பெ
ண்கள் பலர் இன்று வேலைக்குப் போகிறார்கள். ஆனால், இன்றும் ‘உத்தியோகம் புருஷ லட்சணம்’ என்றுதான் சொல்கிறார்கள். ‘உத்தியோகம் பெண்கள் லட்சணம்’ என்று மாறிவிடவில்லை. ஒரு குடும்பம், பெண்ணின் உழைப்பின் மூலம் கிடைக்கும் வருவாயை இரண்டாம்தரமானதாகவே பார்க்கிறது. ஓரளவாவது நிலையான வருவாய் தரக்கூடிய ஒரு வேலை என்பது ஓர் ஆணின் திருமணத்துக்கு முன்நிபந்தனையாக இருக்கிறது. ஆனால், ஒரு பெண் வேலைக்குப் போகலாமா, கூடாதா என்பதை அவளின் திருமணம்தான் தீர்மானிக்கிறது. இது எவ்வளவு பெரிய பாலின பாரபட்சம் என்பதை உணர்ந்தவர்கள் இங்கே குறைவு. அதனால்தான் 47 சதவீதம் பெண்கள் படித்தவர்களாக இருந்தாலும், உழைப்புப் பங்களிப்பு என்று வருகிறபோது பெண்கள் 29 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறார்கள்.
வேலைக்குப் போகும் பெண்கள் என்று வரும்போதே பொதுவாக வெள்ளுடைப் பணிகள் (white collar jobs) என்றழைக்கப்படும் அலுவலக வேலைகளை மட்டுமே நாம் நினைத்துப் பார்க்கிறோம். பெண்கள் வேலைக்குப் போகலாமா வேண்டாமா என்பது குறித்தெல்லாம் பெரும் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டவை இந்தப் பணிகள் பற்றி மாத்திரம்தான். இந்த வேலைகளுக்குப் பெண்களை அனுப்புவதில்தான் இந்தச் சமுதாயத்துக்குச் சங்கடமெல்லாம். பெண் மென்மையானவள், அவளை வேலைக்கு அனுப்பி சிரமப்படுத்தக் கூடாது என்று சொல்வதெல்லாம்கூட இந்தப் பணிகளுக்குப் பெண்களை அனுப்புவது குறித்து மட்டும்தான்.
கணக்கில் வராத உழைப்பு
இந்த விவாத வரையறைகளுக்குள் கிராமங்களில் காலங்காலமாகத் தங்கள் உடலுழைப்பைச் செலுத்திக்கொண்டிருக்கிற பெண்கள் வரமாட்டார்கள். வயல்காட்டில் சேற்றிலும் சகதியிலும் பெண்கள் இறங்காத காலம் என்ற ஒன்று எப்போதும் இருந்தது கிடையாது. உச்சி வெயிலில் அவர்கள் குனிந்தபடியே வேலை பார்க்கிறார்கள். பெண் வேலைக்குப் போகலாமா என்ற விவாதத்தில் இவர்களுக்கு இடமில்லை. இன்றும்கூட வேலைக்குச் செல்லும் பெண்கள் எண்ணிக்கை நகரத்தோடு ஒப்பிடும்போது கிராமத்தில்தான் அதிகம். ஆனால், பொதுப்புத்தியில் நகரங்களில்தான் பெண்கள் வேலைக்குப் போவதாகப் பதிந்துபோயுள்ளது.
பெண் உழைப்பு என்பதைக் கிராமம் சார்ந்தும் நகரம் சார்ந்தும் பிரித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. இதை ஒருவகையில் உடல் சார்ந்த உழைப்பு, அறிவு சார்ந்த உழைப்பு என்று வகைப்படுத்தலாம். உடலுழைப்பில் (பெரும்பகுதியும் கிராமத்தில்) பெண்கள் திருமணத்துக்கு முன் குறைவாகவும் திருமணத்துக்குப் பின் அதிகமாகவும் ஈடுபடுகிறார்கள். அறிவுசார் உழைப்பில் (பெரும்பகுதியும் நகரத்தில்) பெண்கள் திருமணத்துக்கு முன் அதிகமாகவும் திருமணத்துக்குப் பின் குறைவாகவும் ஈடுபடுகிறார்கள். கிராமங்களில் பெண்கள் திருமணத்துக்குப் பின் அதிகமாக வேலைக்கு அனுப்பப்படுவதோடு தள்ளாத முதுமையிலும் தங்கள் உழைப்பைத் தொடர வேண்டிய நெருக்கடி இருக்கிறது.
வேலை என்பது துன்பமா?
அனைத்து நிலைகளிலும் குடும்ப வறுமையும் பல நேரங்களில் ஆதரவற்ற நிலையுமே வெளியில் வேலைக்குச் செல்லும் நிர்ப்பந்தத்தை இவர்களுக்கு ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் பெண் வெளியில் வேலைக்குச் செல்ல நேர்வதே அவளுக்கு நேரும் துன்பமாகவே பார்க்கப்படுகிறது, உணரப்படுகிறது. அந்த வேலை அவளின் தன்மதிப்பை உயர்த்துவதாகப் பார்க்கப்படுவதில்லை. ஒருவகையில் அந்தப் பெண் வேலைக்குச் செல்வது என்பது அந்த வீட்டு ஆணின் இயலாமையாகவோ அவமானமாகவோ பார்க்கப்படுகிறது. எனவே, குடும்ப வருமானம் ஓரளவு அதிகரித்தால்கூட, உடனே பெண் வேலைக்குப் போவது நிறுத்தப்பட்டுவிடுகிறது.
உழைப்புச் சந்தையில் அவள் எப்போதுமே உதிரியாகவே இருக்கிறாள். இந்தச் சமுதாயச் சூழலில் அந்தப் பெண்ணே தான் உழைக்க நேர்ந்தது குறித்து கழிவிரக்கத்துடனேயே சிந்திக்கிறாள். தன் உழைப்பின் மீது பெருமிதம் கொள்ள முடியாத நிலையில், அந்தப் பணியிடங்கள் அவளுக்குக் கவுரமானவையாக இல்லை என்பதன் தொடர்ச்சியாக அவை பாதுகாப்பானவையாகவும் இருப்பதில்லை. இந்தப் பின்னணியில்தான் பெண்ணின் உழைப்பு அந்தச் சந்தையில் பொருளாதாரரீதியாக ஆணின் உழைப்புக்குச் சமமான மதிப்பைப் பெறாமல் குறைவான ஊதியத்துக்குரியதாக இருக்கிறது.
ஊதியத்திலும் புறக்கணிப்பு
ஆணுக்கொரு ஊதியம் பெண்ணுக்கொரு ஊதியம் என்ற அநீதி அதிகம் நிலவுகிறது. ஆனால், சம ஊதியம் கேட்பதற்கு முன் சமவேலை, சம வாய்ப்பு கேட்க வேண்டும். அதிலிருக்கும் தடைகளைப் பார்க்க வேண்டும். பெரும்பாலான இடங்களில் பெண்ணுக்கான வேலைகள், ஆணுக்கான வேலைகள் என்று பிரிக்கப்பட்டிருக்கின்றன. இப்படிப் பிரிக்கப்பட்டிருப்பது வெளியில் தெரியாத மாதிரி, ‘பொம்பளையால இதைத்தான் செய்ய முடியும்’ என்று நம்பவைக்கப்பட்டிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு முன் ரப்பர் தோட்டங்களில் பணிபுரிந்த பெண்களைப் பார்வையிடச் சென்றிருந்தோம். அங்கு ரப்பர் தயாரிப்பதற்குப் பெரிய ஆலைகள் வருவதற்கு முன்பாக அது குடிசைத் தொழிலாக நடந்துவந்திருக்கிறது. அப்போது ரப்பர் பாலிலிருந்து ரப்பர் தாள் தயாரிப்பது வீட்டில் வைத்து பெண்களால் செய்யப்பட்டிருக்கிறது. ஆலைகள் தோன்றி, இயந்திரங்கள் வந்ததும் அந்த இயந்திரங்கள் வெளித்தள்ளும் ரப்பர் தாளை எடுத்து மடிக்கும் வேலை பெண்களுக்கென்றும் அந்த இயந்திரத்தை இயக்கும் வேலை ஆண்களுக்கென்றும் பிரிக்கப்பட்டது. இவ்வாறு பிரிக்கப்பட்ட பிறகு பெண் பார்க்கும் வேலைக்குக் கூலி குறைவாகவும் ஆண் பார்க்கும் வேலைக்குக் கூலி அதிகமாகவும் நிர்ணயிக்கப்பட்டது.
இங்கு இந்த வேலைப் பிரிவினை தவறானது என்பதை நிரூபிக்காமல், அதற்காகக் குரல் கொடுக்காமல் இருபாலருக்கும் ஒரே ஊதியம் கொடு என்று கேட்கும்போது, நாம் தோற்றுப் போகிறோம். பாலின அடிப்படையிலான வேலைப் பிரிவினை தவறு என்பதே நமது கோரிக்கையாக இருக்க வேண்டும். இதுவரை ஆண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டு வந்திருக்கும் பல்வேறு வேலைகளில் பெண்களுக்கு ஆரம்ப நிலை, சிறப்பு நிலை ஆகிய பயிற்சிகளை நாம் உருவாக்க வேண்டும். ஆணுக்கான வேலை பெண்ணுக்கான வேலை என்று எதுவுமில்லை. அவரவரால் எது முடியுமோ, அதுவே அவரவருக்குரிய வேலை.
(இன்னும் தெளிவோம்)
கட்டுரையாளர்,
பெண்ணியச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago