முகங்கள்: பெண்மை ஒளிர்கிறது

By கா.சு.வேலாயுதன்

நான்கு பெண்கள் ஒன்று கூடிப் பேசினால் வீண் அரட்டைதான் நடக்கும் என்பது பலரது நினைப்பு. ஆனால் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பெண்களுக்கு மேல் இங்கே கூடிப் பேசுகிறார்கள். அத்தனையும் அர்த்தமுள்ளவை, பயனுள்ளவை. இவர்களில் பலருக்கும் அடுத்தவர் முகம்கூடத் தெரியாது. அறிமுகம் இல்லையென்றாலும் அன்புடனும் அக்கறையுடனும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். விவேகத்துடன் விவாதிக்கிறார்கள். இதைச் சாத்தியப்படுத்திக் காட்டியிருக்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த இளவரசி. இவர் நடத்தி வரும் பெண்மை டாட் காம் (www.penmai.com) என்ற இலவச இணையதளம், தகவல் களஞ்சியமாக மட்டுமல்ல; பெண்களின் திறமைகளுக்கான மேடையாகவும் செயல்பட்டுவருகிறது.

பெண்களுக்கான இந்தப் பிரத்யேக இணையதளத்தில் இல்லாத செய்திகளே இல்லை. கர்ப்பகால பிரச்சினைகள், குழந்தையின்மை குறித்த மருத்துவ ஆலோசனைகள், குடும்ப வாழ்க்கை சிக்கல்கள், சிக்கலில் இருந்து மீண்டெழுந்த பெண்களின் அனுபவங்கள், சமையல் குறிப்புகள், டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட அரசுத் தேர்வுகளுக்கான பாடமுறைகள் என ஏராளமான பயனுள்ள தகவல்கள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன. எதுவுமே ஒரு வழிப் பாதையாக மட்டுமே இருந்தால் சுவாரஸ்யமில்லையே. அதனால் இந்த இணையதளம் ஒருவருக்கொருவர் கலந்துரையாடி கருத்துத் தெளிவு அடையும் வகையில் விவாதத்துக்கான தளமாகவும் செயல்படுகிறது.

இந்த இணையதளத்தை நடத்திவரும் இளவரசியின் சொந்த ஊர் விழுப்புரம். திருமணத்துக்குப் பிறகு கோவை சித்ராவில் கம்ப்யூட்டர் கல்வி மையத்தைத் தொடங்கியவர், குழந்தைகள் பிறந்த பிறகு அந்த மையத்தைத் தொடர்ந்து நடத்தமுடியாமல் போய்விட்டது என்கிறார் இளவரசி.

“2008-ம் ஆண்டில் நான் கருவுற்றிருந்த போது மருத்துவ குறிப்பு ஏதாவது கிடைக்குமா என்று இணையதளங்களில் தேடினேன். ஆங்கிலத்திலும் இந்தியாவின் பிற மொழிகளிலும் பெண்களுக்கான விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதற்காகப் பல்வேறு இணையதளங்கள் இருந்தன. ஆனால் தமிழில் அவ்வளவாக இல்லை. அதற்காகவே பெண்மை என்ற இந்த இணையதளத்தைத் தொடங்கினேன்” என்று சொல்கிறார் இளவரசி.

முதல் ஆறு மாதங்கள் இவரும் இவருடைய தோழிகள் மட்டுமே பெண்களுக்கான குறிப்புகள், தகவல்களைப் பதிவுசெய்தார்கள். அப்போது எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை.

“நம் கருத்தை மட்டுமே பகிர்ந்து கொண்டிருப்பது சரியல்ல. இதை டிஸ்கஷனாக மாற்றினால்தான் நன்றாக இருக்கும். அதற்கு அமெரிக்காவில் இருந்து ஸ்பெஷல் சாப்ட்வேர் வாங்கணும் என்று என் கணவர் ஜான்சன் ஐடியா கொடுத்தார்” என்று சொல்லும் இளவரசி, அதன்பிறகு பெண்மை இணையதளத்தின் வடிவத்தை மாற்றியமைத்தார்.

அதன் பிறகு பல்லாயிரக் கணக்கான பெண்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினர். மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், குடும்பத் தலைவிகள், எழுத்தாளர்கள் என்று பல தரப்பினரும் இதில் பங்கேற்று, அவரவர் துறை சார்ந்த ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.

“பெரும்பாலான பெண்கள் குழந்தையின்மை, மகப்பேறு தொடர்பான சந்தேகங்களையே எழுப்புகிறார்கள். இதற்காக கோவை கருத்தரிப்பு மருத்துவ நிபுணர் மிருதுபார்ஷினியை அணுகினோம். அவர் எங்கள் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகிறார்” என்று தங்கள் இணையதளத்தின் எல்லை விரிவடைந்ததை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறார் இளவரசி.

இந்த இணையதளத்தைச் சிறப்பாக நடத்த இளவரசிக்கு உடனிருந்து உதவி புரிகிறார் பராசக்தி. இவர்களுக்கு மதுரை கார்த்திகா, பெங்களூரு ஜெயந்தி, திருப்பூர் அபர்மா, விழுப்புரம் லலிதா, ருத்ரா மற்றும் சென்னையில் இருந்து குணா ஆகியோரும் உதவுகின்றனர். இவர்களில் குணா மட்டுமே ஆண். அவர் வெப் டிசைனில் டெக்னிக்கலான சந்தேகங்களைத் தீர்க்க உதவுகிறார்.

பெண்கள் அதிக எண்ணிக்கையில் கலந்துரையாடும் இணையதளமாக இருப்பதால் கூகுள் நிறுவனம் மூலம் விளம்பரங்கள் கிடைக்கின்றன. அதன் மூலம் செலவுகளைத் தாக்குப் பிடிக்க முடிவதோடு, ஓரளவு வருமானமும் கிடைக்கிறதாம்.

“எங்கள் இணையதளம் மூலம் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கதை,கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர்களாக பரிணமிக்கிறார்கள். அவர்களில் பலரது தொடர்கள் ‘பெண்மை’யின் பரிந்துரையால் புத்தகங்களாகவும் வெளிவந்திருக்கின்றன” என்கிறார் பராசக்தி..

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்