சென்னையில் நடந்துவரும் புத்தகக் காட்சி, ஒரு பெரும் மாறுதலுக்கான சாட்சியாக இருக்கிறது. ஆண்களுக்கு நிகராக அதிகரித்திருக்கும் பெண்களின் கூட்டம் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருகிறது. ‘பெண்கள் ஷாப்பிங் போவது போலத்தான் புத்தகக் காட்சிக்கும் வருகிறார்கள்’ என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் இப்படி அலையலையாகக் குவியும் பெண்களின் கூட்டத்தை இதுபோன்ற எதிர்மறை வார்த்தைகளால் நிராகரித்துவிட முடியாதபடி தேர்ந்தெடுத்த புத்தகங்களை அவர்கள் வாங்கிச் செல்கிறார்கள். இப்படியொரு மாற்றம் ஒரே நாளில் விளைந்துவிடவில்லை. இதற்காகப் பெண்கள் கடந்துவந்த பாதை நெடிது.
ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டிருந்த பெண்களின் வாசலைக் கல்விதான் விசாலப்படுத்தியது. கல்வியெனும் கருவியின் துணையால் அவர்களின் சிந்தனை மொட்டுகள் மலரத் தொடங்கின. ஆண், பெண் வேற்பாடின்றி ஒரு நாடே ஏகாதிபத்தியத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தபோது, விடுதலைக்கான எழுச்சியில் பெண்களும் பங்கெடுத்தனர். தேச விடுதலையொன்றே இலக்காக இருந்தபோது பெண் விடுதலைக்கான சாத்தியமும் நேரமும் அப்போது இரண்டாம்பட்சமாக இருந்தது. ஆனால் நாட்டு விடுதலைக்குப் பிறகு, பெண்கள் தங்கள் வீட்டு விடுதலைக்காகச் சிந்திக்கத் தலைப்பட்டனர்.
சில வேதங்களைப் பெண்களும் இந்தச் சமூகம் ஒதுக்கிவைத்த அடித்தட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்களும் படிக்கக் கூடாது என்ற நிலைமை இருந்த ஒரு சூழலில்தான் பெண்கள் கல்வி என்னும் அடிப்படை உரிமை குறித்துச் சிந்திக்க வேண்டியிருந்தது. அடுக்களை மட்டுமே பெண்களின் அதிகபட்ச எல்லை என்பதும், பின் தூங்கி முன் எழுவதும்தான் பெண்ணுக்கான இலக்கணம் என்ற சிந்தனையும் பெண்கள் மீது நிர்ப்பந்திக்கப்பட்ட சமூகத்தில் இருந்துகொண்டுதான் அவர்கள் தங்கள் உரிமைக்காகவும் அங்கீகாரத்துக்காகவும் குரல்கொடுக்க வேண்டியிருந்தது.
சமூகக் கட்டுகள்
இந்தச் சமூகம் பெண்களைப் பிணைத்து வைத்திருந்த கட்டுகளை மீறி எழுத வந்த முதல் தலைமுறைப் பெண்கள் அதிக விமர்சனத்துக்குள்ளானார்கள். அவர்கள் மீது வசை மாரி பொழிந்தவர்களில் பெண்களும் அடக்கம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். காரணம் இந்தச் சமூகத்தால் மிகத் திட்டமிட்டுப் பெண்களே பெண்களுக்கு எதிரிகளாகச் சித்திரிக்கப்பட்டனர். இதையெல்லாம் தாண்டித்தான் பெண்கள் தங்கள் தடம் பதித்தார்கள். சங்க காலப் பெண் புலவர்களுக்கு ஆண்களுக்கு நிகரான அங்கீகாரம் கிடைத்ததா என்று தெரியாது.
ஆனால் இடைக்காலத்தில் எழுத்தைக் கையில் எடுத்த பெண்களுக்கு உரிமையே மறுக்கப்பட்ட போது, சம அங்கீகாரத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆனால் அதற்கெல்லாம் கவலைப்படாமல் எழுத்தும் வாசிப்புமே பெண் விடுதலைக்கான ஆரம்பப் புள்ளி என்பதைப் பெண்கள் வெகு விரைவில் புரிந்துகொண்டனர்.
ஆரம்ப காலத்தில் நாவல், சிறுகதை போன்ற புனைவுகளே பெண்களுக்கான வாசிப்புக்கு வழி ஏற்படுத்தித் தந்தன. அச்சிலேறி பெண்களின் கரங்களில் வலம் வந்த சமையல் புத்தகங்கள்கூட ஒரு மறுமலர்ச்சிக்கான சாத்தியங்களை ஏற்படுத்தத் தவறவில்லை. சடங்கு, சம்பிரதாயம், குடும்ப உறவுகள், சமூகக் கட்டுப்பாடுகள் என்று மூச்சு முட்டிக்கொண்டிருந்த பெண்களின் உலகில் புத்தங்களே ஆசுவாசத்தை ஏற்படுத்தின. அவர்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் வடிகாலாக இருந்தன. தொடர்ச்சியான வாசிப்பு அவர்களின் சிந்தனையை அடுத்த தளத்துக்கு முன்னேற்றியது.
வாசிப்பு வானில் புதிய சிறகு
வை.மு. கோதைநாயகி அம்மாள், மூவலூர் ராமாமிர்தம் அம்மாள், டி.பி. ராஜலட்சுமி, கோமகள் என்று முதல் தலைமுறை நாவலாசிரியர்களாக அறியப்பட்டவர்கள் தொடங்கிவைத்த எழுத்துப் பயணம் அதற்கடுத்துத் தொடர்ந்து தன் எல்லைகளை விஸ்தரித்தது. ஆர். சூடாமணி, பூரணி, ராஜம் கிருஷ்ணன், லஷ்மி, அநுத்தமா என்று பலர் எழுத வந்தனர். குடும்ப உறவுகளை மையமாக வைத்து இவர்கள் எழுதிய புனைவுகள் பெண்கள் முன் பல்வேறு கேள்விகளை முன்வைத்தன.
குடும்ப அமைப்பு காலங்காலமாகப் பெண்களை அடிமைப்படுத்திவைத்திருப்பதை மிக நுட்பமாகச் சித்திரித்தன. இவர்களுக்கு அடுத்து எழுத வந்தவர்கள், முற்போக்குக் கருத்துகளையும் பெண்ணியச் சிந்தனைகளையும் எழுத்தில் வடித்தனர். அம்பை, வாஸந்தி, சிவசங்கரி, இந்துமதி போன்றோர் பெண்ணின் மன உணர்வுகளைத் தனித்துவத்துடன் தங்கள் எழுத்துகளில் வெளிப்படுத்தினர். அம்பை எழுதிய ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ குடும்பம் என்னும் பெயரால் பெண்ணுக்கு இந்தச் சமூகம் வகுத்துவைத்திருக்கும் இறுக்கமான எல்லைகளைத் துல்லியமாகப் பிரதிபலித்தது.
தீவிர வாசிப்பு
பெண்ணியம் என்பதே தடைசெய்யப்பட வேண்டிய சொல்லாகவும் உச்சரிக்கக் கூடாத வார்த்தையாகவும் இருந்தபோது இந்தப் பெண்கள் வலிமையான வார்த்தைகளால் தங்கள் வாதங்களை முன்வைத்தார்கள். அதுதான் பெண்ணினத்தின் பார்வையை விசாலமாக்கியது. பெண்களுக்கு அடிப்படைக் கல்வி சாத்தியமான பிறகு அடித்தட்டில் இருக்கும் பெண்களும் கல்வி என்னும் ஏணி பிடித்து மேலேறி வரத் தொடங்கினார்கள். எத்தனையோ போராட்டங்களுக்குப் பிறகு இன்று பெண்களின் வாசிப்புக்கான தளம் மட்டுமல்ல, படைப்புக்கான தளமும் விரிந்திருக்கிறது.
அதிகரித்திருக்கும் பெண் எழுத்தாளார்களின் எண்ணிக்கையும் அதைத்தான் பகர்கிறது. பெண்ணுரிமைக்கான வேட்கையும் அடக்குமுறைக்கு எதிரான குரலும் அவர்கள் எழுத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. தங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை மிகத் துணிச்சலுடன் எதிர்கொள்கிறார்கள். அவர்களின் பரந்துபட்ட பார்வையும், தெளிவான சிந்தனையும் அதற்குத் துணைபுரிகின்றன.
இன்று பெண்கள் வெகுஜன இதழ்களைப் படித்துக்கொண்டே தீவிர வாசிப்பையும் கையில் எடுத்திருக்கிறார்கள். சென்னைப் புத்தகக் காட்சியில் அனைவரும் குடும்பம் குடும்பமாக வந்து குவிவது ஆரோக்கியமான வாசிப்புச் சூழலை உணர்த்துகிறது. சமையல் புத்தகங்கள், நாவல்கள் இவற்றுடன் தேர்ந்தெடுத்த வாசிப்புக்கு உதவும் கருத்தாழமிக்க புத்தங்களையும் பெண்கள் வாங்கிச் செல்கிறார்கள். வாசிப்பு ஒன்றே பெண்ணை அவளுக்கென வகுக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி வர உதவுகிறது. அவளது எண்ணங்களுக்கு வரிவடிவம் தருகிற, மனதுக்கு நெருக்கமான வார்த்தைகள் அவளை ஆக்கபூர்வமான பாதையில் வழிநடத்திச் செல்கின்றன. அந்தப் பாதை நிச்சயம் ஆண், பெண் சமநிலையை நோக்கி நீளும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago