பொ
ய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப - இது தொல்காப்பிய செய்யுள் எண் 147. வரலாற்றில் திருமணம் என்ற சடங்கு ஏன் தோன்றியது என்பதற்கு இந்தச் செய்யுள் ஒரு காரணத்தைச் சொல்கிறது. அன்பு கொண்ட இருவர் இணைந்து வாழ்ந்துவரும் வேளையில் (எந்தச் சடங்குகளின் மூலமும், அதை முறைப்படுத்திக்கொள்ளாமல்) சிலர் அந்த வாழ்க்கை நிகழ்வுகளையே பொய்யென வாதிட்டு விலகிச் செல்லும் சூழல் நேர்ந்தபோது, அவற்றுக்கான ஒரு தீர்வாகத் திருமண முறை கண்டுபிடிக்கப்பட்டது என்பது இதன் பொருள். மிகவும் எளிமைப்படுத்திச் சொல்ல வேண்டுமென்றால் ‘பழகிட்டு விட்டுடறாங்கப்பா, அதை ஒரு சட்டத்துக்குள்ள கொண்டு வரணும்’ என்று பெரியவர்கள் யோசித்திருக்கிறார்கள். அதன் விளைவாகவே திருமணம் என்ற சடங்கு உருவாக்கப்பட்டது என்கிறது தொல்காப்பியம்.
ஒரு சாட்சி வைச்சுக்குவோம் என்று தொடங்கிய இந்தத் திருமணச் சடங்கு இன்று பல்கிப் பெருகி பூதாகர வடிவமெடுத்து வாழ்வின் அனைத்து அம்சங்கள், சட்ட திட்டங்களுடன் இணைக்கப்பட்டுவிட்டது. இன்று அதை திருமணச் சந்தை என்று சொல்கிறார்கள். சந்தை என்றால் பொருட்களை விற்று, வாங்கும் இடம். மனித உறவுகள் ஏன் சந்தைக்கு வந்தன? பெண்ணுக்கு மட்டுமல்ல; ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் ஆணுக்குமே திருமணம் நிர்ப்பந்தம்தான். பெண்ணைவிட ஆணுக்கு அதில் சில விஷயங்களைத் தீர்மானித்துக்கொள்ளும் உரிமை அதிகம், அவ்வளவுதான். இங்கு மனித வாழ்வைத் திருமணம் தீர்மானிக்கிறது. திருமணத்தை எவையெல்லாம் தீர்மானிக்கின்றன? முதலில் நிற்பது சாதி.
சாதியும் திருமணமும்
வயதுவந்த ஓர் ஆண் அல்லது பெண்ணின் இணையரை இன்றும்கூட அவர்களின் பெற்றோர்தான் தீர்மானிக்கிறார்கள் என்பது வெளிநாட்டினர் பலருக்கும் மிகவும் வியப்பளிக்கக்கூடிய செய்தி. அதுவும் ஒரு குறிப்பிட்ட சாதிக்குள்தான் திருமணங்கள் நடத்தப்பட வேண்டும் என்பது, மனித இன வளர்ச்சியில் ஆதிவாசிக் குழுக்களின் நடைமுறைகளோடு நேரடியாகத் தொடர்புபடுத்துவதாக இருக்கிறது. ஒருபுறம் இவ்வளவு பழமையான வாழ்க்கை முறையை வைத்துக்கொண்டு, இன்னொரு புறம் விண்வெளிக்கு ராக்கெட்டுகளை ஏவிக்கொண்டிருக்கிறோம்.
இங்கு ஒரு மனிதன் தன் குடும்பத்துக்குள் ஒரே சாதிக்குள் திருமணங்கள் நடத்திக்கொள்கிறார்; அவரது கல்வியறிவுக்குச் சற்றும் பொருந்தாத சடங்கு சம்பிரதாயங்களை அணு அளவும் பிசகாமல் கடைப்பிடித்துக்கொள்கிறார்; அதேநேரம், சந்திரனுக்குச் செயற்கைக்கோள் அனுப்பும் பணியிலோ, கண்டம் விட்டு கண்டம் இணைந்து பணியாற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையிலோ, ஒடுக்கப்பட்டோர் மேம்பாட்டுக்காகப் பணி செய்யும் அரசு அலுவலிலோ தன்னை இணைத்துக்கொள்கிறார். தன் வாழ்க்கையின் இந்த மாபெரும் முரண்பாடு அவருக்கு உறைப்பதேயில்லை.
ஒரே சாதிக்குள் திருமணம் என்ற நடைமுறை இன்னும் 90 சதவீதம் மக்களால் பின்பற்றப்படுகிறது. இதற்குள் குலம், கோத்திரம் என்று உட்பிரிவுகள் வேறு இருக்கின்றன. பெண் தன் வாழ்க்கைத் துணையைத் தேடுவதில் உள்ள முதல் பேரிடர் இது (ஆணுக்கும்தான்). இதனால் பொருத்தமான இணை என்பதற்கான வட்டம் பெரும்பாலும் சுருங்கிவிடுகிறது.
இறுக்கும் சாதி வளையம்
பழைய நாட்களில் கறாராகச் சாதிவாரியாகவே குடியிருப்புகள் இருந்தன. இன்னும் கிராமங்களில் இந்நிலை தொடர்கிறது என்றாலும், இந்தியாவிலேயே நகரமயமாக்கல் அதிகமாக நடந்துள்ள தமிழகத்தில் வளர்ந்துவரும் நகரங்களில் இன்று ஒரே சாதிக்காரர்கள் இருக்கும் தெரு என்றோ பகுதி என்றோ வரையறுக்கப்படும் இடங்கள் கிட்டத்தட்ட இல்லை. இதில் சில பின்னடைவுகள் இருக்கலாம். ஆனால், மாற்றம் கிட்டத்தட்ட வந்துவிட்டது. இது தவிர வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வோரும் இன்று அதிகமாகியிருக்கிறார்கள். எனவே, இவர்களுடைய வாழ்வின் பெரும்பகுதி நேரம் இவர்கள் தங்கள் சாதியல்லாத, சில நேரங்களில் தங்கள் இனம், மொழி அல்லாத மக்களுடனேயே கழிக்கிறார்கள். எனவே மனதின் தேடல்கள், நாடல்கள் பெரிதும் வேறுபட்டு வளர்கின்றன. ஆனால், சாத்திரமோ இதற்கெல்லாம் தொடர்பேயில்லாத முறையில் அவர்களின் துணையைத் தீர்மானிக்கச் சொல்கிறது. எனவே, பல நேரம் அவர்களின் தேர்வு வட்டம் சுருங்கி விடுகிறது என்பதைத் தாண்டி பொருத்தமேயற்ற துணைகளைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுவிடுகிறார்கள்.
இந்த நிலையின் உச்சபட்ச காட்சி எதுவரைக்கும் செல்கிறதென்றால், நம் நாட்டின் சில ஊர்களில் எண்ணிக்கையில் மிகவும் சிறுபான்மையினராக உள்ள சில சாதிகளில் வழக்கமான திருமண உறவில் மாப்பிள்ளை கிடைக்காமல் முறையை மீறி அண்ணன் முறையில்கூட மணம் முடிக்கும் நிலையிலிருக்கிறார்கள். இதுபோன்ற சிறுபான்மைச் சாதியினர் தாங்கள் மாட்டிக்கொண்டிருக்கும் சாதி வளையத்தின் ஆதியும் அந்தமும் புரியாமல் அதை மீறவும் முடியாமல் நாளடைவில் மனவளர்ச்சி குன்றியவர்களாகச் சிதைந்தும் போகிறார்கள். இது மாதிரியான நிலைமைகளில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள். சாதி ஒரு சமூக அநீதி மட்டுமல்ல; அது நம் ஒவ்வொருவரையும் பீடித்திருக்கும் மனநோய். பெண்கள் அனைவருக்கும் அதுவே பெருநோய்.
எஜமானர்களையே வாங்குகிறார்கள்
இன்னொரு விசித்திரமான விஷயம் என்னவென்றால் இந்த வினோதமான சந்தையில் அடிமைகள் பணம் கொடுத்துத் தங்கள் எஜமானர்களை வாங்கிக்கொள்வதுதான். பெண் வீட்டார் வரதட்சணை கொடுத்துப் பெண்ணையும் மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பிவைக்கிறார்கள். இதில் பல இடங்களில் நல்ல விலைக்கு வாங்கப்பட்ட மாப்பிள்ளைகள், எஜமானர்களாக வேடம்தான் போட முடிகிறது. உள்ளுக்குள் எஜமானர்களாக வாழ முடிவதில்லை. அவர்கள் பல நேரம் பெண்களுக்கு எதிராகப் பொங்கியெழுகிறார்கள். ‘உள்ளுக்குள் பொம்பிளை ராஜ்யம்தான் நடக்கிறது. நீங்கள் யாருக்கு உரிமை கேட்கிறீர்கள்?’ என்று வெகுண்டு கேட்கிறார்கள். அந்த நண்பர்களுக்கு நாம் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் சந்தையின் அடிப்படை விதிகள் எப்போதும் வலிமையானவை, அவை வாழ்க்கைக்கான அர்த்தங்களைத் தருபவை அல்ல என்பது மட்டும்தான்.
(இன்னும் தெளிவோம்)
கட்டுரையாளர், பெண்ணியச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago