மனிதராகப் பிறந்தும் இந்தச் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் மூன்றாம் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் சொல்லி மாளாது. அன்றாட வாழ்வே அவர்களுக்குப் பெரும் சோதனைதான். சக மனிதர்களின் அங்கீகாரம் இல்லாமல், அடிப்படைத் தேவைகளுக்கும் அல்லல்படுகிற திருநங்கை வர்க்கத்தைச் சேர்ந்தவர்தான் பூஜா. ஆனால் உதாசீனங்களை உறுதிகொண்ட மனதுடன் எதிர்த்து நின்றார். இன்று தன்னைப் போன்ற திருநங்கைகளுக்கான வழிகாட்டியாக உள்ளார். சேலம் திருநங்கைகள் நலச் சங்கத் தலைவியாகச் செயல்பட்டு வருகிறார்.
“வீடுகளில் வளர்ப்புப் பிராணிகள் என்ற பெயரில் ஐந்தறிவு உயிர்களைக்கூடப் பாசத்துடன் வளர்க்கிறார்கள். ஆனால் நாங்கள் திருநங்கை என்று தெரிந்ததுமே பெற்றவர்களால் அடித்து விரட்டப்படுகிற கொடுமையை என்னவென்று சொல்ல?” என்கிற பூஜாவின் கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை.
ஆத்தூரைச் சேர்ந்த பெரியண்ணன்-வெள்ளையம்மாள் தம்பதியின் மகனாகப் பிறந்த இவர், பின்னாளில் மகளாக உருமாறினார்.
உதறித் தள்ளிய வீடு
“எனக்கு ஒரு சகோதரனும் இரண்டு சகோதரிகளும் இருக்கிறார்கள். நான் பதினைந்தாவது வயதில் அடியெடுத்து வைத்தபோது, என்னுள் ஒளிந்துகொண்டிருந்த பெண்மை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. அதுவரை சிங்கக் குட்டியாக உலவிய நான், புள்ளிமானாய் மாறியது எனக்கே புரியாத ஆச்சரியம்தான். இயற்கையின் அந்த விந்தையை என் வீட்டில் இருந்தவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அத்தனை நாட்களாகச் சீராட்டியவர்களே என்னை வீட்டைவிட்டு விரட்டியடித்தனர்” என்று சொல்லும் போது பூஜாவின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. அவமானங்களைக் கடந்துவந்த தெளிவு அதில் தெரிந்தது.
வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பூஜாவை, சேலம் திருநங்கைகள் நலச்சங்கம் அரவணைத்து அடைக்கலம் தந்தது. ப்ளஸ் டூ முடித்ததும் தொலைதுாரக் கல்வியில் பி.எஸ்சி முடித்தார். திருநங்கைகள் சங்கத்தின் உறுப்பினராக இருந்த பூஜா, 2010-ம் ஆண்டு முதல் தலைவியாகப் பொறுப்பேற்று நடத்திவருகிறார். இவர்களது சங்கத்தில் மொத்தம் 2,300 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
வழிகாட்டும் சங்கம்
திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு, ஓட்டுரிமை, வங்கிக் கணக்கு, ஆதார் அட்டை, இலவச வீட்டு மனைப்பட்டா, இலவச வீடு ஆகியவை கிடைக்க இந்தச் சங்கத்தின் மூலம் உதவியிருக்கிறார்கள். மூன்று பேருக்கு மூன்றாம் பாலினப் பிரிவின் மூலம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர வங்கி மூலம் கல்விக் கடனுதவியும் பெற்றுத் தந்திருக்கிறார்கள்.
பெற்றோரால் கைவிடப்பட்ட திருநங்கைகளை அரவணைத்து, அவர்களுடைய பெற்றோரை அழைத்துச் சங்கம் மூலமாக கவுன்சிலிங் அளித்து வருகிறார்கள். திருநங்கைகள் சுயதொழில் தொடங்கப் பல்வேறு பயிற்சிகளை அளிப்பதுடன் சுய தொழில் தொடங்க வங்கிக் கடனுதவியும் பெற்றுத் தருகிறார்கள்.
பாலியல் தொழில் மட்டுமே திருநங்கைகளின் அடையாளம் என்பதை மாற்ற இவர்களுக்குப் பல்வேறு விதமான பயிற்சிகளையும் அளித்துவருகிறார்கள். சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 150 திருநங்கைகளுக்கு இலவசச் சட்டப் பயிற்சி அளிக்கப்பட்டது ஒரு மைல் கல். பாலியல் தொழிலில் ஈடுபடுகிற திருநங்கைகளை மீட்டு அவர்கள் சுயதொழிலில் ஈடுபட வழிகாட்டுகிறார்கள்.
“சமூகநலத் துறை சார்பில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடனுதவி வழங்கப்படுகிறது. ஆனால் திருநங்கைகள் சுய உதவிக்குழு ஆரம்பிக்கச் சட்டத்தில் இடமில்லை என்கிறார்கள். ஆனால் எங்கள் சங்கம் மூலமாக 40 திருநங்கைகள் சேர்ந்து சுயஉதவிக் குழு தொடங்கி, சிறு சிறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள்” என்று சொல்லும் பூஜாவின் வார்த்தைகளில் தன்னிறைவின் பெருமிதம் தென்படுகிறது.
திருநங்கைகளும் மனிதர்களே
ஆண்டுதோறும் திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15-ம் தேதி மக்களுக்கான சேவை தினமாக இவர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். மரக்கன்று நடுதல், கண் மற்றும் உடல் தானம் அளிப்பது என்று ஒவ்வொரு ஆண்டும் பயனுள்ள வகையில் அதைக் கொண்டாடுகிறார்கள்.
“இந்த வருடம் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி, சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் துாய்மைப் பணி மேற்கொண்டோம். தமிழக அரசு மூன்றாம் பாலினமாக எங்களை அங்கீகரிக்க வேண்டும். அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர்ந்து போராடி வருகிறோம்” என்கிறார் பூஜா. சென்னையைச் சேர்ந்த ‘பார்ன் டூ வின்’ அமைப்பு சார்பில் சிறந்த திருநங்கை விருது பூஜாவுக்குக் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.
“பாலுணர்வு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமே சொந்தம் என்று நினைத்து மூன்றாம் பாலினத்தவரைக் கொச்சைப்படுத்தி, புறக்கணிப்பது நியாயமா? திருநங்கைகள் பலர் தம்பதி சகிதமாய் வாழ்ந்து வருகின்றனர்” என்கிற பூஜாவின் வார்த்தைகளை மெய்ப்பிக்கிறார் சேலம், அன்னதானப்பட்டியைச் சேர்ந்த திருநங்கை ஸ்வேதா.
“எனக்குத் திருமணமாகி ஒன்பது வருஷமாகுது. மாமனார், மாமியாருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறோம். ஐந்து மாதங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்தோம். தாய்மையின் பூரணத்தை உணர்த்துகிறாள் என் மகள் தனுஷ்யா” என்கிறார் ஸ்வேதா. இவரைத் தொடர்ந்து கண்ணகி, ரஞ்சனா என்று குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் திருநங்கைகளின் பட்டியல் நீள்கிறது. வெளுக்கத் தொடங்கும் வானம்போல் ஒளிர்கின்றன அந்தத் திருநங்கைகளின் முகங்கள்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago