அன்றொரு நாள் இதே நிலவில் 13: எண்ணெய்யில் குளிக்கும் பிள்ளைகள்

By பாரததேவி

தாய்க்கு வெள்ளியும் செவ்வாயும் நல்லெண்ணெய்யைத் தலைகுளிர தேய்த்துக் குளிப்பாட்டி, முடியைக் காயவைத்து சாம்பிராணி புகை போடுவார்கள். அதேபோல் புதனும் சனியும் குழந்தையை நல்லெண்ணெய்யில் முக்கி எடுத்ததுபோல் காதுக்கெல்லாம் எண்ணெய் ஊற்றிக் கண்ணுக்கு விளக்கெண்ணெய் கட்டித் தேய்த்துச் சிறிது நேரத்துக்குப் பாயில் போட்டுவிடுவார்கள்.

எண்ணெய் மினுமினுப்போடு அந்தக் குழந்தை கையையும் காலையும் ஆட்டியவாறு நம்மைப் பார்த்து சிரிக்கும்போது அழகு என்றால் அப்படியொரு கொள்ளை அழகாயிருக்கும்.

அதன் பிறகு ஒன்றுவிட்டு ஒரு நாள் கறிக்குழம்புதான். இதற்காகவே இள வெடைக் கோழிகளையும் முட்டைக் கோழிகளையும் வளர்த்து வைத்திருப்பார்கள். பிள்ளைக் குட்டிகள் நிறைய இருப்பவர்கள் முதல் நாள் வைத்த கோழிக்கறியை எல்லாருக்கும் பகிர்ந்துவிட்டு அதன் கால்களை மட்டும் ரகசியமாய் ஒளித்துவைத்திருந்து, பிள்ளை பெற்றவளுக்குக் குழம்பு வைத்துக் கொடுப்பார்கள். அதோடு காடு, கரைகளில் தேடிப் பார்த்து காடை, கௌதாரி என்று பிடித்து வருவார்கள்.

பிள்ளை வளர்க்கும் தேன்

பிள்ளைபெற்ற வீட்டில் மருந்துக்குத் தேன் வேண்டுமென்று எங்கே தேன் கூடு இருக்கிறது என்று தேடிப் பார்த்து ஒரு கலயம் தேனை எடுத்து வைத்துக்கொள்வார்கள். வளரும் குழந்தைகளுக்குத் தேன் நல்ல மருந்து. வயிறு உப்புசம் கண்டால் சிறு பெருங்காயத் துண்டை எடுத்து, பிள்ளை நாக்கில் வைத்தால் பிள்ளை முகம்சுளித்து ஓங்கரிக்கும்.

அதையே தேனுடன் கலந்து கொடுத்தால் சப்புக்கொட்டிக்கொண்டு சாப்பிடும். மிளகு, சுக்கு என மருந்து கொடுக்கும் வேலைகளில் எல்லாம் தேனோடு கலந்துதான் கொடுப்பார்கள்.

அது மட்டுமல்ல, சிறு பிள்ளைகள் தவிர்த்து பெரிய ஆட்கள் முத்தம் கொடுத்தால் வெறும் வாயோடு கொடுக்கக் கூடாது. கறி, கருவாடு, புளிச்ச கஞ்சியும் சளிச்சகஞ்சியும் சாப்பிட்டு இருப்பவர்கள்  முத்தம் கொடுக்கும்போது பிள்ளைகளுக்கு ஆகாமல் போய்விடும்.

குழந்தைகளுக்கு ‘நாய் சீர்’ அடித்துவிடக் கூடாது. கணவனும் மனைவியும் ஒன்றாகப் ‘பேசிவிட்டு’ குளிக்காமல் அப்படியே பிள்ளையைத் தூக்கக் கூடாது. வீட்டில் இருக்கும் அடைக்கோழியின் சீர்பட்டுவிடக் கூடாது. இந்த சீர்கள் எல்லாம் குழந்தைக்கு ஆகாது. இது பட்டுவிட்டால் அவ்வளவுதான்.

குழந்தையின் முகமே மாறிப்போகும். நய் நய்யென்று அழுதுகொண்டே இருக்கும். பாலே குடிக்காது. அப்படியே திரித்த கயிறாய் நோஞ்சானாகப் போய்விடும். இதற்கு வில்வ இலையோடு சிறிது மஞ்சளையும் சேர்த்து இடித்து கையில் சிறு முடிச்சாகக் கட்டிவிடுவார்கள்.

சீர் பட்டால் நீக்கும் மருந்து

தேளைப் போலவே ‘நட்டுவக்காலி’ என்று ஒன்று இருக்கும். தேள் கொட்டினால்கூடப் பிழைத்துவிடுவார்கள். ஆனால், இந்த நட்டுவக்காலி கொட்டினால் உயிர் பிழைப்பது அரிது. இது படப்பு அடியிலும் செடி புதரிலும் நடமாடிக்கொண்டிருக்கும்.

இதைக் கண்டால் போதும். உடனே அடித்து மண்ணுக்குள்ளிட்டுப் புதைத்துவிடுவார்கள். ஒருவாரம் கழித்து தோண்டி எடுத்தால் அதன் கொடுக்கிலிருந்து தட்டையாக நாலைந்து பாசிகள் கிடைக்கும். அதை மஞ்சள் தடவிய கயிறில் கோத்துப் பிள்ளைகளின் கையில் கட்டிவிடுவார்கள்.

பிள்ளைகள் கையை அடிக்கடி முகத்துக்குக் கொண்டுபோவதால் இந்த ‘சீர்கள்’ எல்லாம் அடிக்காது. ஐந்து, ஏழு மாதங்கள் வரைதான் பிள்ளைகள் தாயிடமும் பாட்டி, தாத்தாவிடம் வளரும். அதன் பிறகு பால் குடிப்பதற்கு மட்டும்தான் அம்மாவிடம் வரும். மற்ற நேரமெல்லாம் கொஞ்சம் வளர்ந்த பையன்களும் பெண்களும்தாம் தூக்கிக்கொண்டு அலைவார்கள்.

அப்போது படிப்பதற்கு முக்கியமில்லாத காலமாதலால் பத்து, பன்னிரண்டு வயதுவரை ஊருக்குள்தான் பிள்ளைகள் நொண்டி, எட்டாந்தட்டு என்று விளையாடிக் கொண்டிருப்பார்கள். உள்ளூரில் பள்ளிக்கூடம் இருந்தால் அப்படி இருப்பது அபூர்வம்.

அப்படி இருந்தாலும் வாத்தியார் வந்து பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு போவார். ஆனால், வாத்தியார் வருகிறார் என்றாலே பிள்ளைகள் காற்றாகப் பறந்து சோளக்காட்டிலும் கம்பங்காட்டிலும் ஒளிந்து கொள்வார்கள்.

தன் பிள்ளை எப்படியும் படிக்க வேண்டுமென்று எண்ணுகிறவர்கள் பிள்ளைகளை அடித்து இழுத்துக்கொண்டு போய் வாத்தியாரிடம் விட்டுவிட்டு வருவார்கள். கூடவே, ஒரு மரக்கால் தானியமும் போகும். அது போதாதென்று புஞ்சையில் விளையும் காய்களில் முதல் காய் வாத்தியார் வீட்டுக்குத்தான் போகும்.

ஊருக்குள் ஒருத்தி பிள்ளை பெற்றிருந்தால் பிள்ளையை ஆசையாய் தூக்க வருகிறவர்கள் வெற்றிலை போட்டு இருக்கிறார்களோ இல்லையோ பிள்ளை பிறந்த வீட்டில் எப்போதும் வெற்றிலை பாக்கு வாங்கி, சுண்ணாம்பு போட்டு தட்டு நிறைய வைத்திருப்பார்கள். அப்போது கிராமங்கள் எங்கும் பச்சை வெற்றிலைதான் பரவியிருந்தது.

பிள்ளை பெற்றவள் மட்டுமல்ல; கொஞ்சம் இருட்டு வேளைகளில் தனியாகப் போகிறவர்கள் எல்லோருமே மடியில் வெற்றிலையை எடுத்துக்கொண்டு போவார்கள். வெற்றிலையை மடியில் வைத்திருப்பது தெய்வம் நம் கூடவே வருவதற்குச் சமம் என்று நினைத்தார்கள்.

நாகலிங்கத்தின் ஆசை

தேவியார் பிள்ளை பெற்றிருந்தாள். அவள் கொஞ்சம் வசதியானவள் என்பதால் தினமும் இரண்டு கோழி அடித்து எல்லோரும் கறிக்குழம்பும் நெல்லுச் சோறுமாகச் சாப்பிட்டார்கள். அவள் புருசன் நாகலிங்கமோ வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்தவன். சோளக்கஞ்சி, கூழ் தவிர வேறு நல்ல சாப்பாடில்லை.

வெஞ்சனமும் சரியில்லை. வெறும் பச்சை வெங்காயம்தான். பிள்ளைகள் நிறைந்த வீடென்பதால் என்ன குழம்பு வைத்தாலும் ஒரே நேரத்தில் காலியாகிவிடும். நாகலிங்கம் தன் பிள்ளையைப் பார்ப்பதற்காக மாமியார் வீட்டுக்கு வந்திருந்தான்.

வீட்டுக்குள் நுழையும்போதே கறியின் வாசம் அவனைச் சூழ்ந்துகொண்டது. தன் பிள்ளையைப் பார்ப்பதைவிட அவனுக்குக் கறிக்குழம்பு மீதுதான் ஆசை அதிகமாக இருந்தது. யாருக்கும் தெரியாமல் நாக்கைச் சொடக்குப் போட்டுக்கொண்டான். பிறகு நினைவெல்லாம் கறிக்குழம்பு மீதிருக்கப் பிள்ளையைப் போய்ப் பார்த்தான்.

தேவியாருக்குப் புருசனைப் பார்த்ததுமேகோபமாயிருந்து. அப்பவும், “நமக்குப் புள்ள பிறந்து பத்து நாளாச்சி. இப்பத்தேன் சவாசமா புள்ளயப் பாக்க வாரீராக்கும்? ஊர்க்காரங்களுக்கு என்னால பதில் சொல்லி முடியல. உன் புருசன் இன்னும் வந்து பாக்கலையாக்கும்.

தல புள்ளயா ஆம்பளப்புள்ள பெத்திருக்கே; இதுக்குள்ள ரெண்டுதரம் வந்து பாத்திருக்க வேண்டா மாக்குமின்னு என்ன நச்சி எடுத்துட்டாக” என்று எரிச்சலோடு கேட்டாள். அவன் கறியின் வாசம் பிடித்துக்கொண்டே, ‘‘எங்கே வர முடியுது? ஒரு நாளைக்கு வீட்டுல இருந்தாலும் அன்னைக்குப் பொழுது எல்லாருக்கும் அர வவுத்துகே கஞ்சியாப் போவுது. என்னை என்ன செய்யச் சொல்றே?” என்றான் மனத்தாங்கலுடன்.

ஒன்பது மாதத்தில் பிள்ளைப்பேற்றுக்காக மாமியார் வீட்டுக்கு வந்தவள். நிழல் வாட்டத்தில் மாநிறமாக மாறியதையும் நல்ல சாப்பாடு சாப்பிட்டதில் உடம்பில் மினுமினுப்பு ஏறி இருப்பதையும் கண்டவனுக்குப் பொண்டாட்டி மீது கோபமாயிருந்தது. நம்ம வீடு இருக்க இருப்பு அவளுக்குத் தெரியும். நீரும் என்கூட வாரும். நானு புள்ள பெறந்தண்டியும் என்கூட இருமின்னு என்னையும் கூட்டிட்டுவரக் கூடாதாக்கும் என்று கோபத்தோடு எண்ணிக்கொண்டான்.

(நிலா உதிக்கும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்.

தொடர்புக்கு: arunskr@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்