பெண்கள் மீதான எந்தவொரு வன்முறையிலும் பாதிக்கப்படுகிறவளும், குற்றம் சுமத்தப்படுகிறவளும் ஏன் பெண்ணாகவே இருக்கிறாள்? இதற்குப் பின்னால் இருக்கும் ஆணாதிக்க மனநிலையை என்ன செய்வது என்று 2015 மார்ச் 8 தேதியிட்ட இதழில் கேட்டிருந்தோம். பெரும்பாலான வாசகர்கள், குடும்பங்களில் இருந்தே மாற்றம் தொடங்க வேண்டும் என்பதை முன்வைத்து எழுதியிருக்கிறார்கள். இன்னும் சிலர், சமூகத்தின் பார்வையிலும் மாற்றம் தேவை என்று தங்கள் கருத்தைப் பதிவுசெய்திருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடிதங்களைப் பார்க்கலாம்.
பெண் என்பவள் எப்போதும் பாதிக்கப்பட காரணம் மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் உருவாகியிருக்கும் ஆணாதிக்கம்தான். பெண்களின் சாதனைகள் நேரடியாகவும் பல தருணங்களில் தந்திரமாகவும் மறைக்கப்படுகின்றன. பெண்ணடிமைத்தனம் என்னும் சமூக அநீதியை எதிர்த்துப் பெண்களும் ஆண்களும் போராட வேண்டும்.
- ஜோசப்குமார், திருச்சி.
தன்னைப் பெற்றெடுத்தவள், உடன் பிறந்தவள், உற்ற துணையாக வாழும் மனைவி, தான் பெற்றெடுத்த மகள் என்று இப்படி தன்னைச் சுற்றி யார் நிறைந்திருக்கிறார்கள் என்பதை ஒரு ஆண் அறிந்தாலே போதும். பெண்ணுக்கு எதிரான கோழைத்தனமான செயல்பாடுகளைத் தவிர்த்துவிடுவார்கள்.
- வே.த. யோகநாதன், திருச்சி.
ஆணாதிக்க மனநிலை ஒருவர் மனதில் சிறு வயதில் இருந்தே விதைக்கப்படுகிறது. சில இடங்களில் இது சற்றே மாறியிருந்தாலும் பெண்ணுக்கான சொத்துரிமை, வேலைக்கான கூலி என அனைத்தும் பெண்ணுக்குப் பாதகமாகவே இருக்கிறது. பெண்ணுக்கான பாதுகாப்பை அவளே உறுதிசெய்துகொள்ள வேண்டிய நிலையில்தான் இன்னும் இந்தச் சமூகம் இருக்கிறது.
- ஜானகி ரங்கநாதன், மயிலாப்பூர்.
பெண்கள் மன உறுதியில் ஆண்களைவிட பல மடங்கு பலம் பொருந்தியவர்கள். ஆனால் பெண்களை கவர்ச்சிப் பொருளாகவும் போகப் பொருளாகவும் மட்டுமே கருதும் போக்கு காட்சி ஊடகங்களில் அதிகம் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.
- ஆ. பீர்முஹம்மது, தலைஞாயிறு.
ஆண்களின் பார்வையில் போகப் பொருளாகவே பெண் தெரிகிறாள். ஆணழகன்களை இதுவரை எந்தப் பத்திரிகையும் படம் பிடித்து வெளியிட்டதில்லையே, ஏன்? பெண்ணுக்குப் பாதுகாப்பு தருகிற நல்ல சட்ட திட்டங்களை அரசு கொண்டுவர வேண்டும். தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். அப்போதுதான் பெண்கள் பாதுகாப்பாக வெளியே செல்ல முடியும்.
- பெ. சுலோசனா தெய்வேந்திரன், நெய்வேலி.
ஆண்மை என்பது எந்தப் பெண்ணுக்கும் தீங்கு செய்யாமல் இருப்பது என்பதை ஒவ்வொரு ஆணும் உணர வேண்டும். முக்கியமாகக் குற்றவாளிகளுக்குக் காலம் கடத்தாமல் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
- ச. சாய்சுதா, நெய்வேலி.
பெண்களை மையமாக வைத்தே இன, சமூக, சாதிய பிரிவினைகள் கட்டமைக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டு வருகின்றன. விரும்பியோ விரும்பாமலோ ஆதிக்க சமூக அமைப்பின் அடிமை மூட்டைகளை பேதமையோடு நாம் காலம் காலமாக சுமந்து வருகிறோம். கற்பு என்னும் அளவீட்டை ஆண்களுக்கு வகுக்காதது ஏன்? அதிலேயே புரிந்துவிடுகிறது இந்த ஆணாதிக்க சமூகத்தின் சூட்சுமம். பெண்களைப் பாதுகாக்கச் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். பெண்களின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் ஆக்கப்பூர்வமான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
- பாரதி, வேலூர்.
இங்கே சமூகப் பயிற்சியில் சரியான அக்கறை செலுத்தப்படவில்லை. ஒன்றை நியாயப்படுத்த இங்கே கட்டுக்கதைகள் ஏராளம். கற்பனை அறிவுரைகள் அளவில் அடங்காதவை. பெண்கள் நம்புகின்றனர், அதைப் பயன்படுத்தி ஆண்கள் எளிதாக ஏமாற்றுகின்றனர்.
- சின்னை வெங்கட்ராமன், சேலம்.
பெண்ணை இரண்டாம்தர பிரஜையாகப் பார்க்கும் எண்ணத்துக்கு சமாதி கட்ட வேண்டும். ஆணுக்கு உடல் வலிமை எனில், பெண்ணுக்கு மன வலிமை. வீட்டிலும் சமூகத்திலும் பெண் குழந்தைகளை மட்டம்தட்டி வளர்ப்பதை நிறுத்த வேண்டும். பெண்ணே ஆதி சக்தி என்பதை உணரச் செய்ய வேண்டும். பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளுடன் தற்காப்புக் கலைகளையும் கற்றுத்தர வேண்டும்.
- ஜே.சி. ஜெரினாகாந்த், சென்னை-16.
ஆணைவிட பெண் எந்த விதத்திலும் தாழ்ந்தவள் அல்ல. சொல்லப் போனால் ஆணைவிட பெண்தான் ஒரு படி மேலானவள். ஆனால் ஆண் செய்கிற தவறுக்கும் பெண்ணே பாரம் சுமக்க வேண்டிய கட்டாயம். பாலியல் பலாத்கார வழக்குகளில் உடனுக்குடன் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
- மங்கையர்க்கரசி, நெய்வேலி.
நான் ஒரு பண்பட்ட மனிதன், நான் செய்கிற செயலும் பண்பட்டதாகத்தான் இருக்கும். நான் சார்ந்திருக்கும் குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் என் செயல்கள் பயனுள்ளதாக இருக்குமா என்று பகுத்தறியும் குணமே இங்கு இல்லை. பாலியல் வன்முறைகளுக்குப் பெண்களே காரணம் என்று குதறிக் கொண்டிருப்பது பிரச்சினைக்குத் தீர்வாகாது. பிரச்சினையின் ஆதாரம் எங்கே என்று ஆராய வேண்டும். இப்படியொரு சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வது?
- சுசீலா ராமமூர்த்தி, திருப்பூர்.
தன்னை நிராகரித்த பெண் மீது அமிலத்தை வீச இந்த ஆண்களுக்கு யார் உரிமை கொடுத்தது? ஒரு பெண் தன் உரிமைகளையும் நியாயங்களையும் தட்டிக் கேட்காதவரை இதுபோன்ற கொடுமைகள் தொடர்கதையாகவே இருக்கும். பெண்களுக்குள் வளர்க்கப்படும் ஆணாதிக்கமும் கண்டிக்கத்தக்கதே.
- திவ்யதர்ஷினி சண்முகராஜா, செம்பனார்கோயில்.
பெண் என்றால் ஒரு போதைப் பொருள் என்றும் பிள்ளை பெற்றுக் கொடுக்கும் இயந்திரம் என்றும் நினைக்கும் ஆண்கள் இருக்கும் வரை பெண்களின் நிலையில் உதட்டளவில்தான் முனேற்றம் இருக்கும். ஆண், பெண் இருவருமே மனிதர்கள் என்ற எண்ணம் வந்தால் மட்டுமே சமுதாயத்தில் பெண்கள் முன்னேறியதாக சொல்லமுடியும். ஒரு ஆணின் மனதுடன் பெண்ணும், ஒரு பெண்ணின் மனதுடன் ஆணும் ஓரளவாவது நடந்தால் நிச்சயம் சமுதாயம் மாறும்.
- உஷா முத்துராமன், திருநகர்
ஒரு பெண்ணைச் சீரழித்து, கொலையும் செய்துவிட்டு தாங்கள் செய்த தவறை உணராமல், எந்தவொரு குற்ற உணர்வுமில்லாமல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராக பேசியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட மனநோயாளிகளின் மனநிலையுடன் ஒட்டுமொத்த இந்திய மக்களின் (ஆண்களின்) மனநிலையை ஒப்பிடுவது முறையற்ற செயல். தங்கள் தவறை உணராத இத்தகைய குற்றவாளிகள் துரிதமாக தண்டிக்கப்பட வேண்டும். ‘கெட்ட’ பெண்ணுக்கு இலக்கணம் வைத்திருக்கும் நம் சமூகத்தினருக்குப் பாலினம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.
- இக்பால் கான், மணலிக்கரை.
குடும்பத்தில் ஆண் குழந்தைகளை ஒழுக்க நெறியுடன் வளர்க்க வேண்டும். பெண் பிள்ளைகளும் சமூகத்தில் சம உரிமையுடன் வாழப்பிறந்தவர்கள்தான். அவர்களின் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும் என்பதைச் சிறு வயது முதலே ஆண் குழந்தைகளின் மனதில் பதியம்போட வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும். பாதுகாப்பற்ற பெண்கள், ஆதரவற்றோர் ஆகியோரைக் கண்டறிந்து உரிய காப்பகங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய கட்டமைப்பை உருவாக்குதல் அவசியம்.
- மு.க.இப்ராஹிம், வேம்பார், தூத்துக்குடி மாவட்டம்.
காலம்காலமாக பெண்களிடம் தாங்கள் ஆண்களுக்கு அடங்கி இருப்பவர்கள் என்ற மனோநிலையை ஏற்படுத்துபவர்கள் பெண்களே. நிர்பயா சம்பவத்துக்கு முன்னும் அதன் பின்னும் எத்தனையோ நிர்பயாக்கள் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்கள். பெண்களை தாயாகவும், சகோதரியாகவும் மதிப்பதாகக் கூறிக்கொள்ளும் இந்தப் புண்ணிய பூமியில்தான் பெண் என்பவள் வெறும் சதைப் பிண்டமாக மட்டுமே பார்க்கப்படும் அவல நிலையும் நிலவுகிறது. பெண்ணுக்கான பாதுகாப்பை அவளே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான மனத் துணிவை பெண்தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
- தேஜஸ், காளப்பட்டி, கோவை.
காலம் காலமாக ஆணாதிக்கம் நிறைந்த உலகில் பெண் தான் முதலில் குற்றம் சாட்டப்படுகிறாள். தவறு ஆண் மீது இருந்தால்கூட பெண் இப்படி நடந்து கொண்டிருக்கவேண்டும், அதனால்தான் இந்தத் தவறு நடந்து விட்டது என்பது போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதற்குத் தீர்வு ஆண்களின் மனநிலை மாறவேண்டியதுதான். பெண்ணுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது ஆண்கள் கையில்தான் இருக்கிறது என்று பெண்கள் நினைத்தால், அதைவிட மோசமானது எதுவும் இல்லை. பெண்களின் பாதுகாப்பு பெண்கள் கையில்தான் இருக்கிறது.
- ஜீவன்.பி.கே, கும்பகோணம்-1.
ஒரு ஆண் குழந்தையும் , பெண் குழந்தையும் ஒன்றாக விளையாடும்போது, ஆண் குழந்தை தானாகவே அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்கிறது. இந்தத் தருணத்தில் பெண் குழந்தை அழுது தன்னைக் காப்பாற்றிக்கொள்கிறது. இந்த மனோபாவத்தில் ஆண் வலிமையானவன் என்கிற உணர்வு அவனுக்குள் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. ஆனால் கால ஓட்டத்தில் பெண் மென்மையானவள் என்பதை அவனும் புரிந்துகொள்கிறான். அதுவே பெரும்பாலான பிரச்சினைகளுக்கும் ஆணிவேர்.
- சந்திரா மனோகரன், ஈரோடு.
பெண்கள் எப்போதும் பாதிக்கப் படுபவளாகவும் அந்த பாதிப்பிற்காக குற்றஞ்சாட்டப்படுபவளாகவும் அவளே இருப்பதற்கு காரணம் பெண்களின் இயல்பை ஆண்கள் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வதுதான். பாதிக்கப்படும் பெண்களில் பலரும் தங்களது பாதிப்பை வெளியில் சொல்ல மாட்டார்கள் என்ற தைரியம்தான், ஆண்களை தைரியமாக பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு உள்ளாக்க வைக்கிறது. தனக்கு நடந்த கொடுமை வெளியே தெரிந்தால், பிற்கால வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகும் என்பதால் பல நிகழ்வுகள் வெளியே தெரியவிடுவதில்லை. பெண்களில் ஒரு சிலர் புகார் அளிக்க முன்வந்தாலும், அவர்களது குடும்பத்தினர் அதற்கு அனுமதி அளிப்பதில்லை என்பதே உண்மை. ஒன்றிரண்டு பெண்கள் தைரியமாக குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் அதனை வெளிக் கொணர்ந்தாலும் அந்தப் பெண்ணையும் அந்த குடும்பத்தாரையும் மற்ற பெண்கள்கூட பாராட்டுவதில்லை, மாறாக அந்தப் பெண்ணின் மீதே குற்றத்தை சுமத்தி அவளையும் ஊமையாக்கி விடுகிறார்கள்.
- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.
பெண் பலவீனமானவள், எதிர்த்துப் போராடும் உடல் தகுதி இல்லாதவள் என்ற பொய் விவாதங்கள் மனதில் ஆழப் பதிந்து விட்டதுதான் இந்த ஆணாதிக்க மனோபாவத்துக்குக் காரணம். இதன் விளைவாகவே ஆண் செய்யும் குற்றங்களுக்கும் பெண் காரணமாக்கப் படுகிறாள். இவற்றில் இருந்து விடுபட்டு பெண் தனக்கான பாதுகாப்பை தானே உறுதி செய்து கொள்ள ஒரே வழி பெண் குழந்தை மென்மையாய் வளர்க்கப்படாமல், தீமையை எதிர்த்துப் போராடும் திறமை மிக்கவளாக வளர்க்கப்படுவதே.
-ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago