இரட்டை வயலின் ஜிஞ்ஜர்

By வா.ரவிக்குமார்

பெயரைப் போன்றே வித்தியாசமானவர், ஜிஞ்ஜர். பாடலாசிரியர், பாடகர், விளம்பர மாடல் எல்லாவற்றுக்கும் மேலாக வயலின் கலைஞர். அதிலும் 10 தந்திகளை உடைய இரட்டை வயலினை வாசிக்கும் உலகின் ஒரே பெண் கலைஞர் என்னும் பெருமைக்குச் சொந்தக்காரர். டபுள் பேஸ், செல்லோ, வயலோ, வயலின் ஆகிய வாத்தியங்களுடன் ஒரு குழு வாசிக்கும் பிரமிப்பைக் கொடுக்கும் வாத்தியம்தான் டபுள்-வயலின்.

உலகின் மிகச் சிறந்த இசைக் கலைஞர்களில் ஒருவராக மதிக்கப்படும் எல். சுப்ரமணியத்தின் மூத்த மகள். தந்தை வழியில் இசை மேதை லக் ஷ்மிநாராயணாவும் தாய் வழியில் சிதார் மேதை பண்டிட் ரவி ஷங்கரும் இவரின் பாட்டனார்கள். இசைப் பாரம்பரியத்தின் விழுதாகப் பிறந்த ஜிஞ்ஜரை பட்டை தீட்டி வைரமாக்கிய பெருமை அவரின் தாய் விஜி சுப்ரமணியத்தையே சாரும்.

தன்னை ஒரு இந்திய அமெரிக்கக் குழந்தை என்று சொல்லும் ஜிஞ்ஜரின் குழந்தைப் பருவம் சென்னையில்தான் செழித்தது. சிறு வயதிலேயே கலாக்ஷேத்ராவின் மாணவியானார். இசை மேதை லக்ஷ்மிநாராயணா, சிறுவயதில் தன் பிஞ்சுக் கைகளில் வயலினைக் கொடுத்துப் பயிற்சியளித்ததை நெகிழ்ச்சியுடன் நினைவில் வைத்திருக்கிறார் ஜிஞ்சர்.

பதின்பருவத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் கல்வி, ஓபரா பாடல் பயிற்சி, பியானோ பயிற்சியைத் தொடர்ந்த அவருக்குப் பாடுவது, ஆடுவது, பியானோ, வயலின் உள்பட வாத்தியங்களை இசைப்பது, பாடல்களுக்கு இசையமைப்பது என எல்லாமே விரல் நுனியில் வசமானது.

சிகாகோ சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவில் அறிமுகமானதில் தொடங்கி இவருக்கு உலகின் பல முன்னணி இசைக் குழுக்களிலிருந்தும் வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்தன. டிரெண்ட் ரெஸ்னர், மைக் நிகோல்ஸ், மைக் மியர்ஸ், ஜேம்ஸ் நியூட்டன் ஹோவர்ட் ஆகிய புகழ்பெற்ற கலைஞர்களின் படைப்புகளிலும் இடம்பெற்ற இசைப் பங்களிப்பு, ஜிஞ்ஜரை உலகளவில் பிரபலப்படுத்தியது.

எல். சுப்ரமணியத்தின் சகோதரரும் கிராமி விருது பெற்ற கலைஞருமான எல். சங்கர், இசை உலகத்துக்கு அளித்த கொடைதான் டபுள் வயலின். டபுள் வயலினைத் தன் சித்தப்பாவிடம் வாசிக்கக் கற்றுக் கொள்ளத் தொடங்கியதும் ஜிஞ்ஜரின் இசைப் பயணம் புதிய பரிமாணத்தில் உலகெங்கும் பிரவாகம் எடுத்தது. கிழக்கையும் மேற்கையும் ஒரே புள்ளியில் சங்கமிக்க வைத்த அவரின் இசைக்கு மவுசு கூடியது.

‘பேஷன் ஆஃப் தி கிறிஸ்ட்’ திரைப்படத்தில் ஒரு சிறிய டபுள் வயலின் இசைச் சேர்ப்புக்காகச் சென்ற ஜிஞ்ஜரை, அந்தப் படத்தின் இணை இசையமைப்பாளராக்கினார் படத்தின் தயாரிப்பாளர் மெல் கிப்சன். ஏறக்குறைய 75 ராகங்களைப் பயன்படுத்தி அந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார் ஜிஞ்ஜர்.

இதைத் தொடர்ந்து, மைக் நிகோல்ஸின் ‘சார்லி வில்சன் வார்’ படத்துக்கும் இசையமைத்தார். ஜாக்கிசானின் ‘ஃபர்பிடன் கிங்டம்’ படத்திலும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். பீட்டர் கேப்ரியல், ஜாகிர் உசேன், ஸ்டீவ், சிவமணி போன்ற பல இசைக் கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகளை அளித்திருக்கிறார்.

2011-ல் ஃபிலிம் மேக்கர் இதழில் உலகின் கவனிக்கத்தக்க 25 பிரபலங்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புகழ்மிக்க சன்டேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலின் ஆலோசனைக் குழு உறுப்பினராக மார்க் ரஃபலோ, லேக் பெல், ரஷிதா ஜோன்ஸ் ஆகியோருடன் பணியாற்றியவர். தினம் தினம் புதுப்புது அனுபவத்துடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் ஜிஞ்ஜரின் இசைப் பயணங்கள், தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்