குளிர்காலம் தன் பயணத்தைத் தொடங்கியிருந்த நவம்பர் மாதம். டெல்லியில் வழக்கமாக அக்டோபர் மாதத்தில் தொடங்கும் குளிர், நவம்பர் மாதத்தில் சற்று அதிகரிக்கத் தொடங்கும். மாலை ஐந்து மணிக்கெல்லாம் அலுவலகங்கள், கல்விக் கூடங்கள் எல்லாம் மனிதர்களின் உடல் வெம்மையிலிருந்து விடுபட்டுக் குளிரில் உறையத் தொடங்கிவிடும். மதிய நேரத்துக்குப் பின் மாலை நேரம் தன் நேரத்தை மொத்தமாக இரவுக்குத் தாரை வார்த்து விடும். கதகதப்பான ஆடைகளுக்குள் புகுந்துகொண்டு, தலையைத் தாழ்த்தியபடி வேகமாக நடக்கும் மனிதர்களைத் தவிரச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க இடமளிக்காத குளிரும் மிதமான இருளுமே எங்கும் வியாபித்திருக்கும். குளிர்காலத்தில் டெல்லியில் தங்கியிருக்க வாய்ப்பு கிடைத்தவர்கள் டெல்லியைச் சொர்க்கப் பூமியாகவே கருதுவார்கள். டெல்லிவாசிகள் அந்தக் குளிர்காலத்துக்காக டெல்லியின் கோடைக் காலத்தைக்கூடக் குளிர்காலக் கனவுகளோடு கடந்துவிடுவார்கள்.
ஆனால் பெண்கள் பாதுகாப்புக்கு இந்தியாவின் எந்த மாநிலத்துக்கும் குறைவில்லாத அல்லது அதிகமான வகையில் அச்சுறுத்தல்களைக் கொண்டதும் இதே டெல்லிதான். டெல்லியில் மதிப்பு வாய்ந்த ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தமிழ்நாட்டில் இருந்து டெல்லி சென்று சேர்வதற்குள்ளேயே மாநிலப் பாகுபாடின்றி (தமிழ்நாடு உட்பட) ஆண்களால் தொடுக்கப்பட்ட எரிச்சலூட்டும் சீண்டல்கள் பலவற்றை ரயில் பயணத்தில் எதிர்நோக்க வேண்டியிருந்தது. இந்த வகையான பயணவழிச் சீண்டல்கள் பலவற்றைக் கடந்து வந்திருக்கிறேன். பெண்ணாகப் பிறக்கும் எவருமே இதிலிருந்து தப்பியிருக்க முடியாதுதான். பல மாநிலக் கலாச்சாரம், பன்னாட்டு மாணவர்களுடன் பழகும் வாய்ப்பு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரிய பல்கலைக்கழகங்கள், அரிய நூலகங்கள், மாநிலவாரியாகத் தனித்தனியான சங்கங்கள், அவற்றில் நடைபெறும் நிகழ்ச்சிகள், இயந்திரத்தனமான வேலை நேரத்துக்குள் அடங்கிப் போகாமல் எடுத்துக்கொண்ட பணிக்கு முக்கியத்துவம் அளித்து வேலை செய்யும் போக்கு போன்ற பல மாற்றுச் சூழல்களை மாணவர்களாக டெல்லி செல்பவர்கள் அனுபவிக்கலாம்.
எல்லை மீறும் கரங்கள்
பல மாநிலங்களைச் சேர்ந்த நண்பர்கள், பல்கலைக்கழகத்தில் ஒன்று சேர்ந்து பயின்றோம். பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சில மாதங்கள் கழித்து என் தோழி, பல்கலைக்கழகத்தில் தன் வேலையை முடித்துவிட்டு ஒரு குளிர்கால மாலை நேரத்தில் எங்களுடன் தேநீர் பருகி விடைபெற்றுக்கொண்டு தான் தங்கியிருக்கும் விடுதிக்குத் திரும்பிக்கொண்டிருந்தாள். குறிப்பிட்ட இடத்தில் பேருந்திலிருந்து இறங்கிய பிறகு, ஒரு கையில் லேப்டாப் பையையும் மறு கையில் தனது அலைபேசியையும் சுமந்துகொண்டு, விடுதி இருக்கும் ஆளரவமற்ற அந்தச் சாலையில் வேகமாக நடந்தாள். அவ்வப்போது, ஒன்றிரண்டு வாகனங்கள் கடந்து சென்று கொண்டிருந்தன. இவளை எதிர்நோக்கி மிக அருகே ஓர் இருசக்கர வாகனம் வருவதைக் கண்டு ஒதுங்க எத்தனித்தவள் அதிர்ச்சியில் ஒரு நிமிடம் உறைந்து போனாள். இருசக்கர வாகனத்தில் வந்தவன் இவள் அணிந்திருந்த மேலாடையைப் பற்றி இழுத்ததில் அதில் இருந்த பொத்தான்கள் சிதறி விட்டிருந்தன. கடும் குளிரையும் தாண்டி அவள் உடல் அதிர்ந்து வியர்த்துக் கொட்டியது.
அந்த இருசக்கர வாகனம் சிறு புள்ளியாய் மறையத் தொடங்கியிருந்தது. விடுதிக்கு உடனடியாகச் சென்று சேர்ந்து விடுவதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை அவளுக்கு. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பல நாட்கள் அவள் அதிர்ச்சியில் இருந்து மீளாதவளாகவே இருந்தாள். தனிமையில் நடந்து செல்வதில் அவளுக்குள்ளே எழுந்த பயத்தின் காரணமாக ஏற்பட்ட அசெளகரியம் அவளை நம்பிக்கை இழக்கச் செய்திருந்தது. அன்று அந்த ஆண் அப்படித் தன்னிடம் நடந்துகொள்ளத் தான் எந்த விதத்தில் காரணியாக இருந்தோம் என்று எண்ணினாள். தனது வீட்டைவிட்டு இவ்வளவு தூரம் படிக்க வந்தது தவறா? தனிமையில் பெண் வெளியே வருவது தவறா? முன்பின் தெரியாத, தனக்கு எந்தத் தீங்கும் செய்யாத, ஒரு பெண்ணை எப்படி உடல் ரீதியான மற்றும் மன ரீதியான தாக்குதலுக்கு ஓர் ஆண் உட்படுத்த முடியும்? போன்ற கேள்விகளை அவள் எங்களோடு பகிர்ந்து கொண்டாள்.
பெண்ணுக்குப் பாதுகாப்பு எங்கே?
இந்தக் கேள்விகளுக்கு விடை தேடுபவள் அவள் மட்டும் அல்ல. இந்தியாவில் ஒவ்வொரு தெருவையும் கடக்கும் எல்லாப் பெண்களும்தான். பெண் வீட்டிலும் பொது இடங்களிலும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியபடிதான் வாழ வேண்டியிருக்கிறது. இந்த நிகழ்வுக்குப் பிறகு பல்கலைக்கழகத்திலிருந்து தத்தமது இருப்பிடங்களுக்குச் செல்லும் நாங்கள் ஒருவருக்கொருவர் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கைச் செய்து கொள்வோம். கல்வியும் அதன் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளும் கொடுத்திருக்கும் சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டு தன் ஆளுமையைச் செதுக்கத் தொடங்கும் பெண்ணுக்கு இத்தகைய தெரு சீண்டல்கள் மிகுந்த கோபத்தையும் சில நேரங்களில் மனச் சோர்வையும் தரக்கூடியவை.
தனிமையில் இருக்கும்போது மட்டுமல்ல, மக்கள் நிறைந்த இடங்களிலும் பெண்ணின் மீது பல வன்முறை நிகழ்கிறது. உற்று நோக்குவது, கடந்து செல்லும்போது தகாத வார்த்தைகளை முணுமுணுப்பது, பெண்களைப் பேருந்திலும் சாலைகளிலும் உரசிவிட்டுச் செல்வது, பெண்ணின் அங்கங்களை விமர்சிப்பது, இவற்றை அதிகபட்சமாக முகக்குறிப்புகளால் எதிர்க்கும் பெண்ணைப் பார்த்து விநோதமான விலங்கு போலச் சப்தமெழுப்பி உமிழ்வது (இதெல்லாம் ஒரு மூஞ்சி என்ற அர்த்தத்தில்) போன்ற பலவற்றைச் சொல்ல முடியும். இவற்றை எதிர்கொள்ளும் பெண்ணின் கல்வி, பதவி, சிந்தனை, குடும்பப் பின்னணி, மனநிலை இவை எதுவும் மேற்கண்ட கீழ்த்தரமான செயல்பாடுகளைச் செய்யும் ஆணுக்குத் தெரியாது. அவனுக்கு அந்தச் சமயத்தில் பெண்ணைச் சீண்டுவதற்குத் தான் ஆண் என்ற அடையாளமும் அவள் பெண் என்ற அடையாளமும் போதுமானதாக இருக்கிறது. ‘ஆண் நுகர்வதற்குப் படைக்கப்பட்ட பெண் நீ’ என்று பெண்ணுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் செயல்கள் இவை. பெண்ணைச் சீண்டுவது ஆணின் தார்மீகப் பிறப்புரிமை என்றே ஆண்களால் நம்பப்படுவது எத்தனை பெரிய அறியாமை.
சுருங்கிப் போகும் எல்லை
இத்தகைய உணர்வு ரீதியிலான தாக்குதலில் இருந்து உலகில் எந்தப் பெண்ணும் தப்பி இருக்க முடியாது. சாலையில் பயணிக்கும்போது சில ஆண்கள் செய்யும் இந்தக் கண்ணியக் குறைவான செயல்கள் பெண்களை உளவியல் ரீதியிலான பாதிப்புக்கு ஆளாக்குகின்றன. பாதுகாப்பற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை, தன் கண்ணியம் குறித்துச் சமூகம் என்ன நினைக்கும் என்ற அச்சம், தனியே சாலைகளில் நடந்து செல்வதில் ஏற்படும் கூச்சம், பதற்றம் போன்ற பல இயல்புக்கு மாறான மனநிலையைப் பெண்கள் அந்தச் சமயங்களில் அடைகிறார்கள். இத்தகைய மனநிலையில் பெண்கள் எந்த நோக்கத்துக்காகத் தங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள் என்பதையே மறந்து விடுகிறார்கள். மீண்டும் வீட்டுக்குள் விரைந்து சென்று ஒளிந்துகொள்வதே அவர்களுக்கு உடனடித் தேவையாக இருக்கிறது. வெளியிடங்களுக்குச் செல்வதற்கும், சாலைகளில் கூடி நின்று பேசவும் இந்திய அரசால் வரையப்பட்ட சுதந்திர உரிமை ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது. ஆனால் நடைமுறையில் பெண்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திர உரிமை ஆண்களால் நசுக்கப்படுகிறது என்பதே யதார்த்தம்.
சென்னையில் சில காலம் நான் விடுதியில் தங்கியிருந்தபோது என்னோடு தங்கியிருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த தோழிகள், “கேரளாவில் நாங்கள் ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்குள் சென்று விடுவோம். சென்னையில் பெண்கள் பத்து மணிக்குக்கூடத் தனியாக வெளியே சென்று வர முடிகிறது” என்று ஆச்சரியமாகக் கூறியபோது அதற்காகப் பெருமை கொள்வதா அல்லது இல்லை என அதை மறுப்பதா என்று புரியவில்லை. இந்தியாவின் தலைநகரம் தொடங்கி விரியும் ஒவ்வொரு நகரச் சாலைகளும் பெண்ணுக்குப் போர்க்களத்தின் அனுபவத்தைத்தான் அளிக்கின்றன.
பெண்ணுக்கும் உரிமையுண்டு
ஒரு பெண் தனியாகப் பயணம் செய்யும்போது நிகழும் தெருச் சீண்டல்களைப் பார்க்கும் சக பயணிகள் பெண்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது அபூர்வம். தன்னைச் சுற்றியிருப்பவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள் என்ற கூச்சம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தனது எதிர்ப்புணர்வைக் காட்டத் தடையாக இருக்கிறது. இவற்றை மீறி அந்தப் பெண் எதிர்ப்பைக் காட்டினால் தன் மீது எந்தத் தவறும் கிடையாது என்றே ஆண்கள் ஏக பத்தினி விரதர்களைப் போலப் பாவனை செய்யத் தொடங்கி விடுவார்கள். பெண் மீதான மதிப்பீட்டைக் கட்டியெழுப்பவும் அதன் மீது கீறல்கள் போடவும் தெரிந்த இந்தச் சமூகத்துக்கு அடிபணிந்து கை, கால்களைக் குறுக்கிக் கொண்டு பயணிக்கப் பெண் மீண்டும் மீண்டும் ஆயத்தம் ஆகிறாள்.
தான் சந்திக்கும் தெருச் சீண்டல்களை வீட்டில் கூறும்போது அங்கிருந்து வரும் முதல் கேள்வி, “நீ ஏன் தனியாக அங்கே சென்றாய்? ஏன் வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டு வருகிறாய்?” என்பதுதான். நிகழ்ந்த சம்பவத்தில் தன் மீது தவறு இல்லாதபோதும் பெற்றுக்கொள்ளும் அறிவுரைகள் மிகக் கொடுமையானவை. பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரனோ, தந்தையோ, உறவினரோ தவறு செய்த ஆணிடம் நியாயம் கேட்கச் செல்லும்பட்சத்தில் அங்கே கைகலப்பு நிகழ்வது தொடங்கிப் பெண்ணின் இயங்கு வெளியைக் குறுக்கிவிடுவதில் சென்று அது முடியும். சாலையோரத் தேநீர் கடை தொடங்கி, ஒட்டுமொத்தப் பொதுவெளியையும் குத்தகைக்கு எடுத்துவிட்டதாக நினைக்கும் ஆண்களே, பெண்கள் சாலைகளைக் கடந்து செல்ல வழியை விடுங்கள்!
தொடர்புக்கு: bharathiannar@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago