அமெரிக்காவில் நடைபெறும் பாஸ்டன் மாரத்தான் போட்டி மிகவும் பழமையான, மிகவும் புகழ்பெற்ற போட்டிகளில் ஒன்று. உலகம் முழுவதிலுமிருந்து போட்டியாளர்கள் கலந்துகொள்வார்கள். பல லட்சக்கணக்கான மக்கள் போட்டியைக் காண்பதற்கு, போட்டி நடக்கும் 42 கி.மீ தூரத்துக்கு அணிவகுத்து நிற்பார்கள். 2013-ம் ஆண்டு பாஸ்டன் மாரத்தான் போட்டியைக் காண தன் 5 வயது மகனுடன் வந்திருந்தார் ரெபேகா க்ரெகோரி.
திடீரென்று 20 அடி தூரத்தில் பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. மக்கள் அலறிக்கொண்டு ஓடினார்கள். கீழே விழுந்து கிடந்த ரெபேகாவுக்கு ஒன்றும் புரியவில்லை. தன் மகனைத் தேடினார். மகனின் குரல் அவர் காதில் விழவில்லை. இனித் தன் வாழ்நாளில் மகனைப் பார்க்கப்போவதில்லை என்று நினைத்த நொடி, மயங்கிவிட்டார் ரெபேகா.
மருத்துவமனையில் ஒரு வாரம் கோமாவிலிருந்து விழித்தபோதுதான் அவர் உடலில் 17 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது தெரிந்தது. அதிலும் இடது கால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. 56 நாட்களுக்குப் பிறகு வீடு வந்து சேர்ந்தார் ரெபேகா. மகனின் காயங்கள் சரியாகியிருந்தன.
“அந்தக் குண்டு வெடிப்பில் 3 பேர் இறந்து போனார்கள். 264 பேர் படுகாயம் அடைந்தனர். நான் உயிர் பிழைத்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்தான். ஆனால் என் வாழ்க்கை முற்றிலும் திருப்பிப் போடப்பட்டுவிட்டது. என்னால் பழைய மாதிரி இனி இருக்க முடியாது. அமைதிக்காகவும் சமத்துவத்துக்காகவும் நடைபெற்ற ஒரு மாரத்தான் போட்டியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது எத்தனை துயரமான விஷயம்’’ என்கிறார் ரெபேகா.
அம்மாவின் அரவணைப்பிலும் அன்பிலும் ரெபேகாவின் உடலும் உள்ளமும் வேகமாகத் தேறின. அம்மாவுக்காகவும் தன் மகனுக்காகவும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக்கிக்கொண்டார். அதற்குள் அடுத்த பாஸ்டன் மாரத்தான் போட்டி வந்துவிட்டது. ஏனோ அதில் கலந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது. சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு போட்டி நடைபெற்ற இடத்துக்குச் சென்றார் ரெபேகா. உலகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த போட்டியாளர்களைச் சந்தித்தார். உரையாடினார்.
“என்னால் மாரத்தான் போட்டியில் ஓட முடியுமா?’’ என்ற கேள்வியை ஒவ்வொரு போட்டியாளரிடமும் கேட்டபோது, அழுகை பீறிட்டு வந்தது. ரெபேகாவும் ஒரு நாள் மாரத்தானில் ஓடுவார் என்று நம்பிக்கை விதைத்தார்கள்.
“எனக்கு ஆஸ்துமா பிரச்சினை இருந்ததால் சின்ன வயதில் இருந்தே நான் அதிகம் ஓடுவதில்லை. போட்டிகளில் பங்கேற்றதில்லை. வளர்ந்த பிறகு ஒரு முறை அரை மாரத்தான் ஓடலாம் என்று கலந்துகொண்டேன். 4 மைல் தூரத்துக்கு மேல் ஓட முடியவில்லை. செத்துப் போய்விடுவேன் என்று தோன்றியது. அத்துடன் ஓடும் ஆசையை விட்டுவிட்டேன். ஆனால் கால் பாதிக்கப்பட்ட பிறகு ஏனோ ஓட வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி தோன்றிக்கொண்டே இருந்தது’’ என்கிறார் ரெபேகா.
எத்தனையோ அறுவை சிகிச்சைகள் செய்த பிறகும் கால் பிரச்சினை மேல் பிரச்சினைகளைக் கொடுத்தது. 18 மாதப் போராட்டங்களுக்குப் பிறகு மருத்துவர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். ரெபேகாவின் இடது காலை முட்டி வரை அகற்றிவிடுவது என்று தீர்மானித்தனர். வேறு வழியின்றி அந்த முடிவை ஏற்றுக்கொண்டார் ரெபேகா. கடைசியாக ஒருமுறை தன் கால் நகங்களுக்கு நெயில் பாலிஷ் போட்டுக்கொண்டார். முட்டி முதல் பாதம் வரை தடவிக் கொடுத்தார். மீண்டும் மருத்துவமனை வாசம். கால் அகற்றப்பட்டு, பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. காயம் ஆறிய பிறகு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. காலுக்கும் செயற்கைக் காலுக்கும் கடுமையான போராட்டம். அடிக்கடி புண். ரத்தம் வெளியேறியது. செயற்கைக் கால் பல முறை மாற்றம் செய்யப்பட்ட பிறகு, பொருந்தியது.
செயற்கைக் காலால் நடக்க முதலில் கஷ்டமாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகப் பயிற்சி எடுத்து, இயல்பாக நடக்கும் அளவுக்கு முன்னேறினார் ரெபேகா. தன்னம்பிக்கை அதிகரித்தது. மாரத்தானில் பங்கேற்பதற்குப் பயிற்சி எடுத்துக்கொள்ள நினைத்தார். தன்னைப் போலக் கால் இழந்த பயிற்சியாளர் ஒருவரிடம் சேர்ந்தார். வாரத்துக்கு 5 நாட்கள் பயிற்சி. செயற்கைக் காலுடன் ஓடுவது எவ்வளவு கடினமானது என்பது அப்பொழுதுதான் தெரிந்தது. ஆனாலும் முயற்சியைக் கைவிடவில்லை ரெபேகா.
மாரத்தான் போட்டி நெருங்கிக்கொண்டிருந்தது. தன்னால் முழு மாரத்தான் தூரத்தையும் கடக்க முடியாது என்ற உண்மையை உணர்ந்துகொண்டார். ஆனால் குறிப்பிட்ட தூரமாவது ஓடி, எல்லைக் கோட்டைத் தொட்டுவிட வேண்டும் என்று உறுதி பூண்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எந்தப் போட்டியில் அவர் காலை இழக்க நேரிட்டதோ, அதே போட்டியில் இரண்டு கால்களுடன் வந்து கம்பீரமாக நின்றார் ரெபேகா. எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தார்கள். 5 கி.மீ தூரத்தைக் கடப்பதுதான் ரெபேகாவின் இலக்கு. ரெபேகாவுடன் பயிற்சியாளரும் ஓடி வந்தார். நடுவே மழை பெய்து, ஓட்டத்தை இன்னும் கடினமாக்கியது. ஓட முடியாத நிலை வரும்போதெல்லாம் பயிற்சியாளரின் கையைப் பிடித்துக்கொண்டு ஓடினார். எல்லைக் கோடு நெருங்கக் நெருங்க கால் வலி அவருக்குப் பொருட்டாகத் தெரியவில்லை. மக்களின் உற்சாகம் காதைப் பிளந்தது. எல்லைக் கோட்டைத் தொட்டவுடன் அப்படியே தரையில் உட்கார்ந்தார். வாய் விட்டுக் கதறி அழுதார். கால் இழந்தாலும் தன்னால் இவ்வளவு தூரம் ஓடி, சாதனை செய்ய முடிந்திருக்கிறது என்ற பெருமிதத்தில் ஏற்பட்ட அழுகை அது!
பார்வையாளர்கள் ரெபேகாவின் பெயரைச் சொல்லி வாழ்த்தியபடி, தொடர்ந்து கைதட்டினார்கள். பயிற்சியாளர் ரெபேகாவைத் தூக்கி நிறுத்தினார். ஒரு போட்டியாளர் குளிருக்கு இதமாக மேலாடை ஒன்றைப் போர்த்திவிட்டார். அவரது சாதனை அறிவிக்கப்பட்டது. வாழ்த்து மழையில் நனைந்தார்.
“நாங்கள் என்ன செய்தோம்? எங்களுக்கு ஏன் இந்த நிலை? என்று குண்டு வெடிப்புக்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளில் கேட்காத நாளே இல்லை. குண்டு வைத்தவனுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினேன். ஆனால் இன்று முற்றிலும் வேறு மனநிலையில் இருக்கிறேன். ஒரு காலை இழந்து, 30 அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு இன்னும் பூமியில் உயிருடன் நடமாடுகிறேன். ஒரு வெடிகுண்டு என்னுடைய மன வலிமையைப் பன்மடங்கு கூட்டியிருக்கிறது. என்னுடைய திறமையை உலகுக்கு வெளிப்படுத்தியிருக்கிறது. என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நம்பிக்கை வகுப்பு எடுக்க வைத்திருக்கிறது. மிக முக்கியமாக, இந்த மனித வாழ்க்கை எவ்வளவு உன்னதமானது என்பதை உணர வைத்திருக்கிறது. ஒவ்வொரு நாளின் விடியலையும் கொண்டாடும் மனநிலையில் இருக்கிறேன். ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன். எந்தச் சோதனையையும் ஒருகை பார்க்கக் காத்திருக்கிறேன்’’ என்கிறார் 27 வயது ரெபேகா!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago