கா
தலுக்கு அடுத்த பிரச்சினை சாதி. ஒரே சாதிக்குள் திருமணம் என்கிற அகமண முறை மூலமாகதான் இங்கு சாதி காப்பாற்றப்பட்டுவருகிறது. வாழையடி வாழையாக என்பார்களே அப்படி. வெவ்வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணும் ஆணும் திருமணம் செய்துகொண்டால் அல்லது செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டால் சாதி என்ற அமைப்பு வேகமாக அழிந்துவிடும்.
அதனால்தான் சாதி இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்லது சாதி அமைப்புக்குள்தான் தங்கள் வாழ்க்கைக்குப் பாதுகாப்பும் கவுரவமும் இருக்கின்றன என நினைப்பவர்கள் தங்கள் வாரிசுகள் காதல்வயப்படும்போது எதிரிகளாக மாறிவிடுகிறார்கள். அவர்களுக்குப் பின்னால் அவர்களது உறவினர்களில் தொடங்கி அவர்கள் சாதியினர்வரை அணி திரண்டுவிடுகிறார்கள்.
அதனால்தான் இருவேறு சாதியைச் சேர்ந்தவர்கள் காதலித்தால் அது பெற்றோர் எதிர்ப்பு என்கிற கட்டத்தை மீறி, குறிப்பிட்ட சமுதாயத்தின் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியதாகிவிடுகிறது. இது பொதுவான நிலை.
வெளியேறும் நிர்ப்பந்தம்
இன்று குறிப்பாகச் சில பிரச்சினைகள் முன்னுக்குக் கொண்டுவரப்படுகின்றன. சில குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்ந்து வன்மம் பாராட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்குள் காதல் வரும்போது தாழ்த்தப்பட்ட மக்களின் உயிரே பறிக்கப்படுகிற அளவுக்குப் பிரச்சினை பெரிதாக்கப்பட்டு விடுகிறது.
இதில் ஒரு முக்கியப் பிரச்சினையைக் கவனிக்க வேண்டும். தங்கள் மகள் காதலிக்கிறார் என்பது தெரிந்தவுடன் பெற்றோர் உடனடியாக வேறு மாப்பிள்ளை பார்த்து, அவருக்குத் திருமண ஏற்பாடு செய்ய முற்படுகிறார்கள். முரட்டுத்தனமாக அந்தப் பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறார்கள். நாள் முழுக்க அந்தப் பெண்கள் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்படுகிறார்கள். தொண்ணூறு சதவீதக் குடும்பங்களில் இந்த மாதிரியான சூழ்நிலையில் பெண்கள்மீது பெற்றோர் வன்முறையைச் செலுத்துகிறார்கள்.
இதனால் அந்த வீட்டில் தொடர்ந்து இருக்க முடியாத சூழல் பெண்ணுக்கு ஏற்படுகிறது. என்றைக்கு இருந்தாலும் இந்த வீட்டிலிருந்து செல்ல வேண்டியவள்தான் என்ற நினைப்புடன் சிறு வயதிலிருந்தே வளர்க்கப்படும் பெண், இந்த கட்டத்தில் சட்டென அந்த வீட்டை விட்டு வெளியே போக முடிவெடுக்கிறாள்.
அந்தக் காதலர்கள் உடனடியாகத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகிறார்கள்.
அனைத்துக் காதல்களிலும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டியவள் பெண்ணாகவும் அந்தப் பெண்ணுக்குத் தனது வீட்டில் இடம் வேண்டும் என்று எதிர்த்துப் போராடுகிறவன் ஆணாகவும் இருக்கிறான். பெரும்பாலான காதலிகள் இன்றுவரை காதலுக்கான முதல் விலையாகத் தங்கள் வீட்டில் தங்களுக்குச் சேர வேண்டிய நகை, சொத்துகளை இழப்பதோடு, பலரும் தங்கள் கல்வியையும் சேர்த்தே இழக்கிறார்கள்.
இப்படிப் பல பெண்களின் கல்வி, கல்லூரிப் பருவம் முடியும் முன்பே பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணத்தாலோ அவர்களாகத் தேடிக்கொண்ட காதலாலோ முடிவுக்கு வருகிறது. இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பை நினைத்துத் தங்களது நடுத்தர வயதில் கண்ணீர் சிந்தும் பெண்கள் பலர்.
மறுக்கும் உரிமையும் இல்லையா?
பெண்களுக்குக் காதல் உரிமை மறுக்கப்படுவது ஒருபக்கம் என்றால், காதலே சில பெண்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. காதலை ஏற்றுக்கொள்ள வேண்டியவள்தான் பெண், அந்தக் காதலில் முடிவெடுக்க அவளுக்கு உரிமையில்லை என்கிற உளவியல் மிக ஆழமாக நம் மனதில் படிந்து கிடக்கிறது. அதன் வரலாறு மிக நீண்டது.
“தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்
எண்ணுங்காலைக் கிழத்திக்கில்லை” - இது தொல்காப்பியம். ‘ஆட்படுபவளே பெண், ஆட்கொள்பவன் ஆண்’ என்று பள்ளிப் பிள்ளைக்குச் சொல்வதுபோல் பாடம் சொல்லி வைத்திருக்கிறார்கள். கற்பியல் சூத்திரம் மட்டுமல்ல, நமது களவியல் சூத்திரம்கூட அதையேதான் முன்மொழிகிறது.
“காமத் திணையிற் கண் நின்று வரூஉம்
நாணும் மடனும் பெண்மைய ஆகலின்
குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை
நெறிப்படவாரா அவள்வயின் ஆன”
அச்சமும் நாணமும் மடமையும் அணிகலன்களாகக் கொண்ட பெண் காமத்தையோ காதலையோ குறிப்பால் உணர்த்துவாளேயன்றி, அதைத் தனது பேச்சுரிமையாக வெளிப்படுத்த முடியாது. இதுதான் இங்கு பண்பாடு என்ற பெயரில் நமது மனங்களில் படிந்து கிடக்கிறது. பெண் எப்போதும் காவலில் வைத்திருக்கப்பட வேண்டியவள் என்று சொன்ன மனுதர்மம்தான், இங்கே சட்டமாக இருந்திருக்கிறது. இப்படி இலக்கியங்களும் சட்டங்களும் சேர்ந்து எழுதியவற்றை அவ்வளவு சீக்கிரம் மாற்றிவிட முடியுமா?
காதலைக்கூட சொல்ல முடியாத பெண், இன்று காதலுக்கு மறுப்பும் சொல்கிறாள்; முதலில் காதலித்துவிட்டு பிறகு மனம் மாறி வேண்டாம் என்றும் சொல்கிறாள் என்பதையெல்லாம் இளைஞர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தத் தேவையற்ற, தவறான மனநிலைக்குப் பலியாகி சில இளைஞர்கள் கொலை செய்வதுவரை போய்விடுகிறார்கள். அமில வீச்சிலிருந்து கொலைவரை அடிக்கடி நாம் கேள்விப்படும் செய்திகளில் சிதைந்து கிடப்பது பெண்களின் வாழ்க்கையாகவே இருக்கிறது.
பின்தொடர்ந்தால் வருமா காதல்?
ஒரு பெண்ணைக் கவர்கிறேன் என்ற பெயரில் நம் இளைஞர்கள் செய்யும் அனைத்துத் தவறான செயல்களும் நமது திரைப்படங்களில் கதாநாயகர்கள் செய்கிறவைதான். அது போன்ற காட்சிகளில் திரையரங்குகளில் கைத்தட்டல்களும் விசில் சத்தங்களும் இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
மோசத்திலும் படுமோசமாக சமீபகாலம்வரை தன்னைப் பாலியல் வன்முறை செய்தவனை, தெருவில் வன்முறையாகக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தவனைத்தான் நமது திரைப்படக் கதாநாயகிகள் காதலித்துக்கொண்டிருந்தார்கள். இல்லையென்றால் படுமோசமான குடிகாரன், பித்தலாட்டம் செய்கிறவன் போன்றோரைக் காதலித்துக் கல்யாணம் செய்து திருத்திக்கொண்டிருந்தார்கள்.
இப்போது அப்படிப்பட்ட திரைப்படங்கள் குறைந்துவிட்டன. ஒரு பெண்ணைக் கதாநாயகன் பின்தொடர்வதாகக் காட்டினால் அந்தக் காட்சிகள் தணிக்கை செய்யப்படும் என்றொரு அறிவிப்பு வந்தால், பலர் திரைத்தொழிலை விட்டே போய்விடுவார்கள் என்பதே உண்மை. இன்னும் இந்த இடத்தில்தான் நம் நடிகர்களெல்லாம் சூப்பர் ஸ்டார்களாகிக் கொண்டிருக்கிறார்கள்.
விருப்பமில்லாத ஒரு பெண்ணைப் பின்தொடர்வது சட்டப்படி குற்றம் என்று நம்மில் எத்தனை பேர் நம் வீட்டுப் பையன்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம்? பெண்கள் தொடர்பான குற்றங்களில் தங்கள் வீட்டுப் பையன்கள் ஈடுபடும்போது எத்தனை பெற்றோர் அதைத் தங்கள் குற்றமாக, அவமானமாக உணர்கிறார்கள்? ஆம்பிளைனா அப்படித்தான் இருப்பான் என்று பலர் வாய்விட்டே சொல்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக அந்தப் பையன்களின் தாய்மார்கள். ஆம், பெண்களுக்கு எதிராகப் பையன்கள் செய்யும் குற்றங்கள் பெண்களால் ரசிக்கப்படவேண்டும் என்று இந்தச் சமுதாயம் நினைக்கிறது. அப்படி வயப்படுவதே காதல் என்று இன்றும்கூடப் பல இளம்பெண்கள் நம்பி, பலியாகிப்போவதும் நடக்கத்தான் செய்கிறது.
(இன்னும் தெளிவோம்)
கட்டுரையாளர், பெண்ணியச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago