பரபரப்பான பெருநகரங்களில் வேலைக்குப் போகாத பெண்களைப் பார்ப்பதே அரிது. இன்றைக்குப் பெண்கள் வேலைக்குச் செல்வது சமூகத்தின் இயல்பாகிவிட்டது. ஆனால், அவர்கள் அலுவலகத்துக்குச் சென்றுவரப் போதுமான போக்குவரத்து வசதி இருக்கிறதா? எல்லாப் பெண்களாலும் இரு சக்கர வாகனங்களிலோ தனி வாகனம் அமர்த்தியோ அலுவலகம் சென்றுவர பொருளாதாரச் சூழல் ஒத்துவருமா? பெரும்பாலானவர்கள் அலுவலகம் செல்ல மாநகரப் பேருந்தையே நம்பியுள்ளனர். வேலைக்காக நாள்தோறும் நெரிசல்மிக்க மாநகரப் பேருந்தில் பயணம் செய்வது, அலுவலக வேலையே எளிதானது என்று எண்ணச்செய்துவிடும் அளவுக்கு மோசமாக உள்ளது.
women bus1
கூட்டம் பிதுங்கிவழியும் மாநகரப் பேருந்தில் பயணம் செய்யும் பெரும்பாலான பெண்களுக்குப் பாலியல் சீண்டல் என்னும் தொந்தரவு தொடர்ந்துவருகிறது. இந்த அவஸ்தையிலிருந்து அவர்கள் தப்பிக்க ஒரே வாய்ப்பு மகளிர் பேருந்துதான். பெண்களுக்காக பிரத்யேகமாக இயக்கப்படும் இந்த மகளிர் பேருந்துகள் தற்போது அதிகமாகத் தேவைப்படுகின்றன என்பதே யதார்த்தம். ஆனால், அந்தத் தேவையைச் சமாளிக்கும் அளவுக்கு மகளிர் பேருந்துகள் நகரத்தில் வலம்வருவதைப் பார்க்க முடியவில்லை.
போராடிப் பெற்ற பேருந்துகள்
அலுவலகம் செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள், தனியாகப் பயணம் மேற்கொள்ளும் பெண்கள் ஆகியோரின் பாதுகாப்பை வலியுறுத்தி, பல்வேறு மகளிர் அமைப்புகள் நடத்திய தீவிரமான போராட்டங்களுக்குப் பிறகே, தமிழகத்தில் மகளிர் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், இன்றோ ‘மகளிர் பேருந்து’ என்னும் அந்தச் சிவப்பு வண்ண பெயர்ப் பலகையைப் பார்ப்பதே அரிதாக இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை போன்ற மாநகரங்களில் பெண்களுக்காக இயக்கப்பட்ட மகளிர் பேருந்துகள் எங்கு போய், யாருக்காகக் காத்துக்கிடக்கின்றனவோ தெரியவில்லை.
இது குறித்து உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில இணை அமைப்பாளர் லதா, “பெண் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்த அளவுக்கு, மகளிர் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. புறநகர் ரயில்களிலேயே மகளிருக்கு என்று தனியாக லேடீஸ் ஸ்பெஷல் ரயில்களும் பெட்டிகளும் இருக்கும்போது, அதிக அளவில் பெண்கள் பயணம் செய்யும் மாநகரப் பேருந்துகளில் ஏன் போதுமான எண்ணிக்கையில் மகளிர் சிறப்புப் பேருந்துகளை இயக்கக் கூடாது? இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப அனைத்து வழித்தடங்களிலும் அலுவலக நேரத்தில் மகளிர் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட வேண்டியது அவசியம்” என்கிறார்.
கடந்த ஐந்து வருடங்களாக பஸ்ஸில் பயணம் செய்து வரும் பெண் பயணி ஒருவர், “நான் போகும் செங்குன்றம் வழித்தடத்தில் இதுவரைக்கும் ஒரு லேடீஸ் ஸ்பெஷல் பஸ்ஸைக்கூடப் பார்த்தது இல்லை. கூட்டம் அதிகமாக இருக்கிற பஸ்ஸில் ஏறினா, நிச்சயமாக யாராவது ஒரு ஆண் பாலியல் சீண்டலில் ஈடுபடுவார். இந்த மாதிரி சம்பவம் எனக்கும் நடந்திருக்கு. அப்போ எல்லாம் அந்த பஸ்ஸில் இருந்து இறங்கி வேற பஸ் புடிச்சு போவேன். எத்தனை முறை திட்டினாலும் பல ஆண்கள் நெரிசலின்போது பேருந்தில் தவறாகத்தான் நடந்துக்கொள்கிறார்கள். பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள லேடீஸ் சீட்டுல உட்கார்ந்து கொள்வார்கள். எழுந்திருக்க சொன்னாலும் காதுல வாங்காத மாதிரி இருப்பாங்க, இல்ல கால் அடிபட்டு இருக்குன்னு ஏதாச்சும் ஒரு சாக்கு சொல்லுவாங்க. அதேபோல் லேடீஸ் நிற்கும் பக்கமாகத்தான் அவங்களும் நிப்பாங்க.
கொஞ்சம் திரும்பி நில்லுங்க எனச் சொன்னாலும் கேட்கமாட்டாங்க. எத்தனை நாளைக்கு இதை எல்லாம் சகித்துக்கொள்ள முடியும்? இதனால்தான் சில சமயம் வாடகை ஆட்டோ அல்லது வாடகை கார் தேட வேண்டியுள்ளது. இதுவே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் லேடீஸ் ஸ்பெஷல் பஸ் இருந்தா இதுபோன்ற பிரச்சினைகள் இருக்காது” என்கிறார்.
சாலையில் ஓட வேண்டும்!மாநகரப் போக்குவரத்து கழக இணையதளத்தில் சென்னையில் மட்டும் சுமார் 250 மகளிர் பேருந்து இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் மட்டுமே சுமார் நாற்பது லட்சம் பேர் மாநகரப் பேருந்தில் பயணம் செய்கின்றனர். இதில் சரிபாதிப் பேர் பெண்கள் என்பதை மறந்துவிட முடியாது.
சென்னையில் 250 பேருந்துகள் ஓடுகின்றனவா என்று ஆச்சரியத்துடன் கேட்கும் லதா, “அரசு மகளிர் கல்லூரிகள் உள்ள வழித்தடங்களில் மட்டும் காலை ஒரு முறை, மாலை ஒரு முறை எனச் சில பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அப்படிப் பார்த்தால்கூட சென்னையில் உள்ள நான்கு அரசு மகளிர் கல்லூரிகளில் ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும்தான் குறிப்பிட்ட வழித்தட எண்கள் கொண்ட மகளிர் பேருந்துகளை இயக்க முடியும். இணையதளத்தில் பேருந்துகளின் எண்ணிக்கை காட்டினால் மட்டும் போதாது. பெண்களின் சிரமங்களைப் புரிந்துகொண்டு சாலைகளிலும் மகளிர் பேருந்துகளை அனைத்து வழித்தடங்களிலும் இயக்க வேண்டும்” என்று கோருகிறார்.
13CHLRD_M.Chandran எம்.சந்திரன்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் துணை தலைவர் எம்.சந்திரன், “சென்னை மாநகரத்தில் 250 மகளிர் பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல் அளித்துள்ளது. சில மகளிர் பேருந்துகள் மட்டும், அரசு மகளிர் கல்லூரிகள் உள்ள வழித்தடங்களில் அதுவும் ஒரு வேளை மட்டுமே இயக்கப்படுகின்றன. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தரும் தகவலின்படி 250 மகளிர் பேருந்துகளும் இயக்கப்படுகின்றனவா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும். அதேபோல் மதுரை மாநகரில் நான்கு மகளிர் பேருந்துகளும் திருச்சி பேருந்து நிலையம் முதல் சத்திரம் பேருந்து நிலையம் வரை ஐந்து மகளிர் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் அனைத்தும் காலை ஒரு வேளை மட்டும்தான் இயக்கப்படுகின்றன” என்று யதார்த்த நிலையைச் சொல்கிறார்.
அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் பலர் குழுவாக இணைந்து வாடகைக்கு வேன் போன்ற வாகனங்களை அமர்த்தி அலுவலகங்களுக்குச் சென்றுவரும் போக்கும் நகரங்களில் பரவலாகியிருக்கிறது. அதேபோல் கார், ஆட்டோ, ஷேர் ஆட்டோ போன்ற வாகனங்களிலும் பெண்கள் பயணம்செய்கிறார்கள். சௌகரியமாகவும் நிம்மதியாகவும் அலுவலகம் செல்ல வேண்டும் என்பதால்தான் இவ்வாறு தனியார் வாகனங்களை நாடிப் பெண்கள் செல்கிறார்கள். அதேசமயம் பெண்களுக்கு எதிரான பல பாலியல் வன்முறைகள் வாடகை கார் போன்ற தனியார் வாகனங்களில் நடைபெறுகின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். மகளிருக்கான பேருந்துகள் முறையாக, போதுமான எண்ணிக்கையில் இயக்கப்பட்டால் பாலியல் சீண்டல் போன்ற பல தொல்லைகளிலிருந்து பெண்கள் விடுபட்டுவிடுவார்கள்.
women bus 2
வீட்டிலேயே முடங்கி கிடந்த பெண்கள் அலுவலகம் வரத் தொடங்கிய காலத்தில் அவர்களின் பாதுகாப்பைக் கருதி மகளிர் பேருந்துகள் இயக்கப்பட்டன. அது பல பெண்களுக்குப் பெரும் ஆசுவாசத்தை ஏற்படுத்தியது. அந்த நிலை தொடர வேண்டும். இணையதளத்தில் மட்டும் மகளிர் பேருந்துகளைப் பார்க்கும் நிலை மறைந்து அவை சாலைகளிலும் மகளிரைச் சுமந்து ஓட வேண்டும். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படும் அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அதிக அளவில் மகளிர் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்றே பணிக்குச் செல்லும் ஒட்டுமொத்த மகளிரும் எதிர்பார்க்கிறார்கள். அரசு போக்குவரத்துக்கு மாற்றாக பல தனியார் வண்டிகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் வந்தாலும் நெடுந்தூரத்தில் இருந்து வரும் பெருவாரியன பெண்கள் மாநகர போக்குவரத்தைதான் நம்பியுள்ளனர் என்பதை மறுக்க முடியாது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago