முகங்கள்: வெண்டையால் ஒளிவீசும் மாணவிகள்

By எல்.ரேணுகா தேவி

இயற்கை என்றுமே நம்மை வஞ்சிக்காது என்பது துணி களுக்கும் பொருந்தும். இயற்கை இழைகளால் நெய்யப்பட்ட ஆடைகள் நம் உடலுக்கு ஊறு விளைவிப்ப தில்லை. இயற்கை நூலிழைக் காகப் பருத்தியை மட்டுமே பெருவாரியாக நம்பியிருக்கிறோம். இந்நிலையில் பருத்தி நூல்களுக்கு மாற்றாக ஆமணக்குச் செடி, சோற்றுக் காற்றாழை, வெண்டைக்காய்ச் செடி, பாக்கு மட்டை, தேங்காய் நார் ஆகிய இயற்கைப் பொருட்களைக் கொண்டு புதிய வகை நூலிழைகளைக் கண்டு பிடித்துள்ளனர் அவினாசிலிங்கம் மனையியல், மகளிர் உயர்கல்வி நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் மனையியல் துறை மாணவிகள்.

பொதுவாக, மனையியல் பிரிவு என்றாலே குடும்பத்தை எப்படி நடத்துவது, சமையல் செய்வது போன்றவை பற்றித் தான் கற்றுத்தரப்படும் என்ற கருத்து நிலவுகிறது. “இது உன்மைதான். ஆனால், மனையியல் துறையின் உட்பிரிவுகளில் ஜவுளித் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்து வதற்கான பாடப் பிரிவுகளும் உண்டு. இதில் இயற்கை முறையில் நூலிழைகளைத் தயாரிப்பது போன்ற ஆராய்ச்சிகளிலும் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்” என்கிறார் பல்கலைக்கழக மனையியல் புல முதன்மையர் என்.வாசுகி ராஜா.

இக்கல்லூரியின் மனையியல் துறை மாணவிகளும் பேராசிரியர்களும் ஜவுளித் துறையில் புதுமை யான விஷயங்களைக் கண்டுபிடிப்பது, ஆடை வடிவமைப்பு எனப் புதுப் புது விஷயங்களைச் செய்து வருகிறார்கள். இவர்கள் அனை வரும் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக ஆமணக்குச் செடி, சோற்றுக் கற்றாழை, வெண்டைக்காய்ச் செடி, தேங்காய் நார், பாக்கு மட்டை என எளிதாகக் கிடைக்கும் இயற்கைப் பொருட்களில் இருந்து நூலிழைகளைப் பிரித்தெடுப் பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுவந்தனர். தற்போது இந்தச் செடிகளிலிருந்து இயற்கை முறையிலான நூலிழைகளைப் பிரித்தெடுக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பை முழுமையாகவும் பெரிய அளவிலும் எடுத்துச் செல்ல கருவிகள், இயந்திரங்கள் ஆகியவை தேவைப்பட்டுள்ளன. இதற்காகப் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் வலியுறுத்தி 56 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை முதல்கட்ட ஆராய்ச்சிகளுக் காகப் பெற்றுத் தந்துள்ளார் வாசுகி ராஜா.

தொடங்கிவைத்த மாணவி

“எங்கள் கல்லூரி மாணவி  கிருஷ்ணப்ரியா பாலாஜி தான் இதுபோன்ற ஒரு மாற்று யோசனையை முன்வைத்தார். 2007-ல் தன்னுடைய முதுநிலை மனையியல் ஆராய்ச்சிப் பணிக்காக ஆமணக்குச் செடியிலி ருந்து நூலிழை தயாரிக்கும் உத்தியை அவர் கண்டுபிடித்தார். அதன் பிறகுதான் வேறு எந்தெந்தச் செடிகளிலிருந்து நூலிழைகளைப் பிரித்தெடுக்க முடியும் என்ற முயற்சியில் துறை மாணவிகளும் பேராசிரியர்களும் இணைந்து செயல்படத் தொடங்கினோம்” என்கிறார் வாசுகி ராஜா.

தற்போது வங்கதேசத்தில் கல்லூரிப் பேராசிரியராக உள்ளார் கிருஷ்ணப்ரியா பாலாஜி. மீண்டும் அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்புக்கு விண்ணப்பித் துள்ளார். “எனக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், சூழ்நிலையால் மனையியல் துறையில் சேர்ந்தேன். முதுகலைப் படிப்பின்போது அனைத்து மாணவர்களும் ஏதாவது ஒரு தலைப்பில் ஆராய்ச்சி செய்ய வேண்டும். மனையியல் படிப்பில் ஆடைகளுக்கான வடிவமைப்பு, நூலிழைகள் குறித்த பாடப்பிரிவும் உள்ளது. இதைப் பயன்படுத்திச் செயற்கை இழைக்கு மாற்றாக இயற்கை முறையில் இழைகளைத் தயாரிக்க முடிவுசெய்தேன். பொதுவாகவே, நான் இயற்கை மருத்துவ முறைகளைத்தான் பின்பற்றிவருகிறேன். உடல் சார்ந்த எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு ஆமணக்கு எண்ணெய்யைத்தான் பயன்படுத்துவேன். அப்போதுதான் சாலையோரங்களில் ஏராளமாக வளர்ந்திருக்கும் ஆமணக்குச் செடியின் வேரிலிருந்து நூலிழையைப் பிரித்தெடுக்க முடிவுசெய்தேன். ஆமணக்குச் செடியின் வேர் கடினமாக இருக்கும். இதனால், அந்தச் செடியைத் தேங்காய் நார் பிரித்தெடுக்கும் இயந்திரத்தில் கொடுத்து முதல்கட்டமாக நார் தயாரித்தேன். பிறகு அந்த நாரை வேறோர் இயந்திரத்தில் கொடுத்து சமநிலைக்குக் கொண்டுவந்தேன். எனக்கு மருத்துவம் மீதிருந்த ஆசையால் ஆமணக்கு நாரை மருத்துவ நூலிழையாகப் பயன்படுத்த முடிவுசெய்தேன். அதற்காகச் சில பரிசோதனைகளை மேற்கொண்டு காயங்களுக்குப் போடப்படும் பட்டையைக் (bandage) கண்டுபிடித்தேன். இந்தப் பட்டை யைக் காயத்தின் மீது போட்டால் உடனடியாக நிவாரணம் தரக்கூடியதாக இருந்தது. அதேபோல் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கப் பயன்படுத்தப்படும் வெந்நீர்ப்பையை உருவாக்கினேன். இதை, ‘கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை’க்குக் கொடுத்து மூட்டு வலி பிரச்சினை உள்ளவர்கள் மத்தியில் சோதனை செய்துபார்த்ததில் நல்ல பலன் கிடைத்தது. மீண்டும் இதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முனைவர் படிப்பில் சேர்ந்துள்ளேன்” என உற்சாகமாகக் கூறுகிறார் கிருஷ்ணப்ரியா பாலாஜி.

இயற்கையே நல்லது

இயற்கைக்கு எதிராக மரபணு மாற்றப்பட்டு, ‘பிடி பருத்தி’ என்ற பெயரில் பருத்திச் செடிகள் வளர்க்கப்படுகின்றன.  உடலுக்கேற்ற தரமான பருத்தித் துணிகளைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. இன்றைக்கு நாம் அணியும் ஆடையில் 60 சதவீதம் செயற்கை நூலிழைகளால் உருவாக்கப்பட்டவை. இதுபோன்ற ஆடைகளைத் துவைக்கும்போது வெளியேறும் ஞெகிழிக் கழிவால் நிலத்தடி நீரும் கடல் நீரும் மாசடைகின்றன. இந்நிலையில் மனையியல் துறையினர் இயற்கைப் பொருட்களில் இருந்து நூலிழை களைப் பிரித்தெடுப்பது ஜவுளித் துறையில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதேபோல் ஞெகிழிச் சாலைகளுக்குப் பதிலாக இந்த நாரைப் பயன்படுத்தி உறுதியான சாலைகளை அமைக்க முடியும் என இவர்களின் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சொட்டு நீர்ப்பாசன முறையில் விவாசயம் செய்யப்படும் பகுதிகளுக்கு இந்த நாரைப் பயன்படுத்த முடியும். இந்த நாரைச் செடி, மரங்களைச் சுற்றிப் போடுவதால் தண்ணீர் எளிதில் ஆவியாகாது. மேலும், ஒலித்தடுப்பான்களாகவும் குளிர்த்தடுப்பான் களாகவும் இவற்றைப் பயன்படுத்தலாம் என ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. “எங்களுடைய முதல்கட்ட ஆராய்ச்சி முடிந்திருக்கிறது. வாழைநாரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் இழைகளைக் கொண்டு ஆடைகளை நெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அடுத்தகட்ட ஆராய்ச்சிக்குப் பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவியை நாடியுள்ளோம். அப்போதுதான் எளிமையான பொருட்களால் புதுமையான நூலிழைகளைக் கண்டுபிடித்து இயற்கையைக் காத்து நாமும் நலமாக வாழ முடியும்” என்கிறார் என். வாசுகி ராஜா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்