உகாண்டாவின் லார்ட்ஸ் ரெஸிஸ்டன்ஸ் ஆர்மி (எல்ஆர்ஏ) கிளர்ச்சியாளர்கள் ஜுலியட்டை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடத்தியபோது அவளுக்கு வயது 12. பயந்து பதுங்கியிருந்த அந்தப் புதரிலிருந்து அவளால் தப்பிக்க முடியாத சூழலில் அவள் பிடிபட்டாள். அவளுக்கு 16 வயதானபோது, கிளர்ச்சியாளர் தலைவனின் கட்டாய ‘மனைவி’யாக்கப்பட்டு அவனது கருவையும் சுமந்தாள்.
உகாண்டா ராணுவத்தின் பிடியிலிருந்து தப்பிக்க நிறைமாத கர்ப்பிணியான ஜுலியட் கிளர்ச்சியாளர்களுடன் பல மைல் தூரம் நடந்து செல்ல துப்பாக்கி முனையில் நிர்பந்திக்கப்பட்டாள். இந்தக் கடும் பயணம் அவளது சிசுவை கருவறையிலேயே கொல்லும் சூழலுக்குத் தள்ளியது. மகப்பேற்றுக்கான வலி ஏற்பட்ட அந்த கடைசி நிமிடத்தில், அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையை வயிற்றிலிருந்து எடுக்க வேண்டிய நிர்பந்தம்.
மயக்க மருந்துகளோ, அறுவை சிகிச்சைக்கான சாதனங்களோ ஏதும் இல்லை. ஒரு சாதாரண மருத்துவரும், வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுக்க உதவியாக முகம் மழிக்கும் ஒரு பிளேடும் அவளுக்குத் துணை!
“உனது குழந்தை இறந்து பிறந்தால் அழுது புலம்பக் கூடாது! அப்படிச் செய்தால் இவர்கள் உன்னைச் சுட்டுக் கொன்றுவிடுவார்கள். ஒருவேளை அழுகையைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் அதோ அப்படி தொலைவாக சென்று சத்தம் போடாமல் அழு! பிறகு ஒன்றும் நடக்காதது போல திரும்பி வந்துவிடு!” – மருத்துவரின் அறிவுரை இது.
வலியும் வேதனையுமான அந்தக் காட்டுமிராண்டித் தனமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஜுலியட்டின் நிலைமை மோசமடைந்தது.
புது விடியல்
இந்நிலையில், 2006-ல், எல்.ஆர்.ஏ. கிளர்ச்சியாளர் களுக்கும் அரசு தரப்பினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக ஜுலியட்டுக்குக் கென்யாவில் கிளர்ச்சியாளர் காவலோடு மருத்துவ சிகிச்சை அளிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.
அந்த மருத்துவமனையில், பணிபுரிந்துவந்த செவிலியர் ஒருவர் மனமிரங்கி இருக்காவிட்டால் ஜுலியட்டின் கதை எண்ணற்ற ஜுலியட்டுகளைப் போலவே உலகுக்குத் தெரியாமல் போயிருக்கும். கடைசியில், உகாண்டா தூதரகத்தின் மூலமாக ஜுலியட் தலைநகர் கம்பாலா வந்து சேர்ந்தாள்.
இடையில் படிப்பைத் தொடர முடியாமல் போனவர்களுக்கான பிரத்யேகக் கல்வி நிலையத்தில் சேர்ந்து கல்வி பயின்றாள். மேற்படிப்பு படித்து வழக்குரைஞராகி நீதி கிடைக்காமல் அவதிப்படும் ஒடுக்கப்படும் பெண்களின் குரலாக ஒலிக்கத் தீர்மானித்திருக்கிறாள்.
“என்னைப்போல் கடும் துயரங்களுக்கு ஆளானோர் துரதிஷ்டவசமாக ஏனோ கல்வியைத் தொடருவதில்லை. கல்வியறிவு இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை!” என்பதுதான் ஜுலியட்டின் உரத்த குரலாக உள்ளது.
தொடரும் அவலம்
ஜுலியட்டைப் போலவே உலகளவில் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பேர் குழந்தைப் போராளிகளாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 40 சதவீதம் சிறுமிகள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் கிளர்ச்சியாளர்களின் ‘இணை’களாக அதாவது பாலியல் தேவைகளைத் தீர்க்கும் அடிமைகளாக பயன்படுத்தப்படுகிறார்கள். உலகின் பல நாடுகளைச் சேர்ந்த கிளர்ச்சியாளர் குழுக்களைப் போலவே அரசாங்கங்களும் குழந்தைப் போராளிகளை பயன்படுத்துகின்றன.
குழந்தைப் போராளிகள் அனைவரும் ஆயுதம் தரிப்பதில்லை. இவர்களில் சிலர் சுமைத்தூக்கிகளாகவும், பணியாட்களாகவும் இன்னும் சிலர் உளவுப் பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கிளர்ச்சியாளர்கள் குழந்தைப் போராளிகளின் தேர்வு முறைகளில் ஒன்றாக, அவர்கள் தங்கள் கைகளாலேயே குடும்ப உறுப்பினர்களை கொலை செய்ய நிர்பந்திக்கிறார்கள். இது குடும்ப உறவுகளைத் துண்டிப்பதோடு மீண்டும் குடும்பத்தாரோடு சேர முடியாத நிலைக்குத் தள்ளுகிறது.
தீர்வு எப்போது?
குழந்தைப் போராளிகளில் முதலிடத்தில் ஆப்பிரிக்கா உள்ளது. அதிலும் குறிப்பாக மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, சாட், காங்கோ ஜனநாயகக் குடியரசு, சோமாலியா மற்றும் சூடான் இங்கெல்லாம் அதிகளவில் குழந்தைப் போராளிகள் பயன்படுத்தப் படுகிறார்கள். 2016-ம் ஆண்டுக்குள் உலகம் முழுக்க குழந்தைப் போராளிகள் இல்லாத நிலை உருவாக வேண்டும் என்று ஐ.நா சபையில் ஜூன் 2013-ல் நிர்ணயம் செய்யப்பட்டது. அதுவரை பட்டியலின் உச்சத்தில் இடம்பெற்றிருந்த 8 நாடுகளில் 6 நாடுகள் இனி தங்கள் ராணுவத்தில் குழந்தைப் போராளிகளை ஈடுபடுத்தப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டன. அந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
குழந்தைகள் எளிதில் மூளைச் சலவை செய்யக்கூடிய நிலையில் உள்ளவர்கள். அவர்களின் உணவுத் தேவைகள் மற்றும் பராமரிப்பு செலவுகளும் குறைவு. இளங்கன்று பயமறியாததால் ஆபத்துகளின் நுனிவரை அவர்களைப் பயன்படுத்த முடியும். இதுவே கிளர்ச்சியாளர்களும், அரசுகளும் குழந்தைப் போராளிகளை தேர்வு செய்யக் காரணம்.
மலர வேண்டும் புரட்சி
ஆயுதமேந்தும் தளிர்களைப் போராட்டக் களத்தி லிருந்து மீட்டெடுத்தாலும், அவர்களின் உடல் காயங்கள் ஆறிவிட்டாலும், அவர்கள் போதைப் பழக்கங்களிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள். வன்முறையே வாழ்வின் போக்காக மாறிவிடுகிறது.
இத்தகையவர்களை சுதந்திரமாக வெளியேற அனுமதித்தாலும், குடும்பம் மற்றும் சமூகத்தாரிடம் செல்ல முடியாத சூழலே அதிகம். பல ஆண்டுகள் கல்வி தடைபட்டுப் போவதால் அதைத் தொடர முடியாத நிலை. இந்நிலையில் வயிற்றுப் பிழைப்புக்காக மீண்டும் கிளர்ச்சியாளர்களின் குழுக்களில் இணைத்துக்கொள்கிறார்கள் என்பது வேதனைக்குரியது.
வளரும் நாடுகளில் பெண்களும் பெண் குழந்தைகளும் வேறு விதமாக ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள் என்றால், பின்தங்கிய நிரந்தரமாகப் போர்கள் நடைபெறுகிற, நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளின் நிலை பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுகிற நாளில்தான் பெண்களின் பாதுகாப்பு முழுமையடையும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago