பக்கத்து வீடு: ஆப்கன் வானில் பறந்த பெண்!

By எஸ். சுஜாதா

பெண்கள் காணும் கனவுகள் எல்லாம் நிஜமாகிவிடுவதில்லை. சில நாடுகளில் பெண்களுக்குக் கனவு காண்பதில்கூடக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் தன்னுடைய சிறு வயதுக் கனவு நனவாகியிருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் நிலூஃபர் ரஹ்மானி. ஆனாலும் அது முழுமையான மகிழ்ச்சி என்று சொல்ல முடியவில்லை என்கிறார் நிலூஃபர்.

2001-ம் ஆண்டில் தாலிபன்களின் பிடியில் இருந்து விடுபட்டது ஆப்கானிஸ்தான். இன்றும் அவர்கள் விதைத்துச் சென்றுள்ள அடக்குமுறைகளில் இருந்து முற்றிலும் விடுபடாத தேசத்திலிருந்து முதல் பெண் பைலட்டாக உருவாகியிருக்கிறார் ரஹ்மானி!

சிறு வயது ஆர்வம்

எல்லாக் குழந்தைகளையும் போலவே வானில் பறந்து திரியும் பறவைகளைப் பார்த்து, பறக்க வேண்டும் என்ற எண்ணம் ரஹ்மானிக்கு வந்துவிட்டது. தன் அப்பாவிடம் சொன்னார். அவருக்கும் சின்ன வயதில் ராணுவ பைலட்டாகும் ஆர்வம் இருந்தது. சோவியத் கட்டுப்பாட்டில் இருந்தபோது, ஆப்கானிஸ்தானில் சில பெண்கள் பைலட்டாக இருந்திருக்கிறார்கள். ஆனால் அதற்குப் பிறகு வந்த தாலிபன்கள் பெண்களுக்கு இருந்த அத்தனை சுதந்திரத்தையும் குழி தோண்டிப் புதைத்துவிட்டனர்.

ரஹ்மானியின் அப்பா மகிழ்ந்து போனார். ஆனால் இன்றைக்கு இருக்கும் ஆப்கானிஸ்தானில் ஒரு பெண் பைலட்டாக வருவது சாத்தியமா என்ற சந்தேகமும் அவருக்கு இருந்தது.

“உன்னுடைய ஆர்வம் அதுதான் என்றால் நான் உடன் இருக்கிறேன். ஆனால் உன் மனதை உறுதியாக வைத்துக்கொள்ள வேண்டும். எந்த இடையூறு வந்தாலும் அதைப் பொருட்படுத்தக் கூடாது. கஷ்டப்பட்டு நீ ஒரு பைலட்டாக மாறிவிட்டால், இந்த நாட்டுப் பெண்களுக்கு உன் மூலம் விடிவு காலம் பிறக்கும். பூனைக்கு மணி கட்டும் பணியை நாமே செய்வோம்’’ என்றார் அவரது அப்பா.

ராணுவப் பயிற்சி

பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, ஓராண்டு ஆங்கிலம் படித்தார். 2010-ம் ஆண்டு ஆப்கன் ஏர் ஃபோர்ஸ், பெண் பைலட்டுகளுக்குப் பயிற்சியளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. அதைப் பார்த்ததும் ரஹ்மானிக்கு நம்பிக்கை வந்தது. உறவினர்களுக்குக்கூடத் தெரியாமல் பயிற்சியில் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாகப் பயிற்சியை முடித்து வெளிவந்தார்.

ஆப்கன் ராணுவத்தில் சரக்கு விமானத்தை இயக்கும் வாய்ப்பு ரஹ்மானிக்குக் கிடைத்தது. சாதனை செய்யப் போகிறோம் என்ற எண்ணமெல்லாம் அவருக்கு இல்லை. வாய்ப்பை நல்ல விதமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மட்டும் எண்ணிக்கொண்டார். காக்கிச் சீருடையை அணிந்து கொண்டார். தலையில் கறுப்புத் துணியைச் சுற்றிக்கொண்டார். தன்னம்பிக்கையோடு விமானத்தில் ஏறினார். கவனமாக விமானத்தை இயக்கினார். மேகக் கூட்டங்களும் காற்றும் ரஹ்மானியை உற்சாகப்படுத்துவது போலத் தெரிந்தன. ஆனால் கீழே நிலைமை அப்படி இருக்கப் போவதில்லை என்பதை அறிந்தே இருந்தார் ரஹ்மானி.

வலுத்த எதிர்ப்பு

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஆப்கன் வானில் ஒரு பெண் பைலட் பறந்த சாதனை, பரபரப்புச் செய்தியாக வெளிவந்தது. செய்தியைக் கேட்டுச் சந்தோஷமடைந்தவர்களைவிடக் கோபத்தையும் வெறுப்பையும் உமிழ்ந்தவர்கள்தான் அதிகம். குடும்பத்துக்கு அவமானத்தைத் தேடித் தந்துவிட்டார் என்று ரஹ்மானியின் உறவினர்களே கொதித்துப் போனார்கள். தாலிபன்களிடமிருந்து ரஹ்மானிக்கும் அவரது குடும்பத்துக்கும் கொலை மிரட்டல்கள் வந்துகொண்டே இருந்தன; இருக்கின்றன. ஒரு கட்டத்தில் நாட்டை விட்டே வெளியேறும் மோசமான சூழல் உருவானது. இரண்டு மாதங்கள் வெளிநாட்டில் தங்கியிருந்தார் ரஹ்மானி.

“இவ்வளவு தூரம் வந்துவிட்டேன். இதற்குப் பிறகு பின்வாங்கினால் பெண்கள் முன்னேற்றத்தில் மிகப் பெரிய தடைக்கல்லாக மாறிவிடும். நம் உரிமைகளுக்காகப் போராடுவதில் ஒருபோதும் பின்வாங்கக் கூடாது. எந்த ஆபத்தையும் நான் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். எனக்குப் பிறகு வரும் பெண்களுக்காவது உரிமைகள் கிடைக்கட்டும் என்று முடிவு செய்துவிட்டுத் தாய்நாடு திரும்பினேன்’’ என்கிறார் ரஹ்மானி.

பணிபுரியும் இடத்திலும் பெண் என்ற காரணத்தால் மோசமாக நடத்தப்பட்டார் ரஹ்மானி. சில அதிகாரிகள் நேரிடையாகவே “இந்த வேலையை விட்டுச் சென்று விடு” என்று எச்சரித்தார்கள். அதைப் புறக்கணித்துவிட்டு, தன் வேலையைத் தொடர்ந்தார். அவர்களுக்குப் பதில் அளிக்கும் விதமாக எந்த ஷிஃப்ட்டையும் விரும்பி ஏற்றுக்கொண்டார். வானில் பறக்கும்போதுதான் அவருக்கு ஓரளவு நிம்மதியாக இருந்தது. ஆனாலும் வீட்டை அடிக்கடி மாற்றிக்கொண்டார். பாதுகாப்புக்காகத் துப்பாக்கியை வைத்துக்கொண்டார். தெருக்களில் அதிக நேரம் நடமாட இயலாது. எப்போதும் ஆபத்தை எதிர்நோக்கிக்கொண்டே வாழ வேண்டிய நிலைமை.

பெண்ணுரிமை மட்டுமே தேவை

எந்த எதிர்ப்புக்கும் நம் வெற்றி மட்டும்தான் பதிலாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ரஹ்மானி. காயம் அடைந்த வீரர்களைப் பெண்கள் தங்கள் வாகனத்தில் ஏற்றிச்செல்லக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. காயம் அடைந்த சில வீரர்களை ஒருமுறை கண்டார். விமானத்தில் ஏற்றி, மருத்துவமனையில் சேர்த்தார். உயர் அதிகாரியிடம் இருந்து அழைப்பு வந்தது. “சில உயிர்களைக் காப்பாற்றியது சட்டப்படி குற்றம் என்றால் என்னைத் தண்டியுங்கள்” என்றார். “நீ நல்ல காரியம் செய்தாய்” என்று அதிகாரி சொன்னபோது ரஹ்மானியால் நம்பவே முடியவில்லை!

இவ்வளவு தூரம் துணிச்சலுடன் இருக்கும் ரஹ்மானி, தன் நாட்டின் கலாச்சாரத்தை மிகவும் மதிக்கிறார். ஆண்களுடன் பெண்கள் கைகுலுக்கக் கூடாது என்பது ஆப்கனில் இருக்கும் சட்டம். ஒருநாள் அவரிடம் சக ஊழியர் கையை நீட்டினார். இன்முகத்துடன் அதை மறுத்துவிட்டார் ரஹ்மானி. ஏமாற்றம் அடைந்த சக ஊழியர் அதற்கான காரணத்தையும் கேட்டார்.

“ஆணிடம் ஒரு பெண் கை குலுக்குவது தவறான சமிக்ஞையாக இங்கே பார்க்கப்படுகிறது. என் கலாச்சாரத்தை நான் மதிக்கிறேன். அதே நேரத்தில் பெண் என்ற ஒரு காரணத்துக்காக மறுக்கப்படும் உரிமைகளைப் பெறப் போராடுகிறேன். இங்கே கடைப்பிடிக்கப்படும் கலாச்சாரத்தை மீறுவதோ, அவமதிப்பதோ என் நோக்கம் இல்லை. இதுபோன்ற காரியத்தைச் செய்து, மீண்டும் வீட்டுக்குள் முடங்கிப் போக நான் தயாரில்லை. பெண்களுக்கு உரிமை கொடுத்தால் இப்படித்தான் என்று ஒரு மோசமான முன்னுதாரணமாக என்னைக் காட்டி, பிற பெண்களின் முன்னேற்றத்தைத் தடுக்கக்கூடிய காரியத்தை ஒருபோதும் செய்ய மாட்டேன்’’ என்கிறார் ரஹ்மானி.

தேடிவந்த விருது

இண்டர்நேஷனல் விமன் ஆஃப் கரேஜ் அவார்ட் 2015 சமீபத்தில் அமெரிக்காவில் மிஷேல் ஒபாமா மூலம் இவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுக்கு உலகம் முழுவதிலுமிருந்து 10 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் 23 வயது கேப்டன் ரஹ்மானியும் ஒருவர். இந்த விருது மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டார். தனக்கு அளிக்கப்பட்ட விருதை ஆப்கனில் இருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் சமர்ப்பித்தார்.

அமெரிக்காவில் 80 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெண்ணாக, தனியாளாக விமானத்தில் பறந்து சாதனை படைத்தார் அமெலியா எர்ஹார்ட். ஆப்கானிஸ்தானில் இப்போழுதுதான் அது சாத்தியமாகியிருக்கிறது. ஆண்களுக்கு இணையான எண்ணிக்கையில் பெண் பைலட்டுகள் உருவாகும் சூழல் இன்னும் சில ஆண்டுகளில் சாத்தியமாகலாம். அதற்கு முதல் அடி எடுத்து வைத்த துணிச்சல்காரர் கேப்டன் ரஹ்மானி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்