நம்பிக்கை முனை: உயரக் குறைவே என் உயரம்

By ஜெய்

இரு வாரங்களுக்கு முன்பு கேரள உயர் நீதிமன்றத்தில் பலர் வழக்கறிஞர் களாகப் பதிவுசெய்துகொண்டனர். அவர்களில் ஒருவர் சிறப்பானவர். அவர், ப்ரமிதா அகஸ்டின். வழக்கறிஞராகப் பதிவுசெய்யும் நிகழ்ச்சி என்பது ஒரு கொண்டாட்டமாக அனுசரிக்கப்படுவதுண்டு. வாழ்த்துச் சுவரொட்டிகளும் பட்டாசு போடும் அமர்க்களங்களும் சில நேரம் நடப்பதுண்டு. இப்படிச் செய்யக் கூடாது என பார் கவுன்சில் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

ஆனால், ப்ரமிதாவின் இந்தப் பதிவு, உண்மையில் கொண்டாடப்பட வேண்டி யது. உடல் அளவிலும் மன அளவிலும் பல்வேறு நெருக்கடிகளுக்குப் பிறகு இந்த உச்சத்தை அவர் தொட்டிருக்கிறார்.

கேலியால் விளைந்த மாற்றம்

ஆலப்புழை மாவட்டத்திலுள்ள குத்தியதோடு கிராமத்தைச் சேர்ந்தவர் ப்ரமிதா (28). சராசரிக்கும் குறைவான 3½ அடி உயரம் கொண்ட அவருக்கு எலும்புத் தேய்மானக் குறைபாடும் உண்டு. இவரது குடும்பமோ கடனுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் தள்ளாடும் உழவுத் தொழிலைப் பின்னணியாகக் கொண்டது. அதனால், ப்ரமிதாவின் மருத்துவச் செலவுக்குத் திண்டாட்டம்தான். இந்தச் சூழலில்தான் அவர் வளர்ந்துள்ளார்.

சராசரி மனிதர்களில் இருந்து வேறு பட்டு இருப்பவர்களைச் சிறப்பானவர் களாகத்தாம் பார்க்க வேண்டும். ஆனால், நம் சமூகம் அவர்களைக் குறைபாடு உள்ளவர்களாகப் பாவிக் கிறது. ஒரு கணத்தில் அவர்களை நகைச்சுவையாகப் பார்க்கிறது; கேலிக்கு உள்ளாக்குகிறது. இதனால், சற்றுப் பலவீனமாக இருக்கும் சிலர் மேலும் தங்களுக்குள் ஒடுங்கிவிடும் ஆபத்து உண்டு. இதெல்லாம் ப்ரமிதாவுக்கும் நடந்துள்ளது. தொடக்கப் பள்ளியில் படிக்கும்வரை அவருக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. எல்லாக் குழந்தைகளுடனும் ஆடிப்பாடி வளர்ந்துள்ளார்.

ஆனால், வயது ஆக ஆக அவர் வயதுடைய குழந்தைகள் அவரைவிட உயரமாக வளரத் தொடங்கினார்கள். பெற் றோர் இதைக் கவனித்திருக்கிறார்கள். ஆனால், தான் பேசுபொருளாக ஆன பிறகுதான் இதைக் குறைபாடு என ப்ரமிதா நினைத்தி ருக்கிறார். சக மாணவர்களால் கேலிக்கு உள்ளாகியிருக்கிறார். இந்தக் கேலிப் பேச்சுகளிலிருந்து மகளின் மனம் பலவீனப்படாமல் இருக்க, அவருடைய பெற்றோர் அவரை வேறொரு பள்ளிக்கு  மாற்றியிருக்கிறார்கள். முதலில் தனது சொந்த ஊரிலேயே படித்து வந்தவர், பிறகு கொச்சியிலுள்ள திருக்காகரை உடனுறைப் பள்ளியில் சேர்ந்திருக்கிறார். அங்கே அவருடைய அத்தை கன்னியாஸ்திரியாக இருந்தார். அவர் ப்ரமிதாவைக் கவனித்துக்கொண்டார்.

தடைபடாத கல்வி

இந்தக் காலகட்டத்தில் ப்ரமிதாவின் குடும்பம் பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்துள்ளது. வங்கிக் கடனுக்குத் தவணைகூடச் செலுத்த முடியாத நிலை. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அடுத்தடுத்து நோய் வந்தது. ஒருவருக்கு இதய நோய், இன்னொருவருக்குச் சிறுநீரகப் பிரச்சினை. ஆனாலும், ப்ரமிதாவுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும் என்பதில் மட்டும் அவர்கள் உறுதியாக இருந்துள்ளனர். அதனால், கடனுடன் ப்ரமிதாவின் கல்வியையும் சேர்த்து வளர்த்துள்ளனர். அவரும் சிரத்தையுடன் படித்துள்ளார்.

ஆனால், எலும்புத் தேய்மானம் உடலளவிலும் மனதளவிலும் அவரைப் பாதித்தது. அதனால், படிக்க முடியாமலும் தேர்வு அறையில் அமர்ந்து படித்ததை எழுத முடியாமலும் அவதிப்பட்டுள்ளார். அவரால் கடினமான பணிகளைச் செய்ய முடியாமல் போனது. நீண்ட நேரம் நடக்க முடியாமல் சிரமப்பட்டார். உயரம் குறைவு என்ற கவலைக்கு இடையில், இந்த உடல் கோளாறுகளும் சேர்ந்துகொண்டன. ஆனால், ப்ரமிதா சோர்ந்துவிடவில்லை. ‘உயரக் குறைவே என் உயரம்’ என்ற மலையாளக் கவி குஞ்ஞுண்ணியின் வரிகளுக்கு ஏற்ப கூடுதல் உற்சாகத்துடன் எழுந்து வந்தார். பள்ளிக் கல்வி முடித்து ஆலுவா புனித சேவியர் பெண்கள் கல்லூரியில் இளங்கலைப் பொருளாதாரப் பிரிவில் சேர்ந்தார்.

இதற்கிடையில் அவரது குடும்பத்தின் பொருளா தார நெருக்கடியும் அதிகரிக்கத் தொடங்கியது. விவசாயத்துக்காக அவருடைய பெற்றோர் வங்கியில் வாங்கியிருந்த லட்சம் ரூபாய் கடன், வளர்ந்து அதிகரித்திருந்தது. ப்ரமிதாவின் தந்தை அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றார். 1996-ல் தொடங்கிய இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்துவந்தது. 2001-ல்

வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்த்து அதைவிட 20 மடங்குத் தொகையைச் செலுத்த வேண்டும் எனத் தீர்ப்பு வந்தது. ஆனால், வழக்கறிஞர்கள் இந்தத் தீர்ப்பு குறித்த செய்தியை ப்ரமிதாவின் தந்தையிடம் மறைத்துவைத்துவிட்டனர். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு கடன் தொகைக்காக சொத்துகளை ஜப்தி செய்ய அதிகாரிகள் வந்தபோதுதான், வழக்கறிஞர்கள் தங்களை ஏமாற்றியது அவர்களுக்குத் தெரியவந்தது.

வழக்கறிஞர்கள் தங்கள் குடும்பத்தை ஏமாற்றிய இந்தச் சம்பவம் ப்ரமிதாவைப் பாதித்தது. அதனால், இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யும்போது, தன் குடும்பத்தின் சார்பில் தானே வாதாடி நியாயம் பெற வேண்டும் என உறுதிபூண்டார். இளங்கலைப் படிப்புக்குப் பிறகு எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார்.

சுடர்விடும் நம்பிக்கை

இனி, தங்கள் குடும்பத்தின் இடர்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தீர்த்துவிடலாம் என ப்ரமிதா நம்பிக்கொண்டிருந்தார். இதற்கிடையில் மேலும் ஒரு நெருக்கடி, அவரது குடும்பத்துக்கு வந்தது. கடனும் நோயும் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்த காலத்தில் புதிய வரவாக இயற்கைப் பேரிடரும் சேர்ந்துகொண்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் இரவொன்றில் அழையா விருந்தாளியாக கேரளத்துக்குள் மழை வெள்ளம் புகுந்து பலருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. அவற்றுள் ஒன்றாக ப்ரமிதாவின் குடும்பமும் ஆனது. சுதாரிப்பதற்குள் வீட்டுக்குள் புகுந்த வெள்ளம், ப்ரமிதாவை மூழ்கடித்தது. உடனடியாக முகாம்களில் அவரது குடும்பம் தஞ்சமடைந்தது. வெள்ளம் அவர்களது சிறிய வீட்டையும் மீதமிருந்த கொஞ்சம் நம்பிக்கையையும் கொண்டு போய்விட்டது. இப்போது தகரக் கொட்டையில்தான் ஜீவிதம்.

இந்தச் சூழலில்தான் ப்ரமிதா அதிகாரபூர்வமாக வழக்கறிஞர் ஆகியிருக்கிறார். உண்மையில் அவர்களது குடும்பத்தைப் பொறுத்தவரை இது பெருநாள் கொண்டாட்டம். அவர் வாதாடக்கூடிய முதல் வழக்காக அவரது குடும்பக் கடன் வழக்கு இருக்கும். அதில் அவர் வெற்றியும் பெற வேண்டும். அரசு உதவியுடன் கட்டப்பட்டுவரும் அவர்களது வீடுபோல், இனி அந்தக் குடும்பத்தின் நம்பிக்கையும் வளரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்