நோய் நீக்கும் நீச்சல்!

By வா.ரவிக்குமார்

தேவை இருக்கும் இடத்தில் அது சார்ந்த உற்பத்தியும் அதிகரிக்கும். என்பது இயற்கை நியதி. ஆனால் பெண் நீச்சல் பயிற்சியாளர்களுக்கான தேவை அதிகமாக இருந்தாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பெண் நீச்சல் பயிற்சியாளர்கள் உள்ளனர். அதிலும் முறையாக அரசு வழங்கும் நீச்சல் பயிற்சியாளருக்கான தேர்வில் வெற்றிபெற்றுச் சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள் மிக மிகக் குறைவு.

நீச்சல் போட்டிகளில் மாநில, தேசிய அளவுகளில் பதக்கங்கள் பெறுபவர்கள்கூட, விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு பணிகளில் பணிபுரிவதற்கு ஆர்வமாக இருக்கிறார்களே தவிர, பயிற்சியாளர்களாக ஆவதற்கு விரும்புவதில்லை.

நீச்சல் பயிற்சியை முறையாக, கண்ணியமாகப் பெண்களுக்குக் கற்றுத் தரும் ஆண் பயிற்சியாளர்கள் பலர் இருந்தாலும், ஒரு பெண் பயிற்சியாளரிடமிருந்து கற்றுக்கொள்ளவே பல பெண்கள் விரும்புகின்றனர். பெண் பயிற்சியாளர்களிடம் நீச்சல் கற்றுக்கொள்ளும் பெரும்பாலான பெண்களே இதற்குச் சாட்சி.

காந்தி நகர் (அகமதாபாத்), பாட்டியாலா (டெல்லி) ஆகிய இடங்களுக்குச் சென்றுதான் தேசிய நீச்சல் பயிற்சி சான்றிதழ் பெற வேண்டும். மெர்ஸி சாலமன், பாட்டியாலாவில் நீச்சல் பயிற்சியாளருக்கான சான்றிதழைப் பெற்றுக் கடந்த 20 ஆண்டுகளாகச் சென்னை, எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் நீச்சல் பயிற்சியாளராக இருக்கிறார். அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மட்டுமல்லாமல் குடும்பத் தலைவிகள், பணிபுரியும் பெண்கள் எனப் பலருக்கும் நீச்சல் பயிற்சி அளித்துவருகிறார்.

“அறுவை சிகிச்சையின் மூலமாகக் குழந்தை பிரசவித்த பெண்களும் இரண்டு மாதங்களில் நீச்சல் பயிற்சி செய்யலாம். இளம் பெண்கள் முதல் முதிய பெண்கள் வரை உடல் சார்ந்த பல பிரச்சினைக்கு நீச்சலும் ஒரு தீர்வாக அமையும்” என்று சொல்லும் மெர்ஸி, ஆஸ்துமா பிரச்சினைக்காக நீச்சல் பயிற்சிக்கு வந்து பின்னாளில் நீச்சல் வீராங்கனைகளாக ஆனவர்களையும் தான் பார்த்திருப்பதாகச் சொல்கிறார்.

தமிழக அரசு நடத்தும் மாஸ்டர் மீட் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற நதியா, சென்னை, மகாலிங்கபுரம், பிரவுன்ஸ்டோன் அபார்ட்மென்ட்டில் செயல்படும் வி.வி.நீச்சல் பயிற்சி மையத்தில் நீச்சல் பயிற்சியாளராக இருக்கிறார்.

“கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை 40 வயதைக் கடந்தவர்களுக்குத்தான் மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள், சுவாசப் பிரச்சினைகள், உடல் பருமன் ஆகியவை ஏற்பட்டன. ஆனால் இப்போதெல்லாம் 25 வயதில் உள்ளவர்களுக்கே இத்தகைய பிரச்சினைகள் வருகின்றன. பொதுவாக எங்கள் மையத்தில் 30-லிருந்து 60 வயது வரையுள்ள பெண்கள் அதிகம் பயிற்சிக்கு வருகின்றனர். இளம் பெண்களிடமும் தற்போது நீச்சல் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. நீச்சல் பயிற்சி அளிப்பதோடு சிலரைத் தமிழக அரசு நடத்தும் மாஸ்டர் மீட் போட்டிகளில் பங்கெடுப்பதற்கும் தயார்படுத்துகிறோம்” என்கிறார் நதியா

நீச்சல் பயிற்சி செய்வதால் நாள் முழுவதும் புத்துணர்ச்சி, செய்யும் செயல்களில் முழு ஈடுபாடு ஆகியவை கிடைக்கிறது என்கின்றனர் இந்த நீச்சல் மையத்தில் நீச்சல் கற்றுக் கொள்ளும் ரஷ்னாவும் அபினிக்காவும். இவர்களில் அபினிக்கா, ஒரு டென்னிஸ் விராங்கனையும்கூட. நீச்சல் பயிற்சியினால் டென்னிஸ் ஆடும்போது தனது ‘ஸ்டாமினா’ அதிகம் வெளிப்படுவதாகக் கூறுகிறார்.

நீச்சல் துளிகள்

# உடல் பருமனை விரட்டும்.

# நுரையீரலுக்குச் செல்லும் ஆக்ஸிஜனின் அளவை அதிகப்படுத்தும்.

# 1 மணி நேரம் நீந்தினால் 500 முதல் 800 கலோரிகள் எரிக்கப்படும்.

# உடலின் எல்லாப் பாகங்களும் வலுப் பெறும்.

# காலி வயிற்றுடனோ, வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டோ நீச்சல் பயிற்சி செய்யக் கூடாது.

நீந்தும் முன்

# தகுதி பெற்ற பயிற்சியாளருடன் தகுதி பெற்ற மீட்பாளர்களும் நீச்சல் குளத்தில் இருக்க வேண்டும்.

# நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணீர், சுழற்சி முறையில் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.

# குளோரின் கலந்த நீர் சருமத்தில் படுவதால் நிறம் மாறும். இதைத் தவிர்க்க நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு 1 மணிநேரத்துக்கு முன்பாக உடலில் விட்டமின் A, E ஆகியவை அடங்கிய கிரீம்களைப் பூசிக்கொள்ளலாம். இதனால் சருமம் பாதிக்கப்படாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்