குழந்தைப் பிறப்பின்போது உருவாகும் பிரச்சினைகளில் ஒன்று அப்ஸ்டெட்ரிக் ஃபிஸ்டுலா (obstetric fistula). நவீன மருத்துவம், சிசேரியன் போன்ற காரணங்களால் வளர்ந்த நாடுகளில் இந்தப் பிரச்சினை அதிகம் இருப்பதில்லை. ஆனால் ஏழ்மையில் இருக்கும் ஆப்பிரிக்கா மற்றும் சில ஆசிய நாடுகளில் உள்ள பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். உலகம் முழுவதும் 20 லட்சம் பெண்கள் ஃபிஸ்டுலா பிரச்சினையால் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.
பிரசவ காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் இதுபோன்ற பிரச்சினைகளுக்குச் சிகிச்சையளித்து வருகிறார் கேத்தரின் ஹாம்லின். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேத்தரின், மருத்துவப் படிப்பை முடித்தவுடன் புகழ்பெற்ற இரண்டு மருத்துவமனைகளில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது மெடிக்கல் சூப்ரிண்டென்டென்ட் ஆக இருந்த ரெஜினால்ட் ஹாம்லினைத் திருமணம் செய்துகொண்டார்.
1959-ம் ஆண்டு மருத்துவப் பத்திரிகை ஒன்றில் விளம்பரம் வந்தது. எத்தியோப்பியாவில் குழந்தைப்பேறு மருத்துவராகப் பணி புரிய மருத்துவர்கள் தேவை என்பதைக் கண்டவுடன், ரெஜினால்ட் ஆர்வம் காட்டினார். எத்தியோப்பியா என்றதும் கேத்தரின்னுக்குக் கொஞ்சம் தயக்கம் இருந்தது. மருத்துவம் படித்தால் உலகின் எந்தப் பகுதியிலும் வேலை செய்ய வேண்டியது நம் கடமை என்றார் ரெஜினால்ட். கேத்தரினும் ஏற்றுக்கொண்டார்.
எத்தியோப்பியாவில் மருத்துவப் பணி அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. வாகனங்கள் இல்லாத கிராமங்களுக்கு நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டும். குழந்தை பிறக்கும்வரை சில நாட்கள் அங்கேயே தங்க வேண்டும். குழந்தை பிறப்புக்குப் பிறகும் சிலரைக் கண்காணிக்க வேண்டியிருக்கும். கேத்தரின் அத்தனைக் கஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டார்.
அங்கே 14, 15 வயது பெண்கள் குழந்தை பெற்றுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் போதுமான ஊட்டச்சத்து கிடையாது. நான்கு, ஐந்து நாட்கள் பிரசவ வலியால் தவித்து, மிகவும் கஷ்டப்பட்டு குழந்தை பிறக்கும். அதுபோன்ற பிரசவங்களில் ஃபிஸ்டுலா பாதிப்பு ஏற்படும். துளை மூலம் சிறுநீர், மலம் எப்போதும் வெளியேறுவதால் சகிக்க முடியாத துர்நாற்றம் வரும். இதனால் இந்தப் பெண்களை வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். சிலரை வீட்டை விட்டுத் துரத்தி விடுவார்கள். சிலரை ஒதுக்குப்புறமான இடத்தில் தங்க வைத்துவிடுவார்கள். கணவர்கள் வேறு திருமணம் செய்துகொள்வார்கள். கணவன், உற்றார், உறவினர் இழந்து, நோயால் அவதியுறும் பெண்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாவார்கள். உணவும் மருந்தும் இன்றி விரைவில் இறந்தும் போய்விடுவார்கள்.
எத்தியோப்பிய பெண்கள் அனுபவிக்கும் கஷ்டங்களைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார் கேத்தரின். மூன்றாண்டுகள் முடிவடையும் நேரத்தில் எத்தியோப்பிய பெண்களை ஃபிஸ்டுலா பிரச்சினையில் இருந்து மீட்க வேண்டிய கடமை தனக்கு இருப்பதாக நினைத்தார்.
ரெஜினால்டும் கேத்தரினும் ஆஸ்திரேலியா வந்தனர். மருத்துவமனை, செவிலியர்களுக்கான மருத்துவப் பயிற்சி மையம் போன்றவற்றை ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கினர். பல்வேறு அமைப்புகளிடம் இருந்து நிதி சேகரித்தனர். சேவை செய்வதில் ஆர்வம் கொண்ட மருத்துவர்கள், செவிலியர்களை அழைத்தனர். எத்தியோப்பியப் பெண்கள் மிகவும் வறுமையில் இருப்பதால், முழுக்க முழுக்க இலவசமாக ஃபிஸ்டுலா சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.
1974-ம் ஆண்டு எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபபாவில் முதல் ஃபிஸ்டுலா மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது. சிகிச்சைக்காகப் பெண்கள் வந்தவண்ணம் இருந்தனர். போதுமான படுக்கைகள் இல்லை. மருத்துவர்கள் இல்லை. அந்த ஆண்டு 32 பெண்களுக்குச் சிகிச்சையளித்தனர். மூன்றாவது ஆண்டில் 300 பெண்களுக்குச் சிகிச்சையளிக்க முடிந்தது.
செவிலியர்களுக்கும் மருத்துவர் களுக்கும் பயிற்சியளிக்கப்பட்டது. பிரசவத்துக்கு முன்பே பெண்களைக் கண்டறிந்து, போதிய மருந்துகளும் ஊட்டச்சத்துகளும் வழங்கப்பட்டன. பாதுகாப்பான பிரசவம் நிகழ்ந்தது. பிரசவத்துக்குப் பின்பும் தேவையான மருத்துவ உதவிகளை அளித்தனர். இதன் மூலம் புதிதாக ஃபிஸ்டுலா நோயாளிகள் உருவாவது ஓரளவு தடுக்கப்பட்டது. ஏற்கெனவே பல்லாண்டுகளாக நோயில் சிக்கித் தவித்த பெண்களைத் தேடிச் சென்று சிகிச்சையளித்தனர். எத்தியோப்பியாவின் பல பகுதிகளிலும் மருத்துவ உதவி மையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
வாழ்க்கையிலும் பணியிலும் உறுதுணையாக இருந்த ரெஜினால்ட் மறைந்து போனார். முழுப் பொறுப்பும் கேத்தரினுக்கு வந்து சேர்ந்தது. எத்தியோப்பியப் பெண்களின் கொடூரம் நிறைந்த வாழ்க்கையைப் பதிவு செய்யும் விதத்தில் புத்தகம் எழுதினார் கேத்தரின்.
மருத்துவத்தோடு பெண்கள் திருமணம், குழந்தைப் பிறப்பு போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வையும் தொடர்ந்து ஏற்படுத்துக்கொண்டிருந்தார். ஆனாலும் காலம் காலமாகக் கடைபிடித்து வரும் பழக்கங்களில் இருந்து அவர்களை மாற்றுவது அத்தனை எளிதானதாக இல்லை. அவருடைய முயற்சி தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
கடந்த 40 ஆண்டுகளில் 30 ஆயிரம் எத்தியோப்பியப் பெண்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார் கேத்தரின். இன்று நவீன கருவிகளுடன் 9 நிபுணர்கள், 500 மருத்துவ ஊழியர்களுடன் அவரது மருத்துவமனைகளும் மருத்துவ மையங்களும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை, சத்தான உணவு, புதிய ஆடைகள், சிகிச்சைக்குப் பின் தொடரும் மருத்துவ உதவிகள் என்று ஒரு பெண்ணுக்கு சுமார் 28 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. அத்தனையும் இலவசமாகவே இவரது மருத்துவமனையில் அளிக்கப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் 1 லட்சம் பெண்கள் ஃபிஸ்டுலாவால் பாதிக்கப் படுகிறார்கள். அதில் 9 ஆயிரம் பெண்கள் எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்கள். இன்றும் கேத்தரினின் தேவை இருக்கிறது. 90 வயதைக் கடந்த பிறகும் வாரத்துக்கு 6 நாட்கள் மருத்துவமனைக்குச் செல்கிறார் கேத்தரின்.
இரண்டு முறை அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப் பட்டிருப்பவருக்கு உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான விருதுகளும் பட்டங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.
“எதிர்காலத்தில் குழந்தை பிறப்பு தொடர்பான பிரச்சினைகளில் எந்த ஒரு பெண்ணும் தன் உயிரை இழக்கக் கூடாது… நான் இல்லாவிட்டாலும் என்னுடைய லட்சியம் நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்கிறார் எத்தியோப்பியாவின் ஏஞ்சல், வாழும் மதர் தெரசா என்று கொண்டாடப்படும் கேத்தரின் ஹாம்லின்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago