ஏப்ரல் 19-ம் தேதியிட்ட பெண் இன்று இணைப்பிதழில், ‘கறுப்பு நிறம் அவமானச் சின்னமா?’ என்று கேட்டிருந்தோம். மக்களின் மனதில் குடிகொண்டிருக்கும் பிற்போக்குத் தனத்தில் தொடங்கி, சமூக அமைப்புவரை அதற்குப் பல்வேறு காரணிகளை வாசகர்கள் சொல்லியிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடிதங்களை இங்கே பார்க்கலாம்.
குழந்தை பிறந்ததுமே கேட்கப்படுகிற பொதுவான கேள்விகளில் முதன்மையானது, ‘‘குழந்தையின் நிறம் என்ன?’’ என்பதுதான். குழந்தை கறுப்பாகப் பிறந்துவிட்டால் அந்தக் குழந்தை மட்டுமல்ல, அதன் பெற்றோரும் சேர்ந்தே வேதனைப்பட வேண்டிய சூழலில்தான் நாம் இருக்கிறோம். மேல்தட்டு குடும்பத்தில் பிறந்து, படிப்பறிவு பெற்றவர்கள் எல்லாம் சிவப்பாக இருப்பார்கள் என்பதும் கறுப்பாக இருந்தால் அவர்கள் கீழ் வகுப்பைச் சேர்ந்த, கல்வியறிவு இல்லாதவர்கள் என்பதும் இந்தச் சமூகத்தின் கற்பிதங்களுள் ஒன்று.
- கிளாடிஸ் லீ, ஓட்டேரி, வேலூர்.
ஒரு காலத்தில் உலகெங்கும் ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயர்கள், கறுப்பினத்தவரை அடிமைப்படுத்தி ஆண்டனர். இன்று நிலைமை மாறி உலக அளவில் கறுப்பு நிறத்தவரின் பங்கு மகத்தானதாக உயர்ந்திருக்கிறது. மனித மனங்களின் பக்குவத்துக்கு இதுவே சாட்சி. ஆனால் நம் நாட்டில் நிற வேறுபாடு நிலவுவது கசப்பானது, அர்த்தமற்றது. தான் கறுப்பாக இருந்தாலும் கணவன்/மனைவி சிவப்பு நிறமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்றும் பரவலாகக் காணப்படுவது வேதனைக்குரியது.
- மனோகர், சென்னை-18.
திறமைகளை மீறி, புற அழகு மட்டுமே தனித்தகுதியாகப் பார்க்கப்படுவது காலங்காலமாகத் தொடர்கிறது. இந்த நிலையை மாற்றி, பெண்கள் தங்கள் திறமையால் சாதித்து வெற்றி இலக்கை அடைய வேண்டும். நிறம் அதற்குத் தடையல்ல. நிறம் குறித்த விமர்சனங்களைத் தாண்டி, தளராதத் தன்னம்பிக்கையுடன் வெற்றி இலக்கை நோக்கித் துணிவுடன் நடைபோடுவதே பெண்ணுக்கழகு!
- மலர்மகள், மதுரை.
நிறம் சார்ந்த ஆதிக்கக் காலம் மலையேறி இப்போது எல்லோரும் தன்னம்பிக்கையுடன் மிடுக்காக நடைபோடத் தொடங்கிவிட்டனர். வேலை வாய்ப்பு, படிப்பு, திறமை, நிமிர்ந்த நன்னடை, துணிச்சல் என்று வலம் வரும் பெண்கள், நிறம் குறித்த வெற்றுக் கூச்சலைக் காதுகொடுத்துக் கேட்பதில்லை. நிறத்தைக் குறையாகச் சொல்கிறவர்கள், அவர்களாகவே திருந்தினால்தான் உண்டு.
- ஜானகி ரங்கநாதன், சென்னை-4.
பூனை கறுப்பாக இருந்தால் என்ன, வெளுப்பாக இருந்தால் என்ன. அது எவ்வளவு திறமையுடன் எலியைப் பிடிக்கிறது என்பதுதான் முக்கியம். மூளைக்கு வேலை கொடுத்தால்தான் நிறபேதம் எவ்வளவு மோசமானது என்பது புரியும்.
- இராம. சிவராமன், அத்திமுகம், கிருஷ்ணகிரி.
புறம் காணும் நிறத்தை வைத்துப் புத்தி கெட்டுப் பேசுவோர் நுனிப் புல் மேயும் கூட்டமே. பெண்ணுக்கு எதிரான சமூகக் கொடுமைகள் அதிகரித்திருக்கும் நேரத்தில் அதற்குத் தீர்வு காணாமல் சிவப்பு நிறத்தை உயர்வாக நினைப்பது நேரத்தை வீணடிக்கும் செயல். பிரதிபலன் பார்க்காத தியாகத்தாலும், தொண்டு உணர்வாலும் உலக மக்கள் அனைவரின் நெஞ்சிலும் நெல்சன் மண்டேலா உயர்ந்து நிற்கிறார். அங்கே நிறம் நிற்கவில்லை.
- சுசீலா ராமமூர்த்தி, திருப்பூர்.
நிறவெறி தாண்டவமாடிய நாடுகள்கூடத் தங்கள் மனநிலையை மாற்றி அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும் வேளையில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மற்றும் சில அரசியல்வாதிகளின் நிறம் பற்றிய பேச்சு பெண்களைப் பற்றிய அவர்களின் பிற்போக்கான மனநிலையையே காட்டுகிறது. கறுப்பும் சிவப்பும் தோலின் நிறம்தானே தவிர அறிவின் அடையாளமல்ல. சிவப்பு நிறம்தான் அங்கீகாரம் என்றால் ஜரோப்பிய நாட்டினர் மட்டுமே மதிக்கப்பட்டிருப்பார்கள். விளம்பரங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள கருத்துத் திணிப்பே இப்படிப்பட்ட பேச்சுக்கெல்லாம் அடிப்படை.
- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
இன பேதம் போலவே நிற பேதமும் மனித மனப்பாங்கின் கீழ்மையான மனநிலை. சக மனிதர்களைச் சமமாக மதிப்பதே உயர்ந்த குணம். கண்ணன் என்ற காக்கும் கடவுள் கறுப்பாகவே சித்தரிக்கப்பட்டிருக்கும் நாட்டில்கூடச் சிவப்பு நிறத்தைப் போற்றுவதாகவே மக்களின் மனநிலை உள்ளது. முதலில் மாற வேண்டியது மக்கள் மனநிலை. மேலும் கறுப்பு நிறத்தை மட்டமாக அடையாளப்படுத்தி, சிவப்பாக மாறப் பரிந்துரைக்கும் முக அழகுப் பசைகளின் விளம்பரங்களைக் கட்டாயம் தடைசெய்ய வேண்டும். உடலில் கறுப்பு என்பது ஊனம் அல்ல. மனதில் கருமை படர்ந்தால் அதுவே ஊனம்.
- இரா. தீத்தாரப்பன், மேலகரம், தென்காசி.
கறுப்பு நிறத்துக்கும் சாதனைக்கும் சம்பந்தம் இல்லை. சொல்லப் போனால் உலகில் பல உயர்ந்த சாதனைகள் செய்தது கறுப்பு நிறத்தவர்கள்தான்.
- ரேவதி விஸ்வநாதன், சின்னமனூர்.
ஒரு குழந்தை, முக்கியமாகப் பெண் குழந்தை தாயின் கருவறைவிட்டு வெளியே வந்த முதல் நிமிடத்தில் இருந்து நிறங்களின் ஒப்பிடுதலுடன்தான் வாழ்க்கையைத் தொடங்குகிறது. கறுப்பு நிறம்கூட வேண்டாம், மாநிறமாக இருந்தாலே போதும். உறவுகளும் சமூகமும் அந்தக் குழந்தையைக் குற்றவாளியைப் போலக் குறுகச் செய்துவிடுவார்கள். எவ்வளவுதான் நாகரிகம் வளர்ந்தாலும் நிறம் என்பது நேரடியாகவோ மறைமுகமாகவோ தன் ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டுதான் இருக்கும். எந்த நிறமாக இருந்தாலும் பெண்கள் படித்து, சொந்தக் காலில் நிற்கும் போது அவர்களுடைய அறிவும் தன்னம்பிக்கையும்தான் அவர்களுக்கு அழகைத் தருகிறது.
- நான்ஸி ராணி, சென்னை.
கறுப்பு என்பது இயல்பான நம் மண்ணின் நிறமே. இந்தியாவின் அடையாளம் அனைத்து நிறக் கலவையே. ஆனால் யதார்த்த வாழ்வில் நாம் எதிர்கொள்வது நேரெதிரான மனப்பான்மை. சிவப்பு என்பதே ஒரு சிறப்புத் தகுதியாக எண்ணப்படுகிறது. இந்த மனநிலை நம் சமூகத்தில் ஊறியிருக்கிறது. இதிகாசக் கதாபாத்திரங்களில் வரும் பெண்கள் கறுப்பு நிற அழகிகள் என்றே வர்ணிக்கப்பட்டிருக்கிறார்கள். காரணம் கருமை என்பது நம் மண்ணின் நிறம். சிவப்புதான் அழகு என்பதெல்லாம் பிற்காலத்திலே உருவாக்கப்பட்டது.
- மோனிகா மாறன், வேலூர்.
ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டுச் சென்றுவிட்டாலும் சிவப்புத் தோல் கவர்ச்சியானது என்ற குருட்டு மனோபாவம் நம்மை விட்டு இன்னும் போகவில்லை. “பொண்ணு முத்தோ? வேலை முத்தோ?” என்று ஒரு சொலவடை சொல்வார்கள். பெண் அழகாக, சிவப்பாக இருந்து பயனில்லை. செய்யும் வேலை சிறப்பாக இருக்க வேண்டும் என்று அதற்கு அர்த்தம். இது இன்று எத்தனை பேருக்குப் புரிகிறது?
சிவப்பு நிறம்தான் உயர்ந்தது என்ற விஷ வித்து ஊடக விளம்பரங்கள் மூலமாக விதைக்கப்பட்டுவிட்டது. கறுப்பாக இருப்பவர்கள் முதலில் சிவப்பழகு (?) கிரீம்களைப் புறந்தள்ள வேண்டும். தாழ்வு மனப்பான்மையை நீக்கி, கறுப்பு நிறத்துக்காகப் பெருமிதப்பட வேண்டும். அப்போதுதான் எல்லோர் மனதிலும் மாற்றம் மெதுவாக ஏற்படும். தங்கள் பொறுப்புகளை உணராத அரசியல் தலைவர்கள் நிறம் குறித்துப் பேசுவது கண்டிக்கத்தக்கது.
இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் சூரிய வெப்பத்தில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவே நமக்கு இயற்கையாகக் கறுப்புத் தோல் அமைந்துள்ளது. இதையும் நாம் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.
- தேஜஸ், காளப்பட்டி.
என் கணவர் கறுப்பாக இருப்பார். திருமணத்துக்கு முன் அவரைப் பற்றி விசாரித்த என் பெற்றோரிடம் பலரும், ‘அவர் பார்க்கக் கறுப்பாக இருந்தாலும் குணத்தில் சிறந்தவர், பண்புள்ளவர்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதுதான் எங்கள் திருமணத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. திருமணத்துக்குப் பிறகு அவரைப் பார்த்த என் தோழிகள், ‘எங்கே இருந்துடீ இவ்ளோ கறுப்பா ஒருத்தரைத் தேடிப் பிடிச்சே?’ என்று கேலி செய்தார்கள். அவர்களிடம் என் கணவரின் அருமையான குணங்களை எடுத்துச் சொன்னேன். பண்புக்கும் அன்புக்கும் முன் நிறம் இரண்டாம்பட்சம்தான் என்பதற்கு எங்கள் இனிமையான இல்லறமே சாட்சி.
- கீதா முருகானந்தம், திருவைகாவூர்.
கறுப்பு நிறம் அவமானச் சின்னம் என்றால் இந்தியாவில் முக்கால்வாசி பேர் அவமானச் சின்னங்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் சிவப்பழகு கிரீம்களை ஏன் ஆப்பிரிக்காவில் கொண்டு போய் விற்பனை செய்வதில்லை? அங்கே இவர்களது விற்பனைத் தந்திரம் பலிக்காது.
காரணம் அந்த கிரீமை வருடம் முழுவதும் பயன்படுத்தினாலும் சிவப்பாக மாட்டோம் என்று அந்த மக்களுக்குத் தெரியும். அவற்றைப் பூசினால் நாளைக்கே சிவப்பாகி விடுவோம் என்று நினைத்தால், கிரீமைப் பூசாமல் வெளியே கிளம்ப மாட்டோம். சிவப்பாக மாட்டோம் என்று தெரிந்தும் அவற்றைப் பயன்படுத்துவது கறுப்பு நிறம் குறித்த தாழ்வு மனப்பான்மை யால்தான். இதை மாற்றியே ஆக வேண்டும்.
- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.
கறுப்பு நிறம் மீதான பேத உணர்வு மாற்றப்பட வேண்டும். கறுப்பான தேகம் கொண்டவர்களும் அதுபற்றிய தாழ்வு மனப்பான்மையின்றி, கறுப்பான சருமமே ஆரோக்கியமான சருமம் என்று மகிழ வேண்டும். சிவப்பானவர்களைவிடக் கறுப்பு சருமம் கொண்டவர்களைத் தோல் சார்ந்த நோய்கள் தாக்குவது குறைவு.
- இக்பால் கான், மணலிக்கரை .
நிறம் சார்ந்ததல்ல அழகு; அது மனம் சார்ந்தது. சிவப்பு நிறம்தான் அழகு என்பது, இன்றைக்கு பணம் பண்ணுவதற்காகப் பயன்படுத்தும் வஞ்சக உத்தி. ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடும் என்ற கோயபல்ஸ் பிரச்சாரம் இந்த அழகு விஷயத்திலும் உண்மையாகியுள்ளது. விளம்பர யுகத்தின் இந்த குயுக்தி வலையில் வீழ்ந்துவிடாமல் நிற விளம்பரங்களைத் தூர எறிந்துவிட்டு நல்ல மனங்களை அழகாகக் கொண்டாடி மகிழ்வோம்.
- கேப்டன் யாசீன், திண்டுக்கல்.
சக மனிதர்களின் நிறங்களைக் கொண்டு அவர்களைப் பாகுபடுத்திப் பார்ப்பதை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். வரன் தேடுகிற பெண்களில் பலரும் வெள்ளை நிற மணமகனே விரும்பத்தக்கதென விளம்பரம் செய்வதும் வருத்தத்திற்குரியதே. அரசியல், கல்வி, கலை எனப் பல துறைகளிலும் சாதித்துப் பெருமை பெற்ற கறுப்பு/ மாநிறத்தவர்களின் எண்ணிக்கையை அடுக்கிக் கொண்டே போகலாம்.
- ஜத்துஜஸ்ரா.
கறுப்பு நிறம் என்பது அடிமைகளின், அடித்தட்டு மக்களின் அடையாளமாகக் கருதப்பட்டுவந்தது. பெண்ணாகப் பிறந்தாலே பாவம் என நினைக்கிற பெற்றோர்கள் மத்தியில் நிச்சயமாகக் கறுப்பு நிறம் என்பது மேலும் வேதனையை ஏற்படுத்துவதாக இருக்கிறது. அழகு என்பதைப் புறத் தோற்றத்தை வைத்து எடை போடக்கூடிய சூழ்நிலையை மாற்ற வேண்டும். வாணிப நோக்கத்துக்காகக் கறுப்பு நிறத்தை வைத்துக் காசு பார்க்கிற நிறுவனங்களின் விளம்பர உத்திகளால் பெண்கள் தங்கள் மீதான நம்பிக்கையை இழக்கிறார்கள்.
- மு.க.இப்ராஹிம், வேம்பார்.
பெண் என்றாலே சிவப்பு நிறத்தில் இருந்தால்தான் மதிப்பு என்கிறபோதுதான் நிற பேதம் விவாதத்துக்குரியதாகிறது. பெண்ணை இரண்டாம்பட்சமாகக் கருதும் இந்தச் சமூகத்தில் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் பெண்களே சிவப்பு நிறம்தான் சிறந்தது என நம்பி அதை வழிபடத் தொடங்கியிருப்பதுதான் வேதனைக்குரியது. பெண் என்றாலே போராட்டம்தான். இதில் கறுப்பென்ன? சிவப்பென்ன? பெண்கள் வாழ்க்கையில் போராட அவர்களுக்குத் தேவை தன்னம்பிக்கையும் துணிச்சலும்தான். நிறமென்பது வெறும் மாயையே. அதன் ஈர்ப்பு எந்தக் கணத்திலும் உதிர்ந்து போய்விடும்
- ஜே .லூர்து, மதுரை.
நிறம் குறித்த மனநிலையை யாராலும் மாற்றிவிட இயலாது. அவரவர் பார்வையைப் பொறுத்துத்தான் ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் நிகழ்கிறது. விவிலியத்தில் மாமன்னர் சாலமோன் எழுதிய இனிமைமிகு பாடல் ஒன்றில் தலைவி இப்படிப் புலம்புவாள். ‘எருசலேம் மங்கையரே, கறுப்பாய் இருப்பினும் நான் எழில்மிக்கவளே! சாலமோனின் எழில்திரைகளுக்கு இணையாவேன் . கறுப்பாய் இருக்கின்றேன் நான் என என்னையே உற்றுப் பார்க்க வேண்டா! கதிரவன் காய்ந்தான்; நான் கறுப்பானேன்.’ இந்த வரிகள், நிற பேதம் புராதனக் காலத்திலிருந்து புரையோடிப்போய் இருக்கிறது என்பதைச் சொல்கின்றன. எனவே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு மனதில்தான் இருக்கிறது .
- சந்திரா மனோகரன் , ஈரோடு
வெள்ளையர்களின் வருகைக்குப் பின்னர்தான் இந்த மாற்றம் வந்திருக்குமோ? சங்க காலத்தில் இப்படியான பாகுபாடு இருந்ததாகத் தெரியவில்லை. தற்காலத்தில் காட்சி ஊடகங்களின் தயவால் அது இன்னும் கூடுதல் பலத்தோடு விளம்பரப்படுத்தப்படுகிறது. இதை மாற்ற வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது.
- ஆர்த்தி ராஜா, கும்பகோணம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago