மனைவியின் பிரசவத்தைச் சாக்காக வைத்து நாகலிங்கத்துக்கு மாமியார் வீட்டில் சில நாட்களாவது தங்கிச் செல்ல ஆசை. “இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகல. புள்ள பாக்க வந்தவரு பேசாம என்கூட ஒரு பத்து நாளைக்கு இருக்கட்டும்னு சொன்னா போதும். நானும் அஞ்சாறு நாளைக்கு இருந்து வாய்க்கு ருசியா சாப்பிட்டுப் போவேன்ல” என்று நாகலிங்கம் நினைத்துக்கொண்டிருக்கும்போதே அவன் மாமியார் வந்துவிட்டாள்.
வந்ததுமே, “வாங்க மாப்பிள்ள. புள்ள பெறந்து இம்புட்டு நாள் கழிச்சா வருவாக? உம்மகூட என் சம்பந்தி வல்லையா? மருமவ புள்ள பெத்திருக்கான்னு தெரிஞ்சதுமே மருமவளுக்குக் கோழி, அரிசி, கருப்பட்டி எல்லாம் கொண்டுக்கிட்டு வரணுமில்ல? நாலு சம்மந்தம் பண்ணியிருக்க சம்பந்திக்கு இதெல்லாம் தெரியாதா? ஊர்க்காரக ஒரு வார்த்த பேசததுக்கு எடம் கொடுக்கலாமா?” என்று கடுகடுக்க, நாகலிங்கம் தலையைச் சொறிந்தான். அதோடு மாமியா மனசு குளிரட்டும் என்பதற்காக, “ஆத்தா இன்னும் ரெண்டு நாளையில வரணுமின்னு சொல்லுச்சி” என்றான் கொஞ்சம் பயத்தோடு.
வெறுக்க வைத்த சாப்பாடு
ஏனென்றால் அவன் ஆத்தா தேவியார் மீதும் தேவியாருடைய ஆத்தா மீதும் நிறைய குற்றம் கண்டுபிடித்து வராததற்கான காரணத்தை ஊரெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள். அரிசியும் கோழியும் வாங்க அவர் கையில் காசு இல்லை என்பதுதான் முதல் காரணம் என்பது இவனுக்கே தெரியும்.
“சரி மாப்பிள்ளை. சம்பந்தி வாரேல வரட்டும். நீங்க வாங்க சாப்பிட” என்று அழைத்துக்கொண்டு போனாள். அவனுக்கு மாமியார் சாப்பாடு வைப்பது பிடிக்கவே இல்லை. மாமியாரிடம் சாப்பிட எப்போதும் கூச்சப்படுவான். இப்போது தன் பெண்டாட்டி வந்து சோறு வைத்தால் கக்க கணிக்கச் செழிக்க சாப்பிடலாமே என்று நினைத்தவன் வேண்டா வெறுப்பாக வந்து உட்க்கார்ந்தான்.
மாமியார் வட்டில் நிறைய சோறு வைத்து குழம்பு ஊற்றினாள். மசால் போடாமல் இரண்டு வத்தல், சீரகம், மஞ்சள், கொஞ்சம் மல்லி, தேங்காய்ப் பாலெடுத்து வைத்த குழம்பு. ஏற்கெனவே நாக்கு செத்துக்கிடக்கும் அவனுக்கு ரொம்ப ருசியாக இருந்தது. சட்டி நிறையக் குழம்பிருந்தும் சிறு அகப்பையில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றும் மாமியாரை வெறுத்தான். இன்னும் கொஞ்சம் என்று கேட்டு வாங்கிச் சாப்பிடவும் அவனுக்குக் கூச்சமாயிருந்தது.
பின்வாசல் வழியே ஓட்டம்
அந்த நேரத்தில் யாரோ ஒருவர் இவன் மாமியாரைக் கூப்பிட, “சாப்பிடுங்க மாப்பிள்ள. இந்தா வாரேன்” என்று சொல்லிவிட்டு வெளியே போனாள். “உக்கும் நீ வச்ச சோறும் கொழம்பும் ஒரு வாய்க்குப் போதாது. பிறகென்னத்த சாப்பிடுறது?” என்று நினைத்தவன் அங்கேயிருந்த தூக்குப் போனியில் சட்டியிலிருந்து மொத்தக் குழம்பையும் ஊற்றிக்கொண்டு பின் வாசல் வழியாக இறங்கி, தன் ஊரைப் பார்த்து நடந்தான். ஓடினால் போனியில் இருக்கும் குழம்பு சிந்துமென்று ஒரே நடையாக வேகமாய் நடக்க ஆரம்பித்தான்.
நாகலிங்கத்தின் மாமியார் சாவகாசமாய்ப் பேசிவிட்டு வந்து பார்த்தால் மருமகனைக் காணோம். தேவியாரிடம் வந்து, “எங்கேடி உன் புருசன” என்றதும் அவள், “என்னம்மோ தெரியலத்தா. என்கிட்டகூடச் சொல்லாம பின் வாச வழியா ஓடுதாரு” என்றாள். உடனே மாமியார்க்காரி குழம்புச் சட்டியைப் போய்ப் பார்த்தால் சட்டியில் குழம்பே இல்லை.
இருந்த குழம்பையெல்லாம் அங்கிருந்த வெண்கலத் தூக்குப் போனியில் ஊற்றிக் கொண்டு போய்விட்டான் மருமவன் என்று நினைத்த மாமியாருக்குத் திக்கென்றது. குழம்பு மொத்தத்தையும் மருமகன் ஊத்திக் கொண்டு போய்விட்டாரே என்பதற்காக அல்ல. கறிக்குழம்பைக் காட்டு வழியே கொண்டுபோகும்போது அந்த வாடைக்கு அங்கே இருக்கும் இடிகிணத்திலும் புளியமரத்திலும் பேய் பிசாசுகள் வந்து மருமகனைக் கறிக்காக அடித்துக் கொன்று விடுமே என்றுதான் அவள் பயந்தாள்.
இரண்டு கரித்துண்டுகள்
அந்தக் குழம்புக்குள் இரண்டு அடுப்புக் கரியைப் போட்டால் பேய் மட்டுமல்ல; எந்தக் காத்தும் கறுப்பும் அண்டாது என்று அந்தக் காலத்தில் எல்லோருக்கும் ஒரு நம்பிக்கையிருந்தது. அதற்காக தேவியாரின் அம்மா அடுப்பில் எரிந்து அணைந்த இரண்டு கரித் துண்டுகளை எடுத்துக்கொண்டு கொல்லைப்புறமாக ஓடிவந்தாள்.
நாகலிங்கமோ நாம் ஓடினால் கறிக் கொழம்பு சிந்திவிடும் என்று வேகமாய் நடந்தான். அதோடு போகும்போது குழம் பிலிருந்து இரண்டு கறித்துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொள்ள வேண்டுமென்ற ஆசை அவனை நடக்கவிடாமல் செய்தது. ஒரு மரத்தின் மறைவில் நின்றுகொண்டு மூடியைத் திறந்தான்.
அதற்குள் மாமியாரின் குரல், “அய்யா மருமவனே என் அண்ணன் பெத்த பாலகனே. அந்தக் கறிக்கொழம்பை இங்க கொண்டாங்க இந்தக் கரித்துண்டப் போட்டு விடுதேன்” என்று சொல்லிக்கொண்டே ஓடினாள்.
நாகலிங்கத்துக்கோ ஓட்டமும் நடை யுமாய்ப் போகும் பரபரப்பில், “அய்யா மருமவனே அந்தக் கொழம்பக் கொண்டாங்க. நானு அந்தக் குழம்பில் இருக்க கறித்துண்டப் பெறக்கிக்கிடுதேன்” என்று கேட்டது. அவனால் தாங்கமுடியவில்லை. கறி தின்னு ஆறு மாத்தைக்கு மேல் ஆச்சு. இனி தீவாளி வந்தாத்தேன் கறி வாடையே தட்டுப்படும். அதுக்கு முன்ன நாம கறிய நெனச்சி, நெனச்சி காலு, கை வீங்கிப் போற அளவுக்கு வந்துடுவோம் பொலுக்கே என்று நினைத்தவன் இன்னும் வேகமாய் நடந்தான்.
மாமியாரும் விடுவதாயில்லை. அங்கங்கே கிணறுகளிலும் மரங்களிலும் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டு இப்போது யாரைப் பிடிப்போமென்று வெறிகொண்டு பேயாய் அலையும் இந்தப் பிசாசுகளிடம் மருமகன் சிக்கிவிடக் கூடாதே என்று அவளும் சேலையை வரிஞ்சி கட்டிக்கொண்டு ஓடினாள்.
அங்கே காடு கரைகளில் வேலை செய்தவர்கள், என்ன இது இந்த நட நடந்துக்கிட்டு கூப்பிடுதே. மாமியாள திரும்பிப் பாக்காம ஓடியாறான். அவளும் விடாம கரி கரின்னுக்கிட்டு ஓடியாரா. என்ன விஷயம்மென்று நாகலிங்கத்தை வழிமறித்து கேட்கு முன்னே அவன் மாமியாரும் வந்துவிட்டாள். இருவரிடமும் விஷயத்தைக் கேட்ட பிறகு சிரியோ சிரியென்று சிரித்தார்கள்.
(நிலா உதிக்கும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago