செ
யற்கையாக வேதி உரங்களால் பயிர்கள் அதிவேகமாக வளர்க்கப்படுவதைப் போல, செயற்கையாக மேற்கொள்ளப்படும் கால்நடைப் பண்ணை வெளிநாடுகளில் பிரபலம். அதைத் தொழிற்சாலைப் பண்ணை (Factory Farming) என்று அழைக்கிறார்கள். சுதந்திரமாக உலவ வேண்டிய ஆடு, கோழி ஆகியவற்றை ஒரு கொட்டடியில் அடைத்துவைப்பார்கள்.
அவற்றுக்கு வலுக்கட்டாயமாக உணவளித்து, முறையான காற்றோட்டம், வெளிச்சம் இல்லாமல் வளர்ப்பதுதான் தொழிற்சாலைப் பண்ணையின் முக்கிய அம்சம். குறுகிய காலத்தில் அதிக லாபத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற பேராசைதான் இதற்குக் காரணம்.
பொதுவாக இயற்கை முறையில் வளரும் ஒரு கோழி, நன்கு வளர்ந்து கொழுத்து முட்டையிட சுமார் ஆறு மாதங்கள் பிடிக்கும் என்றால், அவற்றைச் செயற்கை முறையில் வளர்த்துக் கொழுக்கவைக்க மூன்று மாதங்களே போதும். பிராய்லர் கோழிகளை வளர்க்கும் ஆசை துளிர்விட, இந்த ஒரு காரணம் போதாதா ?
ஆனால், அப்படிக் குறுகிய காலத்தில் ஒரு பிராணியை வளர்ப்பது, அதன் வாழ்வுரிமையைப் பறிப்பதற்கு ஈடானது. மனிதர்களின் நலன் எப்படி முக்கியமோ அதேபோல விலங்குகளின் நலனும் முக்கியம். இப்படியொரு சிந்தனையை முன்வைத்தவர்தான் ரூத் ஹாரிசன்!
திருப்புமுனை
1920 ஜூன் 24 அன்று லண்டனில் பிறந்தார் ரூத் ஹாரிசன். அவருடைய தந்தை ஸ்டீபன் வின்ஸ்டென், தன் நண்பரும் இலக்கிய மேதையுமான ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். அவருடைய தாய் கிளேர் வின்ஸ்டென், பெர்னாட் ஷாவின் ‘மை டியர் டோரத்தியா’ எனும் புத்தகத்துக்கு ஓவியங்கள் வரைந்தவர். இப்படி இலக்கியமும் கலையும் தழைத்த ஒரு குடும்பத்தில் பிறந்த ரூத் ஹாரிசனும் அதே பாதையிலேயே சென்றார்.
1961-ம் ஆண்டு, ‘அனைத்து விலங்குகளின் மீதான கொடுமைக்கு எதிரான யுத்தம்’ எனும் விலங்குநல உரிமைக் குழுவின் துண்டறிக்கை ஒன்று அவர் கைகளில் கிடைத்தது.
அதுவே அவர் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அந்தத் துண்டறிக்கையில் தொழிற்சாலைப் பண்ணை விலங்குகள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள் குறித்துச் சொல்லப்பட்டிருந்தது. அதைப் படித்து மனமுடைந்த ரூத், அந்த விலங்குகளின் நலனுக்காக ஏதாவது செய்யத் துடித்தார். சைவ உணவுப் பழக்கம் கொண்டவராக இருந்தாலும், அந்த விலங்குகளின் நலன் மீது தனக்குப் பொறுப்பு இருப்பதாக நினைத்தார். விலங்குகளுக்காகப் போராடத் தொடங்கினார்.
விலங்குகள் இயந்திரங்களா?
ரூத் ஹாரிசன் அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, அன்று பிரிட்டனில் இருந்த பல தொழிற்சாலைப் பண்ணைகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் விளைவாக, 1964-ம் ஆண்டு ‘அனிமல் மெஷின்ஸ்’ புத்தகத்தை எழுதினார். விலங்குகள் இயந்திரங்களா என்று கேள்வி எழுப்பிய இந்தப் புத்தகத்துக்கு, ‘சூழலியல் பெண்ணியத்தின் மூலவர்’ என்று போற்றப்படும் ரேச்சல் கார்சன் முன்னுரை எழுதினார்.
கார்சனின் ‘மவுன வசந்தம்’ வெளியான பிறகு எப்படிப் பூச்சிக்கொல்லிகள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதோ, அதேபோல ‘அனிமல் மெஷின்ஸ்’ வெளிவந்த பிறகு தொழிற்சாலைப் பண்ணையில் விலங்குகளுக்கு நேரும் துன்பங்கள் பற்றி மக்களுக்குத் தெரியவந்தது. அந்தப் பண்ணைகளில் விலங்குகளின் வால்கள் வெட்டப்படுவது, அலகுகள் நறுக்கப்படுவது, விதைப் பைகள் சிதைக்கப்படுவது, கொம்புகள் நீக்கப்படுவது உள்ளிட்ட பல கொடுமைகள் நிகழ்வதை ஹாரிசனின் புத்தகம் மூலம் அறிந்த மக்கள் கொதித்துப் போனார்கள்.
அதைத் தொடர்ந்து எழுந்த போராட்டங்களின் விளைவாக, 1968-ம் ஆண்டு பிரிட்டனில் தொழிற்சாலைப் பண்ணை விலங்குகளின் நலன் தொடர்பாகப் புதிய சட்டம் இயற்றப்பட்டது. விலங்கு நலனை முன்னிறுத்தி 1964 முதல் 1998-ம் ஆண்டுவரை இந்தியா உட்படப் பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் ரூத்.
அவரது சாதனைகளைப் பாராட்டி, பிரிட்டிஷ் அரசு அவருக்கு ‘ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர்’ எனும் பதக்கத்தை வழங்கிச் சிறப்பித்தது. இப்படிப்பட்ட ஆளுமையாக விளங்கிய ரூத், புற்றுநோயால் ஜூன் 13, 2000 அன்று இந்த உலகை விட்டு மறைந்தார். ஆனால், அவர் மேற்கொண்ட பணிகள் இன்றும் அவருடைய ஆதரவாளர்களால் தொடரப்பட்டுவருகின்றன!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago