செய்கிற வேலையே சேவையாக இருக்க வேண்டும் என்பதற்காக வழக்கறிஞர் தொழிலை விரும்பித் தேர்ந்தெடுத்தவர் ரஜினி. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறை நிகழும்போதெல்லாம் தயங்காமல் அவர்களுக்காகக் களம் இறங்கிப் போராடுவதுடன் நீதி கேட்டும் துணை நிற்பார். மதுரை சுற்றுவட்டாரத்தில் அடிப்படை உரிமைகளுக்காகவும் அநீதிக்கு எதிராகவும் எங்கெல்லாம் குரல் கேட்கிறதோ அங்கெல்லாம் நிச்சயம் ரஜினியைப் பார்க்கலாம்.
மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த ரஜினியின் சொந்த ஊர் தூத்துக்குடி. அப்பாவுக்குத் தோணித் தொழில். அம்மா, இல்லத்தரசி. சித்தி, பெரியம்மா குடும்பங்களின் ஆதரவு இருந்ததால் பொருளாதாரச் சிக்கலைத் தாண்டி ரஜினியால் படிக்க முடிந்தது. சட்டப் படிப்பை முடித்துவிட்டு மதுரையில் தன் பணியைத் தொடங்கினார் ரஜினி.
“உண்மையில் பள்ளி நாட்களிலேயே எனக்குப் பொதுப் பணிகளில் ஆர்வம் வந்துவிட்டது. எங்காவது சாலை விபத்து நடந்தால் உடனே அந்த இடத்துக்கு விரைவது, முடிந்த அளவுக்கு உதவிகள் செய்வது என்று ஏதாவது செய்துகொண்டிருப்பேன். அதுதான் பின்னாளில் சமூகநீதிக்காகப் போராடுவதற்கும் அதை அமல்படுத்துவதற்கும் களமாக இருக்கும் சட்டப் படிப்பைப் படிக்கத் தூண்டியது” என்று சொல்லும் ரஜினி, தலித் விடுதலை இயக்கம், மனுநீதிக்கான மக்கள் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து களப்பணி யாற்றிவருகிறார். தன் தோழர் செண்பகவல்லி உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து 15 ஆண்டுகளுக்கு முன் ‘தென் மாவட்டப் பெண்களுக்கான கூட்டமைப்பு’ என்ற அமைப்பை ஆரம்பித்து நடத்திவருகிறார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து இந்த அமைப்பு சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வாங்கித் தருவது ஆகியவற்றைச் செய்துவருகிறார்.
அம்பேத்கர் உருவாக்கிய அலை
தொண்ணூறுகளில் அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவையொட்டித் தமிழகமெங்கும் குறிப்பாகத் தென் தமிழகத்தில் தலித் எழுச்சியலை உருவானது. அந்த நேரத்தில் களப்பணியாற்ற வந்தவர் ரஜினி. குறிஞ்சான்குளம், மேலவளவு, தென்னகரம், கொடியங்குளம் ஆகிய பகுதிகளில் நடந்த கலவரங்களை விசாரிக்கச் சென்ற உண்மையறியும் குழுவில் ரஜினியும் ஒருவர். கலவரப் பகுதிகளுக்குச் சென்று களப்பணியாற்றியது ரஜினியின் பார்வையிலும் சிந்தனையிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு தொடர்ந்து பொதுப் பணியில் ஈடுபடத் தொடங்கினார்.
தமிழகத்தின் பல பகுதிகளில் ஜாதி இந்துக்கள் குடியிருக்கும் பகுதிகளில் தலித் மக்கள் செருப்பு அணியக் கூடாது என்ற நடைமுறை இருந்தது. அதை எதிர்த்துத் தமிழ்நாடு இறையியல் கல்லூரியும் தலித் ஆதார மையமும் இணைந்து ‘செருப்பு வழங்கும் விழா’வை நடத்தின. அதில் பங்கேற்றது தன் மனதை மிகவும் பாதித்ததாகச் சொல்கிறார் ரஜினி.
“ஒரு மனிதன் காலில் செருப்பு அணியக்கூட இங்கே உரிமையில்லையா? தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்று இந்தச் சமூகம் அடையாளப்படுத்தி வைத்திருக்கிறவர்களும் மனிதர்கள்தானே?” என்று கேட்கும் ரஜினி, கலவரங்களாலும் ஆதிக்க ஜாதியினராலும் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்காகப் பல வழக்குகளை ஏற்று நடத்தியிருக்கிறார்.
தலித்துகள் மீதான வன்முறை
“காரியாப்பட்டியை அடுத்த அல்லலப்பேரி கிராமத்துல நாட்டாமையோட பேரன் இறப்புக்காக அந்த ஊர் தலித் ஒருவரைக் கேதம் (துக்கச் செய்தி) சொல்ல அனுப்பறாங்க. தலித் விடுதலை இயக்கத்துல இருந்த அவர், அதை மறுத்துடறாரு. அவரவர் வீட்டுத் துக்கத்துக்குச் சம்பந்தப்பட்டவங்கதான் கேதம் சொல்லணும், குழி வெட்டணும்னு அவர் சொல்ல, அவரோட கன்னத்துல அறை விழுது. ஆத்திரப்பட்ட நாட்டாமையோட உறவினர் ஒருவர், கேதம் சொல்ல மறுத்தவரின் 13 வயது மகளைப் பலாத்காரம் செய்துடறார். அதன் பிறகு கலவரம் வெடிக்க, தலித் மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன. உயிருக்குப் பயந்த மக்கள், விருதுநகரில் தஞ்சமடைந்தார்கள். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான சட்ட வரைவு அமல் செய்யப்படாத காலம் அது. இருந்தாலும் அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆதரவாக இருந்தோம். தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பிறகு நீதி வென்றது” என்று பெருமிதத்துடன் சொல்லும் ரஜினி, பெண்ணாக இருப்பதாலேயே பல சிக்கல்களைச் சந்தித்திருக்கிறார்.
பெண் என்றால் இளப்பமா?
“பெண்ணுக்கு எதிரான வலுவான ஆயுதமாக ஆண்கள் நினைப்பது நடத்தை சார்ந்த குற்றச்சாட்டுதான். அது அவளை எளிதில் முடக்கிவிடும் என்று நினைக்கிறார்கள். பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நீதி கேட்டு எம்.எல்.ஏ ஒருவரிடம் சென்றபோது, என்னைப் பார்த்ததுமே ஒருமையில் அழைத்து, தரக்குறைவாகப் பேசினார். அப்படிப் பேசுவதே என் செயல்பாட்டைக் குறைத்துவிடும் என்ற அவரது அறியாமையை நினைத்துச் சிரிப்புதான் வந்தது” என்று சொல்லும் ரஜினியின் வார்த்தைகளில் அனுபவத்தின் கனிவு.
பல பொதுநல வழக்குகளை முன்னெடுத்திருக்கிறார். ஒரு காலத்தில் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக இருந்த ‘புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?’ என்ற விளம்பரத்தை எதிர்த்து வழக்கு தொடுத்தவர் ரஜினி. பெண் மூலம்தான் ஆணுக்கு எய்ட்ஸ் வருகிறது என்று ஊரெல்லாம் சொன்ன அந்த விளம்பரத்துக்குத் தடை வாங்கினார். கற்பு குறித்த நடிகை குஷ்புவின் கருத்துக்கு ஆதரவாக நின்றது, பரமக்குடி கலவரத்தில் சி.பி.ஐ விசாரணை கோரியது என்று தொடர்ந்து பல செயல்களை முன்னெடுத்துச் செய்திருக்கிறார்.
திருநங்கைகளுக்கு நல்வாழ்வு
தற்போது மூன்றாம் பாலினமாக அறியப்படுகிற திருநங்கைகள், ஆரம்பத்தில் தங்களைப் பெண் என்றே அறிவிக்க வேண்டும் என்று சொன்னபோது அவர்களுக்கு ஆதரவாக நின்றவர் ரஜினி.
“பல வருடங்களுக்கு முன் பிரியா பாபு, லிவிங் ஸ்மைல் வித்யா, பாரதி கண்ணம்மா, டயானா உள்ளிட்ட பல திருநங்கைகள், அரசு ஆவணங்களில் தங்களைப் பெண்ணாக அறிவிக்கக்கோரியும் அதற்காக வழிகாட்டுமாறும் என்னிடம் வந்தார்கள். அப்போது அவர்களை எந்தப் பாலினமாகப் பதிவு செய்வது என்று நிலவிய குழப்பத்தால் அவர்களுக்கு முறைப்படி எந்த அரசு அடையாளச் சீட்டும் இல்லாமல் இருந்தது. அதன் பிறகு அவர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து செயல்பட்டோம். அது தி.மு.க. ஆட்சியில் இருந்த நேரம். திருநங்கைகளைப் பெண்ணாக அறிவித்து, அதன் அடிப்படையில் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையும் கொடுக்கப்பட்டது. அதுவரை அடையாளம் எதுவும் இல்லாமல் இருந்தவர்கள், ஓட்டுரிமை கிடைத்த பிறகுதான் மக்கள் குழுவின் அங்கமாக அறியப்பட்டார்கள்” என்று சொல்லும் ரஜினி, குடும்ப வன்முறை சட்டத்தாலும் அதை அமல்படுத்துவதில் இருக்கிற தெளிவற்ற தன்மையாலும் பெண்களுக்குத் தீர்வு கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது என்கிறார்.
நாளை விடியல் வரும்
“பெண்கள் மீதான வன்முறையின் வடிவம் மாறியிருக்கிறதே தவிர, குறைந்தபாடாக இல்லை. இப்போதும் பெண்கள் கணவனிடம் அடி வாங்கிக்கொண்டும், வரதட்சணைக்கு ஈடாகத் தீயில் கருகிக் கொண்டும்தான் இருக்கிறார்கள். அப்போது அனைத்தையும் சகித்துக்கொண்டு வதைபட்டுக் கொண்டிருந்த பெண்கள், இன்று ஓரளவுக்கு வெளியே வந்து சட்டத்தின் துணையை நாடுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. கல்வியும், பொருளாதாரச் சுதந்திரமும் பெண்களுக்கு ஓரளவுக்குத் தன்னம்பிக்கையை வழங்கியிருக்கின்றன. ஆனால் இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. நம் சமூகத்தில் தலித்துகளுக்கும் பெண்களுக்கும் என்றைக்குச் சமத்துவமும் சமநீதியும் கிடைக்கிறதோ அன்றுதான் நாம் வளர்ச்சியின் பாதையில் பயணிக்க முடியும். அதை நோக்கிய நகர்வில் நானும் சிறு துளியாக இருக்கிறேன்” என்று சொல்லும் ரஜினியின் வார்த்தைகளில் எதிர்காலம் குறித்த நம்பிக்கை நிறைந்திருக்கிறது.
படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago