சூப்பர் ஹீரோ ப்ரியா ஷக்தி!

By எஸ். சுஜாதா

சூப்பர் ஹீரோக்களாக ஆண்களே வலம் வந்துகொண்டிருந்த காமிக்ஸ் உலகில், சமீப காலமாகப் பெண்கள் சூப்பர் ஹீரோக்களாக வர ஆரம்பித்திருக்கிறார்கள். அதிலும் எகிப்து, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் இருந்து! டாப் 10 பெண் சூப்பர் ஹீரோக்களில் பத்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறார் ப்ரியா ஷக்தி.

டெல்லியைச் சேர்ந்த கல்லூரி மாணவி நிர்பயாவுக்கு நேர்ந்த கொடூரம் எல்லோரையும் போலவே ராம் டேவினேனிக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்க வாழ் இந்தியரான ராம் டேவினேனி திரைத்துறையைச் சேர்ந்தவர். அப்பொழுது இந்தியா வந்திருந்தார்.

‘நல்ல குடும்பத்துப் பெண்ணாக இருந்தால் இரவு நேரத்தில் ஏன் வெளியே போகப் போகிறார்? அதுவும் ஓர் ஆணுடன் ஏன் போக வேண்டும்? பெண்கள் அணியும் ஆடைகளால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன…’ என்றெல்லாம் ‘விவாதங்கள்’ நிகழ்ந்துகொண்டிருந்தன.

கொடூரம் ஒருபக்கம், கொடூரத்துக்குக் கற்பிக்கப்பட்ட வாதங்கள் ஒருபக்கம் என்று இந்த நிகழ்வு ராம் டேவினேனியை நிலை குலையச் செய்தது. இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சில பெண்களைச் சந்தித்தார். அந்தப் பெண்களைச் சமூகமும் அவர்களது குடும்பமும் ஒதுக்கி வைத்திருந்ததை அறிந்து அதிர்ந்துபோனார்.

பாதகம் செய்தவர்களை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட வர்களுக்குத் தண்டனை அளிக்கும் இந்தியச் சமூகத்தின் முகத்தை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார். படைப்பாளியான அவர் படைப்பூக்கத்துடன் அதற்கு ஒரு தீர்வைக் கண்டார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஈர்க்கக்கூடியவை காமிக்ஸ் புத்தகங்கள். ஒருமுறை படித்தால் என்றும் மறக்க முடியாதவை. காமிக்ஸ் புத்தகங்கள் மூலம் பெண்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும் நினைத்தார். தானே ஒரு கதையை உருவாக்கினார். ப்ரியா ஷக்தி என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தைக் கொண்டு வந்தார். ஓவியர் டான் கோல்ட்மேன் கைவண்ணத்தில் காமிக் புத்தகம் உருவானது. ஆங்கிலம், இந்தி, மராத்தி மொழிகளில் இந்தப் புத்தகம் வெளிவந்திருக்கிறது. விரைவில் பிற இந்திய மொழிகளிலும் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறார்.

ப்ரியா ஷக்தியின் கதை என்ன?

ஆசிரியராகும் கனவில் இருக்கும் ப்ரியாவின் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, வீட்டைக் கவனிக்கச் சொல்கிறார் அவருடைய அப்பா. ஒருநாள் தனியாகச் சென்றுகொண்டிருந்தபோது சிலரால் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார் ப்ரியா. தன் வீட்டாரிடம் நடந்ததைக் கூறுகிறார். அவமானம் என்று கூறி, ப்ரியாவை வீட்டை விட்டுத் துரத்துகிறார்கள். ஊர்க்காரர்களும் கேவலமாகப் பேசுகிறார்கள்.

பாலியல் பலாத்காரத்துக்கு உட்படும் ப்ரியாவைக் குடும்பமும் ஊரும் ஒதுக்கிவைக்கின்றன. ப்ரியாவின் துயர் துடைக்க, அவரின் உடலுக்குள் வருகிறார் பார்வதி. அப்பொழுது ஒருவன் ப்ரியாவுக்குப் பாலியல் தொல்லை தருகிறான். இதைக் கண்டு கோபம் கொண்ட சிவன், மனிதர்களுக்குக் குழந்தைகளே பிறக்கக் கூடாது என்று சாபமிடுகிறார். பார்வதி இதை எதிர்க்கிறார். காளி அவதாரம் எடுத்து, சிவனிடம் சண்டையிடுகிறார். காளியின் உக்கிரத்தால் சிவன் தன் சாபத்தைத் திரும்பப் பெறுகிறார். ப்ரியாவுக்குத் தைரியம் கொடுக்கும் பார்வதி, ஒரு மந்திரத்தையும் சொல்லிவிட்டு மறைகிறார்.

விசேஷ சக்தி பெற்ற ப்ரியா மக்களின் அச்சத்தைப் போக்கி விழிப்புணர்வூட்டுகிறார். மக்கள் ப்ரியா ஷக்தி பக்கம் நிற்கிறார்கள். பெண்கள் பற்றிய புரிதல்களில் மாற்றம் ஏற்படுகிறது.

அநீதிக்கு எதிரான அவதாரம்

பூலோகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு சிவனிடமே தீர்வு இல்லாமல், சபித்துவிடுகிறார். ஆனால் பார்வதியோ சாபத்தால் எதுவும் நிகழப்போவதில்லை என்று உணர்ந்து, விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். பெண்கள் பற்றிய சரியான புரிதல்கள் இல்லாத ஆண்களின் மனநிலையையே சிவனும் வெளிப்படுத்துவதாகக் கதையை அமைத்ததில் ராம் டேவினேனி கவனம் ஈர்க்கிறார்.

10 வயதுக் குழந்தைகளில் இருந்து இளைஞர்கள்வரை இந்த காமிக்ஸ் புத்தகத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் 6 ஆயிரம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றன. இணையதளத்தில் இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் (priyashakthi.com). டெல்லி, மும்பை நகர சுவர்களில் ப்ரியா ஷக்தியை வரைந்து வைத்திருக்கிறார்கள். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். ப்ரியா ஷக்தியுடன் நின்று, பாலியல் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்போம் என்று உரக்கச் சொல்கிறார்கள் குழந்தைகளும் மாணவர்களும்.

மதுரா, அருணா ஷண்பக் முதல் இன்றைய நிர்பயா வரை நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைச் சம்பவங்கள் வெளியில் தெரிவிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, நீதிமன்றங்களில் வழக்கு போடப்பட்டதால்தான் இன்று ஓரளவாவது பெண்களுக்கு நியாயம் கிடைக்க வழி ஏற்பட்டிருக்கிறது. சம்பவத்தின்போது குரல் கொடுக்கவில்லை, உடலில் காயங்கள் இல்லை என்றெல்லாம் காரணம் கூறி, பாதிக்கப்பட்ட பெண்களுக்கே பாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்புகளை எல்லாம் தொடர்ச்சியாக எதிர்த்துப் போராடியதால்தான் இன்று பெண்கள் குறித்த சட்டங்களை மாற்ற முடிந்திருக்கிறது.

கொடூரத்தை வெளியே சொல்லவும், எதிர்த்துப் போராடவும், பாதிக்கப்பட்டவர்களைப் புரிந்துகொள்ளவும் சொல்கிறது இந்த ப்ரியா ஷக்தி. இந்தியப் பெண்களுக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் ப்ரியா ஷக்தி சமர்ப்பணம் என்கிறார் டேவினேனி. இதை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் திட்டத்திலும் இருக்கிறார். சூப்பர் ஹீரோ ப்ரியா ஷக்தியை மையமாக வைத்துத் தொடர்ந்து நிறைய காமிக்ஸ் புத்தகங்களைக் கொண்டுவரும் முயற்சிகளில் இருக்கிறார்.

அரசியல்வாதிகள், அதிகாரிகள், மதத் தலைவர்கள் என்று உயர் மட்டத்தில் இருப்பவர்கள்கூடப் பெண்கள் பற்றிப் பிற்போக்கான கருத்துகளை உதிர்க்கும் நாட்டில், படித்தவர்களே நிர்பயா சம்பவத்தை விபத்து என்று கூறித் திரியும் நாட்டில், பெண்கள் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வரும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ப்ரியா ஷக்தியை வரவேற்கலாம். படிப்பவர்களில் சிலராவது பெண்களைப் புரிந்துகொண்டாலே அது ப்ரியா ஷக்திக்குக் கிடைத்த வெற்றி!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்