‘இ
ந்த நாட்டில் 30 கோடி பேர் இருக்கிறார்கள் என்று சொன்னால், இங்கு 30 கோடி இந்தியாக்கள் உள்ளன என்று அர்த்தம்’ என்றார் முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு. ஆம், ஒவ்வொரு இந்தியரும் கற்பனை செய்து வைத்திருக்கும் இந்தியா என்பது வேறு வேறாக இருக்கிறது. இந்தியா என்கிற நாடே, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது என்றால், நாம் வாழும் இந்தப் பூமி?
‘ஒவ்வொரு மனிதருக்கும் இரண்டு நாடுகள் உள்ளன. ஒன்று, தான் பிறந்த நாடு. இன்னொன்று, இந்தப் பூமி’ என்றார் பிரிட்டன் பொருளாதார அறிஞர் பார்பரா வார்ட். பிறந்த நாட்டின் வளர்ச்சிக்காகக் கவலைப்படுபவர்கள், தாங்கள் தோன்றிய இந்தப் பூமியின் நலனைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பது அவரது கருத்து. ‘ஒரு நாட்டின் வளத்துக்கு மட்டுமல்ல, இந்தப் பூமியின் நலனுக்கும் ‘வளங்குன்றா வளர்ச்சி’ மட்டுமே உதவியாக இருக்கும்’ என்று தன் வாழ்நாள் முழுவதும் பேசியும் எழுதியும் வந்த அவர், இன்று அதிகம் பேசப்படும் ‘வளங்குன்றா வளர்ச்சி’ என்ற கருத்தாக்கத்தைப் பிரபலப்படுத்திய வழிகாட்டி!
பொருளாதாரத்தைப் போற்றிய பெண்
1914 மே 23 அன்று இங்கிலாந்தில் பிறந்தார் பார்பரா வார்ட். அவருடைய தந்தை வால்டர் வார்ட், அனைத்து உயிர்களையும் சமமாக நேசிக்கிற ‘குவாக்கர்’ எனும் ஆன்மிகப் பிரிவில் ஈடுபாடு கொண்டிருந்தார். பார்பராவின் தாய் தெரசா மேரி பர்ஜ், ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தவர். தாய் மீது அவர் கொண்டிருந்த நேசத்தின் காரணமாக, பார்பராவும் ரோமன் கத்தோலிக்க மதத்தையே பின்பற்றினார்.
1935-ம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற பார்பரா, 1938-ம் ஆண்டு ‘தி இண்டர்நேஷனல் ஷேர் அவுட்’ எனும் தனது முதல் புத்தகத்தை எழுதினார். சிறுவயதில் ஃபிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் படித்தால், ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள பொருளாதார, அரசியல் பிரச்சினைகள் குறித்து அவருக்குத் தெளிவான பார்வை இருந்தது. அதனால் ஹிட்லரின் இன அழிப்புக்கு எதிராகவும், உலகப் போர்களுக்குப் பின் ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமைக்காகவும் போராடிவந்தார்.
தேச, சர்வதேச மேம்பாட்டுக்குப் பொருளாதாரம் மட்டுமே வழிகோலும் என்று சொல்லப்பட்டுவந்த காலத்தில், சமத்துவமின்மையும் சுரண்டலும் இல்லாத பொருளாதாரமே சர்வதேச மேம்பாட்டுக்குப் பயன்படும் என்று வலியுறுத்தியவர் பார்பரா. அதனாலேயே, அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் ஜான் கென்னடி, லிண்டன் ஜான்சன், பிரிட்டனின் முன்னாள் பிரதமர்கள் ஹரால்ட் வில்சன், ஜேம்ஸ் கல்லகன், கனடாவின் முன்னாள் பிரதமர்கள் லெஸ்டர் பியர்சன், பியர் த்ரூதோ போன்றவர்களுக்குத் தனிப்பட்ட அளவில் அறிவுரைகளை வழங்குபவராகத் திகழ்ந்தார். இந்த அரசியல் தொடர்புகள், அவரை ஐக்கிய நாடுகள் மன்றத்துக்கு அழைத்துச் சென்றன.
ஒரே ஒரு பூமி
சர்வதேச அளவில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதை முக்கியமான அரசியல் நடவடிக்கையாக, வளர்ச்சித் திட்டங்களில் ஒன்றாக, உலக நாடுகள் 1972-ம் ஆண்டில்தான் ஏற்றுக்கொண்டன. காரணம், அந்த ஆண்டில்தான் மனிதச் சுற்றுச்சூழல் குறித்து ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மாநாடு ஸ்டாக்ஹோமில் நடந்தது. உலக அளவில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி நடைபெற்ற முதல் மாநாடு அது.
இந்த மாநாட்டில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பங்கேற்று, ‘வறுமையும் தேவையும்தானே மிகப் பெரிய மாசுபாடுகள்?’ என்று கேள்வி எழுப்பினார். இது சிலர் அறிந்த செய்தி. ஆனால், இந்த மாநாடு நடைபெறுவதற்கு பார்பரா எழுதிய ‘ஒன்லி ஒன் எர்த்’ எனும் புத்தகம்தான் பின்புலமாக இருந்தது என்பது பலரும் அறியாத செய்தி!
ஐ.நா. மன்றத்தின் அன்றைய துணைப் பொதுச் செயலாளராக இருந்த மவுரிஸ் ஸ்ட்ராங், “சுற்றுச்சூழல் குறித்து ஒரு மாநாடு நடத்தப் போகிறோம். அதில் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்பட வேண்டும் என்று எங்களுக்கு ஒரு அறிக்கை தாருங்கள்” என்று பார்பராவிடம் கேட்டார். அதை ஏற்றுக்கொண்ட பார்பரா, 58 நாடுகளைச் சேர்ந்த 152 பல்துறை அறிஞர்களிடமிருந்து யோசனைகளைப் பெற்றார்.
இந்தியாவிலிருந்து மூவர் யோசனைகளை அளித்தார்கள். அதில் ஒருவர் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மால்கம் ஆதிசேஷையா. அந்த அறிஞர்கள் தந்த யோசனைகளின் அடிப்படையில் ரெனே த்யூபோ என்பவருடன் இணைந்து ‘ஒன்லி ஒன் எர்த்’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கையைத் தயாரித்து 1972-ம் ஆண்டு ஐ.நா.விடம் சமர்ப்பித்தார் பார்பரா. இந்த அறிக்கைதான் பின்னாளில் அதே தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது.
‘வளங்குன்றா வளர்ச்சி’ எனும் கருத்தாக்கத்தைப் பற்றிப் பேசிய முதல் புத்தகமாக இது கருதப்படுகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி, நிலம், நீர், காற்று மாசுபாடு, புதைபடிவ எரிபொருட்கள், மக்கள்தொகை அதிகரிப்பு, பசுமைப் புரட்சி போன்ற முக்கியமான விஷயங்களைப் பற்றி இந்தப் புத்தகத்தில் பார்பரா அலசியிருக்கிறார். இதே விஷயங்கள்தான் பின்வந்த மாநாட்டிலும் விவாதிக்கப்பட்டன.
எக்காலத்துக்குமான சூழலியல் சிந்தனைகள்
‘பரிணாம வளர்ச்சியின் உயர்ந்த இடத்தில் மனித இனம் இருந்தாலும், அதுதான் சூழலைக் கெடுக்கும் முதன்மையான இனமாகவும் இருக்கிறது. எல்லா உயிர்களுக்குமான இயற்கை வளங்களைத் தனக்கு மட்டுமே உரித்தான ‘இலவசச் சரக்குகளாக’ மனிதர்கள் பார்க்கிறார்கள். தாங்கள் செய்கின்ற தவறுகளால் இயற்கை அழிவதை மக்கள் புரிந்துகொண்டாலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாடுகளிடையே ஒருமித்த கருத்து உருவாகவில்லை’ என்று அந்தப் புத்தகத்தில் எழுதினார் பார்பரா.
அந்தச் சிந்தனைகள் 45 ஆண்டுகள் கழிந்து, பருவநிலை மாற்றம் பூதாகரமாக உருவெடுத்து வரும் நிலையிலும் இந்த உலகுக்கு கச்சிதமாகப் பொருந்துவதுதான் மிகப் பெரிய அவலம். இயற்கை, வளங்குன்றா வளர்ச்சி, சுரண்டல் இல்லாத பொருளாதாரம் போன்றவை குறித்து 15-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய பார்பரா வார்ட், புற்றுநோய் காரணமாக 1981 மே 31 அன்று மறைந்தார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago