பக்கத்து வீடு: கண்ணிவெடி இல்லாத உலகம் வேண்டும்

By எஸ். சுஜாதா

போர் நடைபெறும் காலத்தில் எதிரிகளை அழிப்பதற்காக நிலத்தில் கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்படுகின்றன. அந்த நிலத்தின் மீது நடக்கும் வீரர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கால்நடைகள் என்று யாரையும் கண்ணிவெடிகள் பிரித்துப் பார்ப்பதில்லை. உணவு, தண்ணீர், விறகு தேடிச் செல்லும் அப்பாவி மக்கள் கண்ணிவெடிகளுக்குப் பலியாகிறார்கள். சிலர் உயிரை இழக்கிறார்கள். சிலர் கால், கைகளை இழந்து வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றும் பணியையும் கண்ணிவெடிகளுக்கு எதிரான போராட்டத்தையும் இருபதாண்டுகளாகச் செய்து வருகிறார் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஜோடி வில்லியம்ஸ்.

சமூகப் பார்வை

குழந்தைப் பருவத்தில் இருந்தே அநீதியை எதிர்க்கும் எண்ணம் ஜோடி வில்லியம்ஸுக்கு வந்துவிட்டது. அவரின் சகோதரரால் கேட்கவும் பேசவும் முடியாது. பள்ளியில் பலரும் அவரைக் கேலி செய்வார்கள். அவர்களிடம் ஒருவரின் குறைபாட்டைக் கேலி செய்வது நியாயமில்லை என்பார். வியட்நாம் போரில் அமெரிக்கா பங்கேற்றபோது, தன் அப்பாவிடம் நீண்ட விவாதத்தை மேற்கொண்டார். என்ன சமாதானம் சொன்னாலும் அமெரிக்காவின் நடவடிக்கையை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கல்லூரியில் படிக்கும்போது தன்னுடைய சிந்தனையை இன்னும் விரிவாக்கிக்கொண்டார்.

முதல் உலகப் போரிலிருந்து கண்ணிவெடிகள் இந்தப் பூமியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இரண்டாம் உலகப் போரின் போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. எதிரிகள் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வதற்காக வைக்கப்படும் கண்ணிவெடிகளுக்கு அப்பாவி மக்கள் பலியாவதைக் கண்டு, அதைத் தடுப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார் ஜோடி வில்லியம்ஸ்.

மக்கள் நலனில் அக்கறையில்லையா?

1990-ம் ஆண்டு கண்ணிவெடிகளைத் தடை செய்ய வேண்டும் என்பதற்கான அமைப்பை ஆரம்பித்தார். ஏழு ஆண்டுகளுக்குள் 50 நாடுகளில் அமைப்பை நிறுவி, செயலாற்றி வந்தார். ஆனாலும்கூடக் கண்ணிவெடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பெரும்பாலான நாடுகள் அக்கறை காட்டவில்லை. 1997-ம்

ஆண்டு ஜோடி வில்லியம்ஸுக்கும் அவரது அமைப்புக்கும் அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. அதற்குப் பிறகு கண்ணிவெடிகள் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியது. பல நாடுகள் புதிதாகக் கண்ணிவெடிகளைப் புதைப்பதில்லை என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனாலும் கண்ணிவெடிகளைத் தயாரிக்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் இன்னும் கையெழுத்திடவில்லை. மக்கள் நலனில் ஒரு பக்கம் அக்கறை இருப்பதாகக் காட்டிக்கொண்டே இன்னொரு பக்கம் ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றன. சொந்த நாடாக இருந்தாலும் அமெரிக்காவின் இந்தப் போக்கைக் கடுமையாக எதிர்த்து வருகிறார் ஜோடி வில்லியம்ஸ்.

“வலுவான நிலையில் இருக்கும் ஒரு நாடு பிற நாடுகளின் மீது எந்தக் காரணத்தைச் சொல்லிக் கொண்டும் போரில் இறங்குவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஆயுதங்களை விற்று மேலும் மேலும் பணக்கார நாடாக வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நோக்கமாக இருக்கிறது. போர் என்பது மனித வாழ்வில் மோசமான நிகழ்வு என்பதை இவர்கள் கண்டுகொள்வதே இல்லை. கல்வியிலும் மருத்துவத்திலும் முதலீடுகளைக் குறைத்துவிட்டு, ஆயுதங்களில் அதிகமாக முதலீடு செய்கிறார்கள். நான் மனிதத் தன்மையில்தான் விசுவாசம் வைத்திருக்கிறேன், அமெரிக்கா மீது அல்ல. அமெரிக்கா சிறந்த நாடு என்பது மிகப் பெரிய கட்டுக்கதை. அமெரிக்கப் பூர்வகுடி மக்கள் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்க அடிமைகளின் கொலைகளில் இருந்து உருவானதுதான் இன்றைய அமெரிக்கா. உலகின் சிறந்த நாடாக அமெரிக்கா இருந்தால், அது அமைதியையும் சுதந்திரத்தையும் தானே வலியுறுத்த வேண்டும்?’’ என்கிறார் ஜோடி வில்லியம்ஸ்.

அமைதிக்கான அமைப்பு

2006-ம் ஆண்டு டாக்டர் ஷிரின் எபாடி, வங்காரி மத்தாய் போன்ற இன்னும் நான்கு நோபல் பரிசுபெற்ற பெண்களைக் கொண்டு, அமைதிக்கான ‘நோபல் பரிசு பெற்ற சகோதரிகள்’ அமைப்பை ஆரம்பித்தார். அமைதி, நீதி, சமத்துவத்தை வலியுறுத்தி இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆங் சான் சூ சி இந்த அமைப்பின் கவுரவ உறுப்பினராக இருக்கிறார்.

உலகின் ஏதோ ஒரு பகுதியில் இன்றும்கூட இருபது நிமிடங்களுக்கு ஒருவர் கண்ணிவெடிகளால் பாதிக்கப்படுகிறார். விவசாய நிலங்களிலும் குழந்தைகள் விளையாடும் இடங்களிலும் குறைந்தது 10 கோடி கண்ணிவெடிகள் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. செயற்கைக் கால்களோடு வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க இருக்கிறது. அந்த நிலையைத் தடுக்க வேண்டும் என்றால் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து அகற்ற வேண்டும். அதற்கு ஏராளமானவர்களின் சுயநலமற்ற பங்களிப்பு கிடைக்க வேண்டும். அதற்காகவே ஜோடி வில்லியம்ஸும் அவரது அமைப்பைச் சேர்ந்தவர்களும் போராடி வருகின்றனர்.

பேராசிரியர், கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், அரசாங்கத்தின் கொள்கைகளை மக்கள் நலனுக்குப் பயன்படும் விதத்தில் ஒருங்கிணைப்பவர், போராட்டக்காரர் என்று அறியப்படும் ஜோடி வில்லியம்ஸ், “திறமை என்பது என் தனிப்பட்ட விஷயம். சமூகத்துக்கு நான் என்ன செய்தேன் என்பதுதான் முக்கியம். அதில்தான் என் வாழ்க்கையின் அர்த்தம் அடங்கியிருப்பதாகக் கருதுகிறேன். வருங்காலத் தலைமுறையினருக்கு ஆபத்தில்லாத அமைதியான உலகத்தைத் தர வேண்டியது நம் எல்லோரின் கடமை அல்லவா?’’ என்று கேட்கிறார்.

இதுவரை 4.7 கோடி கண்ணிவெடிகள் கண்டறியப்பட்டு, செயல் இழக்க வைக்கப்பட்டுள்ளன. 1990களில் ஆண்டுக்கு 25 ஆயிரம் உயிர் இழப்புகள் ஏற்பட்டன. இன்று 4 ஆயிரம் உயிரிழப்புகளாகக் குறைந்துள்ளன. ஏழ்மையில் இருக்கும் பத்து நாடுகள் கண்ணிவெடிகள் இல்லாத நாடுகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் காரணம் மனித உரிமைப் போராளி ஜோடி வில்லியம்ஸ்தான்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்