எங்கே தேடுவேன்?

By அ.வெண்ணிலா

பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் நடக்கும்போதெல்லாம் ஒவ்வொரு பெண்ணும் கூனிக் குறுகி அவமானப்பட நேர்கிறது. கோபம் பொங்கி எழுந்தாலும், பல நேரங்களில் கோபத்தைவிட அவமானமே அதிகமாக மனதிற்குள் வந்தமர்கிறது. பெண்ணாக இருப்பதைத் தவிர வேறென்ன தவறு செய்தார்கள் பெண்கள்? எதற்கு இந்த இழிநிலை? காமம் மட்டுமே தேவைப்படும் ஆண்களுக்கு எத்தனையோ வழியிருக்க எதற்கு இந்த வன்முறை? பச்சிளங் குழந்தைத் தொடங்கி, வயது வித்தியாசம் இல்லாமல் பெண்கள் மீதான இந்த வன்முறைக்கு இந்தச் சமூகம் நாணாதா? ஆண்கள் வருந்தி சரி செய்ய முன்வரமாட்டார்களா?

இந்த வன்முறையை விட மிகப் பெரிய வலி...பாலியல் வன்முறை பற்றிக் கருத்து சொல்பவர்களின் பிரஸ்தாபங்கள். அந்தப் பெண் ஒழுக்கமில்லாதவள், நள்ளிரவில் தனியாக ஒரு ஆணுடன் இருந்தவள், அரைகுறை ஆடையுடன் இருந்தாள், பார்க்கும் ஆண்களின் உணர்ச்சிகளைத் தவறாகத் தூண்டும் விதத்தில் அவள் இருந்தாள்..என்று அரசியல்வாதி தொடங்கி, காலையில் தேநீர்க் கடையில் தேநீர்க் குடித்துக் கொண்டே வம்பு பேசும் ஆண்கள் வரை சகலரும் பெண்ணின் மீதே தவறுக்கான காரணத்தைத் திருப்பிக்கொண்டிருப்பார்கள். பாலியல் வன்முறையில் வெறித்தனமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட தூத்துக்குடி புனிதாவிற்கு ஏழு வயது. அந்தப் பெண் என்ன மாதிரியான அரைகுறை ஆடையுடன் உணர்ச்சியைத் தூண்டினாள் என்று தெரியவில்லை.

மிருகத்தனமான இச்சையைத் தீர்த்துக்கொள்ளும் ஆண்களின் வக்கிரத்தை, இந்தச் சமூகம் எப்படி நியாயப்படுத்துகிறது? பாதிக்கப்பட்ட பெண்ணை எப்படி மீண்டும் குற்றவாளியாக்குகிறது என்ற கேள்வியும் வேதனையும் எப்பொழுதும் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கும். இதற்கான பதில் எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்னால் நம் மரபாகப் புதைந்து கிடைக்கிறதோ என்று வருந்தியிருந்த நேரத்தில் கலித்தொகையின் ஒரு பாடலைப் படிக்க நேர்ந்தது.

பாடலின் தலைப்பே சாட்டையடி. நீரைக் கேட்டா நீர் பருகுவார்? ஓர் ஆணும் பெண்ணும் (தலைவனும் தலைவியும் என்று சொல்ல மனம் இடம் கொடுக்கவில்லை) உரையாடுவது போல் இந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது. அந்த ஆணின்மேல் விருப்பமில்லாத பெண் அவள். ஆனால் அவள் மேல் காமம் (காதல் அல்ல) கொண்டு அவளை அனுபவிக்கத் துடிக்கும் ஆண் அவன்.

அவள் எதிர்ப்பார்க்காத ஒரு தருணத்தில் அவளைத் தழுவுகிறான் ஆண். அதிர்ந்து போகும் பெண் ஆடவனைப் பார்த்துப் பேசத் தொடங்குகிறாள்... இங்குதான் பாடல் தொடங்குகிறது. பெண் சொல்லுகிறாள், இவன் ஒருவன். தன்னுடன் புணரும் விருப்புக் குறிப்பு இல்லாதவளை கையால் வலியப் பிடித்துக் கொள்கின்றான். இவன் நாணமில்லாதவன் என்கிறாள். நாணமில்லாதவன் என்ற சொல் அந்தக் காலத்தில் மிகப் பெரிய அவச் சொல்லே. ஆனால் தான் அடையத் துடிக்கும் பெண் சொன்னதால், அவன் அந்தச் சொல்லைப் பொருட்படுத்தாமல் அப்பெண்ணுக்குப் பதில் கூறுகிறான்...உன் மேனி தழுவுவதற்கு இனிதாய் உள்ளது. அதனால் தழுவினேன்.

இதைக் கேட்டவுடன் அந்தப் பெண்ணுக்கு இன்னும் கோபம் வருகிறது. ஏக வசனத்தில் இறங்குகிறாள்...ஏடா! தமக்கு இனிதாய் இருக்கும் என்பதற்காகப் பிறருக்கு இனியதல்லாததை வலியச் செய்வது இன்பத்தை அளிக்குமோ? என்கிறாள். பாலியல் வன்முறையின் அடிப்படையான கேள்வியை அந்தப் பெண் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னால் கேட்டிருக்கிறாள். இருவர் விரும்பி இணையாதது என்ன இன்பத்தைத் தந்துவிடப்போகிறது?

பெண்ணின் கேள்வியைக் கேட்ட ஆண் மிக நீளமாக அவளுக்குப் பதிலளிக்கிறான். ஒளியுடைய வளையலை அணிந்தவளே..உன் அறிவை வெளிப்படுத்த வேண்டாம். (அறிவு ஆண்களுக்கு மட்டுமே அற்றம் காக்கும் கருவியோ?) அதைக் கைவிடு. நான் சொல்வதைக் கேள். தண்ணீரை உண்பவர்கள் அதனுடைய இனிமையைக் கருதித்தான் உண்கிறார்கள். உண்ணப் பட்ட அந்தத் தண்ணீருக்கு இனிதாயிருக்கும் என்று கருதி உண்பதில்லை. அதுபோலத்தான் நான் உன்னைத் தழுவியதும் என்கிறான். மானே,மயிலே, மரகதமே, இளவெயிலே என்று பெண்களைக் கொஞ்சி மகிழ்ந்து அவளைப் பணிய வைத்துவிடுவார்கள் என்று அறிந்திருக்கிறோம். கலித்தொகையின் இந்தப் பாடலில் பெண்ணைச் சமாதானப்படுத்துதல் என்ற இடம்கூட இல்லை. நீ தண்ணீர் போன்றவள். தாகம் எடுத்தது. குடித்தேன். இதில் பேச என்ன இருக்கிறது என்று பெண் அவளுக்கே சொந்தமில்லாத ஒரு இடத்தைச் சொல்கிறது.

ஆணின் பதிலைக் கேட்ட பெண் அச்சமுறுகிறாள். ஐந்து வாய்களை உடைய பாம்பினது பார்வையில் அகப்பட்டது போல் எனக்கு வருத்தம் உண்டாகிறது. இனி நான் ஏது செய்வேன் என்று கலங்குகிறாள்.

பெண் மனம் கலங்கி, தளர்வடைந்து விட்டாள் என்பதை அறிந்தவுடன், ஆண் அவளை மொத்தமாக வீழ்த்தும் அடுத்த ஆயுதத்தை வீசுகிறான். களங்கம் இல்லாத சந்திரனைப் போல் விளங்கும் முகமுடைய மகளிரை வலியப் புணர்வதும் ஒரு மணமே ஆகும். அவளைக் கவர்ந்து செல்வதும் அறனே என்று கூறுகிறான்.

சமூக ஒழுங்கையும் அறநெறியைப் பற்றியும் சொன்னவுடன், அந்தப் பெண் புத்தி தடுமாறுகிறாள். இதுவரை தன் சுய விருப்பு வெறுப்பு பற்றி விவாதித்துக் கொண்டிருந்தவள், மெல்ல மனம் மாறுகிறாள். சமூகத்தின் விதியை மீறியவளாவோமோ என்று அச்சமுறுகிறாள். உடனே அப்பெண் இத்தகைய நிலை அறனிற்கு ஏற்புடையதாக இருப்பதாலும், உலகத்து ஒழுக்கமும் அத்தகையதாகவே இருப்பதாலும், நான் ஒன்றும் செய்ய இயலாதவளாக இருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் அவனும் நான் அவனை மறுத்துக் கூறும் சொல்லைக் கேட்டு மனந்தளர்ந்து வருந்துவான். ஒருவேளை அவனுக்கு முற்பிறப்பிலும் நானும் அவளும் வேறு அல்ல என்ற எண்ணம் உண்டாகியிருக்குமானால்...என்று பெண் தன்னைச் சமாதானம் செய்துகொண்டு, என் நெஞ்சே அவனுடன் நமக்கு இனி மாறுபாடு உண்டோ என்று ஆணின் நடத்தைக்கான நியாயம் கற்பித்துக்கொண்டு அவனுடன் உடன்படுகிறாள்.

இவ்வாறு பாடல் முடிவடைகிறது. படிக்கத் தொடங்கிய நேரத்தில் தன் விருப்பம் இல்லாமல் தன்னைத் தொடும் ஆணைப் பார்த்து அந்தப் பெண் அடுக்கிய கோபமான நியாயமான கேள்விகள் மனதில் ‘அட,பரவாயில்லையே’ என்ற ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் தந்துகொண்டே வந்தன. பாடல் முடியும்போது முன்பிருந்ததைவிட அதிகத் துயரம் கவ்விகொண்டது.

இந்தப் பாடலை எப்படிப் புரிந்துகொள்வது என்ற கருத்தில் பலருக்கு பலவிதமான கருத்து இருக்கலாம். ஆனால் பாடல் வெளிப்படுத்தும் உண்மையை யாராலும் மாற்றிச் சொல்ல முடியாது. விருப்பமில்லாத பெண். விரும்பும் ஆண். விரும்புவதை அடைய ஆணும், விருப்பமில்லாததைத் தடுக்கப் பெண்ணும் விவாதிக்கிறார்கள். நேர்மையான விவாதமாகச் செல்ல வேண்டிய இடத்தில் ஆண் குறுக்குப் பாதையில் நுழைகிறான். தனக்குச் சாதகமாக உள்ள சமூகத்தின் முன்னுதாரணங்களையும், நூல்கள் சொல்லும் அறநெறிகளையும் கையில் எடுத்துக்கொள்கிறான். பாவம், அந்தப் பெண். சமூக ஒழுங்கை மீறக்கூடாது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், சான்றோர்கள் சொல்லிய அறநெறி தவறிவிடக்கூடாதே என்ற பயத்திலும் பதற்றத்திலும் தன்னை மாற்றிக்கொள்ள முன்வருகிறாள்.

கலித்தொகை காலத்திலேயே ஆணுக்கு ஒரு நீதியும், பெண்ணுக்கு ஒரு நீதியும் சொன்ன சான்றோன் யார்? எங்கே தேடுவேன்..அவர்களை நான் எங்கே தேடுவேன்...பெண்ணின் பெரு விருப்பத்தைப் பொருட்படுத்த வேண்டாம் என்ற சான்றோன், இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுக்கு முந்தியிருக்கிறான்?

இந்த நேரத்தில் செய்தித்தாளில் படித்த ஒரு செய்திதான் நினைவுக்கு வருகிறது...வண்டலூர் உயிரியல் பூங்காவில் தன் விருப்பமில்லாமல் தன்னைத் தொந்தரவு செய்த ஒரு ஆண் புலியை, பெண் புலி அடித்துக் கொன்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்