பெண்களின் புதுமைப் ‘பொங்கல்’

By பிருந்தா சீனிவாசன்

பழையன கழிதலும் புதியன புகுதலும் போகிப் பண்டிகைக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் சாலப் பொருந்தும். எங்கேயும் எதிலும் புதுமையைப் புகுத்துவது பெண்கள்தான். மொழிகளற்று, இனங்களற்று விலங்குகளுடன் விலங்குகளாக மனிதர்கள் வாழ்ந்த ஆதி நாட்களில் வேட்டையாடுவது என்கிற உத்தியைக் கையாளத் தொடங்கியது பெண்களே.

கற்களை வைத்து எண்ணிக்கையை உருவாக்கியதும் பெண்கள்தான். பின்னாளில் வேட்டைக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு, ஆண்கள் உணவு தேடி காடுகளுக்குள் சென்றனர். தாங்கள் குடியிருக்கும் இடத்திலேயே தங்களுக்கான உணவை ஏன் உற்பத்தி செய்யக்கூடாது என்று அந்த நாளில் ஒரு பெண்ணின் மனதில் உதித்த புதுமை விதைதான் வேளாண்மையாக வெளிப்பட்டது.

விவசாய முன்னோடிகள்

பெண்கள் குழுவாக இணைந்து, உயிர் வளர்க்கும் விவசாயத்தைக் கண்டறிந்தார்கள். எவையெல்லாம் உண்ணத் தகுந்தவை, எவற்றையெல்லாம் விலக்க வேண்டும் என்று ஒவ்வொன்றையும் பரிசோதனை மூலம் பகுத்தறிந்த செயலுக்கும் பெண்களே சொந்தக்காரர்கள். இலைகளை நேர்த்தியாகச் சேர்த்து ஆடைகள் புனைந்த அறிவும் பெண்களின் அறிவே.

உண்பதும் உறங்குவதும் போக மீதி நேரத்தை என்ன செய்து கழிப்பது என்று யோசித்தப் பெண்கள், சித்திரக் கலையைக் கையில் எடுத்தார்கள். இலைகள், பூக்களில் வடித்த சாறு கொண்டு குகைகளிலும் பாறைகளிலும் சிற்பங்கள் வடித்தார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் இன்றும் வாசல்களில் வண்ணக் கோலமிடுகிறார்கள் என்று சொல்கிறவர்களும் உண்டு.

மழை, வெயில் எனப் பருவங்களைக் கணித்துத் தானியங்களைப் பாதுகாத்ததும் சேகரித்ததும் பெண்களே. காட்டு விலங்குகளில் எவையெல்லாம் நம் கைக்கு அடங்கி நடக்கும் என்று அவதானித்து, அவற்றை வீட்டு விலங்குகளாக மாற்றிய வித்தை பெண்களுக்கே முதலில் சாத்தியப்பட்டது. குடியிருப்புகளை நிர்மானித்ததிலும், கருவிகள் சமைத்ததிலும் பெண்களின் ஈடுபாடு அளப்பரியது.

இவற்றில் எல்லாம் ஆண்களின் பங்கே இல்லையா என்று பலர் கொதித்தெழலாம். நிச்சயம் இவற்றில் ஆண்களுக்குப் பங்கு உண்டு, ஆனால், அது பகுதியளவே. அனைத்துச் செயல்களிலும் பெண்களே முதன்மைப் பொறுப்பாளர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்து.

சந்ததியை உருவாக்குவதற்கான தேர்ந்தெடுப்பில் ஆரம்பத்தில் பெண்களே கோலோச்சினர். அந்தக் காலத்தில் போர் என்பது வாழ்வின், வெற்றியின் முக்கிய அம்சம் என்பதால் தனக்கேற்ற இணையைப் பெண்களே தேர்ந்தெடுத்தனர். அதற்கடுத்து வந்த நூற்றாண்டுகளில் ஆட்சி, போர் என்று ஆண்கள் தங்கள் எல்லையை விஸ்தரிக்க, பெண்கள் அந்தப்புரத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டார்கள். அங்கேயும் கைவினைக் கலைகள் மூலம் தங்களுக்கான புதியதொரு உலகத்தை உருவாக்கினார்கள். பாடல்கள் இயற்றினார்கள். ஆடல்களை அரங்கேற்றினார்கள்.

நிர்பந்தத்திலும் தனித்துவம்

மன்னராட்சி முடிவுற்று மக்களாட்சி தலைதூக்கியபோது, பெண்கள் அடுக்களைக்குள் தள்ளப்பட்டார்கள். சமையல் ஒன்றே அவர்களுக்கு விதிக்கப்பட்டப் பணியாக இருந்தபோதும், முடங்கிப் போகாமல் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் தெளிவுடன் பெண்கள் மிளிர்ந்தார்கள். நிர்பந்திக்கப்பட்ட வேலையாக சமையலும் வீட்டு வேலைகளும் இருந்தாலும் அவற்றிலும் தனித்தன்மை நீடிக்கும்படி பார்த்துக்கொண்டார்கள். ஒரு செயலைப் பெண்கள் செய்கிறார்கள் என்பதாலேயே அது தாழ்ந்ததாகிவிடாது என்பதையும் இந்த உலகுக்குப் பெண்களே உணர்த்தினார்கள்.

இந்த உலகம் சாதனை என்று அங்கீகரித்ததையும் அவர்கள் செய்யத் தவறவில்லை. உலகம் முழுக்கப் பல ஆண் கண்டுபிடிப்பாளார்கள் புதுப்புது அறிவியல் கண்டுபிடிப்புகளைப் படைத்து உலகுக்கு அளிக்க, பெண்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சாதித்தார்கள். ஆனால் அவர்கள் சத்தமில்லாமல் குடும்ப அமைப்புக்குள் செய்த புரட்சிகள் ஏராளம்.

இதைச் செய்யலாமா, வேண்டாமா என்று ஆண்கள் யோசிக்கும் ஒரு செயலை, நினைத்த மாத்திரத்தில் பெண்கள் செய்துவிடுவார்கள். அது புதிய முயற்சியோ, ஆடையோ, நாகரிகமோ எதுவாக இருந்தாலும் அவற்றைப் பெண்களே முதலில் அறிமுகப்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். வேட்டியில் இருந்து கால்சட்டைக்கு மாறிய ஆண்களின் வேகத்தை விஞ்சக்கூடியது சட்டென ஜீன்ஸுக்குள் புகுந்துகொண்ட பெண்களின் வேகம்.

எதையும் தயக்கமோ, இரண்டாம் கருத்தோ இல்லாமல் நிமிடத்தில் முடிவெடுத்துக் களமிறங்குவதில் பெண்களைத் தோற்கடிக்கவே முடியாது. எப்போதும் புதுமை விரும்பிகளாக இருந்தும் பெண்கள் இன்னும் அடிமைத் தளைகளில் இருந்து முழுமையாக மீண்டுவிடவில்லை என்பதையும் பதிவுசெய்ய வேண்டும். ஆண், பெண் சமநிலை இல்லாத சூழ்நிலையிலேயே பெண்கள் இத்தனை அற்புதமாகத் தங்களை வடிவமைத்துக் கொள்ளும்போது அதற்கான வசதியும் வாய்ப்பும் கிடைக்கிற நாளில் நிச்சயம் அவர்களே அனைத்திலும் முன்னோடிகளாகத் திகழ்வார்கள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்