‘நான் கண் கலங்கினால் தனுஷுக்குக் கோபம் வரும்’ - விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா

By மகராசன் மோகன்

“பிறக்கும்போது வாய் பேச முடியாத தானிஷ் என்கிற பையனாகப் பிறந்து, வளர்வதைப் பார்க்க ஒரு கணம் மனசு படபடத்தது. எந்தத் தாயும் மகனை இப்படிப் பார்க்கும்போது கலங்கத்தானே செய்வாள். சின்ன வயசில் எங்களிடம் எப்படி சண்டை பிடிப்பானோ, அதே மாதிரிதான் படத்தில் அம்மாகிட்ட ‘ஹீரோதான் ஆகணும்’னு அடம்பிடிக்கிறான். நிஜத்தில் ஒரு நாளும் ‘நான் நடிக்கப்போறேன்’ன்னு அடம்பிடிச்சதே இல்லை. ‘எனக்கு நடிக்க வரலையே. பிறகு ஏன் என்னை தொந்தரவு செய்றீங்க’ என்று பல நாட்கள் ஓடி ஒளிந்திருக்கிறான். நாங்கள்தான் அவனை வலுக்கட்டாயமாக ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் நடிக்க வைத்தோம். இன்றைக்குப் பிரதிபலிக்கும் அவனோட திறமை எல்லாம் கடவுள் கொடுத்தது” -‘ஷமிதாப்’ படத்தில் மகன் தனுஷின் கதாபாத்திரத்தை பார்த்த நெகிழ்ச்சியோடு பேசத் தொடங்குகிறார் அவருடைய அம்மா விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா.

தமிழ் சினிமாவில் தனித்த அடையாளத்தை வேரூன்றச் செய்துவரும் நாயகன் தனுஷ். தற்போது பாலிவுட் சினிமா காதலர்களும் நேசிக்கத் தொடங்கியிருக்கும் நடிகராகிவிட்டார். திரைத் துறைக்குள் பிரவேசிக்கத் தொடங்கும் முன், அவரது பால்ய நாட்களில் படர்ந்த மறக்க முடியாத நினைவுகளை ஒரு கறுப்பு வெள்ளை புகைப்படம் தரும் உணர்வோடு பகிர்ந்துகொள்கிறார், அவருடைய அம்மா விஜயலட்சுமி.

நடிப்பு வேண்டாம்

அப்போது எங்க பிரபு (தனுஷ்) 10-ம் வகுப்பு படிச்சிக்கிட்டிருந்தான். பெரியவன் செல்வராகவன், அப்பா கஸ்தூரி ராஜாவோடு சேர்ந்து ‘துள்ளுவதோ இளமை’ படத்துக்கான வேலைகளை கவனிச்சிக்கிட்டிருந்தான். அந்தக் கதைக்கு சின்ன வயசுப் பையன் ஒருவன் தேவைப்பட, ஸ்கூல் பேக்கை மாட்டிக்கிட்டு நின்றவனை கூட்டிட்டுப் போய் அவங்க அப்பா கேமரா முன்னாடி நிக்க வச்சுப் பார்த்தார். அப்போதுவரைக்கும் அவங்க அப்பா இவனை சினிமாவுக்குக் கொண்டு வரணும்னு நினைச்சதே இல்லை. பையன் அந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கிறான் என்றதும் படப்பிடிப்புக்குக் கிளம்பினாங்க.

நான் முன்பே சொன்னதுபோல பல நாட்கள், ‘எனக்கு சரிப்பட்டு வராது’ என்று ஓடி ஒளிந்துகொள்வான். கேட்டரிங் படிக்க வேண்டும் என்று ஆசைஆசையாய் சொன்ன பையனை இப்படி பிடிக்காத வேலையை செய்யச் சொல்கிறார்களே என்று எனக்கும், அப்போது வருத்தமாகத்தான் இருந்தது.

குழந்தைகள் 4 பேரோட சேர்த்து வீட்டில் மொத்தம் 6 பேர். பெரிய குடும்பம்தான். இவன் கடைக்குட்டி. அதுக்கேத்த குறும்பும் அதிகம். மணிக்கொருமுறை பசங்களுக்குள் சண்டை வந்தாலும், அரை மணிநேரம்கூட அந்தச் சண்டை நீடிக்காது. நாலு பேருக்கும் விட்டுக்கொடுக்கும் குணம் உண்டு. பிரபு ஒரு நாள்கூடப் புத்தகத்தை எடுத்து வைத்து படிச்சு நான் பார்த்ததே இல்லை. ‘என்னடா படிக்கவே மாட்டேங்குற’ன்னு கேட்டால், ‘உங்களுக்கு என்ன மார்க்தானே வேணும். ரிசல்ட் வரும்போது பார்த்துக்கலாம்’என்று ஹாயாக பிரெண்ட்ஸ்கூட பறந்துடுவான். நல்ல மார்க் வாங்கிடுவான். சின்ன வயசில் இருந்தே அப்பான்னா கொஞ்சம் பயம். சேட்டை பண்ணினா கண்டிப்பார்.

பார்க்கணும் போல இருந்தது

நான் அழுதால் அவனுக்குப் பிடிக்காது. உடனே கோபம் வந்துடும். ‘ஏன் அம்மா இப்போ பீல் பண்றாங்க’னு வீட்டில மத்தவங்களப் பார்த்துக் கத்துவான். தொடர்ந்து சோகமாக இருந்தாலும், 10 நிமிஷம்கூட நீடிக்காது. அந்த இடத்தையே கலகலப்பா மாத்திடுவான். சின்ன வயசிலேயே அப்படி ஒரு மனப் பக்குவம்.

கல்யாணத்துக்குப் பின்னாடி, திடீர்னு ஒரு நாள் அதிகாலை 2 மணி இருக்கும். வீட்டுக் கதவு தட்டும் சத்தம். திறந்து பார்த்தா, சின்னவன் தனுஷ். கூடவே மருமகள் ஐஸ்வர்யாவும் இருந்தாங்க. ‘என்ன கண்ணு இந்த நேரத்தில’ன்னு கேட்டதும், ‘ என்னமோ தெரியலை. உன்ன பார்க்கணும்போல இருந்துச்சு!’னு சொல்லி தோளில் சாஞ்சு அப்படியே தூங்கிட்டான். மனசுல சின்ன கவலை வந்தாலும் அம்மா ஞாபகம்தான் அவனுக்கு.

‘எப்போ பாருங்க அம்மா வைக்கிற பூண்டு குழம்பு, சாம்பார் மாதிரிதான் வேணும்னு கேக்கிறார்’ என்று மருமகள் ஐஸ்வர்யா சொல்லுவார். என் சமையல் மீது ரொம்பப் பிரியம். வெளியூர் ஷூட்டிங் போய்ட்டு திரும்பும்போது, ‘சமைச்சு ஏர்போர்ட்டுக்கு கொடுத்து விடும்மா. கார்ல சாப்பிட்டுக்கிட்டே வர்றேன்’னு கேட்பான். சென்னை ஷூட்டிங்னா மதியம் அவனாவே வீட்டுக்கு வந்துடுவான்.

நான்கு குழந்தைகளையுமே ஒருபோதும், ‘படிங்க.. படிங்க’ என்று எங்கள் கனவுகளை திணித்ததே இல்லை. அவங்களை சுற்றி நிகழும் ஒவ்வொரு விஷயமும் அவங்க ஈடுபாட்டால கிடைச்சதுதான். பொண்ணுங்க விமலா, கார்த்திகா அப்படித்தான் டாக்டருக்குப் படிச்சாங்க.

கதைத் தேர்வில் கவனம்

பெரியவன் செல்வா, இன்ஜினியரிங் படிச்சிக்கிட்டிருந்தப்போ திடீர்னு ஒருநாள் ‘என்கிட்ட கதை இருக்கு!’னு வந்து அப்பா முன்னாடி வந்து நின்னான். அவருக்கு ஷாக். யார் கிட்டயுமே சொல்லாம, கதை எழுதத் தொடங்கிருக்கான். அப்போ, ‘முதல்ல படிப்பை முடி’ன்னு இவர் திட்டி அனுப்பினார். படிச்சு முடிச்சதும் அமெரிக்கால வேலை கிடைச்சது. ஒரு தடவை வாய்ப்பு கொடுங்க. சரியா வரலைன்னா வேலைக்கு போய்டுறேன்’ன்னு மீண்டும் அவர் முன்னாடி வந்து நின்னான்.

பெரியவனை இயக்குநர் பாலசந்தர்கிட்ட அழைச்சுக்கிட்டுப் போய் ‘ஏதாவது புத்தி சொல்லி அனுப்புங்க’ என்று அவன் அப்பா கூறினார். அவரிடம் ஒரு மாதம் உதவியாளரா போய் வந்தான். ‘இவனுக்குள் ஒரு கிரியேடிவ் பெர்சன் இருக்கான், அவன் வெளியே வரட்டுமே’ என்று இயக்குநர் பாலசந்தர் கூறினார். ‘காதல் கொண்டேன்’ படம் பார்த்தபோது அது எல்லோருக்குமே புரிஞ்சது. இதெல்லாம் கடவுள் கொடுத்ததுன்னுதான் நான் சொல்வேன். செல்வா, அவங்க அப்பாவோடு சேர்ந்து ‘துள்ளுவதோ இளமை’பட வேலைகள்ல முழுசா இறங்கினான். ஒரு கட்டத்துல அப்பா, அவன்ட்ட முழுப் பொறுப்பையும் விட்டுவிட்டு பக்கத்துல இருந்து பார்க்கத் தொடங்கிட்டார்.

தனுஷின் முதல் இரண்டு படங்கள் முடித்து மூன்றாவது ‘திருடா திருடி’ வரைக்கும்தான் அப்பா கதை கேட்டது. அதற்கு பிறகு இப்போவரைக்கும் அவன் தேர்வுதான்.

இந்திக்குப் போனது தெரியாது

சின்னவனின் தமிழ்ப் படங்கள் பத்தித் தெரியும். படம் பார்த்து நல்லா இருக்கு, இல்லைன்னு ஏதோ ஒன்றைச் சொல்லிவிடுவேன். ‘வேலையில்லா பட்டதாரி’ படமெல்லாம் நிஜமா எங்க வீட்டில நடந்த கதைதான். அந்தப் படம் மாதிரிதான், அவனை திட்டவே மாட்டேன். இந்திப் படமெல்லாம் அவனோட ஈடுபாடுதான். இந்திக்கு அவன் நடிக்கப் போனான் என்பதே படம் வெளியான பிறகுதான் தெரியும். இப்போ ‘ஷமிதாப்’ வெற்றி பெற்றிருக்கு, ரொம்பவே சந்தோஷம். அவனோட எந்த விஷயத்திலும் நாங்கள் தலையிடுறதில்லை. எதையும் சரியாத்தான் செய்வான்.

தனுஷ் பசங்க யாத்ரா, லிங்கா இரண்டு பேரக் குழந்தைகளையும் சேர்த்து மொத்தம் 8 பேரக் குழந்தைகள் எனக்கு. அடிக்கடி வீட்டில பிறந்தநாள் நிகழ்ச்சி வந்துவிடும். வீடே திருவிழா மாதிரி இருக்கும். அவனும் எவ்ளோ வேலை இருந்தாலும் குழந்தைகளோடு நேரம் செலவழிப்பதில் சமத்தான பையன். அதில்தானே தனி மகிழ்ச்சி.

இப்பவும் எனக்கு ஒரு ஆச்சர்யம், சினிமாவுக்கு என்று தன்னை எப்போதுமே அவன் தயார்ப்படுத்திக்கிட்டதே இல்லை. டான்ஸ் கிளாஸ், நடிப்பு கிளாஸ் எல்லாம் ஒருநாள்கூட அவன் போனதில்லை.

சின்ன வயசுல வீட்டில் மாட்டியிருக்கும் கமல் போட்டோவைப் பார்த்து அப்பப்போ கை, கால்களைச் சுழற்றி அவரை மாதிரி செய்து பார்ப்பான். மத்தபடி அன்னைலேர்ந்து இன்னைக்கு வரைக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய் கேமரா முன் நின்று நடிக்கிறதை மட்டும்தான் வழக்கமாக வச்சிருக்கான். எல்லாத்துக்கும் கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்.

பெருமிதம் பொங்க முடிக்கிறார், விஜயலட்சுமி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்