ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் ஒருகாலத்தில் சிங்கங்கள் ஏராளமாக இருந்தன. கடந்த 75 ஆண்டுகளில் பெருமளவு சிங்கங்கள் காணாமல் போய்விட்டன. தற்போது 2 ஆயிரம் சிங்கங்களே இருக்கின்றன. இந்தச் சிங்கங்களைப் பாதுகாக்கும் பணியைச் செய்து வருகிறார் ஷிவானி பால்லா.
Ewaso என்ற சிங்கங்களுக்கான பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி, அதன் இயக்குநராகவும் ஷிவானி செயல்பட்டு வருகிறார் . இதன் முக்கிய நோக்கம், மனிதர்களுக்கும் வன உயிரினங்களுக்கும் இடையே நல்ல புரிதலை ஏற்படுத்தி, அவற்றின் எண்ணிக்கையைக் காப்பாற்றுவது.
கென்யாவின் தலைநகர் நைரோபியில் பிறந்த ஷிவானிக்குச் சிறு வயதில் இருந்தே வன உயிர்கள் மீது ஆர்வம். பள்ளி மூலம் வன உலா சென்றதும், விடுமுறைகளில் பெற்றோர் சஃபாரிகளுக்கு அழைத்துச் சென்றதும்தான் ஷிவானியின் ஆர்வத்தைத் தூண்டியது.
16 வயதில் கேமரா அவர் கைக்கு வந்தது. வன விலங்குகளை விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்தார். வன விலங்கு ஆர்வலரும் எழுத்தாளருமான ஜாய் ஆடம்சன் புத்தகங்களும் கொரில்லா பாதுகாவலர் டயான் ஃபோஸ்ஸி புத்தகங்களும் ஷிவானிக்கு மிகப் பெரிய உத்வேகத்தை அளித்தன. தன் வாழ்க்கையை விலங்குகள் பாதுகாப்புக்கு அர்ப்பணிக்க ஷிவானி முடிவு செய்தார். எண்ணத்தை ஈடேற்ற அவருடைய நண்பர்கள் உதவியாக இருந்தனர்.
வனமே வீடு
இங்கிலாந்தில் படிப்பை முடித்துவிட்டுத் திரும்பிய ஷிவானி, செயலில் இறங்கினார். சம்புரு வனப்பகுதிக்குக் குடிவந்தார். காட்டின் பரப்பளவு குறைந்து வருவதால் சிங்கங்கள் குறைந்து வருகின்றன. சட்டத்துக்குப் புறம்பாக வேட்டையாடுபவர்களாலும் காடுகளில் வசிக்கும் மனிதர்களாலும் சிங்கங்களுக்கு ஆபத்து. மனிதர்கள் வசிப்பிடங்களுக்குள் நுழைவதால் சிங்கங்களால் மனிதர்களுக்கும் ஆபத்து.
மனிதர்களையும் சிங்கங்களையும் ஒருவரிடமிருந்து மற்றொருவரைக் காக்க வேண்டிய அவசியத்தைப் புரிந்துகொண்டார் ஷிவானி. அதே நேரத்தில் காடுகளையும் சிங்கங்களையும் நன்றாகப் புரிந்துகொண்டவர்களால்தான் அவர்களைக் காப்பாற்றவும் முடியும் என்பதும் அவருக்குத் தெரிந்தது.
இந்தப் புரிதலே Ewaso அமைப்பு உருவாகக் காரணம். காடுகளில் வசிக்கும் பழங்குடி மக்களை அழைத்துப் பேசினார். சிங்கங்கள் எவ்வளவு முக்கியமானவை என்று உணரவைத்தார். பயிற்சி அளித்தார். பல குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பை அளித்தார். அவர்கள் செய்யும் வேலைகளுக்கு ஏற்ற சம்பளமும் கொடுத்தார். பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், ஆண்கள் என்று தனித்தனியாக வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சிங்கங்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு, அவர்களின் வீடுகளைச் சுற்றி வேலி அமைத்துக் கொடுத்தார். பழங்குடி மக்கள் ஷிவானியைப் புரிந்துகொண்டார்கள். சிங்கங்கள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெற்றது. வேட்டையாடுவது தடுத்து நிறுத்தப்பட்டது.
நிதி நல்கும் நிகழ்ச்சிகள்
ஷிவானி நினைத்தது போல சிங்கம் பாதுகாப்பு அத்தனை எளிதான வேலையாக இருக்கவில்லை. ஏராளமான நிதி தேவைப்பட்டது. அதற்காக நிகழ்ச்சிகளை நடத்தவும் நிதிகளைத் திரட்டவும் முடிவு செய்தார்.
லயன் சஃபாரி, காட்டு உலா, வனம் தொடர்பான திரைப்படங்கள், பயிற்சிப் பட்டறைகள், நேச்சர் கேம்ப் என்று ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறார் ஷிவானி. இதில் இருந்து கிடைக்கும் வருமானத்தைத் தவிர, உலகம் முழுவதும் உள்ள இயற்கை ஆர்வலர்கள் கொடுக்கும் நிதியில்தான் வெற்றிகரமாக இந்த அமைப்பு இயங்க முடிகிறது.
பழங்குடி மக்களின் கைவினைப் பொருட்கள், சிங்கம் பற்றிய அறிவியல் தகவல்கள், பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கதைகளைப் புத்தகங்களாகக் கொண்டு வந்து, அதிலிருந்தும் வருமானத்தைப் பெறுகிறார்.
ஷிவானி அதிகாலை 5:30 மணிக்கு எழுந்து, தன் உதவியாளர் ஜெரியாவுடன் சிங்கம், பிற வன விலங்குகளைக் காணக் கிளம்பி விடுகிறார். 9 மணிக்குத் திரும்பி வருகிறார். தகவல்களைச் சேகரித்து, சரி பார்க்கிறார். நிகழ்ச்சிகளைத் திட்டமிடுகிறார். கூட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என்று மாலை 5 மணி வரை வேலை செய்கிறார். மீண்டும் காட்டுக்குள் சென்றால் திரும்பி வர 8 மணியாகிவிடும். 9 மணிக்குத் தூங்கினால்தான் மீண்டும் காலை காட்டுக்குள் செல்ல இயலும். இதுதான் ஷிவானியின் ஒருநாள்.
அனுபவப் பாடம்
தினசரி சிங்கங்களைப் பார்த்துக்கொண்டிருப்பது அலுப்பூட்டும் விஷயமாக இருக்காதா? தினமும் நம் கண் முன்னே வந்து சிங்கங்கள் ‘உள்ளேன் அம்மா’ என்று சொல்லிவிட்டுச் செல்வதில்லை. சில சிங்கங்களை வாரக் கணக்கில் கூடப் பார்க்க முடியாது.
பொறுமையாகச் சிங்கங்களை அடையாளப்படுத்தி, அவற்றைப் பின்தொடர்ந்து செல்கிறார் ஷிவானி. காட்டு வாழ்க்கை ஒருநாள் போல இன்னொரு நாள் இருப்பதில்லை. தினமும் புதுப் புது அனுபவத்தைத் தந்துகொண்டிருக்கும். புதிய சவால்கள், பிரச்சினைகள் என்று நேரம் ஓடிக்கொண்டே இருக்கும் என்கிறார் ஷிவானி.
நம்பிக்கை தந்த வெற்றி
36 வயது ஷிவானி, கடந்த 11 ஆண்டுகளாகச் சிங்கங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இங்கிலாந்து, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சூழலியல் தொடர்பான பட்டங்களையும் முனைவர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.
ஷிவானியின் சிங்கப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மட்டும் எடுக்கப்பட்டிருக்காவிட்டால், இன்னும் இருபது ஆண்டுகளில் கென்யாவில் சிங்கங்கள் இருந்ததற்கான சுவடுகூடத் தெரியாமல் போயிருக்கும் என்கிறார்கள் சூழலியலாளர்கள்.
இன்று சிங்கங்கள் மட்டும் காப்பாற்றப்படவில்லை, காட்டில் சிக்கும் பழங்குடி மக்களும் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் ஓரளவு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறார் ஷிவானி. பழங்குடி மக்களின் குழந்தைகளுக்காகப் பள்ளியை நடத்தி வருகிறார். மிக முக்கியமாகச் சிங்கங்களைப் பற்றிய நல்ல புரிதல் ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் ஒரு சிங்கம் பாம்பு தீண்டியதால் மாண்டு போனது. அன்று பழங்குடி மக்கள் சிங்கத்துக்காகக் கண்ணீர் சிந்தினார்கள். ஆம், ஷிவானியின் நம்பிக்கை வெற்றிபெற்றுவிட்டது!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago