அது 1985-ம் ஆண்டு. கலர் டி.வி. அறிமுகமான புதிது. திருநெல்வேலியில், அதுவும் எங்கள் கல்லத்தி முடுக்குத் தெருவில் யார் வீட்டிலும் கலர் டி.வி. இல்லை. நாங்கள் அந்த வருடத் தொடக்கத்தில் குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றுவந்தபோது அங்கே இருந்து கலர் டி.வி. வாங்கி வந்தோம். எங்கள் தெருவில் முதன் முதலில், அதுவும் கலர் டி.வி. வாங்கியிருக்கிறோம் என்று எங்களுக்கு ஏகப் பெருமை! எங்கள் வீட்டையே எல்லோரும் கலர் டி.வி. வீடு என்றுதான் ரொம்ப நாட்கள்வரை அடையாளம் சொல்வார்கள்.
சரி, விஷயத்துக்கு வருகிறேன். கலர் டி.வி. வந்து இறங்கிவிட்டது. பிரித்து வைத்து விட்டோம். மஞ்சள், குங்குமம் வைத்து வளவில் உள்ள எல்லோரையும் டி.வி. பார்க்கக் கூப்பிட்டிருந்தோம். இணைப்பு கொடுத்தாகிவிட்டது. எல்லோரும் ஆவலுடன் டி.வி.யையே பார்த்துக்கொண்டிருந்தோம். ஸ்ஸ்... என்ற சத்தத்துடன் புள்ளிகள் மட்டும்தான் தெரிந்தன. அப்பா, பக்கத்து வீட்டு அண்ணன் என எல்லோரும் என்னென்னவோ செய்து பார்த்தனர். எலெக்ட்ரீஷியன் வேறு வந்து பார்த்துவிட்டுக் கையைப் பிசைந்துகொண்டு நின்றார். எல்லோருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கும் என் தம்பி, தங்கைக்கும் அழுகையே வந்துவிட்டது.
ரிமோட் கண்ட்ரோல் என்ற ஒன்றையே அப்போதுதான் பார்க்கிறோம். திடீரென நான் ரிமோட்டைக் கையில் வாங்கி எல்லாப் பட்டன்களையும் பொறுமையாகப் பார்த்தேன். ஒவ்வொன்றாக அமுக்கிப் பார்த்தேன். ஒன்றும் புரியவில்லை. Manual search என்று வந்தது. அதைச் சிறிது நேரம் அழுத்தினேன். ஆஹா.. கொடைக்கானல் ஒளிபரப்பு வந்தேவிட்டது. எல்லோரும் கைதட்டி ஆர்ப்பரித்தோம்
ரிமோட்டிலிருந்து கையை எடுத்ததும் அனைத்தும் போயே விட்டன. 100 சேனல்கள் உள்ளதை இப்போதுதான் பார்க்கிறோம். எல்லோரும் உடனே என்னைத் திட்ட ஆரம்பித்துவிட்டனர். திரும்ப அதே போல் அழுத்திக்கொண்டு வந்து பார்க்கையில் memory என்ற வார்த்தை கண்ணில் பட்டது. உடனே சும்மா அதை அழுத்தவும் save ஆகிவிட்டது. அப்பா... அந்த மகிழ்ச்சியை என்னவென்று சொல்ல! இப்போது ஒருவழியாக டி.வி. எனக்குக் கீழ்ப்படிய ஆரம்பித்தது. நினைத்த எண்களில் விரும்பிய சேனலைப் பதிவுசெய்யத் தெரிந்துவிட்டது. எல்லோருக்கும் முன் நான் பெரிய மகாராணி ஆகிவிட்டேன்.
அதிலிருந்து பக்கத்து வீட்டில், எதிர் வீட்டில் என எங்கே டி.வி. வாங்கினாலும் எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல என்னைக் கூப்பிடுவார்கள். நான் என் தங்கை, என் தோழி மூவரும் VCR,VCP இவற்றை இணைத்து டி.வி.யிலிருந்து பதிவு செய்யக் கற்றுக்கொண்டோம். புதுப் படங்கள் , திருமண வீடியோக்களை இரண்டு, மூன்று காப்பிகள் எடுப்போம். பதின்ம பருவத்தில் அப்படியொரு தேடல், உத்வேகம், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்.
திருமணமாகி, குழந்தைகள் வளர்ந்த பின் அந்த ஆர்வம் எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை. சில தோழிகளிடம் பேசியதில் அவர்களும் என்னைப் போலவே உணர்வதைப் புரிந்துகொண்டேன். பொதுவாக நிறைய பெண்களுக்குத் திருமணமானதுமே பழைய ஆர்வம் தேடல் என அனைத்தும் ஏன் மங்கிவிடுகிறது? அந்தத் தேடலை எங்கே தொலைத்தோம்? குடும்பம், கணவர், குழந்தை என்ற சுழலில் சிக்கி, நமக்கான தனித் திறமைகளும் ஆர்வமும் மங்கிப் போய்விடுகின்றனவா?
இப்போதும் செல்போனில் புகைப்படங்கள் எடுத்ததைக் கணினியில் ஏற்றவோ, அல்லது அதில் புதியதாய் எதுவும் இருந்தாலோ அவற்றை முயற்சிக்காமல் என் குழந்தைகளிடம் கொடுத்து, அவர்கள் விளக்குவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். எப்போதாவது பழைய உற்சாகம் நினைவுக்கு வந்தால், மகன்களிடம் எதுவும் கேட்காமல் நானாக முயற்சி செய்வேன். என் அந்த முயற்சியும் என் மகன்களுக்குக் கேலியாகத்தான் இருக்கும். ‘அந்தக் காலத்துல நான் அப்படி, இப்படின்னு ஸீன் போடுறீங்க. இப்போ உங்களுக்கு இதுகூடத் தெரியலையே’ என்று சிரிப்பு அவர்களுக்கு. ம்... அந்தக் கல்பனாவை இனியாவது மீட்டெடுக்க வேண்டும் என்ற கவலை எனக்கு. உங்களுக்கு?
- கல்பனா தேவி, சிவகாசி.
நீங்களும் சொல்லுங்களேன்
தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம் வரை எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். நம் அனுபவம் அடுத்தவருக்குப் பாடமாக அமையலாம். குழம்பியிருக்கும் மனதுக்குத் தெளிவைத் தரலாம். தயங்காமல் எழுதுங்கள், தன்னம்பிக்கையோடு எழுதுங்கள். உங்கள் படைப்புகளை பெண் இன்று, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600002 என்ற முகவரிக்கோ அல்லது penindru@thehindutamil.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago