குறைந்த செலவில் நிறைந்த வருமானம்

By க்ருஷ்ணி

“உங்களுக்குக் கைவினைக் கலையில் அரிச்சுவடிகூடத் தெரியாதா? தூரிகையில் வண்ணத்தைத் தொட்டு ஒரு கோடிழுக்கக்கூட முடியாதா? எழுதப் படிக்கத் தெரியாதா? கவலையை விடுங்கள். இதுபோதும் நீங்கள் கைவினைக் கலையில் பிரகாசிக்க” என்று நம்பிக்கையும் உற்சாகமும் தருகிறார் சென்னையைச் சேர்ந்த அமுதா சுப்ரமணியன். கைவினைக் கலையில் கிட்டத்தட்ட 30 ஆண்டு அனுபவம் மிக்க இவர், எதையுமே மாத்தி யோசிக்கிறார். பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், மென்பொருள் நிறுவனங்களில் ஏகப்பட்ட பயிலரங்குகள் நடத்தியிருக்கிறார். ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் கலைத்திறமையை வெளிக்கொண்டு வருகிற சவாலான பணியைச் சுலபமாகச் செய்கிறார்.

“முதல் வகுப்பு படிக்கிற குழந்தைகளிடம் பேப்பரை கட் செய்து, அவற்றை பொம்மை வடிவிலோ பூப்போலவோ ஒட்டச் சொல்லி வற்புறுத்தினால் அவர்களால் எப்படிச் செய்ய முடியும்? அவர்களுக்கு என்ன கைவருமோ அதைச் சொல்லித் தருகிறேன்” என்று சொல்லும் அமுதா, கைவினைக் கலையில் அழகைவிடப் பயன்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்.

“எந்தக் கலைப்பொருளாக இருந்தாலும் அதை சுவரில் மாட்டிவைத்தோ, ஷோகேஸில் அடுக்கி வைத்தோ அழகு பார்ப்பதில் என்ன இருக்கிறது? அது நம் அன்றாடப் பயன்பாட்டுக்கும் உதவினால்தான் அந்த அழகு முழுமையடையும். இதுதான் என் கலைப் பொருட்களின் அடிப்படை. சாலையில் வித்தியாசவடிவில் உள்ள கற்களை அழகுபடுத்தி, அவற்றை பேப்பர் வெயிட்டாகப் பயன்படுத்தலாம். உதிர்ந்த இலைகள், இறகுகள், விதைகள் ஆகியவற்றைச் சேகரித்து வித்தியாசமான கைவினைப் பொருட்களைச் செய்யலாம்” என்கிறார் அமுதா. குறைந்த செலவில் நிறைந்த வருவாய் தருகிற கைவினைக் கலைகளையும் பலருக்குக் கற்றுத்தருகிறார்.

“எந்தக் கலையாக இருந்தாலும் அதன் அடிப்படையைக் கற்றுக் கொண்டால் அதை வைத்து விதவிதமான படைப்புகளை உருவாக்கலாம். பனை ஓலைகள், மேக்ரமி கயிறு, சணல் கயிறு இவற்றை வைத்து எளிய முறையில் பலவகை கலைப் பொருட்களை செய்யலாம். சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு நேராத வகையில் ஈகோ ஃப்ரெண்ட்லி தயாரிப்புகளுக்கு நான் எப்போதும் முக்கியத்துவம் தருவேன். ஆடைகளில் டிசைன்கள் வரையும் ஃபேப்ரிக் பெயிண்டிங்தான் என் முதல் அடையாளம். பெரியவர்களின் டி-ஷர்ட்டில் துவங்கி குழந்தைகளின் ஆடைகள் வரை அனைத்து வகையான ஃபேப்ரிக் பெயிண்டிங்கும் செய்வேன்” என்கிற அமுதா, டெரகோட்டா, பேப்பர் கிராஃப்ட், எம்ப்ராய்டரி, பலவகை பெயிண்ட்டிங் என ஏகப்பட்ட கலைகளைக் கற்று வைத்திருக்கிறார்.

போகிற போக்கில் இதுவரை கிட்டத்தட்ட 42 நகரங்களுக்குச் சென்று கைவினை வகுப்புகள் எடுத்திருக்கிறார். இவருடைய ஃபேப்ரிக் டிசைன்கள் பாரீஸ், பிரேசில், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் நடந்த ஃபேஷன் ஷோக்களில் இடம்பெற்றிருக்கின்றன. இல்லத்தரசிகளும் தங்களால் முடிந்த அளவு வீட்டில் இருந்தபடியே வருமானம் பெறும்படி செய்வதுதான் தன் நோக்கம் என்கிறார் அமுதா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE