கோடையில் காய வேண்டாம்!

கோடையை வியர்க்க விறுவிறுக்க கடக்காமல், ஆசுவாசமாகக் கடக்க சில எளிமையான வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதுமானது. புத்துணர்ச்சி தரும் பழங்கள், காய்கறிகள், தண்ணீர் போன்றவற்றைச் சரியான விகிதத்தில் எடுத்துக் கொள்வதால் கோடையில் நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

தண்ணீர் என்னும் அருமருந்து

கோடையில் 12 டம்ளர் தண்ணீர் அருந்துவது அத்தியாவசியமானது. கடும் வெயில், வியர்வை காரணமாக உடலின் நீரிழப்பு கோடையில் அதிகமாக இருக்கும். குளிர்பானங்களைக் காட்டிலும் க்ரீன் டீ, பழச்சாறு, இளநீர் போன்றவற்றைக் குடிப்பது சிறந்தது.

தகிக்கும் சூரியன்

சூரியனின் புறஊதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சன் ஸ்கிரீன் லோஷனை (குறைந்தது எஸ்பிஎஃப் 25) பயன்படுத்தலாம். ஆனால், வெளியே செல்வதற்குக் குறைந்தது பதினைந்து நிமிடங்களுக்கு முன்னர் சன் ஸ்கிரீன் லோஷனைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். காலை பத்து மணியிலிருந்து நான்கு மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்ப்பதன் மூலம் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து ஓரளவு தப்பிக்கலாம்.

பருத்தி ஆடைகள்

கோடையில் வியர்வையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பருத்தி ஆடைகளை அணிவதே சிறந்தது. இறுக்கமான ஆடைகளை அணிவதைவிட தளர்வான ஆடைகளை அணிவது உடல் காற்றோட்டமாக இருப்பதற்கு உதவும்.

ஆரோக்கியமான உணவுப்பழக்கம்

பச்சைக் காய்கறிகள், பழங்கள், குறிப்பாக, கீரை, பாகற்காய், வெள்ளரி, தர்பூசணி, ஆரஞ்சு போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கனிகளை உணவில் சேர்த்துக்கொள்வது கோடைக்கு ஏற்றது.

பொலிவான முகம்

ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது முகத்தை தூய்மையான நீரில் கழுவ வேண்டும். வீட்டில் தயாரிக்கும் இயற்கை முகப்பூச்சுகள் கோடையில் முகத்தைப் பராமரிக்கப் பெரிதும் உதவும். சந்தனம் மற்றும் தயிர் கலவை, சோற்றுக் கற்றாழை, வெள்ளரித் துண்டுகள், தக்காளிச் சாறு போன்றவை முகத்தைத் தூய்மையாக வைத்திருக்கும். தண்ணீர், பழச்சாறுகள், பச்சைக் காய்கறிக் கலவைகள் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள்வதால் கோடையில் வரும் முகப்பருக்களைத் தவிர்க்கலாம்.

கூந்தல் பராமரிப்பு

நன்றாக ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தைத் தயிருடன் கலந்து தலையில் தடவினால் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். எலுமிச்சை, வெள்ளரி போன்றவையும் பொடுகைத் தவிர்க்க உதவும். கோடைக்கு ஏற்ற சிகை அலங்காரம் விதவிதமான கொண்டைகள்தான்.

ஒப்பனை

கோடையில் மிதமான ஒப்பனையையே மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். மங்கலான நிறத்தில் உள்ள ஐ ஷேடோ, ஐ லைனர், லிப்ஸ்டிக் போன்றவை கோடைக்கு ஏற்றவை. கூடுமானவரை அடர் நிறங்களைத் தவிர்ப்பது நல்லது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE