேன். இப்போ எல்லா வேலையும் எனக்கு அத்துப்படி” என்கிறார் ஞானசௌந்தரி.
சமையல் ராணிகள்
தேர்ந்த மாஸ்டர் போல தமிழ்ச்செல்வி பரோட்டா தட்ட, ஓடியாடி சப்ளை செய்கிறார் உமாமகேஸ்வரி. இருவரும் ஓட்டல் தொழிலில் கலக்கும் சகோதரிகள்.
“என் அக்காவும் நானும் அண்ணன், தம்பியைக் கல்யாணம் செய்திருக்கோம். என் வீட்டுக்காரர் டீக்கடை நடத்திட்டு இருந்தாரு. அதுல வந்த வருமானம் வீட்டுச் செலவுக்குப் போதலை. அதனால ஓட்டல் தொடங்கினோம். நானும் என் அக்காவும் மாஸ்டர் வேலையில இருந்து கிளீனிங் வரைக்கும் எல்லா வேலையும் செய்வோம். காலையில குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டுக் கடைக்கு வந்தோம்னா ராத்திரி பத்தரை மணிவரைக்கும் வேலை இருக்கும். வேலை செய்யக் கஷ்டப்பட்டா வாழ்க்கையில முன்னேற முடியுமா?” என்று கேட்கிறார் உமாமகேஸ்வரி.
பன்னிரெண்டு ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்திவருகிறார் புனிதா. பட்டப்படிப்பு முடித்திருக்கும் இவர், கடையைத் தனி ஆளாக நிர்வகிக்கிறார்.
“காலையில ஆறரை மணிக் கெல்லாம் கடையைத் தொறந் துடுவேன். என் வீட்டுக்காரர் பலசரக்கு வாங்கிட்டு வந்து தந்துடுவார். முதல்ல என்னால சமாளிக்க முடியுமான்னு பயமா இருந்துச்சு. இப்போ எல்லாமே பழகிடுச்சு” என்கிறார். கடையில் எவ்வளவு கூட்டம் சேர்ந்தாலும் அசராமல் சமாளிக்கிறார் புனிதா.
தனிமையே பலம்
இருபது ஆண்டுகளுக்கு மேலாக இஸ்திரி கடை நடத்தும் லட்சுமி அம்மாள், உழைப்பை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துகிறார். அதிகாலையில் துணிகளை அயர்ன் செய்யத் தொடங்கும் இவரது கரங்கள், இரவுவரை ஓயாமல் வேலை செய்யும். யாருடனும் அவ்வளவாக ஒட்டாமல் தாமரை இலை தண்ணீராக இருக்கிறார் லட்சுமி அம்மாள். தன்னையும் குழந்தைகளையும் புறக்கணித்துவிட்டுச் சென்ற கணவனை நினைத்து வருந்தாமல், சொந்தக்காலில் நின்று குழந்தைகளை ஆளாக்கிய வலிமையை இந்தக் கடைதான் அவருக்குத் தந்தது. திருமணம் முடித்த தன் மூத்த மகள், மூன்று குழந்தைகளுக்குத் தாயான பிறகு இறந்துவிட, அப்போதும் உறுதியுடன் நின்றார். லட்சுமி அம்மாளுக்கு அடுத்தவர் என்ன சொல்வார்களோ என்ற நினைப்பு துளிக்கூட இல்லை. அதுவே அவரைத் தனியாளாக நின்று அனைத்தையும் சமாளிக்கவைக்கிறது.
கீரை விற்கும் கந்தம்மாளுக்குப் பூர்வீகம் கர்நாடகா. இருந்தாலும் தமிழைத் தடங்கலின்றிப் பேசுகிறார்.
“நான் இருபத்து மூணு வருஷமா காய்கறி கடை நடத்துறேன். எனக்குத் தமிழ் எழுத, படிக்கத் தெரியாது. பேச மட்டும்தான் தெரியும். இந்தக் கடை தந்த வருமானத்துலதான் என் பொண்ணுங்க காலேஜ் படிக்கறாங்க” என்று புன்னகையுடன் சொல்கிறார்.
ஊரு விட்டு ஊரு வந்து ஏழு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் குடிசாகனபள்ளி கிராமத்தில் இருந்து இங்கே வந்து தையல் கடை நடத்துகிறார் நாகவேணி. கணவரின் வருமானம் மட்டுமே குடும்பம் நடத்தப் போதாது என்பதால் இந்த முடிவு என்கிறார். இவரது தையல் கடையில் நான்கு பெண்கள் வேலை செய்கின்றனர்.
“கிராமத்துல தையல் கடை போட்டா ஓடாது. அதனாலதான் இங்கே கடை போட்டிருக்கேன். ராத்திரி வீடு திரும்ப ஒன்பதரை ஆகிடும். தனி ஆளா அங்கே இருந்து கிளம்பிவந்து, வேலையை முடிச்சுட்டு கிளம்பறது அலைச்சலாதான் இருக்கு. என்ன பண்றது? வண்டி ஓடணுமே” என்று சொல்லும் நாகவேணியின் கடையைத் தேடி வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.
ஒற்றுமையே பலம்
பால் கடை நடத்தும் லதா, அதிகாலை நான்கு மணிக்கே கடையைத் திறந்துவிடுகிறார். பால் வாங்க வரும் கூட்டத்தை ஒரு பக்கம் சமாளித்துக் கொண்டு, இன்னொரு பக்கம் குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளப்புகிறார்.
“நான் ஆரம்பத்துல மில்லுல வேலைக்குப் போனேன். அதுக்கப்புறம் சொந்தமா ஏதாவது தொழில் செய்யலாம்னு இந்தப் பால் கடையைத் திறந்தோம். மதியத்துக்கு மேல வீட்டுக்குப் போனா அங்கேயும் வந்து பால் வாங்கிட்டுப் போவாங்க. எந்நேரமும் வேலையும் வியாபாரமும் சரியா இருக்கும்” என்கிறார் லதா.
மொபைல் ரீசார்ஜ் கடையைக் கவனித்துக்கொள்கிறார் கோமதி.
“என் வீட்டுக்காரர் கம்பெனி வேலை, வெளி வேலைகளைக் கவனிச்சுக்குவாரு. நான் ரீசார்ஜ் பண்ற வேலையைப் பார்ப்பேன். கஸ்டமருங்க வராத நேரத்துல துணி தைப்பேன்” என்கிறார் கோமதி.
தெரு முழுக்கப் பெண்களின் கடைகளாக நிறைந்திருந்தும் இதுவரை ஒரு கருத்து வேறுபாடுகூட வந்ததில்லை என்கிறார் சபரிலெட்சுமி.
“நாங்க எல்லாரும் கடைக்கு வந்துட்டா வேலை சரியா இருக்கும். ஒவ்வொரு கடைக்கும் ஒவ்வொரு நேரத்துல கஸ்டமர்ஸ் அதிகமா வருவாங்க. நேரம் கிடைக்கறப்போ ஒருத்தரோட ஒருத்தர் பேசிப்போம், சந்தோஷத்தைப் பகிர்ந்துப்போம். இத்தனை பொண்ணுங்க சேர்ந்து ஒரே தெருவுல கடை நடத்துறது பெருமையா இருக்கு” என்று சபரிலெட்சுமி சொல்கிறார். அதை ஆமோதிப்பது போல மற்ற பெண்கள் கட்டைவிரலை உயர்த்துகிறார்கள்.
படங்கள்: எஸ்.கே. ரமேஷ்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago