காட்சி 1
நன்றாகப் படித்திருந்தும் தான் கறுப்பாக இருப்பதால், தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பாள் ஒரு பெண். உடன் படிக்கும் மாணவர்களின் கேலிப் பேச்சும் அவளைத் துவண்டுபோக வைக்கும். அவளுக்கு ஆறுதல் சொல்லும் அவளின் தோழி, ஒரு முகப்பூச்சை அவளுக்குக் கொடுப்பாள். மூன்று வாரங்களில் அந்தச் சிவப்பழகு க்ரீம் உதவியால் அவள் அழகாகிவிடுவாள். அவளை ஒதுக்கியவர்கள் எல்லாம் அவளிடம் நட்புகொள்ளத் துடிப்பார்கள்.
காட்சி 2
விமானப் பணிப்பெண் ஆகவேண்டும் என்பது ஒரு பெண்ணின் லட்சியம். ஆனால் அதற்குத் தடையாக அவள் நினைத்துக் கொண்டிருப்பது அவளின் நிறத்தை. மகளின் சோகத்தைப் போக்க அவளுடைய தந்தை ஒரு முகப்பூச்சை அளிப்பார். மூன்று வாரங்களில் அந்த க்ரீம் அவளுக்குச் சிவப்பழகைத் தந்துவிடும். விமானப் பணிப்பெண் ஆகிவிடுவார்.
இவை மட்டுமல்ல, கறுப்பு நிறத்தைக் கேலியாக்கி இன்னும் ஏராளமான விளம்பரங்கள் நாம் அன்றாடம் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நடுவே வந்து செல்கின்றன. தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்படும் இவைபோன்ற விளம்பரங்கள் ஏற்கனவே கறுப்பு நிறம் குறித்துத் தவறான கண்ணோட்டத்தில் இருக்கும் மக்கள் மத்தியில் தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கின்றன. தோலின் கறுப்பு நிறத்தைக் காரணம் காட்டி, பள்ளி, கல்லூரி முதல் பல இடங்களிலும் ஆண்களும் பெண்களும் கேலி, கிண்டலுக்கு ஆளாகின்றனர். படிக்கும் இடத்தில், பணி செய்யும் இடத்தில், பயணம் செய்யும் நேரத்தில், திரைப்படத்தில் இப்படி எல்லா இடங்களிலும் ஒருவரின் தோலின் நிறம் விமர்சிக்கப்படுகிறது.
கறுப்பு நிறத்துக்கு எதிராகச் சமூகத்தில் நிலவும் போக்கைக் கண்டித்தும் அந்நிறத்துக்கான உரிமை மனித உரிமையே என்னும் கோஷத்தை முன்னிறுத்தியும் கடந்த 2009-ல் சென்னையில் ‘வுமன் ஆஃப் வொர்த்’ என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தன்னைப் போல் கருத்துள்ளவர்களின் துணையோடு தொடங்கினார் கவிதா இம்மானுவேல்.
கருமை அழகானது (Dark is Beautiful) என்னும் பிரச்சாரத்தைப் பள்ளி, கல்லூரிகளிலும், மக்கள் கூடும் பொது இடங்களிலும் நடத்திவருகின்றனர் இந்த அமைப்பினர்.
கறுப்புக்கான உரிமை மனித உரிமையே
“பள்ளி, கல்லூரிகளில் நிற வேற்றுமையைப் பொருட்படுத்தாமல் நமது திறமையைக் கொண்டே லட்சியங்களை நாம் அடைய வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதேநேரத்தில் ஊடகங்களில் வெளிவரும் விளம்பரங்கள், காட்சிகள் குறித்த விழிப்புணர்வையும் வழங்கி வருகிறோம். அதோடு சமூக வலைத்தளங்களின் மூலமும் நேரடியாகவும் நிறத்தின் காரணமாகத் தன்னம்பிக்கை குறைந்து காணப்படு பவர்களுக்கு, தன்னம்பிக்கை அளிக்கும் பல்வேறு பயிற்சிகளை அளித்துவருகிறோம்” என்கிறார் கவிதா இம்மானுவேல்.
ஆண்களுக்கும் உண்டு ஆதரவு
நிறத்தின் காரணமாகப் பாதிக்கப்படும் ஆண்களுக்கு ஆதரவாகவும் இவர்கள் தங்களின் எதிர்ப்பைக் காட்டத் தயங்குவதில்லை. 2013-ம் ஆண்டில் புகழ்பெற்ற ஒரு நிறுவனம் ஆண்களின் சிவப்பழகு க்ரீம் ஒன்றை பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் ஷாரூக்கானை வைத்து அறிமுகப்படுத்தியது. இந்த விளம்பரம் இயல்பான தோலின் நிறத்தைக் கேலி செய்வதாக உள்ளது என்னும் கருத்துக்கு வலுச் சேர்க்கும் கையெழுத்துகளை இணையத்தின் மூலமாகக் கோரியது ‘வாவ்’ (Women Of Worth-ன் சுருக்கம்). இந்தியாவிலிருந்தும் மலேசியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, லண்டன், சில ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் இந்தக் கருத்தை ஆதரித்து ஆயிரக்கணக்கானவர்கள் தங்களின் கையெழுத்தை இணையத்தில் பதிவு செய்தனர். இந்தக் கையெழுத்துகள் அடங்கிய பார்சலைச் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குநரிடமும் அளித்துள்ளனர். அதோடு, அந்த விளம்பரத்தை எடுத்த நிறுவனத்திடமும், அதில் நடித்த நடிகரின் கவனத்துக்கும் இயற்கைக்கு மாறான இத்தகைய விளம்பரங்களைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர்.
“ஒரு எளிய தன்னார்வத் தொண்டு நிறுவனமான எங்களால் நிகழ்த்தப்பட்ட இந்த கவன ஈர்ப்பால் நாங்களே எதிர்பார்க்காத ஒரு விளைவு நடந்தது. அட்வர்டைஸிங் ஸ்டாண்டர்ட் கவுன்சில் ஆஃப் இந்தியா, அழகு கூட்டும் பொருட்களின் விளம்பரங்களில் நிறப் பாகுபாடு குறித்த தவறான காட்சிகளோ கருத்துகளோ இருக்கக் கூடாது என ஒரு அறிவிப்பை வெளியிட்டது” என்கிறார் கவிதா.
நீங்களும் புகார் செய்யலாம்
கறுப்பு நிறத்தை ஆதரிக்கும் யாரும் அதற்காகத் தெருவில் இறங்கிப் போராட வேண்டாம். நிற பேதங்களை வெளிப்படுத்தும் விளம்பரங்களை ஊடகங்களில் பார்த்தால் www.ascionline.org என்னும் இணையதளத்தில் அந்த விளம்பரம் தொடர்பான நம் எண்ணத்தைத் தெரிவிக்கலாம். புகார் செய்யலாம்.
நிறங்களுக்கு அப்பாற்பட்டது அழகு என்பதை நமது குழந்தைகளிடம் வலியுறுத்த வேண்டும் என்னும் கருத்தைத் தான் செல்லும் இடமெங்கும் கூறிவருகிறார் இந்த அமைப்பின் பிரச்சார தூதராக இருக்கும் நடிகை நந்திதா தாஸ்.
வடக்கிலும் ‘வாவ்’
தமிழகத்தின் பள்ளி, கல்லூரிகளில் ஆண்டுக்கு ஐந்தாயிரம் மாணவர்களுக்கு நிறம் குறித்த விழிப்புணர்வை அளித்துவருகின்றனர். “தென்னிந்தியாவில்தான் கறுப்பு நிறம் உடையவர்களைக் கேலி செய்யும் போக்கு அதிகம் என நினைத்தோம். அதன்பின் சமூக வலைத்தளங்களில் வட இந்தியாவிலும் நிறம் குறித்த தவறான புரிதல் அதிகம் இருப்பதை உணர்ந்து கொண்டோம். அதனால் டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களிலும் எங்களின் விழிப்புணர்வு முகாம்களை விரிவுபடுத்தினோம். எங்களின் அமைப்பு அறக்கட்டளை என்னும் நிலையிலிருந்து எல்லோரும் குரல் கொடுக்கும் இயக்கமாக ஆகவேண்டும்” என்கிறார் கவிதா.
இந்த அமைப்பில் பல துறைகளைச் சேர்ந்த பெண்கள் இருக்கின்றனர். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நிறத்தின் காரணமாக அவர்கள் அவமானப்பட்ட கதை இருக்கிறது. இந்த அமைப்பின் தொடர் பிரச்சாரங்களால், ‘கறுப்பாக இருப்பவர்களை இனி நான் அன்போடு நடத்துவேன்’ என இவர்களோடு சில சிவப்பான பெண்மணிகளும் இணைந்து பணிபுரிகின்றனர்.
“சிவப்பான, மெல்லிய உடல் வாகுடன், 155 செ.மீ. உயரத்தில் மணப்பெண் தேவை என்னும் ரீதியில் இனிமேல் தங்களின் பிள்ளைகளுக்குத் தாய்மார்கள் விளம்பரம் செய்யாமல் இருக்க வேண்டும். தோலின் நிறம் குறித்த புரிதலைக் குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். மாற்றத்துக்கான விதையை அவர்களிடம் விதைக்க வேண்டும்” என்கிறார் ஒரு தனியார் நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு அதிகாரியாகப் பணிபுரியும் அன்னா.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago